-பைசான் மதீனா-
இலங்கை உள்நாட்டுப் போருக்குள் சுமார் மூன்று தசாப்தங்கள் துவண்டு மீண்டு கொண்டிருக்கின்றது. இவ் போரானது இலங்கையில் சிறுபான்மையினராக காணப்படும் தமிழ் பேசும் மக்களின் பூர்வீகப் பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இடம் பெற்றிருந்தது.
இலங்கையில் யுத்த காலத்தில் தொடங்கி இன்று வரை பல வெளிநாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பணியாற்றினாலும் இலங்கையர்களால் இலங்கையர்களுக்காக உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மிகச் சிலதே.
அவ்வாறு உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களில் வடகிழக்கில் முதன்மையானதாக விளங்குவது சரீரம் நிறுவனமாகும் இந்நிறுவனம் 1990 ம் ஆண்டு திரு. ஆறுமுகம் லோகேஸ்வரன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
இது தவிரவும் பல தொண்டு நிறுவனங்கள் இப்பிரதேசங்களில் காலத்திற்கு காலம் உருவாக்கப்பட்டாலும் அவை அரசியல், பிரதேசவாதம் மற்றும் இனவாத்திற்குள் மூழ்கி தங்கள் அடையாளங்களை இழந்து செயலிழந்திருந்தன.
இவ்வாறான சூழலில் இலங்கையில் யுத்தத்திற்குள் சிக்கி சீரழிந்து போயிருக்கும் கிழக்குமாகாணத்தில் அமைந்துள்ள காத்தான்குடி நகரத்தில் 2006ம் ஆண்டளவில் சதாரணமாக படித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் மற்றும் தொழில் புரிந்து கொண்டிருந்த சில இளைஞர்களும் யுத்த சூழக்குள் தமது மக்களுக்கு தேவையான மிகச் சிறிய உதவிகளை சில குழுக்களாக செய்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு இயங்கிக் கொண்டிருந்த குழுக்கள் தங்களுக்குள் காணப்பட்ட ஒன்றுபட்ட தன்மையினை உணரலாயினர். அப்போது அவர்களுக்குள் ஒன்றாகச் செயற்படுவது குறித்த எண்ணம் தோன்றலாயிற்று.
அந்த எண்ணத்திற்கு அவர்களே 2010ம் ஆண்டு 07 மாதம் 17 ம் திகதி ஒரு வடிவம் வழங்கினார்கள் அந்த வடிவத்திற்கு அஷ் ஷுப்பான் நலன் புரிச்சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது.
"இளம் கன்று பயமரியாது" என்பது தமிழ் அறிவுலகம் கண்ட முதுமொழி இதனை மெய்பிக்கும் வண்ணம் இந்த அமைப்பு மக்கள் சேவையில் புயலாக காத்தான்குடியிலிருந்து கிளம்பியது.
தனியே மிகச் சிறிய வயதினரான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கழைக்கழக மாணவர்களைக் கொண்ட அமைப்பாக இருந்த காரணத்தால் இலகுவாக மக்களின் நன்மதிப்பை இப்பிரதேசத்தில் பெற்றுக் கொண்டதுடன் தங்களுக்குத் தேவையான நிதி உதவிகளையும் தங்கள் பகுதிகளில் உள்ள தனவந்தர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டது. ஆகவே மிக அவசியமான தேவைகளுக்கான நிதி இவ்வமைப்புக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.
அத்துடன் நின்றுவிடாது, இவ்வமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் தாங்கள் தடுமாறிவிடக் கூடாது என்பதற்காக துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் அறத்தை கற்பிக்கும் ஆசான்கள் என மிகச் சிறந்த ஆன்மீக மற்றும் கல்விமான்களை தங்களின் ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் அமைப்புக்குள் உள்வாங்கிக் கொண்டனர்.
இவ்வாறு இரும்புத் தூண்களால் இவ்வமைப்பு பலப்படுத்தப்பட்டதால் அதன் கூட்டிணைந்த முதலாவது மக்கள் உதவித் திட்டமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுய வலுவூட்டும் (Empowerment Programs) பயிற்சிகள் மற்றும் உதவிகளை வழங்குவதாக அமைந்தது. இதனால் மக்கள் உள்ளங்களுக்குள் இன்னும் இவ்வமைப்பு ஆழ வேருண்டியது.
இத்துடன் தங்களை வரையறை செய்து கொள்ளாத இவ்வமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் தங்களின் வயது, அனுபவம், ஆளுமை என்பவற்றையும் தாண்டி சுய தொழில் உதவி, வறிய மக்களுக்கான நிவாரண உதவி, இரத்தானம், பெண்களுக்கான சுய தொழில் செயல் திட்டங்கள், மாணவர்களுக்கான வழி காட்டல் கருத்தரங்குகள், தனது சமூகத்தில் வாழும் சமூக சேவர்களுக்கான பாராட்டு விழாக்கள் என சிக்சர் அடித்தனர்.
எனினும் தங்களை இலங்கைகுள் மட்டும் முடக்கிக் கொள்ள விரும்பாத இவர்கள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வெளிநாடுகளில் வேலை நிமிர்த்தம் சென்று பணிபுரிவதை அவதானித்தனர். உடனே அவர்களை ஒன்றினைத்து அந்நாட்டில் வசிக்கும் அல்லது பணிபுரியும் மக்களுக்காக எதனை செய்யலாம் என்று சிந்திக்கலாயினர்.
ஆம், அவர்களுக்காக தங்களால் முடிந்த உதவிகளை அவர்கள் செய்வதற்கு ஒரு பரிட்சாத்த முயற்சி செய்தனர். அந்த உதவியானது உயிரை காக்க உதவும் விலை மதிக்க முடியாத தங்களின் இரத்தத்தினை அந்நாட்டில் தானம் செய்வதாக இருந்தது.
ஆம் அதுவும் நடந்தேரியிருக்கிறது, வலைகுடாவில் கத்தாரில் பணிபுரியும் இவ்வமைப்பின் 50ம் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் சேர்ந்து அந்நாட்டின் தலைமை வைத்தியசாலையான கமாட் ஹோஸ்பிட்டலுக்கு தங்களின் இரத்தத்தினை தானமாக வழங்கியுள்ளனர்.
புயல் கடல் கடந்து வீச ஆரம்பித்துள்ளது. அது உலகுக்கே வீச எமது வாழ்த்துக்கள்.
-அகமியத்துக்காக பைசான் மதீனா.-