மீள் பிரசுரம் - முதலாம் பகுதி.
மூலம் : ஷம்ஸ் இணையத்தளம்.
-அதிசங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-
நங்கூரங்கள்.
"நீரின் மேல் நிற்கும் பூமி அசைந்து விடாமலிருக்க அதன் மேல் மலைகளை முளைகளாக அமைத்துள்ளோம்"
-அல்குர்ஆன்-
![]() |
2011 ம் ஆண்டு நடந்த அஜ்மீர் கந்தூரியின் போது |
நீரில் மிதக்கும் கப்பல் அசைந்து விடாமலிருக்க நங்கூரமிட்டு அதை நிலை பெறச் செய்வது போல் நீரின் மேல் படைக்கப்பட்டுள்ள பூமி அசைந்து விடாமலிருக்க ஆங்காங்கே மலைகளை நிறுவி அதை நிலை பெறச் செய்துள்ளான் இறைவன்.
"ஜிபால்" மலைகள் என்ற சொல், பூமியில் உள்ள இமயமலை, உஹதுமலை போன்ற கல்லினாலான மலைகளை எடுத்துக் கொள்ளும் இது நீரின் மேல் நீச்சலடிக்கும் அறஞர்களின் கருத்து.
"மலைகள்" என்ற சொல் ஆத்மார்த்த ஞானிகளான அவ்லியாக்களை எடுத்துக் கொள்ளும். இது நீரினுள்ளே குழியோடும் மெய்ஞ்ஞானிகளின் கூற்று.
இப்பரந்த பூமியில் ஆங்காங்கே அவ்லியாக்கள் இருப்பதினால்தான் பூமி ஆட்ட அசைவின்றி நிலைபெற்று நிற்கின்றதாம்.
மலைகளில் சிறியது, பெரியதென்று இருப்பது போல் அவ்லியாக்களிலும் பலதரத்தையுடையோர் இருக்கின்றார்கள்.
கேடயங்கள்.
"பால் சுவைக்கும் பச்சிளங்குழந்தைகளும், பரந்த புற்றரை மேயும் கால் நடைகளும், இறைவனை இடையறாது ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும். நல்லடியார்களும் இப்பூமியில் இல்லையாயின் உங்கள் மீது வேதனை நிச்சயமாக்க கொட்டப்படும்.
தாயின் மடியிலிருந்து பால் சுவைக்கும் பச்சிளம் குழவிகள் அப்பாவிகள், பாவமே அறியாதவர்கள் மனம் தூய்மையானவர்கள், களக்கமற்ற உள்ள முடையவர்கள். இதேபோல் புற்றரைகளில் மேயும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளும் பாவம் அறியாதவைகள்.
இன்னுமிதேபோல், அல்லாஹ்வை அறிந்து அவனின் நினைவிலேயே இலயித்து உலகையும, உலகிலுள்ளவற்றையும் மறந்து வாழும் இறைஞானிகளானஅவ்லியாக்கள் பரிசுத்தமானவர்கள், தூய்மையானவர்கள்.
இம்மூன்று வகுப்பாரும் இப்பூமியில் வாழ்வதினால்தான் இறைவனை மறந்து அநீதி, அட்டகாசம், கொலை, கொள்ளை,சூது, விபச்சாரம் போன்ற பாவச் செயல்களைப் புரிபவர்கள் இறை தண்டனையில் நின்றும் தப்பித்துக் கொள்கிறார்கள். நல்லோரொருவருளரேலவர் பொருட்டெல்லோருர்க்கும் பெய்யும் மழை" என்பது போல் மேற்கூறப்பட்ட மூன்று வகுப்பாரின் பொருட்டினால் தான் பாவிகள் கூட ஒரு முடல் தண்ணீரேனும் குடிக்க முடிகிறது.
நாடாளும் அமைச்சர்கள்
அல்லாஹ் ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவன், நாயகம் (ஸல்) அவர்கள் அந்நாட்டின் பிரதமர் போன்றவர்கள். அவ்லியாக்கள் அந்நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் போன்றவர்கள்.
ஏனைய மனிதர்கள் அந்நாட்டின் பிரஜைகள் போன்றவர்கள். மூடர்களான குதர்க்கவாதிகளில் யார் என்ன சொன்னாலும் இதுதான் மறுக்க முடியாத உண்மை!
அமைச்சர்கள அனைவரும் அமைச்சர்கள் என்ற வகையில் சமமானவர்களாயிருந்தாலும், அவர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அமைச்சுத்துறையைப் பொறுத்து தரம் கூடியவர்களாகவும், குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
நிதியமைச்சரும் கைத்தொழில் அமைச்சரும் பதவி அந்தஸ்தில் சமமானவர்களாக இருந்தாலும், அவர்களின் அமைச்சின் பொறுப்பைப் பொறுத்து ,அவ்விருவருக்கு மிடையில் வேறுபாடுகள் இருப்பது உண்மை.
இதேபோல் அவ்லியாக்கள் அனைவரும் அவனது ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கும்அமைச்சர்களாக இருந்தாலும் கூட அவர்களில் சிலர் மறுசிலரை விட மேம்பட்டவர்களாகவும், பொறுப்புக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வினால் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களில் இரண்டு "தீன்" கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஒரு "தீன்" பக்தாதில் வாழும் முஹ்யித்தீன் ஆவார்கள். மற்ற "தீன்" அஜ்மீரில்வாழும் முயீனுத்தீன் ஆவார்கள்.
பக்தாத் அரசர் "குத்புல் அக்தாப்" என்றும் அஜ்மீர் அரசர் "குத்புல் ஹிந்து" பிசித்தி பெற்றுள்ளார்கள்.
வைத்திய நிபுணர்கள்
அவ்லியாக்கள் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உடலைப் பாதிக்கும் வியாதிகளைக் கருவிகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் "டொக்டர்"கள் போல் மனிதர்களின் உள்ளத்தைப் பாதிக்கும் பெருமை, பொறாமை, கோபம், ஆணவம், மமதை போன்ற பெருவியாதிகளை ஞானப் பார்வையின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ஆன்மீக மருந்து வழங்கும் ஆன்மீக வைத்தியர்களாகவும் இருக்கிறார்கள்.
டொக்டர்களில் ஒவ்வொரு நோய்க்கும் "ஸ்பெஷலிஸ்ட்" இருப்பது போல், அவ்லியாக்களிலும் மனிதர்களின் உடலிலேற்படுகின்ற நோயைத் தீர்க்கும் "ஸ்பெஷலிஸ்டு" கள் இருக்கிறார்கள்.
எல்லா நோய்களுக்கும் பொதுவான டொக்டர் இருப்பது போல், பக்தாத் அரசர் "குத்புல் அக்தாப்" முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் எல்லாவிதமான நோய்களையும் கண்டறிந்து மருந்து செய்யும் டொக்டராகவும், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் பேரரசராகவும் விளங்குகிறார்கள்.
தமிழ் நாடு, ஏர்வாடி நகரில் வாழும் ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் வலியுல்லாஹ் அவர்கள் பைத்தியத்தைக்குணப்படுத்தும் "ஸ்பெஷலிஸ்ட்" ஆகவும்.,
தமிழ் நாடு நாகூர் நகரில் வாழும் காரணக் கடல் "கன்ஜேஷவாயி" ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் சூனியம், பேய் போன்றவற்றை வேருடன் பிடுங்கி எறியும் "ஸ்பெஷலிஸ்ட்" ஆகவும் விளங்குகிறார்கள்.
பொருள் வழங்கும் வள்ளல்
அஜ்மீர் அரசர் "கரீபே நவாஸ்"குத்புல் ஹிந்து ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலி) அவர்கள் எவ்விதமான நோய்களையும்குணப்படுத்தும் நிபுணராகவும், மனிதர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பவர்களாவும், குறிப்பாக உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க உறைவிடமின்றி வறுமையால் வாடும் வறியவர்களுக்கு வாரி வழங்கும் அவர்களைக் கோடீஸ்வரர் களாக்கும் குணமுடைய கொடை வள்ளலாகவும் திகழ்கிறார்கள்.
அஜ்மீர் நகரிலுள்ள அவர்களின் சமாதியை தரிசிக்க வருபவர்களில் அநேகர் கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிறப்பு
அஜ்மீர் அரசர் ஹாஜா நாயகம் (ரலி) அவர்கள் குறாஸான் நாட்டின் சன்ஜர் எனும் மாவட்டத்தில் ஜிஸ்த் எனும் ஊரில் 537ம் ஆண்டு திங்கட்கிழமை பிறந்தார்கள். அவர்கள் தோன்றி இன்று(ஹிஜ்ரி-1433) சுமார் 896 வருடங்களாகின்றன.
தந்தையின் பெயர் கியாதுத்தீன் அஹ்மத் (றழி)
தாயின் பெயர் மாஹே நூர் (றழி)
ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.
"மீர்ஆதுல் அஸ்றார்" என்ற நூலில் கூறப்பட்ட படி அவர்களின் வம்சவழி பின்வருமாறு'
ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (றழி)
ஹாஜா கியாதுத்தீன் (றழி)
ஹாஜா நஜ்முத்தீன் (றழி)
செய்யிது அப்துல் அஸீஸ் (றழி)
செய்யிது இப்றாஹீம் (றழி)
செய்யிது இமாம் மூஸல் காழிம் (றழி)
செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (றழி)
செய்யிது இமாம் முஹம்மது பாகர் (றழி)
செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (றழி)
செய்யிது இமாம் ஹுஸைன் (றழி)
செய்யிது இமாம் அலி (றழி)
குராஸான் நாட்டில் பிறந்து வளர்ந்த ஹாஜா நாயகம் (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயதான பொழுது தந்தை கியாதுத்தீன் (றழி)அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள்.
தந்தைக்கு தோட்டம் ஒன்றும், காற்றாடி தண்ணீர் இயந்திரம் ஒன்றும் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் அவ்விரண்டும் ஹாஜா நாயகம் அவர்களுக்குக் கிடைத்தது.
ஞானவித்திட்ட கந்தூசி
ஒரு நாள் ஹாஜா நாயகம் அவர்கள் தோட்டத்திலுள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம் கந்தையான கிழிந்த ஆடைகளுடன், அடர்ந்த தலை முடி தாடியுடன் மஸ்த்தான் போன்ற ஒருவர் அங்கு வந்தார்.
அவரைக் கண்ட 15 வயதுடைய ஹாஜா நாயகம் (றழி)அவர்கள் அவரண்டை சென்று, அவர்களின் கரங்களை முத்தமிட்டு, அவரை வரவேற்று உபசரித்த, தோட்டத்திலுள்ள மர நிழலில் அமரச் செய்து குசலம் விசாரித்தார்கள். அவரின் பெயர் இப்றாஹீம் கந்தூசிஎன்பதை அவர் மூலம் அறிந்து கொண்ட ஹாஜா நாயகம் (றழி)அவர்கள் அன்னாருக்காக திராட்சைப் பழம் கொடுத்து கௌரவித்தார்கள்.
திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு முடிந்த செய்யிது இப்றாஹீம் கந்தூசி அவர்கள் தனது சட்டைப் பைக்குள்ளிருந்து எள்ளினால் செய்யப்பட்ட ரொட்டித் துண்டொன்றை எடுத்து தனது உமிழ் நீரில் அதை நனைத்து ஹாஜா நாயகத்திடம் கொடுத்து சாப்பிடுமாறு பணித்தார்கள்.
அந்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்ட ஹாஜா நாயகத்தின் உள்ளத்தில் இறை ஞானம் பெருக்கெடுத்தோட ஆரம்பமாயிற்று, அல்லாஹ்வின் மீது பேரின்பக் காதல் பொங்கலாயிற்று, இறைஞான ஒளியால் அவர்களின் மனம் நிரம்பிற்று. உலகாசைகள் யாவும் அவரக்ளின் உள்ளத்தை விட்டும் ஒரு மித்து ஓடிற்று!
தோட்டத்தையும் மற்றவைகளையும் விற்றுவிட்டு அதனால் கிடைத்த பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டு ரஷ்யாவிலுள்ள "புஹாறா" நகரை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அங்கு சில காலம் தங்கி ஹுஸாமுத்தீன் புகாரீ (ரஹ்) அவரிகளிடம் குர்ஆன் ஓதக்கற்று, அதை மனனமும் செய்து கொண்டதுடன், மார்க்க கல்வியையும் கற்றுக் கொண்டு ஈராக் நாட்டுக்கு பிரயாணமானார்கள்.
ஞான குருவின் சந்திப்பு
ஈராக்கை வந்தடைந்த நாயகமவர்கள் அங்குள்ளவர்களிடம் "இங்கே கறாமத் அற்புதம் நிகழ்த்தக்கூடிய மகான்கள் யாரும் இருக்கிறார்களா?" என்று வினவினார்கள்.
அப்போது அங்குள்ளவர்கள் "ஹாஜா உஸ்மான் ஹாறூனி (றழி)என்ற ஒரு மகானைப் பற்றிக் கூறினார்கள். ஹாஜா உஸ்மான் ஹறூனி(றழி) அவர்களோ தங்களுடைய வணக்கத்தலத்தில் இறைவனின் "முறாகபா முஷாஹதா" எனும் மெய்ஞ்ஞான நிஷ்டை நிலையில் லயித்துப்போயிருந்தார்கள்.
ஹாஜா நாயகம் அங்கு சென்ற போது அந்த மகான் அவரது வணக்கத்தலத்தில்இருக்கவில்லை. பக்கத்திலிருந்த ஹஸ்ரத் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்களின் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்றிருந்தார்கள். அங்கு சென்று அவர்களைக் கண்டு சலாமுரைத்து அன்னாரின் பொற்பாதம் பணிந்து நின்றார்கள் ஹாஜா நாயகம் அவர்கள். அந்நேரம் அம்மகானுக்கு 52 வயதாக இருந்தது.
ஹாஜா நாயகத்தைக் கண்ட மகான் உஸ்மான் ஹாறூனி அவர்கள் ஹாஜாவின் ஞானக் கண்ணைத் திறக்கும் பணியில் கவன மெடுத்தார்கள். பல்வேறு வணக்க வழிபாடுகளில் நடை பழக்கினார்கள்.
நாற்பது நாட்கள் உருண்டோடின. நாற்பத்தி ஓராம் நாள் ஹாஜா நாயகத்தை தன்னருகே அழைத்து உட்காரச் செய்த உஸ்மான் ஹாறூனி அவர்கள் "வானத்தைப் பாருங்கள்" என்று ஹாஜா நாயகத்தைப் பணித்தார்கள். ஹாஜா வானத்தைப் பார்த்தார்கள். பின்னர் கண்களை மூடுங்கள் என்றார்கள். ஹாஜா நாயகமும் தமது கண்விழிகளை மூடினார்கள். பின்னர் கண்களைத் திறக்கச் சொன்னார்கள். ஹாஜா நாயகம் தமது விழிகளை மலரச் செய்தார்கள்.
கண்திறந்த ஹாஜா நாயகம் அவர்களிடம் மகான் உஸ்மான் ஹாறூனி அவர்கள் "என்ன தெரிந்தது" என வினவிய போது ஹாஜா அவர்கள், ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்று நாள் வரை தோன்றிய சர்வ சிருஷ்டிகளையும், இன்றிலிருந்து இறுதி நாள் வரை தோன்றவுள்ள சகல சிருஷட்டிகளையுங் கண்டேன்" என விடையளித்தார்கள்.
ஹாஜாவின் பதிலைக் கேட்ட உஸ்மான்ஹாறூனி(றழி) அவர்கள் "மகனே உனது காரியம் முடிந்து விட்டது. என்றாலும் சில காலம் என்னிடம் தங்கியிரு" என்று பணித்தார்கள். அதன் படி சில காலம் அம்மகானிடம் நாயகமவர்கள் தங்கியிருந்து ஞானபாட்டையில் வீறு நடையிட்டுச் சென்றார்கள்.
தொடரும்...
மூலம் : ஷம்ஸ் இணையத்தளம்.