Friday, December 6

விண்வெளிப் பயணம் மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?


அல் ஆரிபு பில்லாஹ், அல் முஹிப்புர்ரஸூல், அஷ்ஷெய்குல் காமில், அஷ் ஷாஹ் ஷெய்கு ஸூபி ஹலரத் கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தனது முரீது ஒருவர் கேட்ட ஐயமொன்றிற்கு பதிலளித்து எழுதிய ஞானத் தபால்

அரபிக் கடிதத்தின் தமிழாக்கம்..

உன் புறத்திலிருந்து கடிதம் வந்தது. உனது நினைப்பை எனக்கு சமீபமாக்கி வைத்தது. 

விஞ்ஞானிகள் சந்திரனில் இறங்கி அங்கிருந்து கல்லும், மண்ணும் கொண்டு வந்திருப்பதில் மக்கள் மத்தியில் பெரும் அபிப்பிராய பேதங்கள் எழுந்திருப்பதாகவும் அது மார்க்கத்திற்கு நேர் பட்டதா? அல்லது வேறுபட்டதா என்றும் குர்ஆன் ஆயத்துக்களுக்கும், ஹதீஸ்களுக்கும் தன் யோசனைப்படி வியாக்கியானம் செய்வதாகவும் தெளிவான விளக்கத்தைப் பெற ஆதரவு வைப்பதாகவும் எழுதியிருந்தாய்.

இதில் அபிப்பிராய பேதப்பட இடமேயில்லை. இதை மறுப்பது மார்க்க காரியங்களில் நின்றுள்ளதல்ல. இச் சம்பவத்தை அப்படியே உண்மைப்படுத்துவது அல்லது பொய்யாக்கிவைப்பது நம்மீது கடமையுமல்ல.


குர்ஆனும், ஹதீதும் வானத்தளவில் செல்வதையும், சந்திரன், மற்றவைகளில் இறங்குவதையும், அவைகளில் கல், மண் இருப்பதையும் மறுக்கவில்லை.

ஜின், மனுக்கள் தங்கள் வல்லமையைக் கொண்டு வானங்கள், பூமியின் கோணங்களை விட்டு வெளியே போவதைத்தான் குர்ஆன் மறுக்கிறது. அதற்குரிய சக்தி அவர்களுக்கு இல்லை. ஆனாலும்,

அவர்கள் அவர்களது இயற்கை அமைப்பை விட்டு அப்பாற்பட்டதொரு சக்தியினைக் கொண்டு வெளியேபோக முடியுமென்பதை காட்டுகிறது. “யாமஃஷரல் ஜின்னி வல் இன்ஸி” என்ற ஆயத்தில் இருப்பது போன்று!

விஞ்ஞானி பூமியின் ஈர்ப்பு சக்தியின் வட்டத்திலிருந்து வானத்தின் ஈர்ப்பு சக்தியின் கோணத்திற்கு போவது ஒரு சக்தி அதாவது ஆட்டோபாம் மூலம் போகிறான். அதேபோல் வானத்தின் ஈர்ப்பு சக்தியிலிருந்து பூமியின் ஈர்ப்பு சக்திக்கு இறங்குவது அதே சக்தியைக் கொண்டுதான்.

விஞ்ஞானி தனது விஞ்ஞானத்தின் சக்தி கொண்டு அப்படி ஏறினாலும், ஆலமுன் நாஸூத்தை- சட உலகத்தை மற்றொரு சட உலகிற்கு போகிறான். ஒரு வானிலிருந்து மற்றொரு வானிற்குச் செல்கிறான். எல்லா வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் ஆலமுன் நாஸூத்தாகும். வெளிப்புலங்களால் உணரப்படும் மூலங்களான உலகமாகும்.

விஞ்ஞானி ஆலமுல் மலக்கூத்திற்கும், அதற்கும் மேலாக இருக்கும் உலகத்திற்கும் போக மாட்டான்.

அவ்வுலகிற்கு ஏறிப்போகிறவன் தனது ஆன்மாவை பரிசுத்தமாக்கி முஸ்தபா நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது நேர்வழி எனும் சுர்மாவைக் கொண்டு தனது கண்ணிற்கு சுர்மா இட்டவன் (மெஞ்ஞானி)தான் போவான். மெஞ்ஞானி நாஸூத்திலிருந்து ஆலமுல் மலகூத், ஜபரூத், லாஹூத்திற்கு தனது உள்ளத்தில் இறைவனிடமிருந்து கிடைக்கும் ரப்பானிய்யான சக்தியைக் கொண்டு போவான்.

எனது இத்தபாலை நம் தரீகத் சகோதரர்களிடம் காட்டுவது அவசியமாகும். ஈடேற்றமே நல் முடிவாகும். உங்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் ஈடேற்றமும், கிருபையும், பரகத்தும் உண்டாவதாக!.
                                                         -------------------------------------------------

ஷெய்குனா அவர்களின் வாழ்கைச் சுருக்கத்திலிருந்து.
08.12.2013

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK