Thursday, December 22

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? பாகம்-03


 எழுதியவர் : காதிமுல் கவ்மி, அஷ்ஷெய்க் 
மௌலவீ அல்ஹாஜ். ஏ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, ஜே.பி

 إستوى فلان على سرير الملك
(அரசனின் கட்டிலில் ஆட்சிபீடத்தில் இன்னான் அமர்ந்தான்) இவ்வாறு சொல்வது வழக்கம். இதன் நோக்கம் அவன் ஆட்சி அதிகாரம் செய்கின்றான் என்பதைக் குறிப்பதேயன்றி அவன் கட்டிலில் அமர்ந்துள்ளான் என்பதைக் குறிப்பதல்ல. 

ஏனெனில் ஓர் அரசன் அவனுக்கென்றுள்ள கட்டிலில் அமர்ந்திருக்கா விட்டாலும் அவன் ஆட்சி செய்கின்றான் என்ற கருத்தைக் காட்டுவதற்காக மேற்கண்டவாறு சொல்வது வழக்கமாகும். 

அர்ஷ் என்ற கட்டிலில் அமர்ந்திருந்தான் என்று பொருள் கொள்வதால் அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்புகளை அவனுக்கு உண்டென்று சொல்ல வேண்டிவரும். 

அல்லாஹ் ஏறுதல், இறங்குதல், திரும்புதல், இடம் பெயர்தல் ஒன்றுடன் கலத்தல் போன்ற சிருஷ்டியின் பண்புகளை விட்டும் தூயவன்.

மனிதர்கள் வணங்கும் போது தமது உடல் கொண்டு “கஃபாவை” முன்னோக்குவது போல் அவர்கள் தமது “துஆப்” பிராத்தனையின்போது வானத்தின் பக்கம் தனது மனம்கொண்டு முன்னோக்குவதற்காகவே அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தை வானத்தில் படைத்தான். 

அல்லாஹ் இடத்தை விட்டுத் தூயவன் என்று நாங்கள் உறுதியாகச் சொல்கின்றோம் அவ்வாறில்லாமல் அவனுக்கு ஒரு இடம் உண்டென்று கொண்டால் இடமென்பது அவன்போல் “கதீம்” பூர்வீகமானதாகிவிடும். அல்லாஹ் தவிர வேறெந்த வஸ்தும் பூர்வீகமானதல்ல “ஹாதிது” புதிதானவையேயாகும். 

அல்லாஹ் மேற்கண்ட திருவசனத்திலுள்ள “இஸ்தவா” என்ற சொல் கொண்டு 
إستقر “இஸ்தகர்ற” அமர்ந்தான் தரிபட்டான் என்ற கருத்தை நாடவில்லை. அச்சொல் கொண்டு அவன் நாடின விடயம் வேறு. அமர்ந்திருத்தல் அல்ல. ஆயினும் அவன் நாடின விடயம் எதுவென்று குறிப்பிட்டுக் கூறாமல் அதை அவனிடமே ஒப்படைத்து விடுவோம். 

“ஸலப்” முன்னோர்கள் இக்கருத்துள்ளவர்களாவே இருந்து வந்துள்ளனர். இமாம் மாலிக் இமாம் அஹ்மத் ஆகியோர் இதுபற்றிக் கூறுகையில் 

.الإستواء معلوم والكيفية مجهولة والبحث عنها بدعة 
“இஸ்திவாஉ” என்பது அறியப்பட்ட விடயம். அது எப்படி என்பது அறியப்படாத விடயம். அது பற்றி ஆராய்தல் பித்அத் என்று கூறியுள்ளார்கள். மேற்கண்ட இரண்டு இமாம்களினதும் நோக்கம் இது பற்றித் தர்க்கம் புரிவதை தடைசெய்வதேயாகும். 

அவர்கள் இவ்வாறு கூறியதன் மூலம் தர்க்கவாயலை அடைத்து விட்டார்கள். இவ்விரு இமாம்கள் போலவே இமாம்களிலனேகர் கூறியுள்ளார்கள். ஏனெனில் தர்க்க வாயலைத் திறப்பதால் அநேகமானவர்களுக்கு தீமையே ஏற்படுகிறது. 

ஒரு மனிதன் உமர் (றழி) அவர்களிடம் வந்து பல அர்த்தங்களுக்கு இடம்பாடான- சாத்தியமான திருக்குர்ஆன் வசனங்களில் இரண்டு வசனங்கள் பற்றிக் கேட்டபோது அவர்கள் அவனை அடித்து அனுப்பிவைத்தார்கள். 

இறைஞானிகளில் மிகப் பிரசித்தி பெற்ற பலர் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அதாவது மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்பது அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்ற கருத்தைத் தராது. 

“முஜஸ்ஸிமஹ்” என்ற சடவாதிகளும், மற்றவர்களும் சொல்வதை விட்டும் அல்லாஹ் துய்யவன். ஆயினும் அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் தனது ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளானேயன்றி அவன் அதில் அமர்ந்திருக்கவில்லை. 
பார்க்க – தப்ஸீறு றூஹில் பயான் , வால்யூம் – 16 பக்கம் – 362 

மேலும் றூஹுல் பயான் நூலாசிரியர் 364ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். 

“செய்து” “ஆலிம்” என்ற இரு சொற்களில் “செய்து” என்பது ஒருவனின் உடலுக்கு அதாவது அவனுக்கு வைக்கப்பட்ட இயற்பெயர். இது அவனையே குறிக்கும். “ஆலிம்” என்ற சொல் இது போன்றதல்ல. 

இந்த “ஆலிம்” என்ற சொல் ஒருவனின் உடலைக் குறிக்காமல் அவனிலுள்ள ஒரு தன்மையை மட்டுமே குறிக்கும் “ஆலிம்” என்றால் அறிஞன். இது தொழில் பெயராகும். இவ்வாறுதான் அல்லாஹ் என்ற சொல்லும், அர்றஹ்மான் என்ற சொல்லுமாகும். அல்லாஹ் என்ற சொல் “செய்து” என்ற சொல் போன்றும், “அர்றஹ்மான்” என்ற சொல் “ஆலிம்” என்ற சொல் போன்றுமாகும். 

அல்லாஹ் என்பது அவனின் தாத்தைக் குறிக்கும். “அர்றஹ்மான்” என்பது அவனிலுள்ள அருள் அன்பைக் குறிக்கும். அல்லாஹ் என்பது இயற்பெயர். “அர்றஹ்மான் என்பது தொழில்பெயர். 

الرحمن على العرش استوى. 
என்ற திருவசனத்தில் றஹ்மான் என்ற தொழிற்பெயர்தான் கையாளப் பட்டுள்ளதேயன்றி அல்லாஹ் என்ற இயற்பெயர் கையாளப்படவில்லை.الله على العرش استوى என்ற திருவசனம் ஒரு இடத்திலும் வரவில்லை. 

இவ்வாறு வந்திருந்தால் மட்டும்தான் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று கருத்துவரும். எனவே திருவசனத்தில் அல்லாஹ் என்ற சொல் வராமல் அன்பையும், அருளையும் குறிக்கும் றஹ்மான் என்ற சொல் வந்துள்ளதால் அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று கருத்துக் கொள்ளாமல் அவனின் அருள் அர்ஷிலுள்ளதென்றே கருத்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்கு மாறாக கருத்துக் கொண்டவன் பிழை செய்து விட்டான். 
பார்க்க : றூஹுல் பயான் வால்யூம்-16 பக்கம்- 364 
சுருக்கம் 
றூஹுல் பயான் ஆசிரியர் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ (றஹ்) அவர்கள் அல்லாஹ் என்ற பெயருக்கும், றஹ்மான் என்ற பெயருக்கும் வித்தியாசம் கூறி திருவசனத்தில் அல்லாஹ் என்ற சொல் வராமல் றஹ்மான் என்ற சொல் வந்திருப்பதால் அல்லாஹ் அர்ஷில் இல்லை. அவனின் “றஹ்மத்” அருள் மட்டுமேதான் உள்ளதென்றும் விளக்கம் சொல்கிறார்கள். 

அவர்களுடைய இந்த விளக்கம் “வஹ்ததுல் வுஜூத்” ஞான அடிப்படையில் சில வினாக்களை எழுப்பினாலும்கூட அவர்களின் நோக்கம் அல்லாஹ் அர்ஷில் இல்லை என்பதை மட்டும் நிறுவுவதேயாகும். 
நூலாசிரியர் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ அல்புறூஸவீ. 
தோற்றம் – 1662 மறைவு – 1725 

இவர் உத்மானியக் கவிஞரும் சிறந்தமார்க்க மேதையுமாவார். ஸூபிஸக் கலையிலும் மார்க்க ஞானங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் றூஹுல் பயான், றூஹுல் மத்னவீ பிரசித்தி பெற்றவையாகும். மௌலானா றூமி ஜலாலுத்தீன் (றஹ்) அவர்கள் பாரசீக மொழியில் எழுதிய “மத்னவீ” என்ற நூலின் விரிவுரை நூல்தான் றூஹுல் மத்னவீயாகும். 

الرحمن على العرش استوى 
என்ற திருவசனத்திற்கு விளக்கம் எழுதிய இமாம் ஸுலைமான் ஜமல் (றஹ்) அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் இலாஹிய்யஹ் பிதவ்ழீஹி தப்ஸீரில் ஜலாலைன் என்ற நூல் மூன்றாம் பாகம் 82ம் பக்கத்தில் “இஸ்தவா” என்ற சொல்லுக்கு إستواء يليق به அவன் தரத்திற்கேற்றவாறு என்று கூறி, இவ்வாறு கூறுதல் “முதஷாபிஹ்” ஆன திரு வசனங்கள் பற்றிய விளக்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கும் “ஸலப்” முன்னோர்களின் போக்கென்றும், பின்னோர்கள் வலிந்துரை கொண்டு அதிகாரம் செய்தான் என்று அதற்கு விளக்கம் சொல்லியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 
பார்க்க : அல்புதூஹாதுல் இலாஹிய்யஹ் பாகம்- 03 பக்கம்-82 

சுருக்கம் 
மேற்கண்ட நூலாசிரியர் இவ்வாறு விளக்கம் எழுதியிருப்பது, அல்லாஹ் அர்ஷில் ஒரு மனிதன் கதிரையில் அல்லது சிம்மாசனத்தில் இருப்பதுபோல் இருக்கவில்லை. என்பதையும், அவன் “அர்ஷ்” என்ற இடத்தில் ஆட்சி அதிகாரமுள்ளவனாயிருக்கின்றான் என்பதையுமே காட்டுகிறது. 

அவன் அர்ஷில் இருக்கின்றான் என்பதே சரியானதும், தீர்க்கமான முடிவுமாக இருந்தால் இமாம் அவர்கள் மேற்கண்ட விளக்கம் எழுதியிருக்கத் தேவையில்லை. 

இமாம் அபூஹனீபஹ் (றஹ்) அவர்களின் அல்பிக்ஹுல் அக்பர் என்ற நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் முஹ்யித்தீன் முஹம்மத் இப்னு பஹாஉத்தீன் (றஹ்) அவர்கள் தங்களின் “அல்கவ்லுல்பஸ்ல்” என்ற நூல் 174ம் பக்கத்தில் 

 الرحمن على العرش استوى 
என்ற திருவசனத்திற்கு விளக்கம் எழுதுகையில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பதன் எதார்த்தம் எமக்குத் தெரியாது போனாலும் “இஸ்தவா” என்ற சொல்லுக்கு சடத்தோடு சம்பந்தப்பட்ட அமர்தல் என்பது கருத்தல்ல. அநேகரின் கருத்துப்படி அதற்கு إستولى ஆட்சியதிகாரம் செய்தல் என்று வலிந்துரை கொண்டு அல்லாஹ் அர்ஷின் மீதும் சக்தியுள்ளவன் என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும். 

قد استوى بشر على العراق 
من غير سيف ودم مهراق 
என்ற கவிஞனின் கூற்றில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு ஆட்சிசெய்தான் என்று பொருள் சொல்லுதல் போலவே இதற்கும் பொருள் சொல்லுதல் வேண்டும். அல்லது “இஸ்தவா” என்ற சொல்லுக்கு நாடுதல் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். 

இவ்வாறு அர்த்தம் கொள்வதற்கு ثم استوى إلى السماء பின்னர் அவன் வானத்தளவில் நாடினான் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுக்கலாம். இந்த வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு நாடினான் என்ற பொருள் மட்டுமே உண்டு. 

இஸ்தவா என்ற சொல்லுக்கு إستولى ஆட்சியதிகாரமுள்ளவானானான் என்று பொருள் கொள்வதால் முன்னர் ஆட்சியதிகாரமில்லாதிருந்து பின்னர் ஆட்சியதிகாரம் பெற்றான் என்ற ஆட்சேபனை வந்து விடாது. ஏனெனில் யூஸுப் அத்தியாயம் 21ம் வசனத்தில் 

والله غالب على أمره 
அல்லாஹ் தனது காரியத்தில் மிகைத்தவனாயுள்ளான். என்று வந்திருப்பதை கொண்டு நோக்கினால் மேற்கண்ட ஆட்சேபனையும் வராது. இன்னும் அவனின் ஆட்சியதிகாரம் அர்ஷில் மட்டுமுள்ளதென்ற ஆட்சேபனையும வராது. 

ஏனெனில் மேற்கண்ட வசனத்தில் அர்ஷ் என்று குறிக்கப்பட்டிருந்தாலும் அவனின் ஆட்சி அர்ஷ் முதல் சகல சிருஷ்டிகளிலு முள்ளதென்பது தீர்க்கமான ஏகோபித்த முடிவாகும். “அர்ஷ்” மட்டும் கூறப்பட்டதற்குக் காரணம் அது அல்லாஹ்வினது படைப்பில் அதி விஷேடமான தாயிருப்பதாலாகும். 

இந்த அதிவிஷேடமான படைப்பின்மீதே அவனுக்கு ஆட்சியதிகாரம் இருக்குமாயின் மற்றப் படைப்புக்களில் ஆட்சியதிகாரம் இருக்கச் சொல்லவும் வேண்டுமா? 
பார்க்க – அல்கவ்லுல் பல்ஸ் – பக்கம் – 174 

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ (றஹ்) அவர்கள் தங்களின் அல்யவாகீத் வல் ஜவாஹிர் என்ற நூல் முதலாம் பாகம் 89ம் பக்கத்தில் 17ம் ஆய்வு அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்ற தலைப்பில் எழுதியுள்ள விளக்கத்தில் இவ்விடத்துக்குப் பொருத்தமானதை மட்டும் எழுதுகிறேன். 

சகோதரா! நீ புரிந்து கொள்! இந்தப் பிரச்சினை மிகவும் ஆழமான பிரச்சினையாகும். இது தொடர்பாக ஞானிகளும், கொள்கை ஆய்வாளர்களும் கூறியுள்ள கருத்துக்களை இங்கு எழுதுகின்றேன். அல்லாஹ் நாடினால் சத்தியம் உனக்குத் தெளிவாகும். 

அஷ்ஷெய்கு ஸபிய்யுத்தீன் இப்னு அபில் மன்சூர் (றஹ்) அவர்கள் தங்களின் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் தனது “றஹ்மானிய்யத்” அருள் என்ற “ஸிபத்” தன்மை கொண்டு மட்டும்தான் இருக்கின்றானென்று நம்புதல் கடமையாகும். இதற்கு மாறாக அல்லாஹ்வே அர்ஷில் இருக்கின்றான் என்று சொல்வது கூடாது. 

அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனின் “ஸிபத்” என்ற தன்மை அவனை விட்டும் பிரியாததாயினும் சரியே. ஏனெனில் அல்லாஹ்வே அர்ஷில் இருக்கின்றான் என்பதற்கு திருகுர்ஆனிலோ நபீ மொழிகளிலோ தெளிவாக ஒன்றும் வரவில்லை. ஆகவே அல்லாஹ்வின் விடயத்தில் நமக்குத் தெரியாததைச் சொல்வது கூடாது. 

அல்லாஹ் தனது “றஹ்மானிய்யத்” என்ற தன்மை கொண்டு அர்ஷில் இருப்பது போலவே, அர்ஷும், அதைச் சுற்றியுள்ளவையும் அவனைக் கொண்டே நிற்கின்றன. அல்லாஹ்வின் பரிசுத்த தன்மையில் புத்தியின் முடிவு என்னவெனில்.. 

ஆதாரம் தொடரும்....................

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK