ஒ.நூருல் அமீன் ஃபைஜி
எனது ஆன்மிக நணபரும் எனது குருநாதரின் கலிஃபாக்களில் ஒருவரான அரபி கல்லூரி பேராசிரியர் அப்ஃசலுல் உலமா, மௌலவி ஜுபைர் அஹ்மது பாக்கவி (ஷுஹுது ஷாஹ் ஃபைஜி) எனது குருநாதரின் வாழ்க்கையில் நடந்த படிப்பினையூட்டும் சம்பவங்களில் சிலவற்றை தொகுத்து “மெய்ஞான பாதையிலே” என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார்கள். அதன் முன்னுரையில் ஹஜ்ரத் அவர்கள் இப்படி எழுதியுள்ளார்கள்:
இமாம் அபுஹனீபா(ரஹ்) அவர்களிடம் உங்கள் வயது என்ன? என ஒருவர் கேட்க, அவர்கள், “இரண்டு வயது” என்றார்களாம். “என்ன இந்த முதிய வயதில் இரண்டு வயது என்கின்றீர்களே?” என்ற போது, “ இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களிடம் இரண்டு வருடம் பழகினேன். அதை மட்டுமே நான் வாழ்ந்த வருடங்களாக கருதுகின்றேன்” என்று பதில் கூறினார்களாம் அவர்கள்.
இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களோ, “நல்லடியார்களின் தொடர்பும், நள்ளிரவில் இறைவனிடம் இரகசியம் பேசுதலும் இல்லையென்றால் இவ்வுலகில் நான் வாழ்வதையே விரும்பி இருக்க மாட்டேன்” என கூறினார்கள்.
“இந்த இமாம்களின் கூற்றை மற்றவர்கள் நம்புகின்றார்களோ இல்லையோ எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) தந்த அருட்கொடையாம் குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி அவர்களோடு பழகியவர்கள் அந்த நாட்களைத்தான் தனது வாழ்நாள் என எண்ணுகிறார்கள்” என்று ஹஜ்ரத் அவர்கள் கூறுவது எத்தனை சத்தியமான வார்த்தைகள். அந்த வசந்தகால நாட்களை நினக்கும் போதெல்லாம் கண்களிருந்து கண்ணீர் பெருகுகிறது.
என் குருநாதர் பற்றிய அறிமுகமாக ஒரு சில சம்பவங்கள் “மெய்ஞான பாதையிலே “ நூலிலிருந்தும் எனது நேரடி அனுபவத்திலிருந்தும் இங்கே தொகுத்தளித்துள்ளேன்.
ஒ.நூருல் அமீன் ஃபைஜி
ஷைகு அவர்கள் திருச்சியில் கல்வி பயின்ற போது முஹம்மது சுலைமான் பாக்கவி என்ற ஒரு ஆசிரியர் இவர்களுக்கு மிகவும் மரியாதை செய்பவராக இருந்தார்கள். இவர்களை வழியில் கண்டால் சுலைமான் பாக்கவி தங்கள் சைக்கிளிலிருந்து இறங்கிக் கொள்வார். சகஆசிரியர் ஒருவர், “என்ன ஒரு சின்ன பையனுக்கு இந்த அளவு மரியாதை செய்கிறீர்கள்” என கேட்ட போது, “ அவரது முகத்தில் இறை நேசர்களின் சுடர் வீசுகிறது. அவர் தனது காலத்தின் குத்பாக, இறை நேசர்களின் தலைவராக விளங்குவார்” என கூறினார் அந்த ஆசிரியப் பெருந்தகை.
எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் ஷைகு மகான். ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில் ஷைகு அவர்களுடன் அமர்திருந்தோம். ஈராக் யுத்த நேரம். செய்தி கேட்பதற்காக டி.வியை வைத்தபோது தரீக்கத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒரு பேச்சாளர் சூஃபியாக்களை சாடினார். அதிலும் குறிப்பாக எனது ஷைகு அவர்களை மறைமுகமாக சாடினார். அங்கே இருந்த சீடர்கள் கோபமடைந்தார்கள். ஷைகு அவர்கள் முகத்தில் சிறு வருத்தமும் இல்லை. புன்னகை மாறாமலே இப்படி சொன்னார்கள், “ அவர் எந்த நோக்கத்துடன் இப்படி பேசுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு தவறான உள் நோக்கமில்லை. அவரது ஆய்வின் படி தவறென்று என்னை விளங்கி கொண்டுள்ளார். அதன் விளைவாக அல்லாஹ், ரசூலின் பொருத்தம் நாடி என்னை ஏசினால். அதற்காக இறைவன் அவருக்கு நற்கூலி வழங்குவான் என்பது என் நம்பிக்கை” என்றார்கள். என்ன ஒரு பரிசுத்தமான ஜீவன் அவர்கள்.
அதைப் போலவே ஒரு முறை இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் என்னும் தீவுக்கு ஷைகு அவர்களை நாங்கள் அழைத்திருந்தோம். சுமார் 400 முஸ்லிம்களே உள்ள அந்த நாட்டில் ஓர் அழகிய சிறு பள்ளி வாசல் இருந்தது. அதில் இறைவனின் ‘உலூஹிய்யத்’ பற்றி அவர்கள் ஆன்மிக சொற்பழிவாற்றினார்கள். அந்த பள்ளியின் இமாமும், கூடிய மக்களில் பலரும் அதை ரசித்துக் கேட்டார்கள். நாங்களும் இந்த மக்களுக்கு இறைஞான பாதையை(தரீக்கத்தை) எடுத்து சொன்னால் மக்கள் நற்பயனடைவார்களே என நினைத்தோம். ஆனால் அடுத்த நாள் எங்களுக்கு ஒரு உத்தரவு போட்டார்கள். “இந்த மக்களுக்கோ, இமாமுக்கோ தரீக்கத் பற்றி அவ்வளவாக அறிமுகம் இல்லை. நீங்கள் இங்கே தரீக்காவை அறிமுகம் செய்கின்றேன் என ஆரம்பித்து 400 பேரே உள்ள மக்களை இரண்டுபடுத்தி விடாதீர்கள். இது என் கண்டிப்பான உத்தரவு” என எங்கள் ஆசையை தடை செய்து விட்டார்கள்.
மேலும் ஒரு சரித்திரமான சம்பவம். 1950களின் ஆரம்பத்தில் லால்பேட்டையில் ஊர் மக்கள் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து பெரும் மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. பலரும் முயற்சித்தும் மக்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. அப்போது மதரஸா முதல்வராக இருந்த அல்லமா அமானி ஹஜ்ரத் அவர்கள் ஷைகு அவர்களை மார்க்க சொற்பொழிவாற்ற அழைத்தார்கள். ஷைகு அவர்கள் ஒரே ஒரு நாள் தான் உரையாற்றினார்கள். இறையருளால் ஊரே இறைவனிடம் மன்னிப்பு கோரி பகைமறந்து ஒருவரையொருவர் தழுவி நேசமயமானது.
-------------------
கீழக்கரையில் ஒரு கல்லூரி விழா ஒன்று நடைப்பெற்றது. அச்சமயம் ஷைகு அவர்கள் அந்த ஊரில் இருந்ததால் எதிர்பாராத விதமாக கல்லூரியின் தாளாளர் வந்து “தாங்களும் சிறிது நேரம் உரையாற்ற வேண்டும்” என்று வற்புறுத்தி அழைத்து வந்து விட்டார். விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த பேச்சாளருக்கு இது பிடிக்கவில்லை. அவர் ஷைகு அவர்கள் பேசி முடித்த பின் நாம் மேடைக்கு செல்லலாம் என்று இருந்து விட்டார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஷைகு அவர்களின் பேச்சுக்கு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அடிமையாகிப் போனார்கள்.
Search Allah, Reach Allah, Love Allah, Live with Allah, sacrifice yourself for Allah, Unless you search you could not reach, Unless you reach you could not love, Unless you love you could not live with him, Unless you live with him, you could not sacrifice yourself for Allah என்று ஷைகு அவர்கள் ஆற்றிய உரையில் எல்லோரும் இறைக்காதலில் மூழ்கி விட்டார்கள். பயான் முடிந்த பின் உடல் நிலை சரியில்லாததால் சென்று வருவதாக கூறி அவர்கள் கிளம்பிய போது மாணவர் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து பேச வந்த பேச்சாளருக்கோ அதிர்ச்சி.
அவர் பேச ஆரம்பித்தவுடன் கூறினார். “நான் எத்தனையோ பிரம்மாண்டமான கூட்டங்களில் பேசி இருக்கிறேன். என் வாழ்நாளில் முதல்முறையாக காலிச் சேர்களைப் பார்த்து பேச நேர்ந்தது இன்று தான்”என்றார். காரில் ஏறிவிட்ட ஷைகு அவர்கள் அவர்களுக்கு இந்த வார்த்தை காதில் விழுந்ததும் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்து மேடையில் அமர்ந்து கொண்டார்கள்.
ஷைகு அவர்கள் மீண்டும் பேசுவார்கள் என்ற எண்ணத்தில் எல்லா மாணவர்களும் வந்து மீண்டும் அமர்ந்து கொண்டார்கள். பேச்சாளர் பேசி முடிக்கும் வரை ஷைகு அவர்கள் பொறுமையாக கவனமுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருதார்கள். இறுதியில் அந்த பேச்சாளர் “நான் அவர்களின் பேச்சை அலட்சியம் செய்து மேடைக்கு வராமல் இருந்தேன். அவர்களோ என் பேச்சை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக தன் உடல் நிலையையும் பாராமல் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு பன்பாளரை என் வாழ் நாளில் நான் கண்டதேயில்லை” சொன்னார்.
----------------
ஒரு முறை ஒரு மனிதர் ஷைகு அவர்களிடம், அல்லாஹ் “மூஃமீன்கள் (நம்பிக்கையாளர்கள்) அனைவரும் சகோதரர்கள்” என்று தானே கூறுகின்றான். அப்படியானால் முஹம்மது நபி(ஸல்) நமக்கு பெரிய அண்ணன் ஆகிறார்கள். வேறு என்ன தனி அந்தஸ்து தர வேண்டும்” என கேட்டார்.
அதற்கு ஷைகு அவர்கள், “அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று மூஃமின். அதன்படி பார்த்தால் அல்லாஹ்வையும் பெரிய அண்ணன் என்று கூறுவீர்களா?” என கேட்டார்கள். வந்தவர் அதோடு வாயை மூடிக் கொண்டார்.
---------------
ஷைகு அவர்கள் ஞான மார்க்கத்தில் (தரீக்கத்தின் அமல்களில்) மட்டுமின்றி ஷரியத்திலும் மிகவும் பேணுதலானவர்கள். ஓதிப்பார்க்க கூடிய ஆலிம்களிடம் ”மூன்று வயது பெண் குழந்தையாக இருந்தாலும் அதன் தலையில் கைவைத்து ஓதிப்பார்க்கக் கூடாது” என்பார்கள். “உங்கள் ஒன்று விட்ட தங்கையானாலும் (சிறிய தந்தையார், சிறிய தாயார் மகள்) பெண்களுடன் தனித்திருக்கக் கூடாது” என்பார்கள்.
----------------
இன்டர்நெட்டில் ஷைகு அவர்களின் ஆன்மிக உரைகளை என் ஆன்மிக நண்பர் பதிவு செய்திருந்தார். அதை பார்த்து விட்டு ஒரு ஜெர்மன்காரர் அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார். ஷைகு அவர்கள் சிறிது நேரம் எளிமையான அழகிய ஆங்கிலத்தில் அவருடன் உரையாடி ஆன்மிக விளக்கமளித்தார்கள்.
பின் வந்தவருக்கு எவ்வளவு விளங்கியதோ என்பதால் அருகே இருந்த இஞ்சினியரான தன் சீடரை பார்த்து. தான் கூறியதை ஆங்கிலத்தில் தெளிவாக கூறுங்கள் என்றார்கள். அவரும் அழகிய ஆங்கிலத்தில் எடுத்துக் சொன்னார். ஆனால் ஜெர்மன்காரர் இடைமறித்து, “இவர் பேசுவதை விட நீங்கள் பேசுவது தான் விளங்குகிறது. தயவு செய்து நீங்களே சொல்லுங்கள்” என கோரிக்கை வைத்தார். இறைஞானிகளின் இதயத்திலிருந்து வரும் பேச்சு மொழிகளை கடந்ததாகும் என்பதை நிருபித்தது அவரது வார்த்தைகள்.
---------------------
ஒரு முறை கடையநல்லூரை சேர்ந்த அப்துல் காதர் ஃபைஜி ஐனீ ஷாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும், இரண்டு லட்சம் செலவாகும் என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஹஜ்ரத் அவர்கள் குருநாதரான என் ஷைகு அவர்களிடம் இதை கூறவே. “உங்களுக்கு பெரிய வியாதி இல்லை. சென்னையில் சென்று சிகிச்சை செய்து கொள்ளுங்கள்” எனக் கூறி பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து, “இன்ஷா அல்லாஹ் இந்த பணத்திற்கு மேல் உங்களுக்கு செலவாகாது. சிகிச்சை முடிந்து பொருள்வையில் உள்ள மதரசாவில் தொடர்ந்து பணியாற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.
என்ன ஆச்சரியம். பெரியோர்களின் வாய் வார்த்தை வீணாவதில்லை. சென்னையில் வைத்தியம் செய்யப்பட்டது. இரத்த சிவப்பு அனுகளின் குறைவால் தான் நெஞ்சு வழி என டாக்டர் கூறி மாத்திரைகள் தர.இன்றும் அவர்கள் இறையருளால் பொருள்வை மதரசாவில் முதல்வராக பணியாற்றுகிறார்கள்.
----------------
எனது ஷைகு அவர்கள் ஏனைய சில்சிலா(ஞான பாட்டையின்) ஷைகு அவர்களைப் பற்றி நாங்கள் கேட்டால் அவர்கள் பெரிய மகான்(ஹஸ்தி) என்று கண்ணியப்படுத்தியே கூறுவார்கள். எல்லா ஞானவான்களையும் அவர்கள் மிகவும் நேசித்தார்கள். மாறுபட்ட கருத்துடையவர்களின் புத்தகங்களைக் கூட நல்ல கருத்திருந்தால்அவர்களின் சபைகளின் வாசிக்கச் செய்வார்கள்.
கருத்து வேறுபாடுகள் என்பது நம் பார்வையில் (views) உள்ள வேறுபாடு என்பதால் யாரேனும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்களிடம் நீங்களே சென்று வீணாக விவாதிக்க வேண்டாம். அவர்களாகவே உங்களிடம் வந்தால் மட்டுமே பதிலளியுங்கள் என்பார்கள்.
---------------------
ஷைகு ஃபைஜி நாயகம் தங்கள் பயான்களில் உபதேசங்களில் தங்கள் ஷைகு நூரி ஷாஹ் (ரஹ்) அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுகூர்வார்கள்.ஒருமுறை கூறினார்கள். நூரி ஷாஹ் (ரஹ்) அவர்களை ஒரு தடவை வேறு ஒரு தரீகாவைச் சேர்ந்த ஷைகு ஒருவர் சந்திக்க வந்தார். வந்த இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது “எல்லாமே அல்லாஹ் தான். அவனுக்கு “ஃகைர்” அவனல்லாதது எதுவும் இல்லை என்பது கிடையாது” என்று வற்புறுத்தி அந்த ஷைகு பேசினார்.
சுன்னத் வல் ஜமா அத் கருத்துப்படி அல்லாஹ் வஸ்துக்களுக்கு ஐன் ஆகவும் இருக்கிறான். கைர் ஆகவும் இருக்கிறான். ஐன் –கைர் இரண்டும் இருக்கிறது. உஜுதுடைய அடிப்படையில் அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு ஐன் ஆகவும் தாத்துடைய அடிப்படையில் சிருஷ்டிகளுக்கு கைர் ஆகவும் இருக்கிறான் என்று நூரி ஷாஹ்(ரஹ்) கூறினார்கள்.
அதற்கு அவரோ, “அவன் அல்லாஹ் அறிந்தவனாக (ஆலிமாக) இருக்கிறான். சிருஷ்டிகள் அவனுடைய சிந்தனையில் அறியப்பட்டவையாக (மஃலூமாக) இருக்கின்றன. அறிந்தவனும், அறியப்பட்டவையும் (ஆலிமும், மஃலூமும்) ஒன்றாகத் தானே இருக்க முடியும். அது எப்படி வேறு வேறாக இருக்க முடியும்? என்று கேட்டார்.
நூரி ஷாஹ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். “சரி உங்கள் சிந்தனையில் ஒரு குரங்கை கொண்டு வாருங்கள்.” கொண்டு வந்து விட்டேன். என்றார் அவர். “இப்போது குரங்கு எங்கு இருக்கிறது?
“எனது சிந்தனையில் இருக்கிறது.”
குரங்கு வெளியில் இல்லை. உங்கள் சிந்தனையில் தான் இருக்கிறது. நீங்கள் அறிந்தவர் (ஆலிம்) உங்கள் சிந்தனையில் உள்ள குரங்கு அறியப்பட்டதாக (மஃலுமாக) இருக்கிறது. உங்கள் கொள்கைப்படி அறிந்தவனும், அறியப்பட்டவையும் (ஆலிமும் ம்ஃலூமும்) ஒன்று. அப்படியானால் உங்கள் கொள்கைப்படி நீங்கள் இப்போது குரங்காகி விட்டீர்கள். சரி ஒரு நாயை சிந்தனையில் கொண்டு வாருங்கள்.
“வந்து விட்டது” என்றார் அவர். “எங்கே இருக்கிறது” என்றார்கள்.
“என் சிந்தனையில் இருக்கிறது” என்றார்.
அவர் “அப்படியானால் நீங்கள் ஆலிம். உங்கள் சிந்தனையில் இருக்கும் நாய் மஃலூம். உங்கள் கொள்கைப்படி இரண்டும் வேறு வேறு அல்ல. ஒன்று தான். எனவே இப்போது நீங்கள் நாயாக ஆகிவிட்டீர்கள். சரி உங்கள் சிந்தனையில் ஒரு பன்றியைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
“வந்து விட்டது” என்றார் அவர்.
“இப்போது அது எங்கே உள்ளது.”
“என் சிந்தனையில் தான் இருக்கிறது” நீங்கள் ஆலிம். அந்த பன்றி மஃலூம் ஆக இருக்கிறது. உங்கள் கருத்துப்படி ஆலிமும் ம்ஃலூமும் ஒன்றுதான். இப்போது நீங்கள் பன்றியாகவும் ஆகிவிட்டீர்கள். நாங்கள் உங்களை அப்படிச் சொல்ல வில்லை உங்கள் கருத்துப்படியே நீங்கள் குரங்காக, நாயாக, பன்றியாக ஆகிவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அவர் ஷைகு அவர்களே என்னை மன்னித்து விடுங்கள் என்றார். இன்று தான் எனக்கு உன்மை விளங்கியது என்று கூறி தானும் தௌபா செய்ததுடன் எழு நூறு முரீதுகளையும் தௌபா செய்ய வைத்தார்.
----------------
என் குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் இடத்தில் இறைஞான பாடங்கள்ஆண்டு முழுவதும் நடந்தாலும் ரமலானில் விஷேசமாக பிறை 1 முதல் 27 வரை நடக்கும். தராவிஹ் முதலிய விசேச தொழுகைக்குப் பின் இரவு 9.30 முதல் சஹர் நேரம் வரை (அதிகாலை 3.30 வரை) தொடரும். நேரம் போவதே தெரியாது. இறைக்காதல் பரவசத்தில் பேரானந்தமாய் இருக்கும்.
திருகுர்ஆன், நபிபொழியின் அடிப்படையில் அருவியாய் கொட்டும் அவர்களின் ஆன்மிக விளக்கங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் மீது மட்டுமல்ல, நம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும், இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைக்கும். என் போன்றோரின் வாழ்வில் அரிய பொக்கிசமாய் அமைந்திருந்தன அந்த நாட்கள்.
-----------------
ஷைகு அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்கினால் நிறுத்தவே முடியவில்லை. விரிவையஞ்சி இத்துடன் நிருத்திக் கொள்கின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் அவ்வப்போது எழுதுகின்றேன்.
நன்றி:
புல்லாங்குழல்.