Saturday, December 10

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை - 04


பேராசியர் நாகூர் ரூமி

அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்
  • பஹ்ரைன் அரசருக்கு எழுதிய கடிதம்
  • ஒமன் நாட்டு அரசருக்கு எழுதிய கடிதம்
  • ஹெராக்லியஸுக்கு எழுதிய கடிதம்

2.பஹ்ரைன் அரசருக்கு கடிதம்
பாரசீகத்துக்கு திறை செலுத்தும் நாடாக பஹ்ரைன் அப்போது இருந்தது. அதில் அரேபியர்களும் பெருமளவில் வாழ்ந்து வந்தார்கள். அபூ கய்ஸ், பக்ர் இப்ன் வயீல், தமீம் போன்ற முக்கிய கோத்திரத்தினரும் அங்கு இருந்தனர். 

பாரசீக அரசின் பிரதிநிதியாக பஹ்ரைனில் அப்போது முந்திர் இப்னு சவா என்பவர் இருந்தார். பெருமானார் (ஸல்) அவர்களின் தூதராக அ’லா இப்னு அல் ஹள்ரமி அங்கே சென்றார். 

முந்திர் தன் சகாக்களுடன் இஸ்லாத்தில் இணைந்தார். அதன் விளைவாக குடிமக்களில் பலரும் இஸ்லாத்தில் இணைந்தனர். இறுதித் தூதருக்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். 

அதில், சிலர் இஸ்லாத்தை விரும்புகின்றனர், சிலர் வெறுக்கின்றனர். பஹ்ரைனில் யூதர்களும், மஜூசிகளும் கூட இருக்கின்றனர் என்று எழுதினார். அதற்கு பெருமானார் எழுதிய பதில்:
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் தொழுகையை நிறைவேற்றி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உண்மையாக நடந்து கொண்டு, பேரீச்சம் பழங்களுக்கான உஷ்ரையும் [கப்பத்தையும்], மற்ற தானியங்களுக்கான பாதி உஷ்ரையும் கொடுத்துக்கொண்டு, உங்கள் தலைமுறையினர் மஜூஸிகளாக மாறாமல் பார்த்துக்கொண்டீர்களானால், நீங்கள் இஸ்லாத்துக்கு வந்த தருணத்தில் எதெல்லாம் உங்கள் சொத்துக்களாக இருந்தனவோ அதற்கெல்லாம் நீங்களே உரிமையாளராக இருப்பீர்கள். ஆனால் நெருப்பை வணங்கும் கோயில் மீது அல்லாஹ்வும் அவனது தூதரும் உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் மறுத்தால் ஜிஸ்யா செலுத்த வேண்டி வரும்."

கீழ்க்கண்டவாறும் எழுதியதாக இப்னு துலூன் குறிப்பிடுகிறார்:

நீங்கள் நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கும்வரை பதவியிலிருந்து விலக்கப்பட மாட்டீர்கள். மஜூசிகள் மற்றும் யூதர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்படும்.

ஜிஸ்யா மற்றும் ஜகாத் வசூலாக அ’லா இப்னு அல் ஹள்ரமி 80 ஆயிரம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அந்தப் பணத்தைப் வாங்கி வர அபூ ஹுரைரா அனுப்பப்பட்டதாக டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ் கருதுகிறார்.

3.ஒமன் நாட்டு அரசர்களுக்கு
அல் ஜுலந்தி என்பவரின் மகன்களான ஜனைஃபர், அஸ்து கோத்திரத்தின் அப்து என்ற இரண்டு சகோதர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது ஓமன். பெருமானாரின் தூதராக அம்ரிப்னுல் ஆஸ் ஒரு கடிதத்துடன் அவர்களிடம் சென்றார். அபூஜைத் அல் அன்சாரியும் அவரோடு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் அம்ரிப்னுல் ஆஸ் மட்டுமே ஒரு தூதுவருக்கான வேலைகளைச் செய்தார் என்கிறார் இப்னு ச’அத். கடிதம் உபை இப்னு க’அபால் எழுதப்பட்டு முத்திரையிடப்பட்டது. ஆட்சியாளர்களான இரு சகோதர்களையும் சுஹர் என்ற கடற்கரைப் பகுதியில் சந்தித்து ஆஸ் கடிதத்தைக் கொடுத்தார். அது சொன்னது:

"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். ஜுலுந்தாவின் மகன்களாகிய ஜனைஃபர், அப்து இருவருக்கும் அல்லாஹ்வன் தூதர் முஹம்மது எழுதுவது. நேர்வழியில் வருபவருக்கு சாந்தியும் சமாதானமுன் உண்டாவதாகுக.

அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாத்தில் இணையும்படி உங்கள் இருவரையும் அழைக்கிறேன். அப்படிச் செய்தால் உங்களுக்கு சாந்தி கிடைக்கும். மனிதகுலமனைத்துக்கும் நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதிப்பதிலிருந்து உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் இஸ்லாத்தில் இணைவீர்களேயானால் ஆட்சியாளர்களாக நீடிப்பீர்கள். இல்லையெனில், உங்கள் அரசாட்சி பறிபோகும். எனது வீரர்கள் உங்கள் நாட்டுக்குள் வருவார்கள். என் இறைத்தூதுத்துவம் உங்கள் அரச பதவியை மிகைக்கும்."

தூது வந்தவரிடமிருந்து இரு சகோதர்களும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுத் தெரிந்துகொண்டபின் இருவரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அவர்களையே பஹ்ரைனின் ஆட்சியாளர்களாக தொடரவைத்து கொடுத்த வாக்கை பெருமானார் காப்பாற்றினார்கள். 

அதோடு அம்ரிப்னுல் ஆஸை அங்கேயே இருக்க வைத்து, புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கான பாலபாடங்களைச் சொல்லிக் கொடுக்க நியமித்தார்கள். இந்த இரண்டு சகோதரர்களும் முஸ்லிமானதால் இஸ்லாத்தின் அந்தஸ்து உயர்ந்தது. 

ஏனெனில் பஹ்ரைன் பகுதியில் நிறைய துறைமுகங்கள் இருந்தன, சர்வதேச ஆண்டுச் சந்தைகள் நடக்கும் இடமாகவும் அது இருந்தது. பெருமானாரின் மறைவுக்குப் பிறகு அஸ்தி மறுபடியும் மதம் மாறிக்கொண்டது. ஆனால் முதலாம் கலீஃபா அபூ பக்ர் ஆட்சியில் அக்ரமா இப்னு அபூஹஜ்ல் தலைமையில் ஒரு படை அங்கே அனுப்பிவைக்கப்பட்டு நிலமை சரிசெய்யப்பட்டது.

4. ஹெராக்லியஸுக்குக் கடிதம்
ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதிகளின் அரசராக ஹெராக்லியஸ் இருந்தார். சீசர் என்று அவர் அறியப்பட்டார். 

வெற்றிகரமான ஒரு ராணுவப் புரட்சியின் மூலம் அவர் கான்ஸ்டாண்டி நோபிலின் ஆட்சியதிகாரத்து வந்திருந்தார். 

அவரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் அனுப்பிய தூதுவர்கள் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன:

1. ஹெராக்லியஸிடம் கடிதத்தை நேரடியாக திஹ்யா இப்னு கலீஃபா அல் கல்பி அல் கஸ்ரஜி கொண்டு போய்க் கொடுத்தார்.
2. பஸ்ராவில் அவரது பிரதிநிதியின் மூலம் கொடுக்கப்பட்டது.

முஸ்லிம் மற்றும் தபகாத் இப்ன் ச’அத் கூறுவதன்படி, பஸ்ரா பிரதிநிதி மூலமாக அக்கடிதம் கிபி 627ல் ஹெராக்லியஸிடம் கொடுக்கப்பட்டது. நினேவாவில் பாரசீகர்களை வெற்றிபெற்ற சந்தோஷத்தில் அப்போது ஹிம்ஸ் என்ற ஊரில் இருந்தார் சீசர். கடவுளுக்கு நன்றி சொல்ல ஹிம்ஸில் இருந்து நடந்தே ஜெருசலத்தில் வணங்கச் சென்றார். அவர் நடந்து சென்ற வழியெல்லாம் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. நறுமணமுள்ள மூலிகைகள் தூவப்பட்டிருந்தன. 

அவருக்கு எழுதப்பட்ட கடிதம்:
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதரும் அடிமையுமாகிய முஹம்மதுவிடமிருந்து ரோமாபுரியின் மன்னருக்கு இக்கடிதம். நேர்வழியில் செல்பவருக்கு சாந்தியும் சமாதானமுன் உண்டாவதாகுக. உங்களை இஸ்லாத்தில் இணையும்படி நான் கேட்டுக்கொள்வது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். நீங்கள் இஸ்லாத்தில் இணைந்தால் நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். மறுத்தால் உழவர்களின் பாவம் உங்கள் மீது உண்டாகும்."

இதோடு திருமறையில் இருந்து சில அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று கூறும் சில வசனங்களும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. 

கடிதத்தைப் பார்த்துவிட்டு அதைக் கீழே வைத்தார் சீசர். பின் தன் சபையில் இருக்கும் யாராவது ஒரு அரேபியரை அனுப்பி விஷயம் என்னவென விசாரிக்கச் சொன்னார். 

அந்த நேரத்தில் அபூ சுஃப்யான் மற்ற வணிகர்களுடன் காஸாவில் தங்கி இருந்தார். அவர்களை அரசரின் ஆட்கள் காஸாவிலிருந்து ஹிம்ஸுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, பாதிரிமார்கள், கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் நின்று கொண்டிருக்க அபூ சுஃப்யானிடம் சில கேள்விகளைக் கேட்டார் சீசர். ஆனால் சீசரின் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைச் சொன்னார் அபூ சுஃப்யான்.

“முஹம்மது என்ன கொள்கைகளை எடுத்துச் சொல்கிறார்?”
“சிலைகளை வணங்கக் கூடாதென்றும், ஒரிறையையே வணங்க வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். உண்மை சொல்ல வேண்டுமென்றும், கெட்ட செயல்கள், விபச்சாரம் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். அட்டூழியங்கள் செய்ய வேண்டாமென்றும் ஜகாத் எனும் ஏழைவரி கொடுக்க வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.”

“முஹம்மதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறதா அல்லது குறைகிறதா?”

“அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. அவரை நம்பிய யாரும் நம்பிக்கையை விட்டதே இல்லை.”

“அவர் பரம்பரை எப்படி?”

“அவர் மிக உயர்ந்த குடும்பத்தில் வருபவர்.”

அப்போது இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்த அபூசுஃப்யான் இப்படியாக பதில் சொன்னார். ஏனெனில் குறைஷிக் குலத்தில் இருந்த உயர்ந்தவர்கள் பொய் சொல்வதை இழுக்காக எண்ணினர். அதன் பிறகு ஹெராக்லியஸ் சொன்னார்:

“இறுதித் தீர்க்கதரிசி ஒருவர் வர இருக்கிறார் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அவர் அரேபியாவில் பிறப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. நீங்கள் இப்போது சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தால், என் காலுக்குக் கீழே உள்ள நிலத்தை அவர் வெற்றி கொள்வார். அவரோடு இருந்து அவர் கால்களைக் கழுவும் வாய்ப்பு இல்லையே என்று வருத்தப்படுகிறேன்.”

பின் கடிதம் படிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் சபையில் இருந்த பலர் கூச்சலிட்டனர். கழுதைகளைப் போலவும் ஒட்டகங்களைப் போலவும் கத்தினர். 

சிலுவைகளை எடுத்துக் குறியிட்டுக் கொண்டனர். அவர்களது மத நம்பிக்கையில் உறுதி இருக்கிறதா என்று பரிசோதிக்க மட்டுமே தான் அப்படிச் செய்ததாகச் சொல்லி ஹெராக்லியஸ் அவர்களை அமைதிப்படுத்தினார்.

இப்போது சபையினர் அனைவரும் தலைதாழ்த்தி அவருக்கு மரியாதை செலுத்தினர். இறுதித்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹெராக்லியஸ் எழுதிய கடிதத்தில், “நான் ஒரு முஸ்லிம்” என்று எழுதியதாக சொல்லப்படுகிறது. “அவர் ஒரு பொய்யர். அவர் இன்னும் கிறிஸ்தவத்தில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறார்” என்று பெருமானார் சொன்னார்கள். மூத்தா போரில் முஸ்லிம்களை எதிர்கொண்டு ஹெராக்லியஸ்தான் சண்டையிட்டார்.

தொடரும்................
நன்றி : பறவையின் தடங்கள்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK