Thursday, January 12

கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ

வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்காக தன்னை தியாகம் செய்த மகான் அதி சங்கைக்குரிய அப்துர் றஷீது தங்கள் வாப்பா நாயகம் அவர்கள். 

-அகமியத்துக்காக தப்லே ஆலம்-

“மகன் நான் போகின்றேன், நான் பணத்துக்காக இங்கு வருவதாக சிலர் கருதுகின்றார்கள். நான் பணத்தின் அடிமையல்லன். எனக்கு இந்த இலங்கையில் ஒரு சதம் கூட கிடைக்காவிடினும், சத்தியத்துக்கு மாறாக நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள், நீங்கள் சொல்வது உண்மை. உண்மை ஒரு போதும் பொய்யாகாது”
-அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் அப்துர் றஷீத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்.- 

15.01.2012 அன்று மகானின் நினைவு தினம்
  • ஞானபிதா மகானுக்காக எழுதிய கவிதை
  • கண்ணூரில் அமைந்துள்ள மகானின் புனித ஸியாரம். ஆகியன உள்ளே...
தங்கள் வாப்பா அவர்கள்
1994ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் கண்டியில் வேலை செய்து கொண்டிந்தாராம் ஸலாஹுத்தீன் நானா. அவரது அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பொன்று காலையில் வந்தது மறு முனையில் அவரது நண்பர் சேதியைச் சொன்னார். “ உங்களின் தங்கள் கொழும்புக்கு வந்துள்ளார்கள் வாருங்கள்” கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லையாம் ஸலாகுத்தீன் நானாவுக்கு உடனே கொழும்பு நோக்கிப் புறப்பட்டார், தெஹிவலையில் அமைந்துள்ள தங்கள் வாப்பாவின் மத்ரஸாவுக்குப் போய்ச் சேர்ந்தார். 

அங்கே மஃரிப் தொழுகைக்காக எல்லோரும் தயாராகி சப்புகளில் நின்று கொண்டிருக்கிறார்கள்.இமாமாக தங்கள் வாப்பா அவர்கள் நிற்கிறார்கள். உடனே பின்னால் மூன்றாவது சப்பில் நின்றாராம் நானா. தொப்பி அணிந்து கொள்ள அவசரத்தில் மறந்து விட்டாராம். 

உடனே முன்னே இமாமத் செய்யத் தயாராகிக் கொண்டிருந்த தங்கள் வாப்பா அவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்காதவர்களாகவே தனது கழுத்தில் அணிந்திருந்த சால்வையை எடுத்து அவர்களின் பின்னால் முதல் சப்பில் நின்றவரிடம் கொடுத்துச் சொன்னார்களாம் “இதனை மூன்றாவது சப்பில் தொப்பி அணியாமல் நிற்பவரிடம் கொடுங்கள்” என்று. 

அப்படியே உறைந்து போனாராம் ஸலாகுத்தீன் நானா, உடனே சால்வை ஸலாகுத்தீன் நானாவுக்கு கைமாற்றப்பட்டு வந்ததும் அதனை தலையில் போட்டுக் கொண்டு தொழுது முடித்தாராம் அத்துடன் “அந்த சால்வையை இன்றும் மிகவும் பத்திரமாக வைத்துள்ளேன்” என்று கண்ணீர் மல்க மௌலானா வாப்பாவை நினைவு கூறுகிறார் ஸலாகுத்தீன் நானா. 

ஆம், இத்தனை அன்பிற்கும், சங்கைக்கும், போற்றுதலுக்குமுரியவர்கள்தான் எங்களின் கண்மணி “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது அப்துர் றஷீது தங்கள் மௌலானா வாப்பா அவர்கள். 

1841 ம் ஆண்டு தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் ரிபாஇய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களில் எட்டாமவரும், கண்மணி நபீ (ஸல்) அவர்களின் 33 வது தலைமுறையினரும் ‘குத்புல் அக்தாப்’ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (கத்தஸல்லாஹு..) அவர்களின் 17வது தலைமுறையினருமான மௌலானா வாப்பா அவர்கள் .


மகான் அஸ்ஸெய்யிது முஹம்மது அவர்களின் ஆன்மீகப் புதல்வராக ஹிஜ்ரீ 1357 ல் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளா மாநிலத்தில் தீவாக அமைந்துள்ள அந்தரோ தீவில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வழி நபீ முஹம்மது (ஸல்) அவர்களுடையதும், தாய் வழி இமாம் அஸ்ஸெய்யிது ஹுசைன் (றழி) அவர்களுடையதுமாகும். 

இவர்களின் பிறப்பிடமான அந்தரோ தீவானது கேரளா மாநிலத்தில் அமைந்திருந்தாலும் அது ஒரு தனியான தீவாக காணப்படுவதோடு அங்கு மலையாளமோ, அல்லது தமிழோ தாய் மொழியாகப் பேசப்படுவதில்லை. அவர்களின் தீவில் பேசப்படும் மொழியை “தீவுப் பாஷை” என்றே அழைப்பர். இதற்கு எழுத்து வடிவம் கிடையாது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். 

இலங்கைக்கு இவர்களின் தாய் மாமா முறையான அஸ்ஸெய்யிதுஷ்ஷெய்ஹு யூசூப் கோயா தங்கள் மௌலானா அவர்களோடு சின்னஞ் சிறுவராக பாய்க் கப்பல் மூலம் பயணித்து முதன் முதலாக மன்னார் கரையில் கால் பதித்து நம் நாட்டிற்கு வருகைதந்த நாயகமவர்கள், 

1947 ம் ஆண்டு காத்தான்குடி வருகை தந்து தங்களின் பரம்பரையில் தோன்றி 1841 இல் காத்தான்குடிக்கு வந்த அஸ்ஸெய்யிது, அஷ்ஷெய்கு ஐதுருஸ் அல் அதனீ (றஹ்) அவர்கள் தரீக்காவின் நடவடிக்கைகளுக்காக காத்தான்குடியில் ஓலைக் குடிசையாக அமைத்திருந்த முகைதீன் தைக்காவில் அமர்ந்தார்கள்.


பின்னர் 1950 ம் ஆண்டு அதனை கல்லால் கட்டிய மகானவர்கள் 1980 ஆம் ஆண்டில் அதனை முற்றாக மாற்றியமைத்து மாடி வைத்து அழகாக கட்டிமுடித்தார்கள். அங்கிருந்து கொண்டே சன்மார்கப் பணியில் ஈடுபட்ட மகானவர்கள் இலங்கையில் கண்டி, கொழும்பு மற்றும் பல பகுதிகளுக்கும் சென்று தரீக்காவின் பணிகளில் ஈடுபட்டார்கள். காதிரிய்யஹ் ரிபாஇய்யஹ் தரீக்காக்களுக்கு இலங்கையில் உயிர் கொடுத்தார்கள். 

இதற்காக காத்தான்குடியில் முகையித்தீன் தைக்காவையும் அதன் காணியில் இலங்கையில் மிகவும் பிரபல்யமாகத் திகழும் அரபுக் கல்லூரிகளில் ஒன்றான “மத்றஸதுல் பலாஹ்” அறபுக் கல்லூரியையும் உருவாக்கினார்கள். 

கண்டியில் வட்டுப்பிட்டியில் மஸ்ஜிதுர் ரிபாஈ பள்ளிவாயலையும், அருகில் மத்ரஸதுல் மின்ஹாஜிய்யஹ் அறபுக் கல்லூரியையும் நிறுவினார்கள். அத்துடன் கொழும்பில் தெஹிவலையில் இஸ்லாமிய கலைஞான நூலகமொன்றினையும் அல்ஜாமிஅத்துல் கௌதிய்யஹ் அறபுக் கல்லூரியையும் நிறுவினார்கள். 

காத்தான்குடியில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள் 1978ம் ஆண்டு காத்தான்குடியில் மார்கெட் சதுக்கத்தில் காசிம் ஜே.பி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற மீலாதுன் நபீ விழாவில் அதிசங்கைகுரிய ஷெய்குனா, ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் கலீமாவின் சரியான பொருள் குறித்தும் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, உருவம் இல்லை என்ற இரண்டு நிலைகளையும் ஒருவர் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேசியபோது இஸ்லாமிய ஞானமில்லாத உலமாஉகளும் ஊர் தலைவர்களும், அரசியல் வாதிகளும் கொதித்தெழுந்தனர். 

பிரச்சினையை அப்போது இலங்கையில் பிரசித்துபெற்றுத் திகழ்ந்த இறைஞான மேதையான எங்களின் நாயகம் தங்கள் வாப்பா அவர்களிடம் கொண்டு வந்தனர். ஞானபிதா கூறியது பிழையென அவர்கள் மறுத்துறைப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். 

அதற்காக மௌலானா வாப்பாவின் முகையத்தீன் தைக்காவுக்கு வந்த ஒரு கூட்டத்தினரில் மௌலவீ சாஹிப் 

“றஊப் மௌலவீ அல்லாஹ்வுக்கு உருவமுண்டு என்று சொல்கிறாரே அது பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டார்” அதற்கு பதிலிளித்த மகான் மௌலானா வாப்பா அவர்கள் 

“இறைவனுக்கு உருவமுண்டு என்பது பிழையென்றால் அவனே இல்லை என்றும், உருவமில்லாதவனை எப்படிப் பார்ப்பது?” என்றும் கேட்டார்கள். 

இது போன்று எல்லாச் சந்தர்பங்களிலும் சங்கைக்குரிய ஷெய்குநாயகம் ஞானபிதா அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களை வெளிப்படையாக ஆதரித்தார்கள். காத்தான்குடி உலமாசபை உண்மையை விளங்கிக் கொள்ளாமல் ஞானபிதா அவர்களுக்கும் அவர்களின் கொள்கையை சரிகண்டோருக்கும் “முர்தத்” பத்வா வழங்கியபோதும், 

அதனை கண்டு கொள்ளாத மகான் அவர்கள் தொடர்ந்தும் தனது ஆதரவையும் தனது முகையத்தீன் தைக்காவில் தனது முரீதீன்களுக்கு ஞானவிளக்கம் அளிப்பதற்காகவும் ஞானபிதா அவர்களையே அழைத்து சன்மார்க்கத்தை போதிக்கப் பணித்தார்கள். 

இதனால் கடும் ஆத்திரமடைந்த அப்போதைய காத்தான்குடி அரசியல் வாதிகளும், படித்த காடையர்களும், இஸ்லாமிய ஞானமில்லாத உலமாஉகளும் மகான் அவர்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்த ஆரம்பித்தனர். 

அப்துர் ரஊப் மௌலவீயை நீங்கள் சரிகாணக் கூடாது என்றும், அப்படி கண்டால் ஊரில் இருக்கக் கூடாது என்றும் பல வழிகளிலும் தொல்லை கொடுக்கவும், அவர்களின் நிலை அறியாமல் அவர்களை அவமதிக்கவும் ஆரம்பித்தார்கள். 

ஒரு நாள் ஒரு ஹாஜியார் மௌலான வாப்பா அவர்களையும் அவர்களின் ரிப்பாய் ராத்திப் குழுவினரையும் தனது வீட்டில் தகரா ராத்திப் செய்ய அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று அன்றிரவு அவரின் வீட்டுக்குச் சென்று ​ராத்திப் செய்தார்கள் வாப்பா அவர்கள். 

ராத்திப் முடிந்ததும் சாப்பிட்டு விட்டு அவர்கள் வெளியாக தயாரானபோது அந்த வீட்டு ஹாஜியார் மௌலானா வாப்பா அவர்களின் கையை முத்தமிடுவது போல பிடித்து தனது வாயில் வைத்து கடித்து விட்டான். மௌலான வாப்பா அவர்களின் கையில் இரத்தம் கசிந்திருந்ததாகவும், எதுவும் சொல்லாத வாப்பா அவர்கள் அவரின் வீட்டை விட்டு வெளியேறினார்கள். 

சில ஆண்டுகளின் பின்னர் அந்த ஹாஜியார் நோய் காரணமாக வைத்தியசாலைக்குச் சென்றார். வைத்தியர்கள் அவரின் இரத்தத்தை பரிசோதிக்குமாறு கூறினார்கள். அவரது இரத்தம் பரிசோதிக்கப் பட்டபோது அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அந்த இரத்தப் புற்றுநோயாலேயே அவர் இறந்து போனார். 

அதேபோல் ஒரு நாள் முகையத்தீன் தைக்காவில் தங்கியிருக்கும் மௌலானா வாப்பா அவர்கள் வெளியில் சென்ற பின் அங்கு வந்த ஒரு பணம் கொழுத்த ஹாஜியார் (பெயரை குறிப்பிட விரும்பவில்லை) “மலையாளத்தான் இங்கிருக்கக் கூடாது” என்று கூறியவராக மௌலானா வாப்பா அவர்கள் தூங்குகின்ற கட்டிலுக்கு காலால் உதைத்துவிட்டுச் சென்றார். 

அவர் உதைத்த சமயத்திலிருந்து அவரின் காலில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டது அந்தக் காயம் ஆற மறுத்தது அவ்விடத்திலிருந்து கால் அழுகத் தொடங்கியது. இவ்வாறு சிறிது, சிறிதாக அவரின் இரண்டு கால்கள் மற்றும் கைகள் என உடலின் பாகங்கள் சிறிது சிறிதாக அழுகிக்கொண்டு வர அவற்றை சிறிய சிறிய துண்டுகளாக வைத்தியர்கள் அகற்றி அகற்றி வந்தனர் அவ்வாறே பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த ஹாஜியார் கால்கள் மற்றும் கையின் பல பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் மரணித்தார்கள். 

இவ்வாறு காத்தான்குடியில் அவமதிக்கப்பட்டதால் மனமுடைந்து காத்தான்குடியை விட்டு வெளியேறும்போது மௌலான வாப்பா அவர்கள் எங்களின் கண்மணி ஷெய்குநாயகம் ஞானபிதா மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களை நோக்கி அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலும்

“மகன் நான் போகின்றேன், நான் பணத்துக்காக இங்கு வருவதாக சிலர் கருகின்றார்கள். நான் பணத்தின் அடிமையல்லன். எனக்கு இந்த இலங்கையில் ஒரு சதம் கூட கிடைக்காவிடினும், சத்தியத்துக்கு மாறாக நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள், நீங்கள் சொல்வது உண்மை. உண்மை ஒரு போதும் பொய்யாகாது” 

என்று கூறிவிட்டு வெளியேறி இலங்கையின் ஏனைய பாகங்களான கண்டி வட்டுப்பிட்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து தனது ஆன்மீகப் பணியினை தொடர்ந்தார்கள். அப்போதும் எங்களின் ஷெய்குநாயகம் ஞானபிதா அவர்களின் மீது அளப்பெரும் அன்பு கொண்டிருந்த அவர்கள். 

ஒருமுறை கண்டியில் நுழார் ஹாஜியார் அவர்களின் வீட்டில் தங்கியிருக்கும்போது சங்கைகுரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களும் ஏனைய காத்தான்குடி முரீதீன்களும் அவர்களை சந்திக்கச் சென்றபோது “மகன், நம்மிட இஸ்லாத்தைப் போதிக்கிற உலமாஉகளை உருவாக்குங்கள்” என்று கூறி அங்கிருந்தோருக்கு கொள்கையின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள். 
சங்கைகுரிய ஞானபிதா அவர்களும் மர்ஹூம் பாறூக் காதிரி அவர்களும்
அத்துடன் “நமது றஊபு மௌலவிக்கும், பாறூக் மௌலவிக்கும் நிகரான உலமா யார்தானிருக்கிறார்?” என்று கேட்டு அவர்கள் இருவரையும் உயர்த்திவைத்து கௌரவப் படுத்தினார்கள். 

அத்துடன் எமது சங்கைகுரிய ஷெய்குனா, ஈழத்தின் சொற்கொண்டல், ஞானபிதா மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்களுக்கு “பைஅத்” ஞானதீட்சை வழங்கியதுடன் அவர்களின் தலைமையில் இயங்கிய காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் புனித குத்துபிய்யஹ் ராத்திபை நடத்துவதற்கான இஜாஸாவையும் வழங்கியது மட்டுமல்லாது ,ஆன்மீக மற்றும் லௌஹீக வைத்தியம் புரிவதற்காக “தல்ஸமாத்”தும் வழங்கினார்கள். 

ஞானபிதா மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் வாப்பாவைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் எழுந்து நின்று கௌரவப் படுத்தி வரவேற்கும் அவர்கள் அங்கு வந்திருக்கும் தனது முரீதுகள் அனைவரும் ஞானபிதா அவர்களிடம் ஸலாம் சொன்ன பின்னரே தன்னிடம் ஸலாம் சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிடுவார்கள். 

இவ்வாறு ஏகத்துவக் கொள்கைக்காக தன்னை அர்பணித்த மகான் அவர்கள் 1990ம் ஆண்டு காலப் பகுயில் இலங்கையிலிருந்து ஒரு குழுவுனருடன் ஈராக் நாட்டிக்கு தனது ஆன்மீக குரு சுல்தானுல் ஆரிபீன், இமாமுல் முஹக்கிகீன் அஸ்ஸெய்யித் அஹ்மதுல் கபீரிர் ரிபாஇ அவர்களின் ஸியாரத்தை தரிசிப்பதற்காகச் சென்றார்கள். 

இவர்கள் பக்தாத் சென்ற போது அங்கிருக்கும் அரச அதிகாரிகள் மகானை அக்காலத்தில் வளைகுடாப் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், ரிபாஇ நாயகம் அவர்களின் ஸியாரம் அமைந்துள்ள இடம் போர் இடம் பெறும் பகுதியாகவும் இருப்பதாலும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். 

கூட பயணித்தவர்கள் ஒரு கணம் கலங்கி விட்டனர். அடுத்தநாள் காலை வாப்பா அவர்களைப் பார்த்து மிகுந்த துக்கத்துடன் “நாம் ரிபாஇ நாயகவர்களை தரிசிக்க வந்தோம் அது முடியாதுபோல் உள்ளது ஊர் திருப்புவோமா?” என்று கேட்டனர். அதற்கு அமைதியாக பதிலளித்த வாப்பா அவர்கள் “மகன் நான் இரவு ரிபாஇ நாயகமவர்களிடம் சொல்லி விட்டேன் மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறினார்கள். 

அடுத்த நாள் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சில அதிகாரிகளும் ஒரு பெரியவரும் வந்தார். வந்தவர் தான் ரியாய் நாயகத்தின் ஸியாரத்தை பரிபாலிப்பவர் என்று கூறியதுடன் தங்களை மரியாதையும் அழைத்து வரும்படி நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். என்று கூறியதுடன் இலங்கையிலிருந்து சென்ற குழுவினரை ஹஸீதாக்கள் பாடி, தப் அடித்து ஊர்வலாமாக ஸியாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள் ஈராக் அரச அதிகாரிகளும் ரிபாஇ நாயகத்தின் தர்ஹா பரிபாலன அதிகாரிகளும். 

இவ்வாறு பல நூறு பக்கங்கள் எழுத்தக்கூடிய அற்புதங்களையும், கராமத்களையும் உடைய குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யிது அப்துர் றஷீது தங்கள் மௌலானா வாப்பா அவர்கள். தான் உயிருடன் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷக் கடியினால் அவதியுறும் மக்களுக்காக இலங்கையில் சுமார் 10 இடங்களில் விஷமுறிஞ்சும் கற்களையும் நாட்டினார்கள். 

காத்தான்குடியில் 1930ம் ஆண்டு மௌலானா வாப்பா அவர்களின் மாமாவால் அமைக்கப்பட்ட காத்தான்குடி காங்கேயன் ஓடை தைக்காவில் 1958ம் ஆண்டு விஷமுறிஞ்சும் கல்லையும், 1968ம் ஆண்டு காத்தான்குடி முகையத்தீன் தைக்காவிலும், கண்டி வட்டுப்பிட்டி மஸ்ஜிதுர் ரியாஈ பள்ளிவாயலிலும், அக்கரைப் பற்று ஆலம்குளத்திலும், பதியதாளாவ பள்ளியிலும், எல்பிடிய, துந்துற மடுக்கல், நூரேக்கர் மற்றும் காத்தான்குடியில் சமாதி கொண்டுள்ள ஞானபிதா அவர்களின் தகப்பனார் சங்கைக்குரிய அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் (வலீ) அவர்களின் தர்ஹாவிலுமாக பத்து இடங்களில் விஷமுறுஞ்சும் கற்களையும் நாட்டினார்கள். 

காத்தான்குடி முகையத்தீன் (தைக்கா புதுப்பித்துக் கட்டப்படுவதற்கு முன்னர்) தைக்காவுக்கு முன்னால் ஒரு சிலிப்பர் கட்டையினை நாட்டி அதில் தைக்காவின் இரும்பு உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது, அப்போது பாம்புக் கடியினால் பீடிக்கப்பட்ட ஒருவர் மயக்கமுற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவராக தைக்காவுக்கு எடுத்து வரப்பட்டார். அவர் இவ்வாறான நிலையில் வருவதைக் கண்ட மௌலானா வாப்பா அவர்கள் அந்த உண்டியல் இருந்த சிலிப்பர் கட்டையை காட்டி “இதிலே பிடியுங்கள்” என்று கூறினார்கள். 

என்ன அதிசயம், பாம்பு தீண்டப்பட்டவரை கட்டையில் வைக்க கட்டை அப்படியே சில மணிநேரங்கள் அவரில் ஏறியிருந்த பாம்பு விஷத்தினை உறிஞ்சிக் கொண்டேயிருந்தது. சில மணிநேரங்களின் பின்னர் விஷம் நீங்கப் பெற்ற அவர் உயிர் பிழைத்தார் இதனை கண்ணால் கண்ட சாட்சிகள் பலர் காத்தான்குடியில் இன்றும் உயிருடன் உள்ளதுடன் அவர்கள் அதனை நினைவு கூறுகின்றனர். 

இவ்வாறு பல நூறு அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தி புனித இஸ்லாத்திற்காகவும் அதன் உயரிய ஏகத்துவக் கொள்கைக்காகவும் அயராது உழைத்த எங்களின் கண்மணி மௌலானா வாப்பா அவர்கள் 

1997 ஆண்டு 06 ஆம் மாதம் 30 ஆம் திகதி தாங்கள் முன்னறிவித்திருந்த படியே ஹிஜ்ரீ 1418 ஸபர் பிறை 22 இல் வெள்ளியிரவு 9.40 மணிக்கு இந்தியாவில் கண்ணூரில் வைத்து “ஹுவல் அவ்வலு, வல் ஆகிறு, வழ்ழாஹிறு, வல்பாதினு” எல்லாமவனே எனும் அர்த்தத்தை தரும் திருகுர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக “தாறுல் பனா” எனும் பொய்யுலகை விட்டு “தாறுல் பகா” எனும் மெய்யுலகையெய்தினார்கள்.

கண்ணூரில் அமைந்துள்ள தங்கள் வாப்பாவின் ஸியாரம்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். இறைநேசர்கள் மரணிப்பதுண்டோ? மரணம் அவர்களுக்கு உடல் சார்ந்த தேயன்றி உயிர் சார்ந்ததல்ல! அன்னாரின் புனித திருஉடல் அவர்களின் விருப்பப்படி கண்ணூரில் பொது மயானத்தில் நலலடக்கம் செய்யப்படடது.


மௌலானா வாப்பா அவர்களின் மறைவின் பின்னர் முதலாம் வருட மகா கந்தூரி 1998.06.19 இல் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது அந்த கந்தூரி தினத்தன்று அதிசங்கைக்குரிய ஷெய்குல் ஹிந்த், ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான் ஸெய்யிதுஸ்ஸாதாத் அஷ்ஷெய்கு அப்துர் றஷீது கோயாதங்கள் மௌலானா வாப்பா அவர்களுக்காக சங்கைகுரிய ஷெய்குனா ஞானபிதா அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஒரு கவிதையை எழுதி வெளியிட்டிருந்தார்கள் . 

ஞானபிதா அவர்கள் எழுதிய கவிதை 

காத்தமா நகரெனக்கு ஒரு கோடி தந்திடினும் 
காசுக்காய் வேஷம் நான் ஒரு போதும் போட மாட்டேன் 
கயவர்கள் என்கரம் பற்றிப் பழிவாங்கிடினும் 
கலிமாவுக்கெதிராகக் கருத்தொன்றும் கூற மாட்டேன் 
கண்ணூரில் கண்ணுறங்கும் கர்த்தனொளி பெற்ற வலீ 
காமிலாம் அப்துர்றஷீத் அன்றுரைத்த வீரமொழி 
இன்றுவரை என்காதில் ஒலிக்கிறதே அந்தமகான் 
இன்றிலையே என்செய்வேன் அவர் பாதம் பணிவதற்கு..

தங்கள்மார் மத்தியிலே புடம்போட்ட தங்கமதாய் 
தரணியிலே வாழ்ந்திட்ட தங்களே எங்களின் கை 
தாவிப் பிடித்துயர் பிர்தவ்ஸில் சேர்த்துவைக்க 
தயவு வைத் தெங்கள் முகம்பார்த்தருள்வீர் நாயகமே! 

கண்ணூர் சுமந்திருக்கும் காமிலொலிநாயகத்தின் 
கஸ்தூரி மணங்கமழும் கப்றுஷரீப் காணுதற்கு 
கண்நூறு போதாது, கண்டவனே நன்கறிவான் 
காமிலுக்கென்ன குறை! அவர் முடிவோ ஏகஇறை. 

கண்ணூருமண்னே நீ என்னதவம் செய்தாயோ 
காமிலின் திருவுடலைச் சுமப்பதற்கு நீயாரோ? 
திருமதீனா திருநபியால் சிறப்புற்றிருப்பதுபோல் 
கண்ணூரே அவர் சிறப்பால் நீ சிறப்புப் பெற்றாயோ? 

எல்லாமாயுள்ளவனே ஏகனிறை அல்லாஹ்வே! 
ஏந்தலிறஸூல் நபியின் கோலமதைக் கொண்டவனே 
எங்கள் குரு தங்கள்வலீ நாயகத்தின் அருளை நீ 
என்றென்றும் எங்கள் மேல் சொரிந்திடுவாய் றஹ்மானே! 

எழுதியது
07.08.1997

சங்கைக்குரிய மகான் மௌலானா வாப்பா அவர்களின் 15வது வருட புனித மிகு கந்தூரி இருபத்தி ஒன்பது நாட்கள் தொடராக அன்னாரின் மௌலீது பாராயணம் செய்யப்பட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 15.01.2012 (ஹிஜ்ரி 1433 ஸபர் 22) இரவு நடைபெறும். 

அதேபோல் இதே தினத்தில் 15வது வருட புனித மனாகிப் வைபவம் தெஹிவளை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாவில் ஆஷிகுர் ரஸுல், குதுபுஸ்ஸமான், அல்வலிய்யுல் காமில், அஷ் ஷெய்குல் காமில், அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீத் அல் காதிரிய்யி, வர்ரிபாஇய்யில் அந்தூரூதிய்யில் கண்ணூரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) நாயகம் அவர்களின் திருப்பேரர்களான அதி சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் ஹஸன் கோயாத் தங்கள், அஸ்ஸெய்யித் ஹுசைன் கோயாத் தங்கள் ஆகியோரின் தலைமையில் இடம் பெறுவதுடன்.

அஷ்ஷெய்கு அஸ் ஸெய்யித் முஹம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்கள்
15 வருட புனித மனாஹிப் மஜ்லிஸ் காத்தான்குடி-04 முகைதீன் தைக்காவில் 15.01.2012 காலையில், 22.01.2012 அன்று கண்டி வட்டுப்பிட்டிய மஸ்ஜிதுல் ரிபாய்யிலும் கண்ணூரில் கண்ணுரங்கும் தங்கம் எங்களின் உள்ளம் கொள்ளை கொண்ட ஆஷிகுர் ரஸுல், குதுபுஸ்ஸமான், அல்வலிய்யுல் காமில், அஷ் ஷெய்குல் காமில், அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீத் அல் காதிரிய்யி, வர்ரிபாஇய்யில் அந்தூரூதிய்யில் கண்ணூரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) நாயகம் அவர்களின் மருமகன் அஷ்ஷெய்கு அஸ் ஸெய்யித் முஹம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது. 

அகமியத்துக்காக தொகுத்து எழுதியவர் – தப்லே ஆலம். 

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK