Tuesday, April 24

லவ்ஹுல் மஹ்பூழ் (பாதுகாக்கப்பட்ட பலகை)


அகமியத்திற்காக பேராசிரியர் றமீஸ் பிலாலி(நன்றி)

லவ்ஹுல் மஹ்ஃபூழ் என்னும் பாதுகாக்கப்பட்ட பலகையில் இருந்து முதல் வானத்தில் அதாவது கீழ் வானத்தில் உள்ள பைத்துல் இஸ்ஸா (கண்ணியமிக்க வீடு)என்பதற்கு இன்ஸால் முறையில் இறக்கப்பட்டது.இதனை பைத்துல் மஃமூர் என்றும் அழைக்கப்படுகிறது. 

முதல் வானத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது அகவை தொட்டு 23 ஆண்டுகள் தன்ஸீல் முறையில் இறக்கப்பட்டது. 

இந்த விவரங்களில் திருக்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட தலங்களாக நாம் அறிபவை மூன்றாகும்: 
1. ’லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும் பாதுகாக்கப்பட்ட பலகை. 

2. ’பைத்துல் இஸ்ஸா’ என்னும் முதல்வான வீடு. 

3. திரு நபீ(ஸல்) 

இந்த பைத்துல் இஸ்ஸா என்பது என்ன? இது பற்றி மார்க்க அறிஞர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

அது கஃபா ஆலயத்திற்கு நேர் மேலாக முதல் வானத்தில் உள்ள ஓர் ஆலயம் என்று இப்னு கஸீர் கூறியுள்ளார்கள். எனில் அது பூமி சுற்றும்தோறும் அதன் விசைக்குத் தோதாக தானும் முதல் வானில் ஒரு பெரிய வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும், ஜியோ-சின்க்ரோனஸ் செயற்கைக் கோள் போல! அப்போதுதான் அது எப்போதும் கஃபாவுக்கு நேர் மேலாக இருக்க முடியும். அல்லது அது முதல் வானம் முழுவதும் பரவியதாக இருக்க வேண்டும். 

சூஃபிகளிடம் இதற்கு வேறு ஒரு விளக்கம் உள்ளது. பைத்துல் இஸ்ஸா என்பது நபி(ஸல்) அவர்களின் புனித இதயம் என்று அவர்கள் சொல்கின்றனர். எனில் ‘இன்ஸால்’ மற்றும் ‘தன்ஸீல்’ ஆகிய இரண்டுமே அவர்களுக்கு உரியதாகிவிடுகிறது! 

மகாகவி இக்பால்(றஹ்) அவர்கள் மேலும் ஆழமான ஒரு கருத்தை, நபி(ஸல்) அவர்களின் அகமியம் ஹகீகத் தொடர்பான ஒரு நுட்பத்தை இவ்வாறு பாடுகிறார்கள்: 


“விதிப்பலகையும் நீங்களே! எழுதுகோலும் நீங்களே! 

உங்கள் உள்ளமையே புனித வேதம்! 

இந்த நீல வண்ண விதான வானம் 

உங்களின் விசாலத்தில் ஒரு சின்ன நீர்க்குமிழ்!” 

(லவ்ஹ் பி தூ கலம் பி தூ தேரா உஜூது அல்-கிதாப் 

கும்பதே ஆப்கீனா ரங்க் தேரே முஹீத் மேன் ஹபாப். 

மேற்சொல்லப்பட்ட மூன்றும் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட தலங்கள்தான். எங்கிருந்து இறக்கப்பட்டதோ அதுதான் திருக்குர்ஆனின் மூலஸ்தானம். அது எங்கிருந்து? 

திருக்குர்ஆனைத் தானே இறக்கியதாக அல்லாஹ் சொல்கிறான், இன்ஸால் ஆனாலும் சரி, தன்ஸீல் ஆனாலும் சரி. அது தொடர்பாக உள்ள இன்னொரு திருவசனத்தைக் கவனியுங்கள்: 

“இன்னும் முற்றிலும் சத்தியத்துடனே நாம் இதனை இறக்கி வைத்தோம் – வபில் ஹக்கி அன்ஸல்னாஹு – முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது –வ பில் ஹக்கி நஸல. – நாம் உம்மை நன்மாராயம் நவில்பவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை – வ மா அர்சல்னாக்க இல்லா முபஷ்ஷிரன் வ நதீரா (17: 105) 

திருக்குர்ஆனையும் நபியையும் பற்றி ஒரே வசனத்தில் இங்கே பேசப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் விஷயத்தில் இன்ஸால் மற்றும் நபீ (ஸல்) அவர்களின் விஷயத்தில் ரிசாலத் என்பதாக. 

மேற்குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து மூலமும் இலக்குகளும் தெளிவாகின்றன: 

# திருக்குர்ஆன் இறைவனால் அவனிடமிருந்தே இறக்கப்பட்டது. அது அவனது பேச்சாகும்.கலாமுல்லாஹ்.எனவே அவனது பண்பாகும் சிஃபத்துல்லாஹ். 

# அது லவ்ஹுல் மஹ்ஃபூழ், பைத்துல் இஸ்ஸா மற்றும் நபி(ஸல்) ஆகிய மூவிடங்களில் இறக்கப்பட்டது. 

திருக்குர்ஆனை இறக்கி அருளிய அல்லாஹ் அதைத் தானே பாதுகாப்பதாகச் சொல்கிறான்: 

"நிச்சயமாக நாம்தான் இவ் வேதத்தை இறக்கி வைத்தோம் – இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர – மேலும் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாக இருக்கின்றோம் – வ இன்னா லஹூ லஹாஃபிழூன்(15:9)” 

இந்த வசனத்தில் கொஞ்சம் ஆழமான கவனத்தைச் செலுத்துங்கள். திருக்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு கலாம். அதாவது அவனது ஒரு பண்பு சிபாத் என்பது உள்ளமையில் தரிப்பட்டிருப்பது. உள்ளமையை விட்டுப் பிரியாதது.

அப்படிப் பிரியும் எனில் அது உள்ளமையின் குறைபாடாகிவிடும். அப்படி பிரியும் எனில் பிரிந்த நிலையில் இப்போது அது எதைக் கொண்டு தரிப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழும். இறைப் பண்பு ஒன்று இறைவனை விட்டுப் பிரிந்து வந்து அவன் அல்லாத ஒன்றில், அதாவது படைப்பில், அந்தப் படைப்பைக் கொண்டு தரிப்பட்டு நிற்கிறது என்றால் அது படைப்பை இறைவனுக்கு இணை வைத்ததாகிவிடும்.

இறைப்பண்பு தரிப்பட்டு நிற்க இறைவனின் உள்ளமை தேவையில்லை என்றும் அவனல்லாத படைப்பிலும் அது தரிப்பட்டு நிற்கும் என்றும் ஆகிவிடும். இத்தகைய நிலை ஒருபோதும் சாத்தியம் இல்லாததாகும் (முஹால்). இத்தகைய நிலையை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்.

இறைப்பண்பு எப்போதும் இறைவனின் உள்ளமையைக் கொண்டே தரிப்பட்டுள்ளது. அது எங்கே இருப்பதாகத் தோன்றினும் சரியே. 

திருக்குர்ஆன் என்பது கலாமுல்லாஹ் என்னும் இறைப்பண்பு ஆதலால் அது அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டுதான் தரிப்பட்டுள்ளது. 

அது லவ்ஹுல் மஹ்ஃபூழ் – விதிப்பலகை என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது. 

அது பைத்தல் இஸ்ஸா என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது. 

அது நபி(ஸல்) என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது. 

திருக்குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூழில் இறக்கப்பட்டவுடன் அல்லாஹ்வில் இல்லாமல் ஆகிவிடவில்லை. 

பைத்தல் இஸ்ஸாவில் இறக்கப்பட்டவுடன் லவ்ஹுல் மஹ்ஃபூழில் இல்லாமல் ஆகிவிடவில்லை. 

நபி (ஸல்) அவர்களில் இறக்கப்பட்டவுடன் பைத்தல் இஸ்ஸாவில் இல்லாமல் ஆகிவிடவில்லை. 

இறக்கப்பட்ட தலம் ஒவ்வொன்றிலும் அது அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுகிறது. அது முதன் முதலில் இறங்கியது லவ்ஹ் என்னும் விதிப் பலகை என்பதால் அந்தப் பலகை ‘மஹ்ஃபூழ்’ – ’பாதுகாக்கப்பட்டது’ என்று இறைவனாலேயே அழைக்கப் படுகிறது: 

“அல்ல, இஃது பெருமைமிகு குர்ஆன் – பல் ஹுவ குர்ஆனும் மஜீத் 

பாதுகாக்கப்பட்ட பலகையில் உள்ளது – ஃபீ லவ்ஹிம் மஹ்ஃபூழ் (85: 21,22)” 


எந்த விஷயத்தைச் சொல்வதற்காக இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேனோ, அந்த விஷயத்திற்கு இப்போது வருகிறேன். ஆமாம், இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்வதற்கான முன்னுரையாகத்தான். 

திருக்குர்ஆனின் இருபத்தொன்பது அத்தியாயங்கள் ‘ஹுரூஃப் அல்-முகத்தஆத்’ என்னும் தனியெழுத்துக்களைக் கொண்டு தொடங்குகின்றன. திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான ”சூறத்துல் பகரா” பின்வரும் தனி எழுத்துக்களையே முதல் வசனமாகக் கொண்டு தொடங்குகிறது: 

“அலிஃப் லாம்-மீம்” (2:1) 

”ஜோதி” என்னும் நூலில் அல்லாமா கரீம் கனி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு அற்புதமான விளக்கம் ஒன்றை வரைந்துள்ளார்கள். அதன் சாராம்சமான ஒரு பகுதியைப் பாருங்கள்: 

“அலிப் லாம் மீம்! இவற்றுள் அலிப் தனியாக இருப்பதையும், லாமும் மீமும் சேர்ந்திருப்பதையும் கவனியுங்கள். ‘லாம்’ என்பது ‘லௌஹ்’ என்பதன் முதல் எழுத்து, ‘மீம்’ என்பது ‘மஹ்பூல்’ என்பதன் முதல் எழுத்து. விதிவசம் எழுதப்பட்டுள்ள பட்டோலை என வர்ணிக்கப்பட்ட ‘தக்தீர்’ மட்டும் இல்லை;

இதே தக்தீரை நிர்ணயித்த இறைவன், நாடும் பட்சத்தில் எழுதியவற்றை அழித்து விடும் சக்தியும், எழுதியவற்றை அதிகப்படுத்தக் கூடிய சக்தியும் உள்ளவன். அவனுடைய இந்தச் சக்தியை – லௌஹுல் மஹ்பூல் எனும் ஏட்டின் உற்பத்தி பீடம் என்று ’உம்முல் கிதாப்’ என்று குர்ஆனில் வர்ணிக்கப் பட்டிருக்கிறது. ‘உம்முல் கிதாப்’ எனும் பதத்தின் முதல் எழுத்து ‘அலிப்’ அல்லவா?” (பக். 26,27) 

அலிஃப் என்பது அல்லாஹ் என்னும் திருநாமத்தின் முதல் எழுத்தும் ஆகும். ’உம்முல் கிதாப்’ என்பதன் முதல் எழுத்தும் ஆகும். உம்முல் கிதாப் என்பது மூல கிரந்தம் என்று பொருள்படும்.

அதாவது லவ்ஹுல் மஹ்ஃபூழில் இறக்கப்பட்ட வேதத்தின் மூலம். அது அல்லாஹ்வின் ஞானமேதான். இக்கருத்தை ’உம்முல் கிதாப்’ என்னும் பதம் வந்துள்ள திருமறை வசனங்கள் இரண்டும் சுட்டிக்காட்டுகின்றன: 

“அவனிடத்திலேயே மூல நூல் உள்ளது – வ இந்தஹூ உம்முல் கிதாப் (13:39)” 

“நீங்கள் அறிவதற்காக இதனை நாம் அரபிக் குர்ஆனாக ஆக்கியுள்ளோம் – இன்னா ஜஅல்னாஹு குர்ஆனன் அரபிய்யல் லஅல்லகும் த’கிலூன் – 


இன்னும் நிச்சயமாக இது நம்மிடத்தில் உள்ள மூலநூலில் உள்ளது, மிக்க உயர்வானதும் ஞானம் மிக்கதுமாகும் - வ இன்னஹு ஃபீ உம்மில் கிதாபி லதைனா லஅலிய்யுன் ஹகீம் (43:3,4)” 


சூறத்துல் பகரா’வின் இரண்டாம் வசனம் இப்போது கவனத்திற்குரியது: 

“அந்த நூல், அதில் யாதொரு சந்தேகமும் இல்லை -தாலிகல் கிதாபு லா ரைப ஃபீஹி – இறையச்சமுள்ளோர்க்கு வழிகாட்டி – ஹுதல்லில் முத்தக்கீன் (2:2)” 

இங்கே கவனிக்கப்பட வேண்டிய வார்த்தை ‘தாலிகல் கிதாப்’- ’அந்த நூல்’ என்பதுதான். ’அலிஃப் லாம்-மீம்’ என்று சொன்னதைத் தொடர்ந்து ’தாலிகல் கிதாப்’ – அந்த நூல் என்று சொல்லப்படுவதால் அந்த நூல் என்பது அலிஃப் லாம்-மீம் என்னும் எழுத்துக்கள் சுட்டிக்காட்டுவதாக அல்லாமா கரீம் கனி (ரஹ்) அவர்கள் விளக்கும் ‘உம்முல் கிதாப்’ மற்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ ஆகியவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும். 


தாலிகல் கிதாப் (அந்த நூல்) என்றுதான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி ஹாதல் கிதாப் – இந்த நூல் என்று சொல்லப்படவில்லை என்பதைக் கவனித்து அவர்கள் சொல்கிறார்கள்: 

“முத்தகீன் என்று வர்ணிக்கப் பட்டிருப்பவர்களின் பிறப்புரிமை எத்தைகைய விசேஷமானது என்பதைக் கவனியுங்கள். இந்தக் கிதாபு கொண்டு, அந்தக் கிதாபில் உள்ளவற்றை அறிந்து ஆவன செய்யக்கூடியவர்கள் அவர்கள்; குர்ஆன் என்னும் புத்தக வழியாக லௌஹுல் மஹ்பூல் எனும் புத்தகத்தையும், விதிவசத்தையும் ஆண்டவன் (துஆவுக்கு) பிரார்த்தனைக்கு இரங்கி மாற்று உத்தரவுகள் செய்தால் அவற்றையும் வாசிக்கக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.” (பக். 27,28) 

தாளில் அச்சிடப்படுக் கையில் நாம் வைத்திருக்கும் குர்ஆன் ‘இந்த நூல்’. 

அல்லாஹ்வின் ஞானத்தில் பூர்வீகமாக (கதீம்) உள்ள உம்முல் கிதாப் ‘அந்த நூல்’. 

இந்த நூல் என்பது அந்த நூலின் உள்ளபடியான பிரதிதான். எனினும் ’ஹாதல் கிதாப்’ - இந்த நூல் என்று சொல்லாமல் ’தாலிகல் கிதாப்’ – அந்த நூல் என்று சொல்லப் பட்டுள்ளது ஏன்? 

புறக் கண்ணால் இந்த நூலை எவர் வேண்டுமானாலும் காணமுடியும். ஆனால் அகக் கண்ணால் அந்த நூலைக் காணும் பேற்றை இறைவன் யாருக்குத் தருகிறானோ அவருக்குத்தான் மனதில் சந்தேகங்கள் நீங்கி உண்மை விளங்கும் என்பதற்காகத்தானே! 

”அந்த நூல். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை” 

(தாலிகல் கிதாப் லா ரைப ஃபீஹி) (2:2) 

இறைவா! இந்த நூலில் அந்த நூலைக் காணும் பார்வையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! ஆமீன்.

எழுத்தாக்கம் -பிரபஞ்சக்குடில் -ரமீஸ் பிலாலி

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK