"ஓ. மனிதனே! உனக்கு உடலில்லை, உயிரில்லை நாமமில்லை, ரூபமில்லை. நீ ஆகாயமுமல்ல, ஆத்மாவுமல்ல! நீ யார் என்று பார்? உன் தத்துவங்களை ஞாபகம் செய்! நாம் விக்கிரஹத்தை நிக்ஹிரகம் செய்தால் (துவைதத்தை கைவிட்டு அத்துவைதத்தை கைகொண்டால் எல்லாம் நம்மையே வணங்கும்."
குருமகான் அவ்லாதுர் ரசூல், ஆரிஃபு பில்லாஹ், மஷாயிஹ், மவ்லான, மௌலவீ ஏ.முகம்மது தாஹிர் ஹஸனீ காதிரி (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் போதனைகளை தொகுத்து எழுதி 1994ம் ஆண்டு இந்தியாவின் மதுக்கூரில் தெளிவகம் வெளியிடப்பட்ட சம்பூரண சுயம் பிரகாசம் (Complete Self-Illumination) நூலிலிருந்து.
ஆண்டவன் ஒவ்வொரு வஸ்திலும் ஒரு இன்பத்தைப் படைத்திருக்கிறான். இன்பமில்லாதது ஒன்றுமே இல்லை. ஒரு ஜீவனுக்குப் பிடிக்காதது மற்றொரு ஜீவனுக்கு ப்ரியமானதாயிருக்கும். இப்படியே இந்திரியங்களாலடையும் சுகத்தையும் உத்தேசித்துக் கொள்க.
சரீர சுகத்தைப் பார்க்கிலும் இந்திரிய (புலன்கள்) சுகமே அதிக மேலானது. சரீரம் மட்டும் தனியே யாதொரு சுகத்தையும் அடையாது. இதற்கு இந்திரியமும் அவசியம் சம்பந்தப் பட்டேயிருக்க வேண்டும். ஆக எல்லா வஸ்திலும் இன்பமுண்டாயிருக்கிறது.
எல்லா வஸ்துவுமே இன்ப வடிவு, சர்வமுமே சுக வடிவு. இப்படியாக எல்லா வஸ்துக்களையும் இன்ப ரூபமாய் அமைத்தவன் மனிதனை எதற்காகப் படைத்தானோ அதிலும் விஷேஷமான இன்பமிருக்க வேண்டும். எதற்காகப் படைத்தது ஆண்டவனை வணங்குவதற்கு! அப்படியாயின் ஆண்டவனை வணங்குவதில் அல்லது தொழுவதில் இருக்கும் இன்பம் எல்லாவற்றையும் விட அதிக மேலானதாயிருக்கும் மனிதன் காரணம், அசல் மற்றவை நிமித்த காரணம்.ஆகவே மனிதனுடைய இன்பம் வேறெந்த வஸ்த்துவுக்குமில்லை. மனிதனே மேலான இன்பத்தை அறிவான்.