Wednesday, December 21

காரணக்கடலின் கடற்கரைக் கந்தூரி

காரணக் கடல், கஞ்ஜேசவா, குத்புல் மஜீத், வல் பர்துல் வஹீத், ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் கடற்கரைக் கந்தூரி 

-அகமியத்துக்காக பைசான் மதீனா- 
“விண்ணிலும் மண்ணிலும் வலீமாருக்குத் தடை என்பது கிடையாது. அவர்கள் விரும்பினால் மரணத்திற்குப் பின்னரும் சொந்த உடம்புடன் இப் பூமிக்கு வர முடியும்” 
-கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி- 
வானம் மெல்லவே கசியத் தொடங்கி விட்டது. சுப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்ட எம்மவர்களுக்குள் ஏதோ இனம் தெரியாத சந்தோசம்! சிலர் பழைய உடுப்புக்களை உடுத்துக் கொண்டு ஏதோ வேலை செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பலர் தங்களுக்கு தெரிந்தவர்களுக் கெல்லாம் சேதி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


விடயம் என்ன! என்பதை அறிந்து கொள்ள நாமும் மூக்கை நுழைத்தோம்! ஆம்! இன்று காத்தான்குடி நதியா பீச் (Beach) என்று அழைக்கப்படும் கடற்கரை ஓரத்தில் ஸாஹிரா மீனவர் சங்கத்தினர் நடாத்தும் கண்ணிய கோமான் சமுத்திரங்களின் அரசர், பாதுகாவலர் எங்கள் உயிலும் மேலான சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் புனித மௌலீது பாராயணமும் கந்தூரியும். 

மகானின் வாழ்கை வரலாறு நாகூர் ஈ.எம்.கனீபாவின் குரலில்
Click here to Download the Song
(கந்தூரிப் புகைப்படங்கள் சில உள்ளே...)
இருப்புக் கொள்ளவில்லை எமக்கு, இன்று நாம் சாப்பிடும் பகல் சாப்பாடு நிச்சயம் மகானின் கந்தூரி சாப்பாடாகத்தான் இருக்க வேண்டும் என்று மனம் அதட்டிக் கொண்டிருக்கின்றது. உடனே அவ்விடத்துக்குச் சென்றோம். 

அன்று 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி நதியா கடற்கரையோரத்தில் நடப்பட்டிருந்த அந்தக் கொடிக் கம்பம் கம்பீரமாகவே வீசிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கொடியல்ல சுனாமியையும் எதிர்த்து நின்ற கொடி. சுனாமியினால் கரையோரத்தையும் அங்கு அமைந்துருந்த வீடுகளையும் ஏன்! வீடுகளில் அமைந்திருந்த கிணறுகளைக் கூட பிடுங்கி தூக்கியெறிய முடிந்தது. ஆனால் அந்த கொடியை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

காரணம் அது காரணக் கடல், கஞ்சேசவா ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் பெயரில் எங்களின் கண்மணி ஷெய்குனா காத்தமுல் வலீ மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களினால் சுமார் முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டப்பட்ட கொடிக் கம்பம் அதனை எதிர்க்க சுனாமிக்கு திராணியிருக்கவில்லை. 

என்றாலும் சுனாமி அழிவு ஏற்பட்ட 2004ம் ஆண்டு காலப்பகுயில் ஊருக்குள் அட்டகாசம் செய்து கொண்டிருந்த அபூஜஹலின் வாரிசுகள், வஹ்ஹாபிகள் இதனைக் கேள்விப்பட்டு அவர்களின் இரத்தத்தில் ஷைத்தான் ஓடியதால் கொடிமரத்தைக் கண்டதும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொடிமரம் கடலை எதிர்த்து நேரே இலேசாக சாந்தபடி நின்றது. 

என்ன ஆச்சரியம்! தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் கொடிமரத்தை கோடாழியால் வெட்டி சாய்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவ்விடம் வந்து பார்த்த மக்கள் கொடிமரம் வெட்டி வீழ்தப்பட்டிருப்பதைக் கண்டு மனம் ஒடிந்தவர்களாக அதனை மீண்டும் அவ்விடத்திலேயே நாட்டி விட்டனர். இந்தச் சம்பவத்தினால் கொடிமரத்தின் உயரம் கொஞ்சம் குறைந்து விட்டது. 

கொடிமரத்தின் அடியில் சிறியதாக அமைக்கப்பட்டிருந்த மீனவர் குடிசைகளின் ஓரங்களிலும் கடற்கரையிலும் பாதுஷா நாயகத்தின் அருமை பெருமைகளை புரிந்தோரும் அவ்லீயாக்கள் ஆசியை நாடி நிற்போரும் பெரும்பாலும் தமது குழந்தைகளுடன் அங்கு சமூகமளித்து விட்டனர். 

கடற்கரையோரம் ஆதலால் குழந்தைகளின் குதுகலத்துக்கு கேட்கவா வேண்டும்!. 

குழந்தைகள் கடற்கரை மணலில் குதூகலமாக விளையாடுவது போலவே அன்று கடல் அலையும் வானமும் பூமியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. காரணம் காரணக் கடல் , கஞ்ஜேசவா ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் ஆகிய தங்களின் அரசரின் திருநாள் இது. 

அவ்வப்போது மழை பெய்வதும் மீண்டும் காற்று வீசுவதும், அலைகள் அதிகமாவதும் குறைவதும் சூரியன் தலையை நீட்டுவதும் மழை மேகங்கள் அதனை மறைத்துக் கொள்வதும் என கொண்டாட்டம் இயற்கைக்கும்தான். 

எந்தத் கூரைகளும் அற்ற வெளியில் பக்தர் கூட்டம் காத்திருப்பதால் அவர்களை பாதிக்காத வண்ணம் மழையும் காற்றும் கடலும் நிதானமாகவே தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தின. 

பக்கத்திலிருந்த ஒரு வளவில் கந்தூரிச் சாப்பாட்டிற்காக மாட்டிறைச்சிக் கறியும், சோறும் சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. (இந்தியாவில் ஆட்டிரைச்சி விரும்பி சாப்பிடப்படுவது போன்று இலங்கை மக்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுவது வழக்கம்)

மகானின் நிகழ்வில் கலந்து கொண்ட மௌலவீமார்கள், மௌலீது ஓதிய அல்ஜாமியத்துர் றப்பானிய்யஹ் அறபுக் கலாசாலை மாணவர்கள் மற்றும் ஸாகிறா மீனவர் சங்க உறுப்பினர்கள் கந்தூரிக்காக சேவை புரிந்த தொண்டர்கள் தவிர சுமார் 600 பார்சல் சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. 

நேரம் நண்பகல் 12.30 மணியை அடைந்தபோது சாப்பாடு தயார் செய்யப்பட்டு பொதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. கடற்கரையோரம் ஸாஹிரா மீனவர் துறையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

பெண்கள், பிள்ளைகள் ஆண்கள் என அனைவரும் அருள் கந்தூரி பறகத்தைப் பெற்றுக் கொள்ளவும் நாகூர் ஆண்டகையின் அருள் பார்வையை நாடியும் கூடிக் கொண்டிருந்தனர். 

மக்கள் கூட்டம் அதிகரிக்கவே கடலும், மழையும் வானமும் வெளித்தது. சாப்பாடு தயார் செய்யப்பட்டு மீனவர் வாடிக்கு எடுத்து வரப்பட்டது. காலையில் சுப்ஹ் தொழுகையின் பின்னர் மௌலீது வைபவம் நிறைவு பெற்றிருந்ததால் கந்தூரிச் சாப்பாடு வழங்க தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

கூடிய பக்தர்கள் அனைவரையும் கடல் மணலில் இருத்தி, பின்னர் பொதிசெய்யப்பட்ட நார்சா அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன் இவ்வருட காரணக் கடல், கஞ்ஜேசவா ஷாகுல் ஹமீது பாதுஷா அவர்களின் அருள்மிகு கந்தூரி நிறைவு பெற்றது. நாமும் சாப்பிடுவதற்காக வீடு திரும்பினோம்.

வீட்டை வந்தடைவதற்கிடையில் அதுவரை பொறுமை காத்த வானமும், மழை மேகங்களும் ஓ.. வென மழையைப் பொழிய ஆரம்பித்தன. 

“முஃமீனின் பார்வையே விதியை மாற்ற வல்லது என்கையில், வலீமாரின் பார்வை பற்றிச் சொல்லத் தேவையில்லை” 
-அல்லாமா இக்பால்- 
20.12.2011
-அகமியத்துக்காக பைசான் மதீனா-

கந்தூரிப் புகைப்படங்கள் சில





























புகைப்படங்கள்- பைசான் மதீனா.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK