"அபுத்தகீ"
(இத்தொடர் கட்டுரை "தஃதீறுல் அனாம் பீ தஃபீரில் மனாம்" (கனவுக்கு விளக்கம் சொல்வதில் மனிதர்களை மணமாக்கி வைத்தல்) என்னும் அறபு நூலைத் தழுவி எழுதப்படுகிறது.
இந்நூல் ஷெய்குல் ஆரிபீன் முறப்பிஸ் ஸாலிகீன் அல் இமாம் அப்துல் கனீ அந்நாபலஸீ (றழி) அவர்களால் எழுதப்பட்டதாகும். வாசகர்கள் தொடர்ந்து வாசித்து பயன்பெறுமாறு வினயமுடன் வேண்டுகின்றோம்.)
அப்போது நபீத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஒருவர் தனது றப்பை (அல்லாஹ்வை) காண்பாரா? என்று கேட்டதற்கு நபீ (ஸல்) அவர்கள் “அஸ்ஸுல்தான்” அரசனைக் காண்பதாகும். ஒருவர் ஒரு அரசனைக் கனவு கண்டால் அல்லாஹ்வைத்தான் காண்கிறார் என்று நவின்றார்கள்.
நபீ (ஸல்) அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் முதல் தரமான கனவு ஒருவர் அல்லாஹ்வைக் காண்பதென்றும் அதற்கு அடுத்து தனது பெற்றோர் முஸ்லீமாக இருந்தால் அவர்களைக் காண்பதென்றும் கூறியதுடன், அரசன் ஒருவனைக் காண்பதும் அல்லாஹ்வைக் காண்பதுதான் என்று நவின்றுள்ளார்கள்.
மூன்றாவது
கனவுக்காக சாட்டப்பட்ட மலக்குகளால் காட்டப்படும் கனவுகளாகும். இத்தகு மலக்குகள் “சித்தீகீன்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இறைவன் அவனது ஹிக்மத்திலிருந்து லவ்ஹுல் மஹ்பூழிலிருந்தும் உம்முல் கிதாபிலிருந்தும் உதயமாக்கிக் கொடுக்கிறான்.
இவர்கள் இல்ஹாம் வழங்கப்பட்டவர்கள். ஒவ்வொரு வஸ்துவுக்கும் இவர்கள் உதாரணம் மூலம் விளக்கம் வழங்கப்பட்டுள்ளார்கள்.
நான்காவது
“றுஃயல் மர்மூஸத்” ஆன்மாக்களில் நின்றும் “ இஷாறத்” சைக்கினையாக சில விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் கனவுகள்.
உதாரணமாக- ஒருவர் கனவில் ஒரு மலக்கைக் காண்கிறார். அந்த மலக்கு இவருக்கு இவருடைய ஒரு நண்பரைக் குறித்து உனது இந்த நண்பனின் கைமூலம் உனது மனைவி உனக்கு நஞ்சை ஊட்ட நினைக்கிறார் என்று சொல்கிறார். இது காட்டப்பட்ட கனவு இக்கனவு மூலம் உனது மனைவியுடன் உனது நண்பனாகிய இன்னான் விபச்சாரம் செய்கிறார் என்பதைக் காட்டுவதாகும்.
நஞ்சு ஒரு வஸ்துவில் மறைந்திருப்பதுபோல் விபச்சாரமும் மறைக்கப்பட்டதாகும்.
ஐந்தாவது
நன்மை தீமையாகவும் தீமை நன்மையாகவும் காட்டப்படும் கனவுகள். உதாரணமாக- பள்ளிவாயலில் ஒருவர் கிட்டார் வீணை வாசிக்கக் கனவு கண்டால் அவர் தனது தீய பாவங்களுக்காக அல்லாஹ் அளவில் “தவ்பஹ்” பாவமன்னிப்புக் கேட்கிறார் என்று கருத்தாகும்.
ஒருவர் குளியலறையில் குர்ஆன் ஓதக்கண்டால் அல்லது நடனமாடக் கண்டால் அவர் தீயவிடயத்தில் பிரசித்திபெற்று திகழ்கிறார் எனபதாகும். காரணம் குளியலறை என்பது “அவ்றத்” மறைக்கப்படவேண்டிய அங்கங்களை வெளிப்படுத்தும் இடமாகும்.
பள்ளியில் ஷைத்தான் நுழையாததுபோல் குளியலறையில் மலக்குகள் நுழையமாட்டார்கள். ஹைழுக்காரியின் கனவும் பெருந்தொடக்குடையவர்களின் கனவும் சரியானதாகவே கணிக்கப்படுகிறது. அதேபோல் காபிரான அரசனின் கனவுக்கு நபீ யூசுப் (அலை) அவர்கள் அர்த்தம் சொல்லியுள்ளார்கள்.
அதேபோல் சிறுவர்களின் கனவுகளும் சரியானதாகும். காரணம் நபீ யூசுப் (அலை) அவர்கள் ஏழுவயதில் கண்ட கனவு நனவாகியுள்ளது.
எச்சரிக்கும் கனவுகள் கண்டு கவலை நீடிக்காமல் இருப்பதற்காக உடன் அது வெளியாகிவிடலாம். நல்ல கனவுகள் பலன் உடன் கிடைக்கலாம் பல நாட்களின் பின்பும் கிடைக்கலாம்.
கனவில் மிக உண்மையானது இரவில் ஸஹர் நேரம் காணும் கனவென்று சிலரும். பகலில் காணப்படும் கனவென்று சிலரும் சொல்கின்றார்கள். பகலில் 11.30 மணிக்கு ளுஹர் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் “கைலூலஹ்” தூக்கத்தில் காணப்படும் கனவுதான் மிகச் சிறந்தது என்று இமாம் ஜஃபர் ஸாதிக் (றழி) சொல்கிறார்கள்.
மேலும் ஒரு மனிதன் கானும் கனவில் பலன் அவனுக்கே கிடைக்கலாம். அல்லது அவனது குடும்பத்தில் உறவினரில், நண்பரில் பிறருக்கும் கிடைக்க முடியும். காரணம் இஸ்லாத்தின் விரோதியான அபூஜஹ்ல் ஒரு கனவு கண்டான். அதில் அவன் இஸ்லாத்தில் நுழையவும் நபீ (ஸல்) அவர்களிடம் “பைஅத்” பெறவும் கனவில் காட்டப்பட்டது.
இக்கனவில் பயன் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதன் பயன் அவனது மகனான இக்ரிமா (றழி) அவர்களுக்கே கிடைத்தது. அதேபோல் உம்முல் பழ்ல் என்ற நபீத் தோழி நபிகளிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே நான் கவலையான ஒரு விடயத்தைக் கனவில் கண்டேன் என்றார்கள். அதைக்கேட்ட நபீகள் (ஸல்) நீ நல்லதையே கண்டாய் என்றார்கள்.
அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே! உங்களது உடலில் ஒரு துண்டு வெட்டப்பட்டு எனது மடியில் வைக்கப்பட கண்டேன் என்றார்கள். அதைக் கேட்ட நபீகள் சிரித்தவர்களாக பாதிமா ஒரு ஆண் குழந்தையைப் பெறுவார். அக்குழந்தையை நீங்கள் உங்கள் மடியில் வைத்திருப்பீர்கள். என்றார்கள்.
அதற்கொப்ப பாதிமா (றழி) ஹஸன் (றழி) அவர்களைப் பெற்று நபீகளிடம் கொணர்ந்தபோது அங்கு வந்த உம்முல் பழ்ல் (றழி) அக்குழந்தையைத் தனது மடியில் வைத்தார்கள்.
ஒரு மனிதன் நல்ல கனவுகளைக் காண்பதற்கு வுழூவுடன் நித்திரை செய்ய வேண்டும்.
ஒரு மனிதன் நல்ல கனவுகளைக் காண்பதற்கு வுழூவுடன் நித்திரை செய்ய வேண்டும்.
“அபீப்” பத்தினித்தனம் இல்லாத மனிதனுக்கு கனவுகள் தென்படும் ஆனால் அவனது நிய்யத் பலயீனமாக இருப்பதனாலும் அவனது பாவங்கள் அதிகமாக இருப்பதாலும் அவன் புறம் பேசுவதாலும் கோள் சொல்வதாலும் தான் கண்ட கனவு நினைவில் இருக்காது. விழித்ததும் மறைந்து மறந்துவிடும்.
கனவுக்கு விளக்கம் சொல்பவர் கனவு கண்டவரின் இரகசியங்களை மறைப்பவராகவும் நல்லதையே சொல்பவராகவும் இருக்க வேண்டும். உடன் விளக்கம் சொல்லாமல் சற்று தாமதித்துக் கூற வேண்டும்.
விளக்கம் சொல்பவர் ஆலிமாகவும் விவேகியாகவும், பக்திமானாகவும், பாவங்களைத் தவிர்ந்து நடப்பவராகவும் குர்ஆன் ஹதீஸை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். சூரியன் உதிக்கும் நேரத்திலும், அது மறையும் போதும் ஸzவாலுடைய (நீங்கும்) நேரத்திலும் கனவு விளக்கம் சொல்லக் கூடாது.
ஒருவர் கனவு காணாமல் மனமுரன்டாக விளக்கம் கேட்டால் அவனதுபேச்சைக் கொண்டு விளக்கம் சொல்ல வேண்டும். அவன் சொல்வது நல்லதாக இருப்பின் அதன் பயன் விளக்கம் சொல்பவர்களுக்குச் சேர்ந்துவிடும். அவன் சொல்வது கெட்டதாக இருப்பின் அது மன முரண்டுடன் பொய் சொன்னவனைச் சேர்ந்துவிடும்.
ஒருவர் கனவு கண்டால் அக்கனவை ஒரு “ஆலிம்” மார்க்க அறிஞறிடம் “னாஸிஹ்” நல்லுபதேசம் சொல்பவரிடமே கூற வேண்டும். கனவை “ஜாஹில்” மடையனிடமும் “அதுவ்வுன்” பகைவனிடமும் கூறக் கூடாது.
தான் கனவு கண்டதாக பொய் சொல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொய் சொன்னவர் மறுமைநாளில் பெரும் கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவிக்க நேரும். அவர் சுவர்க்கத்தின் வாடையைகூட பெறமாட்டார் என்று சொல்லப்படுகிறது.
காரணம் கனவில் பொய் சொல்பவன் (தான் காணாததைக் கண்டதாகச் சொல்பவன் அல்லது கண்டதைக் காணாததாகச் சொல்பவன்) “நுபுவ்வத்” நபித்துவத்தை வாதாடும் பொய்யன் போன்றவன். காரணம் கனவு நபித்துவத்தின் ஒரு பகுதி என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. ஒரு பகுதியை வாதாடுபவன் அனைத்தையும் வாதாடுபவன் போன்றவனாவான்.
எனவே கனவுலகம் நுட்பமானதும் விசாலமானதுமாகும். இமாம் அப்துல் கனீ அந்நாபலஸீ (றழி) கூறிய விளக்கங்களை இதில் நான் எழுதுகின்றேன் வாசகர்கள் தொடர்நது படித்து விளங்கங்களைத் தெரிந்து கொள்ளுமாறு வினயமாக வேண்டுகிறேன்.
அல்லாஹுத் தஆலாவைக் கனவில் காண்பது.
"அவனுக்கு நிகராக எதுவுமேயில்லை. அவனே கேட்பவனும் பார்ப்பவனுமாவான். "
திருக்குர்ஆன்
கனவுகளில் சிறந்த கனவு ஒரு அடியான் தனது “றப்” இரட்சகனைக் காண்பதாகும். அல்லது தனது நபீயைக் காண்பதாகும். அல்லது தனது பெற்றோர் முஸ்லீம்களாயின் அவர்களைக் காண்பதாகும்.
ஹதீஸ்- ஸஹீஹுல் புகாரி
இறைவனை அவனது “அழமத்” கண்ணியத்திற்கும் “ஜலால்” அவனது மகத்துவத்திற்கும் ‘ஏற்றால்போல் ஒருவர் கண்டால் அது நன்மையின் ஆதாரமாகும். அக்கனவின் மூலம் உலகில் சுபசோபனமும் மார்க்க சாந்தியும் அவருக்குக் கிடைக்கிறது.
இதற்கு மாற்றமாகக் கண்டு இறைவன் அவருடன் பேசவில்லையானால் அது நன்மையின் அறிகுறியல்ல. ஒருவர் அரசனைக் கண்டால் அவர் அல்லாஹ்வையே காண்கிறார். ஒரு நோயாளி இறைவனைக் கண்டால் அவருக்கு மரணம் நிகழலாம்.
ஒரு வழிகெட்டவன் இறைவனைக் கண்டால் அவன் நேர்வழி பெறுவான். அநீதி இழைக்கப்பட்டவன் இறைவனைக் கண்டால் அவன் பகைவனை ஜெயிக்கிறான். இறைவனின் பேச்சை ஒருவன் கேட்கக் கண்டால் அவன் பயத்தை விட்டும் அச்சம் தீர்கிறான். அவனது மேலான்மையையும் அவன் அடைகிறான்.
ஒருவன் அல்லாஹ்வுடன் பேசி, அவனைப் பார்ப்பதற்கு சக்தி பெற்றால் அல்லாஹ் அவனுக்கு அருள் புரிவதுடன் அவன்மீது அவனுடைய அருளையும் சம்பூரணமாக்குகிறான். அல்லாஹ்வைக் கனவில் பார்த்தவன் மறுமையிலும் அவனைப் பார்ப்பான். ஒருவர் அல்லாஹ்வை அடைந்து அவனிடம் தொழக் கண்டால் இறைவனது றஹ்மத் “பேரருளைக் கொண்டு வெற்றி பெறுவதுடன் இம்மை மறுமையின் மேலெண்ணங்களையும் பெறுவான்.
கனவு தொடரும்.