வசதி பெற்ற, சுதந்திரமான முஸ்லிமான ஆண் பெண் அனைவரின் மீதும் ஹஜ்ஜுப் பெருநாள் பொழுது விடிந்து ஒரு ஈட்டியின் உயரம் சூரியன் மேலே உயர்ந்த நேரம் முதல் பதின்மூன்றாம் நாள் கடைசி நேரம் வரையிலும், ஒரு வருஷத்திய செம்மறி, அல்லது இரண்டு வருஷத்திய வெள்ளாடு, அல்லது மூன்று வருஷத்திய மாடு, அல்லது ஐந்து வருஷத்திய ஒட்டகம் ஏதேனும் ஒன்றை உழ்ஹிய்யஹ் எனும் குர்பானியுடைய நிய்யத்து கொண்டு அறுத்துக் கொடுப்பது பலமான சுன்னத்தாகும்.
இதுதான் சிறப்பான நேரமாகும். ஆனால், சூரிய உதயத்திற்குப் பின் இரண்டு ரக்அத் தொழுது, சுருக்கமாக இரண்டு குத்பா ஓதி முடிக்குமளவு நேரத்திற்குப் பின் அறுப்பது போதுமாகும்.
மேலும், அதை பெருநாள் அன்று அறுப்பது ஏற்றமாகும்.
ஓர் ஆடு, ஒருவருக்காகவும், ஒரு மாடு, ஒரு ஒட்டகம் ஏழு பேருக்காகவும் கொடுக்கலாம் குறையுள்ளது, வரட்ச்சியானது, காது, வால் அறுந்தது, கற்பமானது ஆகியவற்றை கொடுப்பது கூடாது. கொழுத்த ஒரு ஆடு, கொழுப்பில்லாத இரண்டு ஆடுகளைவிட சிறந்ததாகும்.
புருவை, விதை அடிக்கப்பட்டது, காது கிழிந்தது ஆகியவற்றைக் கொடுப்பதில் குற்றமில்லை.
தன் கையால் அறுப்பது, அல்லது அறுக்குமிடத்தில் தான் இருப்பது சுன்னத்தாகும். பெண் ஓர் ஆணைத் தனக்குப் பிரதிநிதியாக ஆக்கிக் கொள்வது ஏற்றமானதாகும்.
அறுக்கும்போது அல்லாஹு அக்பர் என்று மூன்று தடவை சொல்லி, பிஸ்மில்லாஹ் சொல்லி பிறகு மூன்று தடவை தக்பீர் சொல்லி, மூன்றாவது தடவையில் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று கூறி
اَلَّلهُمَّ هَذَا مِنْكَ وَإِلَيْكَ اَلَّلهُمَّ فَتَقَبَّلْ مِنِّيْ
“யா அல்லாஹ் இது உன்னிலிருந்து உள்ளது, உனக்காக அறுக்கப்படுவதாகும். யா அல்லாஹ், என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, என்ற இந்த துஆவையும் ஓதுவது சுன்னத்தாகும். இந்த துஆவை இபாதத் முறையில் அறுக்கின்ற எல்லாவற்றிக்கும் சொல்வது சுன்னத்தாகும்.
நபீ (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லிக் கொள்வது முஸ்தகப்பு.
உழ்ஹிய்யஹ் இறைச்சியை மூன்று பங்குகளாக்கி ஒரு பங்கை தனக்கும், மற்றொரு பங்கை தகுதியானவர்களுக்கு ஹதியாவாகவும், மூன்றாவது பங்கை ஏழைகற்கு சதக்காவாகவும் கொடுப்பது சுன்னத்தாகும்.
பச்சை இறச்சியை கொஞ்சமேனும் ஒரு ஏழைக்காவது சதக்கா கொடுப்பது வாஜிப். பறகத்தை நாடி அதில் கொஞ்சத்தை தான் சாப்பிடுவதற்கு எடுத்துக் கொள்வதும் அது ஈரலாக இருப்பதும் மீதியுள்ளது அனைத்தையும் சதகா செய்வதும், மூன்றில் ஒரு பங்கைக்காண அதிகத்தை தான் எடுக்காமல் இருப்பதும் தோலை சதகா செய்வதும் சிறப்பானவையாகும்.
அதில் எந்தப் பகுதியையும் விற்பது கூடாது. பணக்காரர்களுக்கும், சாப்பிடக் கொடுக்கலாம். எனினும் அதனை அவர்கள் (பணக்காரர்கள்) மற்றவர்களுக்கு விற்பதற்கோ, ஹதியா கொடுப்பதற்கோ தோதாக அவர்களுக்கு உடையதாக்கி கொடுக்கக்கூடாது. ஆனால் ஏழைகளுக்கு கொடுப்பதில் நின்றும் அவர்கள் (ஏழைகள்) விருப்பம் போல் விற்பதற்கோ, ஹதியா கொடுப்பதற்கோ அவர்களுக்கு உடையதாக்கி கொடுக்கலாம்.
நேர்ச்சையுடைய குர்பானியில் தான் சாப்பிடுவது கூடாது. உழ்ஹிய்யஹ் இறைச்சியையும் அகீகா இறைச்சியையும் காபிருக்கு கொடுப்பது கூடாது.
உழ்ஹிய்யஹ் கொடுக்க விரும்புகிறவர் துல்ஹஜ்ஜு முதல் பிறையிலிருந்து உழ்ஹிய்யஹ் கொடுக்கும் வரை தன்னுடைய முடிகளையும், நகங்களையும் வெட்டுதல் மக்ரூஹ், இரவில் உழ்ஹிய்யஹ் அறுப்பதும் மஹ்றூக் ஆகும்.
றசூலுல்லாஹி ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த ஹஜ்ஜதுல் விதாஃ எனும் மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்து பின் மக்காவுக்கு பிரியாவிடை கொடுத்துச் செய்த ஹஜ்ஜின் போது நூறு ஒட்டகங்களை உழ்ஹிய்யஹ் கொடுத்தார்கள்.
அவற்றில் 63 ஒட்டகங்களை தங்களின் கரத்தினாலேயே அறுத்தார்கள். மீதியை அலீ (ரலி) அவர்களை அறுக்குமாறு கூறினார்கள். தங்களுக்கு வயது 63தான் என்பதின் பக்கம் சுட்டிக்காட்டுவதாக அது அமைந்தது. தங்களுக்காக அவர்கள் அறுத்ததுபோக மீதியை தங்களின் உம்மத்தினருக்காக கொடுத்தார்கள்.
மார்க்க சட்டக் கருவூலம் "மஙானீ" நூலிலிருந்து.
ஆசிரியர் மகான் அல் ஆலிமுல் அறூஸ் அல்லாமா செய்யிது முஹம்மது லெப்பை அவர்கள்