சுனாமியை நினைவு கூறும் அகமியத்தின் சிறப்புச் சிறுகதை
எச்.எம்.எம்.இப்றகீம் நத்வீ .
(சுமார் 07 வருடங்களுக்கு முன்னர் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி கிழக்காசியாவைத் தாக்கிய சுனாமி இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்குமாகாணத்தையும், காத்தான்குடியையும் அன்றைய இலங்கையின் அரசியல் சூழலையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டும் வண்ணம் இக்கதை அமைந்துள்ளது.)
அன்று காலை எட்டரை மணியிருக்கும் அப்போதுதான் விழித்தெழுந்தேன். பற் சுத்தம் செய்துவிட்டு வீட்டு விறாந்தையில் வந்தமர்ந்தேன்.
மனைவி சூடான டீ கொணர்ந்து வைத்தாள் குடிப்பதற்கு இதமாக இருந்தது.
“கடல் வருகுது, கடல் வருகுது”
ஓடுங்கோ... ஓடுங்கோ...”
யாரிவன்? மூளை குழம்பிவிட்டதுபோல் தெரிகிறது. கடலாவது.. அது வருவதாவது என்று உள்ளம் சொல்லிக் கொண்டது.
அதைத் தொடர்ந்து தூரத்தில் ஏதோ அபயக் குரல் கேட்டன. வெளியில் வந்து பார்த்தேன். கடல் திசையிலிருந்து மக்கள் ஓடி வருகின்றார்கள். அவர்களைத் துரத்தி கடலும் வந்து கொண்டிருந்தது.
இறைவா! இது என்ன புதுமை!
கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவசரமாக வீட்டில் நுழைந்தேன்.
“புள்ளே.. புள்ளே..”
"என்னங்க? "
"கடல் வருகுது"
“ஆ...” வேறு எதுவும் சொல்லவில்லை. ஐந்து வயது மகனைத் தோளில் தூக்கி வைத்தேன். பத்து வயது மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தேன்.
நான் வீதிக்கு வந்தபோது முழங்காலளவு தண்ணீர் வந்துவிட்டது. நான் எதையும் பார்க்கவில்லை. அவசர அவசரமாக ஓடி வந்து பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளியில்தான் கால் பதித்தேன். எனக்கு முன்னே அங்கு மக்கள் வந்து விட்டனர். தொடர்ந்தும் வந்து கொண்டிருந்தனர். எனது மனைவியையும் மக்களையும் அங்கு வைத்தபோதுதான் நிம்மதியேற்பட்டது.
சுனாமிக்கு ஒரு மாதத்தின் முன் மார்க்க அடிப்படையில் ஏற்பட்ட பிரிவினைவாதிகளின் அனர்த்தத்தால் நாம் இங்குதான் தஞ்சமடைந்தோம்.
தஞ்சம் புகுந்தவர்களை பத்ரிய்யா தொண்டர்கள் வரவேற்று “டீ” கொடுத்துக் கொண்டிருந்தனர். இதேபோல் பல இடங்களிலும் மக்கள் தஞ்சமடைந்து கொண்டிருந்தனர் என்பதை பள்ளிவாயல் ஒலி பெருக்கிகள் சொல்லிக் கொண்டிருந்தன.
எனது மனைவி மக்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு வெளியில் நடப்பதை அறிவதற்கு அங்கிருந்து வெளியேறினேன்.
நான் சென்று பார்க்கும்போது கடல் வந்து திரும்பிப்போய் விட்டது.
மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. பல இடங்களிலும் மையித்துக்கள் காணப்பட்டன. ஆண்கள், பெண்கள் சிறியோர் என்ற பேதமின்றி ஜனாஸாக்கள் இருந்தன.
தொண்டர்கள் ஜனாஸாக்களைத் தேடி எடுத்து பள்ளிவாயல்களுக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் அழுகைச் சத்தம்.... ஓ... என்ற அபயக் குரல்.. ஒலித்துக் கொண்டேயிருந்தது.
வீடுகளும் பாடசாலைகளும் உடைந்து காணப்பட்டன. எனது வீட்டு மதில் கீழே சாய்ந்து கிடந்தது. வீட்டுக் கதவுகள் காணப்படவில்லை.
நல்ல காலம் அன்று விடுமுறை தினமாகி விட்டது, வேலை நாளென்றால் ஆசிரியரும் மாணவரும் அதிகமாக அழிந்திருப்பர்.
இரவில் ஏற்பட்டிருந்தால் கரையோரப் பகுதியில் வாழ்ந்தவர்களெல்லாம் மரணத்தைத் தழுவியிருப்பர்.
பக்கத்து வீட்டு காதர் காக்காவின் வீடு முற்றாகவே விழுந்து கிடந்தது.
அதற்குள்ளிருந்த காக்காவும் அவரது மனைவியும் வீட்டுக்குள்ளேயே மையித்தாகக் கிடந்தனர். மக்கள் இருவரும் காணப்படவில்லை. கடல் அவர்களை எங்கு கொண்டு சென்றதோ தெரியவில்லை.
கடலுக்கு இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்த குர்ஆன் பாடசாலையில் ஓதிக் கொண்டிருந்த நாற்பது மாணவர்களும் ஓதிக் கொடுத்த மௌலவீ சாஹிபும் மையித்தாகவே காணப்பட்டனர்.
சில பிள்ளைகளைக் கண்டெடுக்க முடியவில்லை. அவர்கள் வேறு பகுதிகளுக்கு கடலலையால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
ஹபீபா ராத்தாவின் கைகுழந்தை மட்டுமே உயிர் தப்பியது மற்ற இரு பிள்ளைகளுடன் அவர் ஜனாஸாவாகவே கிடந்தார்.
தமிழ் சகோதரர்கள் இருவரின் ஜனாஸாக்கள் எமதூர் கடற்கரையில் காணப்பட்டன. இனம் கண்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடல் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தோணிகளும் போட்டுக்களும் ஊருக்குள் உடைந்து கிடந்தன. சில மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தன. சில அழியா போட்டுக்கள் வீட்டுக் கூறைக்குமேல் தூக்கி வைக்கப்பட்டிருந்தன.
கடற்கரை வீதியில் போடப்பட்டிருந்த பாலங்கள் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. கிணறுகள் வெளியில் வீசப்பட்டிருந்தன. பல இடங்களில் பெரும் குழிகள் காணப்பட்டன. மின்சாரம் கொங்றீட் கம்பங்கள் தேடாக் கயிறுபோல் முறுக்கப்பட்டு துண்டாக்கப்பட்டுக் கிடந்தன. ஆடுகளும் மாடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன. பனைமரங்களும், தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன.
இவை எனது கண்கள் கண்ட காட்சிகள்.
இரு வாரம் உருண்டோடியது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். பாடசாலைகள், பள்ளிவாயல்கள், கோவில்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.
தாங்கள் குடியிருந்த இடங்கள் உலக யுத்தம் நடந்த இடங்களைப்போல் காட்சியளித்தன. மக்கள் அங்கு செல்வதற்கு அஞ்சினர். ஆனால் திருடர்கள் அங்கு செல்வதற்கு அஞ்சவில்லை. சுனாமி மீண்டும் வருகிறது என்ற கட்டுக்கதைகளைப் பரப்பி மக்களைப் பீதியில் வைத்தனர்.
இரவில் பிசாசுகள்போல் வீதிகளில் ஓலமிட்டனர்.
“உம்மா..! என்னைக் காப்பாத்துங்க...”
“மகனே.. போய் விட்டாயா...”
“காக்கா... என்னைப் புடிங்க...”
“வாப்பா... வாப்பா.. ஓடி வாங்க...”
போன்ற பயங்கர ஓசைகள் இரவு வேளையில் ஒலித்தன. மக்களின் பயம் அதிகரித்தது. இரவு வேளைகளில் மக்கள் உறங்குவதில்லை விடியும் வரை விழித்துக் கொண்டிருந்தனர்.
பட்டப்பகலில் பகற் கொள்ளையர்களால் சிதறிக்கிடந்த தகரங்களும் கட்டைகளும் தூக்கிச் செல்லப்பட்டன.
பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும், பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோரும், கணவரை இழந்த துணைவியரும், மனைவியை இழந்த கணவனும், உற்றார் உறவினர்களை இழந்தவரும் சொல்லொனாத் துயரத்தில் மூழ்கியிருந்தனர். கடல் வெள்ளம் போய்விட்டபோதும் துயரவெள்ளம் நெஞ்சங்களில் ஓடிக் கொண்டேயிருந்தது.
மூன்றாம் வாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் அடிக்கப்பட்டன. மக்கள் குடியமர்தப் பட்டனர். பாதுகாப்புக்காக கடல் ஓரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை அவர்கள் பாதுகாத்தனர். தஞ்சமடைந்த அகதிகளுக்கு நலன்புரிதாபனங்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
தங்கள் வீடுகளில் கஞ்சைக் குடித்தேனும் கைகால் நீட்டி நிம்மதியாக வாழ்ந்து வந்த மக்களுக்கு அகதி முகாம் வாழ்கை கஷ்டமாகவே இருந்தது.
இருபது வருடங்களுக்கு மேலாக எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களின் துன்ப நிலை எப்படியிருக்கும் என்பதை சுனாமி முகாம் உணர்த்தியது.
சுதந்திரமாக வாழ முடியாது. நிம்மதியாக மலசலம் கழிக்க முடியாது. நேரத்துக்குச் சாப்பிட முடியாது. சாப்பாடு வரும்வரை எதிர்பார்திருக்க வேண்டும். எதிர்பார்த்திருந்து சில வேளை சாப்பாடு இல்லாமல் போய்விடும். குளித்து சுத்தமாக இருக்க முடியாது. எதிலும் பிறரின் உதவியை எதிர்பார்த்திருக்க வேண்டும். இவையே அகதிமுகாம் வாழ்கை.
தற்போது அகதிமுகாம் வாழ்கை பழக்கமாவிட்டது. நானும் எனது மனைவி மக்களுடன் ஒரு கூடாரத்தில் இருந்தேன்.
வெளியூர் மக்கள் லாரி லாரியாக உணவுப் பொருட்களையும், உடைகளையும், மருந்துகளையும் கொண்டு வந்தனர். முகாமில் உள்ளவர்களுக்கே அவற்றைக் கொடுத்தனர். அதனால் கூடாரத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டி நேரிட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் இடங்களைவிட்டு உறவினர்களின் இடங்களுக்குச் சென்று குடியிருந்தவர்கள். வந்திறங்கும் நிவாரணப் பொதிகளைக் கண்டு மீண்டும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
முகாமில் இருந்தவர்களுக்கு உணவும் உடைகளும் நிறைந்தன.
அரச சார்பற்ற “எஹட்”, “யுனிசெப்” போன்ற நிறுவனங்கள் பெரிதும் உதவின.
தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டதுடன் குடும்பத்திற்குத் தேவையான பொருள்களும் வழங்கப்பட்டன.
சுனாமிக்கு முன் அன்றாடம் சாப்பிடுவதற்கே கஷ்டமாயிருந்தது.
வறுமையின் பிடிக்குள் வாழ்ந்தாலும் அதனை வெளியிட கௌரவம் தடுத்தது.
உள்ள உணவைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு எத்தனையோ வேளை என் மனைவி பசியுடன் இருந்திருப்பாள்.
ஆனால் அனர்த்தத்தின் பின் ஏழைகளின் அன்றாட வாழ்கை பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.
பேக் நிறைய அரிசி, பானை நிறைய மாவு, மற்றும் சீனி, பருப்பு, இடைச்சாட்பாடுக்குக் கடலை, மாசம் ஐயாயிரம் ரூபாய், வேறு என்ன வேண்டும்?
வெளிநாடு போகத் தேவையில்லை, கடைகளிலும் நிற்கத் தேவையில்லை. அன்றாடம் பிள்ளைகளைப் பார்த்துக்கிட்டு வீட்டில் கிடந்தால்போதும் என்ற எண்ணம் சுனாமி ஏறியாவில் வாழும் ஆண்களுக்கு எற்பட்டுவிட்டது.
பக்கத்து ஊர் பாலமுனைக் கிராமம், அங்கு வாழும் நஸார் தம்பி. அவர்ர வீடு முற்றாக அழிந்தது. அவர் அன்றாடம் கூலித் தொழில் புரியும் ஒரு தொழிலாளி. கடும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்க்கையை ஓட்டுபவர். அன்றாடம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கே பெரும் சிரமப்படுபவர்.
அவரைச் சந்திக்கும் வாய்புக் கிட்டியது.
“என்ன தம்பி நஸார், எப்படி செய்திகள்?”
“நல்லம் காக்கா”
“இப்ப என்ன செய்யுறீங்க?”
“இப்ப நாம் வீட்டிலேதான் இருக்கிறன்”
“எப்படி வாழ்கை போகுது?”
“அல்லாஹ்ட றஹ்மத். பரவாயில்லை.
இப்ப பானையில அரிசியிருக்கு, மாவிருக்கு, முன்பெல்லாம் இப்படி, அரிசி, மா பானையில் இருந்ததில்லை. அன்றாடம் வாங்கித்தான் சாப்பிடுவம். இப்ப அல்ஹம்துலில்லாஹ்.
கடலுக்குப் போறவங்களுக்கு தோணி இழுத்துக் கொடுத்து கறிப்பாட்டுக்கு மீன் கிடைக்குது. நேரத்துக்குச் சாப்பாடு பிள்ளைகளோட வீட்டில் நான் இருக்கன்” என்றார்.
சுனாமி பேரழிவைக் கொடுத்தாலும் அது பலருக்கு சுகத்தையும் கொடுத்துள்ளதை நினைக்கும்போது நெஞ்சத்துக்கு சற்று ஆறுதல் கிடைக்கிறது.
முந்த நாள் “அஸ்ர்” தொழுகையை நிறைவேற்றிவிட்டு கடற்கரைப் பக்கம் செல்ல நேரிட்டது. சுனாமி ஏறியாவில் சனக்கூட்டம் காணப்பட்டது. ஆண்களும் பெண்களும் நிறைய நின்றனர்.
சிலர் கையில் காட்டுடன் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தனர். எனக்கு அறிமுகமான உமர் மாமாவும் போய்க் கொண்டிருந்தார். அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். சுனாமியின்போது தள்ளாத வயதிலும் மரத்தில் ஏறியிருந்து தப்பியவர்.
“எங்கமாமா ஓடிப்போறிங்கள்?”
“ஆ.. மருமகன் நீங்களா?”
“வெள்ளக் காரன் வந்திருக்கான்?”
“அதுதான் அவசரமாப் போறன்”
அவர் போய்விட்டார். நான் கடற்கரையில் அரை மணிநேரம் கழித்துவிட்டு வருகிறேன். வழியில் உமர்மாமா நிற்கிறார். அவருடைய கையில் கெஸட் ரேடியோ ஒன்று இருக்கிறது.
“ஆ.. வாங்க மருமகன், பிளேண்டி குடித்திட்டுப் போகலாம். பார்தியளா.....சுனாமி வந்து சுவரத்தான் உடைச்சிப்போட்டு. இப்ப நாளுக்கு நாள் சாமான்தான் வருகுது. இதோ.. பாருங்க..கெஸட் ரேடியோ.. வெள்ளக்காரன் தந்திட்டுப்போறான்.. அது மட்டுமா தையல் மெசின், புது பைசிக்கல், தற்காலிக வீடு, வாளி, பானை, சுத்தியல், கோடரி, மம்மட்டி, அலவாங்கு, குறடு, ஆணி, எவ்வளவு சாமான்கள். ஆண்டவன் அழிவையும் தந்தாலும் அருளையும் தந்துகொண்டுதான் இருக்கிறான்.
விதானையும் வந்து நஷ்டயீட்டுக்கு பதிஞ்சி கொண்டு போயுள்ளார். பக்கத்து ஊட்டுக்காரருக்கு முதல் கட்டமாக ஐம்பதாயிரம் கிடைச்சிட்டு.
இன்ஷா அல்லாஹ், எங்களுக்கும் கிடைக்கும். அல்லாஹ்ட புதுமையைப் பாருங்க மருமகன்.
முன்வீட்டுக்காரன்ட வீட்டு மதில் சுனாமியால கூட விழல்ல. ஆனா.. அது பழைய மதில், வெடிப்பும் இருந்தது.
விதான பார்வைக்கு வருவதற்கு முதல் வீட்டுக்காரன் அத சாய்த்துப் போட்டான்.
பார்த்தியளா.. இந்த மனுஷண்ட ஆசைய.. அது மட்டுமா...... அடுத்த வீட்டுக்காரி மரியம்மா.. அவட உம்மாட வாப்பா முஸ்தபா பத்து வருடமா வாதமாக் கிடக்காரு சுனாமியால் கூட தப்பிட்டாரு. அவரப் பார்த்த மரியம்மா....
எத்தனையோபேரு சுனாமியால போயிட்டாங்க. அவங்க சொந்தக்கார்களுக்கு ஆயிரக்கணக்கில் அரசாங்கம் கொடுத்திட்டுது.
இந்த மனுசன் பலவருசமாக சுகமில்லாமத்தான் கிடக்கான். இப்படி வருத்தமாக் கிடந்து சீரழிவதைவிட மௌத்தாப் போயிருந்தா எனக்கும் காசு கிடச்சிருக்கும்தானே என்றாளாம்.
பாத்திங்களா மருமகன் பண ஆச எந்தளவுக்கு தலைக்கடிச்சிடெண்டு”
“ அப்படித்தான் மாமா மனுஷண்ட ஆசை குறையாது. அதனாத்தான் எங்கட நபீ நாயகம் சொன்னாங்க.. ஒருவனுக்கு தங்கத்தால இரு ஓடையிருந்தா இன்னோரு ஓடையும் தேவை எண்டு சொல்வானாம்.
மாமா... இதுவரை கிடைத்ததெல்லாம் அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்த உதவிகள்தான்.
அரசாங்கம் இன்னும் செய்யல்லயா? இனித்தான் அரசாங்கம் செய்யப்போகுது. அதற்காகத்தான் பொது கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிலதான் அழகான வீடு. அதற்குரிய தளபாடங்கள், கட்டில், அலுமரி, டீவி, மின்சாரம், எல்லாமே சும்மாதான் கிடைக்கும்.
“மருமகன்.......... சிலர் அதைப் பொய்யென்று சொல்கிறார்களே.............. அது முஸ்லீம்களுக்குப் பாதகம் என்றும் சொல்கிறார்களே......... அதில் முஸ்லீம்கள் சார்பாக கையெழுத்துப்போட அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லையாமே...
இதப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க.................. இந்தக் கட்டமைப்பப்பத்தி உங்கட கருத்தென்ன?
“மாமா... பொதுக் கட்டமைப்பு என்பது சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கமும் புலிகளும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம்.
இதைச் செய்யாவிட்டால் வடகிழக்கு அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிழப்படலாம். அது சரியாகச் செய்யப்பட்ட வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கத்துடன் இதைச் செய்திருக்கிறது.
“முஸ்லீம்களும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தானே.. அவர்கள் ஏன் இதில் கையெழுத்துப் போடல்ல”
“மாமா............. புலிகள் இல்லாமல் முஸ்லீம்களால் மட்டும் இப்படியோரு கூட்டமைப்பை உறுவாக்கியிருக்க முடியுமா..? அரசாங்கம் அதற்கு இணங்கியிருக்குமா..?”
“இல்ல மருமகன்....”
“ அரசாங்கம் இதற்கு ஏன் இணங்கியது தெரியுமா?”
“சொல்லுங்க”
“இலங்கை அரசாங்கத்தைப்போல புலிகளும் ஒரு அரசாங்கம் நடத்துறாங்க.. உலக ரீதியாக இது தெளிவான விசயம்”
இருபத்தைந்து வருடமாக அவங்கட லட்சியத்துக்காக போராடுறாங்க... அதில எத்தனையோபேர் உயிர் தியாகம் செய்திட்டாங்க..
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள்போல புலிகளுடைய கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன.
அரச படைகள் ஆயுதம் வைத்திருப்பதைப்போல புலிகளும் வைத்திருக்கிறாங்க..
அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இருப்பதுபோல் புலிகளும் வைத்துள்ளாங்க
அரசாங்கம் நிதி வசூலிப்பதுபோல புலிகளுக்கும் நிதி வசூலிக்கிறாங்க
இப்படியெல்லாம் முஸ்லீம்கள் செய்துள்ளார்களா? இல்லையே.... புலிகளுடன் அரசாங்கம் யுத்தம் செய்து முடிவைக் கண்டுள்ளார்களா? இல்லையே....... அதனால் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் ஒரு சமாதானம் தோன்றுவதற்காக இரு தரப்பாலும் இந்தக் கட்டமைப்பைச் செய்து கையெழுத்திட்டுள்ளார்கள்.
இது எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்கும் விளங்கியது. தமிழ் எம்.பி.க்கள் இது பற்றி தெளிவாகக் கூறினார்கள்.
“நீங்கள் சொல்வது சரி, ஆனால் இதை ஏன் எதிர்கிறாங்க? இதன்மூலம் நடைமுறைப் படுத்தப்படும் பாரிய திட்டங்கள் வடகிழக்கு போகக்கூடாதென்றும் அது முன்னேறக்கூடாதென்றும் பேரினவாதிகள் நினைக்கிறார்கள்.
“முஸ்லீம்கள் ஏன் எதிர்க்கிறார்கள்”
“முஸ்லீம்கள் எல்லோரும் எதிர்க்கவில்லை. சில அரசியல் லாபங்களும் உள்ளன. மட்டுமன்றி புலிகள் முஸ்லீம்களுக்கு முன்னர் செய்த சில தீய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறார்கள்போல் தெரிகிறது”
“அப்படியானால் கட்டமைப்பில் முஸ்லீம்களுக்கு நன்மை கிடைக்குமா?”
“கிடைக்கும், அதில் சந்தேகமில்லை”
புலிகள் முன்னர் நடந்த நிகழ்வுகளை நினைத்து வருந்திவிட்டார்கள். அவர்கள் சிறுவான்மை மக்களுக்காகவே குரல் கொடுக்கிறார்கள். அவர்களால்தான் பல நன்மைகள் இன்றும் முஸ்லீம்களுக்குக் கிடைத்து வருகின்றன.
தற்போது யாழ்பாணத்திலும் தமிழ் பிரதேசங்களிலும் முஸ்லீம்கள் அச்சமின்றி வியாபாரம் செய்து வருகின்றார்கள்.
முஸ்லீம் தலைவர்களும் புலிகளும் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.
முஸ்லீம்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது போனாலும் முஸ்லீம் பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்டே அபிவிருத்தியைத் தொடரப்போவதாகச் சொல்கிறார்கள்.
பேரினவாத பொறாமைக்காரர்கள்தான். இதை மறுக்கிறார்கள். நாம் முஸ்லீம்கள், தமிழ் சகோதரர்களுடன் அன்புடன் வாழ்பவர்கள். அவர்களுக்கு நாம் வேண்டும். நமக்கு அவர்கள் வேண்டும். பிட்டு மட்டும் அல்லது தேங்காய் மட்டும் இருந்தால் சுவை உணவாகாது. இரண்டும் சேரும்போதுதான் சுவை தோன்றும். இதேபோல் இரு சாராரும் ஒன்றுமையாக இருந்தால்தான் வளம் தோன்றும்.
நம் குடும்பத்தில் பெரும் சண்டை ஏற்பட்டு கொலையில் முடியவில்லையா? பின்பு குடும்ப ஒன்றுமை ஏற்படவில்லையா? இதேபோல் நடந்ததை மீட்டாமல் இரு சாராரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டால் நிச்சயம் வெற்றியுண்டு.
அவர்கள் நமது உரிமைகளைத் தருவதாகச் சொல்கிறார்கள். நாம் ஒத்துழைப்பு வழங்கி நமது தேசத்தையும் மக்களையும் வளப்படுத்த வேண்டும்.
“சரி மருமகன், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, நல்ல விளக்கம் தந்தீர்கள்.
“ஏதும் குப்பமா?”
“இல்ல... இப்பத்தானே பிளேண்டி தந்தீங்க. நான் போய் வருகிறேன்.”
“போய் வாருங்கள்”
“அஸ்ஸலாமு அலைக்கும்”
“வ அலைக்கும் சலாம்.”
என் சைக்கில் வண்டி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் என் சிந்தனையும் உயரப் பறந்து கொண்டிருக்கின்றது.
சுனாமிக்கு இரு பக்கங்கள் உள்ளன.
ஒரு பக்கம் துன்பமானது. மறு பக்கம் இன்பமயமானது. இறைவன் துன்பத்தைப் படைத்ததுபோல் இன்பத்தையும் படைத்துள்ளான். துன்பத்தின் மூலம் சோதிக்கின்றான். இன்பத்தின்மூலம் அருள் புரிகின்றான். பத்து நிமிடத்தில் அழிக்க முடியுமாயின் பத்து வினாடிக்குள் அவனால் எதையும் ஆக்கவும் முடியும். எல்லாம் அவன் செயல்! அவனைக் கொண்டே அனைத்தும் நடக்கின்றன. இறைவனது விந்தையான செயலை நினைத்தவாறு வீட்டையடைந்தேன்.
இதேபோல் பல இடங்களிலும் மக்கள் தஞ்சமடைந்து கொண்டிருந்தனர் என்பதை பள்ளிவாயல் ஒலி பெருக்கிகள் சொல்லிக் கொண்டிருந்தன.
---------------------முற்றும்-------------------------
இச்சிறுகதை இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிகையான வீரகேசரி தமிழ் பத்திரிகையின் பவளவிழாக் கொண்டாடத்தின்போது இலங்கையிலிருந்து போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளில் ஒன்றாக தேர்தெடுக்கப்பட்டு "சிறுகதைக் களஞ்சியம்" என்ற பெயரில் வீரகேசரியினால் வெளியிடப்பட்ட சிறுகதைநூலில் இடம் பெற்றதாகும்.