Wednesday, December 28

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை - 05

அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்

பேராசிரியர் - நாகூர் ரூமி

5. அலெக்சாந்திரியா மற்றும் எகிப்து ஆட்சியாளர்களுக்கு
அலெக்சாந்திரியாவும் எகிப்தும் கிழக்கத்திய ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன. ஜரீத் இப்னு ஹத்தி என்பவர் அதன் ஆட்சியாளராக இருந்தார். 

மகாகிஸ் என்று அவர் அறியப்பட்டார். அவர் ஒரு கிறிஸ்தவர். 

பெருமானாரின் கடிதத்தை கொண்டு சேர்த்தவர் ஹத்தீப் இப்னு அல் பத்தா அல்கமி என்பவர். 

கடிதம்:
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதரும் அடிமையுமாகிய முஹம்மதுவிடமிருந்து எகிப்திய மன்னரான முகாகிஸுக்கு இக்கடிதம். 

நேர்வழியைப் பின்பற்றுபவருக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக. இஸ்லாத்தில் இணையுங்கள், நீங்கள் அமைதியுடன் இருப்பீர்கள். உங்களுக்கு இருமடங்கு வெகுமதியை அல்லாஹ் தருவான். மறுத்தால், எகிப்தியர்கள் அனுபவிக்கப் போகும் எல்லா கஷ்டங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்."
இதன் பிறகு, “வேதத்தையுடையவர்களே, எங்களுக்கும் உங்களுக்கும் சம்மதமான ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக. நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம்” என்ற வசனமும் (03:64) மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

கடிதத்தைக் கொடுத்ததோடல்லாமல் முகாகிஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹத்தீபே எடுத்துரைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. தூதுவரை மிக்க கண்ணியத்துடன் நடத்திய முகாகிஸ், கடிதத்தை ஒரு தந்தப் பெட்டியில் வைத்து மூடி தேசிய கருவூலத்தில் வைத்தார். 

ஆனாலும் அவர் இஸ்லாத்தில் இணையவில்லை. பெருமானாருக்கு சில பரிசுப்பொருள்களோடு ஒரு பதில் கடிதமும் எழுதினார். 

அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

"அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு, எகிப்தின் தலைவர் முகாகிஸ் எழுதுவது. உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். உங்கள் கடிதத்தை நான் படித்தேன். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். 

ஒரு தீர்க்கதரிசி வரப்போகிறார் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் அவர் சிரியாவில் இருந்து வருவார் என்று நான் நினைத்தேன். நீங்கள் அனுப்பிய தூதுவரை நான் கண்ணியமாக நடத்தினேன். உங்களுக்கு ஒரு போர்வையையும் இரண்டு பெண்களையும் பரிசாக அனுப்பி உள்ளேன். 

எகிப்தியர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் அப்பெண்கள். ஒரு கோவேறு கழுதையையும் அனுப்பி உள்ளேன். நீங்கள் சவாரி செய்வதற்காக. வஸ்ஸலாம்."

பெருமானார் அந்தப் பரிசுப் பொருள்களை ஏற்றுக் கொண்டார்கள். எனினும் முகாகிஸ் ஒரு கஞ்சன் என்றும் சொன்னார்கள். எகிப்துக்கும் ஹிஜாஸுக்கும் இடையே நிரந்தர நட்பு ஏற்பட்டது.

முகாகிஸ் அனுப்பிய இரண்டு பெண்களில் ஒருவர்தான் மரியா கிப்தியா என்பவர். அன்னை கதீஜா அவர்களுக்குப் பிறகு நபிகள் நாயகத்துக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்த மனைவி இவர்தான். 

ஆனால் பெருமானாருக்கும் மரியாவுக்கும் பிறந்த இப்ராஹீம் என்று பெயர் வைக்கப்பட்ட ஆண் குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனது. மரியாவுடன் அனுப்பப்பட்ட சிரீன் என்ற அவரது சகோதரியை பெருமானார் தன் தோழர் ஹஸ்ஸான் இப்னு தாபித்துக்குத் திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறுகிறது.

6. யமாமாவின் ஆட்சியாளருக்கு
ஹௌதா இப்னு அலீ அல் ஹனஃபி என்பவர் யமாமாவின் ஆட்சியாளராக இருந்தார். பின்னாளில் அல் கஸ்ரஜீ என்று அறியப்பட்ட சுலீது இப்னு கய்ஸ் பெருமானாரின் கடிதத்தை அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். 

அதில் கீழ்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மதுவிடமிருந்து ஹௌதா இப்னு அலீக்கு. நேர்வழியைப் பின்பற்றுபவன் நிம்மதியடைவான். குதிரைகளும் கால்நடைகளும் எங்கெல்லாம் செல்லுமோ அங்கெல்லாம் எனது மார்க்கம் பரவும், தெரிந்து கொள்ளுங்கள். எனவே, முஸ்லிமாகிவிடுங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். உங்கள் நிர்வாகத்தின் கீழ் இருப்பவையெல்லாம் உங்களிடமே இருக்க விட்டுவிடுவோம்."

சுலீதுக்கு சில பரிசுப் பொருள்களையும் துணிமணிகளையும் ஹௌதா கொடுத்தார். 

அவர் பெருமானாருக்குக் கொடுத்த பதில்:

"நீங்கள் அழைப்பது சிறப்பானதே. நான் எனது நாட்டின் கவிஞனும் சொற்பொழிவாளனும் ஆவேன். எனது புகழை எண்ணி அரேபியர்கள் அஞ்சுகிறார்கள். எனவே எனக்கு சில அதிகாரங்களை நீங்கள் கொடுத்தால் நான் உங்களைப் பின்பற்றி வருவேன்.

அதைப்படித்த பெருமானார் அவர் விரும்பும்படிச் செய்ய முடியாதென்றும், ஹௌதாவின் கெடுதியில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இறைவனை இறைஞ்சினார்கள். அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட கொஞ்ச காலத்தில் ஹௌதா இறந்து போனார்."

7. கஸ்ஸானின் ஆட்சியாளருக்கு
முரீத் இப்னு ஹரீத் சிரியாவின் கவர்னராக இருந்தார். முபாரக் சுஜா இப்னு வஹப் அல் அஸதி மூலம் பெருமானாரின் கடிதம் கிபி 628 வாக்கில் கொண்டு செல்லப்பட்டது. 

அக்கடிதம்:
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். 

அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மதுவிடமிருந்து ஹாரித் இப்னு அபீ ஷிமருக்கு. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டு சாட்சி கூறுபவன் நிம்மதியடைவான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும்படி நான் உம்மை அழைக்கிறேன். அல்லாஹ்வுக்கு இணை துணையில்லை. செய்தால், உமது நாடு உமதாகவே இருக்கும்."

ஹாரிதைப் பார்க்க சுஜாவுக்கு சில நாட்கள் பிடித்தன ஏனெனில் ஹாரித் ஹிம்ஸில் இருந்து ஜெருசலத்துக்கு வருவதாக இருந்த ஹெராக்லியஸை கண்ணியப்படுத்த வேண்டியிருந்தது. 

கடிதத்தைப் படித்துவிட்டு அதை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார் ஹாரித். 

“என் சாம்ராஜ்ஜியத்தை என்னிடமிருந்து யார் பறிக்க முடியும்? நானே முஹம்மதிடம் போவேன். அவர் யெமனில் இருந்தாலும் சரி. இல்லையெனில், அவரை அழைத்துவர ஆளனுப்புவேன்” என்று கத்தினார். 

அதன் பிறகு எல்லாவற்றையும் விளக்கி ஹெராக்லியஸுக்கு அவர் எழுதினார். தூதுவரான சுஜா கண்ணியத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார். நூறு மிஸ்கால் தங்கம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. 

மதினாவுக்குத் திரும்பி வந்ததும் நடந்ததையெல்லாம் சுஜா பெருமானாரிடம் எடுத்துச் சொன்னார். “அவரது சாம்ராஜ்ஜியம் அழிந்துவிட்டது” என்றார்கள் பெருமானார். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஹாரித் இறந்து போனார்.

8. பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு
இரண்டாம் குஸ்ரூ என்று அறியப்பட்ட பர்வேஸ் ஹம்சான் நௌஷேர்வான் அந்தக் காலத்து கிழக்கத்திய உலகின் பாதிக்கு அரசராக இருந்தார். 

கிஸ்ரா என்று அவர் அறியப்பட்டார். ”மன்னர்களின் மன்னர்” என்று அவர் தன்னை அழைத்துக் கொண்டார். அவரது அரசவை பிரம்மாண்டமாக இருந்தது. அங்கெ சென்றிருந்த சைஃப் இப்னு ஜன்ஜன் ஹுமைரி ரொம்ப நேரம் அசந்து போய் நின்றுவிட்டார். 

மாணிக்கம், புஷ்பராகம், முத்து போன்ற விலையுயர்ந்த கற்கள் கிஸ்ராவின் மகுடத்திலும் அரியணையிலும் பதிக்கப்பட்டிருந்தன. பாரசீகர்கள் ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி என்பவர்தான் தூதுவராக பெருமானாரின் கடிதத்தைக் கிஸ்ராவிடம் கொண்டு சென்றார். 

அவருடைய எளிமையான, ஆடம்பரமற்ற தோற்றம் கிஸ்ராவுக்கு சிரிப்பையும் கோபத்தையும் கொடுத்தது. ஸஹ்மி கொண்டு வந்த கடிதத்தை அருகில் இருந்த ஒருவரிடம் சைகை காட்டி வாங்கச் சொன்னார். 

ஆனால், கிஸ்ராவிடம்தான் கடிதத்தைக் கொடுக்க வேண்டும் என்று பெருமானார் சொல்லியிருந்ததால், அவர்களின் கட்டளையை மீற முடியாது, எனவே கடிதத்தை வேறு யார் கையிலும் கொடுக்க முடியாது என்று சஹ்மி மறுத்துவிட்டார்.

கிஸ்ராவுகுக் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் கோபம். இருந்தாலும் கடிதத்தை அவரே வாங்கிக் கொண்டார். அருகில் இருந்த அரபி தெரிந்த ஒருவரிடம் கொடுத்து படிக்கச் செய்தார். 

"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மதுவிடமிருந்து பாரசீகத்தின் மன்னர் கிஸ்ராவுக்கு. 

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அவனுடைய தூதராகவும் அடிமையாகவும் இருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டு சாட்சி கூறுபவன் நிம்மதியடைவான். 

அல்லாஹ்வின் வேதத்தின்மீது நம்பிக்கை கொள்ளும்படி நான் உம்மை அழைக்கிறேன். நான் அல்லாஹ்வின் தூதரரக இருக்கிறேன். இஸ்லாத்தில் இணைந்து அமைதியைத் தேடிக்கொள்ளவும். மறுத்தால், மஜூஸிகளின் பாவங்களுக்கெல்லாம் நீரே பொறுப்பாளியாவீர்."

கடிதத்தில் இருந்த வாசகங்கள் இவ்வளவுதான். ஆனால் கிஸ்ரா கடிதத்தை முழுமையாகப் படித்துக் கேட்கவில்லை. முஹம்மதுவிடமிருந்து கிஸ்ராவுக்கு என்ற வார்த்தைகளுக்கு மேல் கடிதம் தாண்டுவதற்குள்ளாகவே கிஸ்ரா ஆவேசமடைந்தார். அவர் முகம் சிவந்தது. கழுத்தெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

மக்கத்து அடிமை ஒருவர் தன்னோடு என்னை இணைத்துப் பேசுவதா? கடிதத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டார். 

கடுமையான கோபத்தில், “என் பெயருக்கு முன்னால் தன் பெயரை எழுதும் அளவுக்கு அவருக்கு என்ன திமிர்?” என்று கத்தினார். 

தன்னிடம் கடிதம் கொண்டு வந்திருந்த தூதுவரை திட்டி அவமரியாதை செய்தார். அவரை சபையை விட்டு விரட்டுங்கள் என்று கத்தினார். 

என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளும் முன்னர் சஹ்மி வெளியேற்றப் பட்டார். எப்படியோ தன் ஒட்டகம் இருந்த இடத்தை அடைந்த அவர் உடனே கிளம்பிவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் கோபம் அடங்கியவுடன் சஹ்மியை கிஸ்ரா தேடச் சொன்னார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மதினா போய்ச் சேர்ந்திருந்தார். 

பெருமானாரிடம் இந்நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டபோது, “அல்லாஹ் அவருடைய ராஜ்ஜியத்தைக் கிழிப்பான், அவருடைய வேண்டுகோளை மறுப்பான்” என்றார்கள். 

அவர்கள் தீர்க்க தரிசனம் சொன்னமாதிரியே நடந்தது வரலாறு. 4000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த, ரோமானியர்களையும் கிரேக்கர்களையும் அடிமைகளாக வைத்திருந்த சாம்ராஜ்ஜியத்துக்கு இறைத்தூதரின் தீர்ப்பு நிரந்தரமாக முத்திரையிட்டு முடித்து வைத்தது.

முஹம்மதை கைது செய்து தன் முன் கொண்டுவரும்படி யெமன் நாட்டில் இருந்த தன் பிரதிநிதி பதானுக்கு கிஸ்ரா கடிதம் எழுதினார். அதன்படி செய்ய பாபாவய், கார் கஸ்ரா என்ற இரண்டு தடியர்களை பதான் மதினாவுக்கு அனுப்பினார். 

கார் கஸ்ரா ஒரு ராணுவ அதிகாரி என்றும், அவரோடு சென்றவர் ஒரு பானியா என்றும், அவருடைய வேலை பெருமானாரின் வாழ்வையும், மதினா வாசிகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வதாக இருந்தது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். கஹர் மனா என்ற ஒரு பெயரைத்தான் இப்னு ச’அத் குறிப்பிடுகிறார்.

எப்படியோ, முஹம்மதைக் கைது செய்து கிஸ்ராவிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்ட அவர்கள் தாயிஃப் நகரை அடைந்தவுடன், அங்கு இருந்த சில குறைஷி வணிகர்களிடம் பெருமானாரைப் பற்றி இருவரும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர். 

முஹம்மது அழியப்போகிறார் என்று எண்ணி அம்மக்கள் சந்தோஷமடைந்தனர். மதினா சென்று பெருமானாரைச் சந்தித்த அவர்கள் பதானின் கடிதத்தைக் காட்டினர். 

எங்களோடு பேசாமல் நீங்கள் வந்துவிட்டால் மன்னர்களின் மன்னராகிய கிஸ்ராவின் தண்டனையிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். இல்லையென்றால் உங்களையும் உங்கள் மக்களையும் அவர் இல்லாமல் ஆக்கிவிடுவார் என்று அவர்கள் பெருமானாரிடம் கூறினர்.

பெருமானார் புன்னகை பூத்தார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அது தீர்க்கதரிசனத்தின் புன்னகை. அவர்களை மறுநாள் வரும்படி பெருமானார் சொன்னார்கள். 

மறுநாள் அவர்கள் வந்தபோது, இனி நீங்கள் விரும்பினாலும் கிஸ்ராவை பார்க்க முடியாது. அவர் மகனே அவரை இன்ன நாள், இன்ன நேரத்தில் கொன்றுவிட்டான் என்ற தகவலைச் சொல்லி அந்த இருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள் பெருமானார். (10, ஜமாதுல் அவ்வல், ஹிஜ்ரி 7 / கிபி 628, பிப்ரவரி, ஏழு மணி).

யெமன் திரும்பிச் சென்ற இருவரும் பதானிடம் நடந்ததைக் கூறினர். முஹம்மது சொன்னது உண்மையானால் அவர் நிச்சயமாக இறைத்தூதர்தான் என்று சொன்ன பதானுக்கு விரைவிலேயே கிஸ்ராவைத் தான் கொன்றது தொடர்பாக கிஸ்ராவின் மகன் ஷிராவய் என்பவனிடமிருந்து கடிதம் வந்தது. 

அதைப் படித்த பதான் அதைத் தூக்கி எறிந்துவிட்டு உடனே இஸ்லாத்தைத் தழுவினார். அவரோரு யெமன் நாட்டு பாரசீகர்கள் பலரும் முஸ்லிமாயினர். கிஸ்ராவின் அதிகாரம் யெமனில் முடிவுக்கு வந்தது. வெளிநாட்டாரின் அதிகாரத்தில் இருந்து அரேபியா வெளியேறுவதற்கான முதல் படியுமானது அது.

வரலாறு தொடரும்....

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK