Monday, November 14

சொற்களால் பேசும் கவிஞர்கள்!

அகமியத்துக்காக பைசான் மதீனா
கிடைபதற்கரிய நான்கு இஸ்லாமிய கீதங்கள். 
கலைமாமணி நாகூர் சலீம்
உலகில் பிறந்த அனைவரும் ஒவ்​வொறு விசேட திறமையுடனேயே படைக்கப்பட்டுள்ளனர். அதனை கண்டறிந்து எல்லோரும் பயன் படுத்திக் கொள்வதில்லை. அவ்வாறு பயன் படுத்திக் கொள்பவர்கள் அதன் மூலம் தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை செய்பவர்கள். நன்றிக்குறிவர்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். 

ஈழத்து ஹஸ்ஸான்
மௌலவீ இப்றாஹிம் நத்வீ
இந்த வகையில் ஆத்மீகக் கவிஞர்கள்  பலர்  தமிழ் பேசும் உலகில்வாழ்ந்துள்ளனர். அவர்களின் திறமைகளுக்கு ஈடானவர்கள் அவர்கள் மட்டும்தான்.

இப்படிப்பட்ட தலைசிறந்த கவிஞர்களின் இஸ்லாமிய இறைஞானத்தை உலகிற்கு தனது எளிய சொற்களால் கோர்த்து பாடலாக மெருகேற்றி பாமரர்களை சிந்திக்கச் செய்தவர்களை எந்த வார்த்தைகளால் புகழ முடியும்?

வாழ்க்கை என்ற வண்டியை இழுப்பதற்கே நேரம் குறைவாக உள்ள காலத்தில் நல்ல விடயங்களை கேட்கப் பார்க்க மனிதர்களுக்கு நேரம் இல்லை. போகும் வழியில் காதில் வாங்கிக்கொள்ளப் படுபவையே அவர்களின் சிந்தனைக் கருவாகி விடுகின்றது. அதுவும் இசையுடன் இனிமையாக இருந்தால் சொல்லவும் வேண்டுமா! 

பாடல்களை கேட்க உள்ளே செல்லுங்கள்

இசையினை எளிமையான வார்த்தைகளில் கோர்த்து, அதில் இஸ்லாத்தின் மெஞ்ஞானத்தை ஊட்டுபவர்களை நாம் எப்படி பாராட்டாமல் இருப்பது?. அப்படிப்பட்ட பாராட்டுக் குரியவர்கள்தான் இந்தியாவின் தமிழ் நாட்டின் நாகூரில் வாழும் கலைமாமணி நாகூர் சலீம் அவர்களும் ஈழத்தின் காத்தான்குடியில் வாழும் கவிஞர் மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்களும். 

கலைமாமணி நாகூர் சலீம்
இஸ்லாமிய கீதம் என்ற வடிவம் உலகிற்கு அறிமுகமானதிலிருந்து இன்று வரை பல ஆயிரம் பாடல்களை தந்தவர்கள் கலை மாமணி நாகூர் சலீம் அவர்கள். இவர்களை அறியாத தமிழர்கள் உலகில் இல்லை எனலாம். 

கலைமாமணிக்கு என்ன பிரச்சினையோ? நாகூரில் அருள் ஆட்சி புரியும் மகான் சாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களையே வழக்கு இழுத்து விட்டார்கள். இந்த தைரியம் வேறு எவருக்கும் வராது, வரவும் கூடாது. இதுவும் ஒருவகை ஊடல்தான். 

மனக்கலக்கம் தீர்க்க மறுத்தது ஒரு குற்றம்! 
மடிப்பிச்சை கோரியும் மறுத்தது மறு குற்றம்! 
குணக்கடல் இவ்வாறு நடந்தது கொடுங்குற்றம்! 
கண்ணீரை மதியாமல் இருந்தது கடும் குற்றம்! 

என்று நாகூர் ஆண்டகைக்கு எதிராக குற்றப்பத்திரிகை வாசிக்கின்றார் கலைமாமணி அந்த தைரியம் அவருக்கு மட்டுமே வரும். அப்பா! ஆளை விட்டால் போதும்! 

இதோ பாடல் : உமக்கும் எமக்கும் வழக்கொன்றிருக்குது.. 
கேட்டு கொள்ளுங்கள்! பாடிப் பார்க்காதீர்கள்!. 

கவிஞர் கலைமாமணி நகூர் சலீம் ஒரு பிறவிக் கவிஞர். கலைமாமணியிடம் மீனவர்கள் பாதுகாப்பிற்காக ஒரு பாடலை எழுதிக் கேட்டார்கள் போலும் விடுவாரா சந்தர்ப்பத்தை! தன் பாட்டனிடம் மீண்டும் ஒரு வழக்குக்கு வருகிறார். ஒரு பெண் கடலுக்குச் சென்றுள்ள தன் கணவனுக்காக மகானிடம் மன்றாடும் விதமாக கலைமாமணி எழுதியுள்ளார். 

மீனவர்களுக்கு இப்பாடல் வரப்பிரசாதம். தாங்கள் வாய் திறந்து கேட்கத்தயங்குவதை கவிஞரின் வார்த்தைகளில் மகானிடம் கேட்டுவிடலாம். 

மருத்துவர் கைவிட்ட அச்சுதப்பர் ராசாவின் 
மரணத்தை வென்றதும் நீர்தானே! 
காய்ந்த மரக்குச்சி துளிர்த்ததே- அது 
உங்கள் காருண்ணியம் பாச்சிய நீர்தானே! 
கருணை கடலே அந்த அலை வெள்ளமோ 
உங்கள் கட்டளைமுன் மிஞ்சும் தடை கொள்ளுமோ! 

நாயகமே! கடலுக்கு உங்களின் சொல்லை மீறும் சக்தி இல்லை என்கிறார் கலைமாமணி. 

இதோ பாடல்.

இந்த இரண்டு பாடல்களையும் கலைமாமணியின் மருமகன் நாகூர் றூமி அவர்கள் இணையத்தில் வழங்கியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றிகள். 

மகான் நாகூர் ஆண்டகையின் மகன் சின்ன எஜமான் என்று எல்லோராலும் உரிமையுடன் அழைக்கப்படும் மகான் யூசுப் ஷாஹீப் வலீயுல்லாஹ் அவர்களை புகழ்ந்து கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுத அதனை மர்ஹூம் வாஹித் அவர்கள் பாடியுள்ளார்கள். 

சர்வலோகமும் போற்றும் குணாலா! 
ஷாஹுல் ஹமீத் நாயகப் பாலா - அருளால் வந்த பாலா! 
பெரும் நீதி நேர்மை அனைத்துக்கும் நீர் காவலல்லவா! 
நிலம் நீர் படைத்த இறைவனின் ஏவல் அல்லவா! 

என்று ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்களின் புதல்வர் சின்ன தாதா யூசுப் ஷாஹிப் அவர்களைப் பற்றி எளிமையாகவும் அழகாகவும் எழுதியுள்ளார் கவிஞர். நான் சொல்வதை விட நீங்களே கேட்டுப் பாருங்கள் பாடலை. அருமை அப்போது புரியும். 

இதோ பாடல்

இப்பாடலை கேட்டவுடன் அகமியத்திற்கு நாகூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஹமீத் ஜாஃபர்அவர்கள் வழங்கியிருந்தார்கள். அன்னாருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

ஈழத்தின் ஹஸ்ஸான் மௌலவீ இப்றாஹிம் நத்வீ


அடுத்தவர், ஈழத்தில் காத்தான்குடியில் பிறந்து அங்கேயே வாழும் கவிஞர் மௌலவீ இப்றாஹீம் நத்வி அவர்கள். மிகச் சிறந்த மார்க்க அறிஞரான இவர்கள் மிகச் சிறந்த கவிஞரும் கூட. ஈழம் சுமார் 30 ஆண்டுகள் உள்நாட்டு யுத்தத்தின் பிடிக்குள் திணறியதால் இவர்களின் பல நூறு பாடல்கள் இசைவடிவம் பெற வில்லை. 

பல பாடல்கள் வெறும் வாயால் பாடிய வண்ணமே உள்ளன. என்றாலும் இவர்கள் சுமார் பதினைந்து நிமிடத்தில் தமிழ் நாட்டில் புகழ் பூத்த பாடகர் அபுல் பறகாத் பிலாலீ அவர்களின் வேண்டுகோளின் பெயரில் எழுதிக் கொடுத்து அவர்கள் அதற்கு இசையமைத்துப் பாடி வழங்கிய ஒரு பாடல் அவர்களின் கவித்திறமையை உலகறிய போதுமான சான்றாகும். 

இப்பாடலில் வஹ்ததுல் வுஜூத் எனும் இஸ்லாமிய இறைஞான தத்துவத்தினை சில வார்தைகளில் மடித்துக் கொடுத்துள்ளார் கவிஞர். 

அவர் புனித திருக்கலிமாவை கூறியுள்ள விதத்தைப் பாருங்கள் 

உன்னை அறிந்திட, உள்ளம் மகிழ்ந்திட, நீ வருவாய் 
என்னை அறிந்திட, என்னை இழந்திட, நீ தெரிவாய் 
எந்தன் உடலும், எந்தன் உயிரும் உன்னையன்றி வேறொன்டோ? 
மண்னும் விண்னும், மற்றும் அனைத்தும் உன்னையன்றி இன்னொன்றோ! 
உன்னையன்றி ஒன்றுமில்லை எல்லாம் உந்தன் கோலமே! 

பாடலையும் கேளுங்கள். உங்கள் வாழ்த்துக்களை கவிஞருக்குக் கூறுங்கள். 
கவிஞரின் தொலைபேசி இலக்கம் : +94 77 851 6266 

பாடல் இதோ.

அகமியத்திற்காக பாடல்களைத் தொகுத்து எழுதியவர்
பைசான் மதீனா.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK