![]() |
இமாம் அபூஹனீபா (றஹ்) |
மௌலானா அல்ஹாஜ் எச். கமாலூத்தீன் ஹழ்ரத்
அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர்.
இஸ்லாமிய சட்டங்கள் எவையெவை என்னென்ன தரம் உடையவை என்பதை பகுத்து, தெளிவான வகையில் அவற்றை இஸ்லாமிய உலகிற்கு வழங்கியவர்கள் ஃபிக்ஹூ கலையில் தேர்ந்த இமாம்களாவர்.

இன்று சிலர் தாங்கள் கூறுவதே சரியானது என்றும் இமாம்களெல்லாம் வழிகேடர்கள் என்றும் கூறத் துணிந்திருப்பது அவர்களின் அறியாமையையும் அவர்கள் குழப்பத்தையே குறியாகக் கொண்டவர்கள் என்பதையும் துல்லியமாக அடையாளம் காட்டுகின்றது.
"யாருக்காவது அல்லாஹ் சிறப்பினை வழங்க நாடினால் அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்" என நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே மார்க்கத்தின் நுட்பமான விளக்கம் என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்ல.
எவருக்கு சிறப்பையும், மேன்மையையும் கொடுக்க இறைவன் நாடுகிறானோ அவர்களுக்கு மட்டுமே அத்தகைய விளக்கம் கிடைக்கிறது. என்று இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. இந்த ஹதீஸில் உள்ள “யுஃபக்கிஹ்ஹு” என்னும் வினைச் சொல்லில் உள்ள ஃபிக்ஹு (மார்க்க விளக்கம்) என்ற சொல்லே இஸ்லாமிய நடைமுறைச் சட்டங்களுக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
ஃபிக்ஹிற்கு அடிப்படையானவை நான்கு.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ்
நாம் நாடும் கருத்துக்கு முதன்முதலாக குர்ஆனில் விடையுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதிலிருந்து நம்மால் தெளிவுபெற இயலாவிட்டால் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல் செயல்களில் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹாபாக்கள் செய்ய அதனைப் பெருமானார் (ஸல்) மறுத்துக் கூறாத விஷயங்களில் அதற்கு விடைகாண வேண்டும்.
ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனுக்கு விளக்கமாகவே அமைந்திருக்கின்றன. விளக்கம் கூறும் போதனையாளராகவே அவர்களை அல்லாஹ் அனுப்பினான்.
நபீமார்கள் அனைவரும் மக்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பப்பட்டவர்களே. அதுபோல் நமது நபீ (ஸல்) அவர்களும் மக்களை திருத்துவதற்காக அனுப்பப்பட்டவர்களே!
அவர்களின் ஒவ்வொறு சொல்லும் ஒவ்வொறு செயலுமே நமக்கு ஷரீஅத்து (மார்க்கம்). அல்லாஹ் கூறுகின்றான்
“(நமது) தூதர் (கட்டளையாக) எதை உங்களுக்கு கொடுத்தாரோ அதைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். எதைவிட்டு உங்களைத் தடுத்தாரோ (அதைவிட்டு) விலகிக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 59:7)
மனிதனுக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் குர்அனில் கூறிவிட முடியாது. அடிப்படையான முக்கியமான பொதுவான சட்டங்களை அதில் அல்லாஹ் கூறியிருக்கிறான். அதற்கு மேல் தேவைப்படும் விளக்கங்களுக்கு நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுப்பாக ஆக்கினான். அதனையே மேற்கூறும் வசனம் குறிப்பிடுகின்றது.
பிக்ஹுக்கு மூன்றாவது அடிப்படையாகத் திகழ்வது இஜ்மாஃ ஆகும். நபித்தோழர்களோ
அவர்களின் அடுத்த காலத்தவர்களான தாபியீன்களோ எக்கருத்தின் மீது ஒன்று பட்டிருந்தார்களோ அக்கருத்திற்கு இஜ்மாஃ என்று கூறப்படுகின்து
ஃபிக்ஹின் நான்காவது அடிப்படை கியாஸ் ஆகும். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃவில் வந்துள்ள சட்டங்களுக்கு காரணம் கண்டுபிடித்து அக்காரணம் வேறு செயல்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்டால் அச்செயல்களுக்கும் அதே சட்டத்தைக் கொடுப்பதற்கு கியாஸ் என்று சொல்லப்படுகின்றது.
அதாவது, ஒன்றுக்குரிய சட்டத்தை அதைப் போன்றதன் மீதும் ஏற்றிக் கூறுவதாகும். இவ்வாறு விளங்குவது மனித இயல்பில் உள்ளதாகும்.
ஒரு சாரார் நாம் எந்தச் சட்டத்தைக் கூறினாலும் அது குர்ஆனில் வந்துள்ளதா? ஹதீஸில் வந்துள்ளதா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சரியல்ல. ஏனென்றால் குர்ஆன் ஹதீஸில் சில சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. சில உட்பொருளாக மறைந்திருக்கின்றன.
மறைந்துள்ள உட்கருத்தை ஆராய்ந்து எடுப்பது என்பது எல்லோராலும் முடியக்கூடிய காரியம் இல்லை. அதற்கு தனித்திறமை தேவை. அரபி மொழியிலும் அதன் இலக்கண இலக்கியங்களிலும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸுகளின் வெளிப்படையான கருத்துக்களை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
சரியானவை எனச் சொல்லப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் மட்டும் போதாது. ஏனென்றால் இவற்றைத் தொகுத்து எழுதியவர்களே இவை பல இலட்சம் ஹதீஸ்களிலிருந்து தேர்ந்தெடுத்து எழுதப்பட்டவை என்று கூறியுள்ளார்கள். அத்துடன் ஹதீஸ்களின் தரத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தால்தான் குர்ஆனின் உட்புறத்தில் மறைந்துள்ள கருத்தை தெளிவு படுத்தும்போது அக்கருத்து குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிய கருத்துக்கு முரண்பாடின்றி இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது ஃபகீஹ் முஜ்தஹிது என்ற ஆய்வாளர்கள் மார்க்கக் கல்வியின் கடலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தான் விளங்கிய கருத்தை இறைவசனங்களுக்கும் நபீ மொழிகளுக்கும் முரணில்லாமல் கூற முடியும்.
இமாம்களின் நிலை.
சிலர், இமாம்களின் கருத்தை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? எனக் கேட்கிறார்கள் அதற்குக் காரணம், இமாம்களின் தரத்தையும் அவர்களின் சரித்திரத்தையும் உணராததாகும். இவ்வாறு கேட்பவர்கள் அரபியே படிக்காமல், யாரேனும் எழுதிய சில புத்தங்களைப் படித்தவர்களாவர்.
அல்லது ஹதீஸ் கிதாபுகளில் சில பகுதிகளுக்கு வெறும் மொழிபெயர்ப்பையும் குர்ஆனின் சில பாகங்களுக்கு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள். இவர்களால் இமாம்களின் ஆய்வை எவ்வாறு அறிய முடியும்?
ஹதீஸ்களின் விளக்க உரைகளை பார்க்கும் பொழுதுதான் இமாம்களின் தனித்திறமையை அறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களைப் பார்ப்போம் அவர்கள் ஹிஜ்ரி 80ல் பிறந்தார்கள். அது றசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான காலம். சஹாபாக்களிடம் பயின்ற தாபியீன்களிடம் அன்னார் ஹதீஸ்களைப் பயின்றார்கள்.
பல ஊர்களுக்கும் சென்று ஹதீஸ்களைப் படித்தார்கள். அவர்கள் வாழ்ந்த கூஃபா அன்று ஹதீஸுக்கல்வியின் மத்திய பீடமாகத் திகழ்ந்தது இமாம் இப்னு ஜௌஸி (றஹ்) அவர்கள் தனது "தல்கீஹ்" என்னும் நூலில் “அவ்வூர் எட்டு கலீபாக்களின் தலைநகரமாக விளங்கியது. 120 சஹாபாக்கள் வரை அங்கே தங்கியிருந்தார்கள்” என்று பெயருடன் குறிப்பு எழுதிவைத்து இருக்கிறார்.
அரசர்கள் இருக்குமிடங்களில் அறிஞர்கள் அதிகமாயிருப்பது வழக்கம். இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களுக்கு ஹதீஸ் போதித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் இமாம் ஷுஅபீ (றஹ்) அவர்களாவர். அவர்கள் 500 சஹாபாக்களை சந்தித்திருப்பதாக தத்கிரத்துல் ஹுஃப்ஃபாள் என்ற கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
இவர்களைப் போன்ற பல்வேறு ஹதீஸுக் கலை ஆய்வாளர்களிடம் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் ஹதீஸ்களை பயின்றார்கள்.
அன்னார் இமாம் ஹம்மாது (றஹ்) அவர்கள் போன்ற பலரிடம் ஃபிக்ஹைப் பயின்றார்கள். பின்னர் அன்னார் தம்முடைய கூரிய அறிவுத்திறமையால் ஃபிக்ஹுக்கு வளர்ச்சியை உண்டாக்கினார்கள்.
இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள்
"ஃபிக்ஹு விஷயத்தில் மற்ற அனைவரும் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களின் குழந்தைகளே!"
எனக்கூறியுள்ளது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இத்தகையோரின் ஆய்வைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டுமா? என்று இன்றைக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.
இது, கேள்வி எழுப்புவோரின் அறிவுக்குறைவையே காட்டுகிறது. இமாம் அபூ யூசுப் (றஹ்) அவர்கள் இமாம் அபூ ஹனீபா (றஹ்) அவர்களின் மாணவர். வேறு பல ஆசிரியர்களிடமும் அவர் படித்துள்ளார். இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களின் ஃபிக்ஹு சட்டங்களைப் புத்தக வடிவில் முதலில் அமைத்தவர் இவரே.
இவரும் ஃபிக்ஹில் (முஜ்தஹித்) ஆய்வாளர் தாம். அதே போன்று இமாம் முகம்மது (றஹ்) அவர்களும் ஃபிக்ஹில் (முஜ்தஹித்) தான். இவர்கள் எழுதிய ஆறு கிதாபுகளின் மூலமாகவே இமாம் அபூஹனீபா (றஹ்) அவரக்ளின் ஆய்வாள் எடுக்கப்பட்ட சட்டங்கள் நமக்கு கிடைக்கின்றன.
அபூஹனீபா (றஹ்) அவர்களிடம் பயின்ற இவர் இமாம் மாலிக் (றஹ்) அவர்களிடமும் பயின்றார். அவ்வாறிருந்தும் இவர் இமாம் மாலிக் (றஹ்) அவர்களுடைய ஃபிக்ஹு சட்டத்தை எழுதிவைக்காமல் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களின் சட்டத்தை மட்டுமே எழுதிவைத்துள்ளார்.
இமாம் அபூயூசுப் (றஹ்), இமாம் முஹம்மது (றஹ்) ஆகிய இருவரும் முஜ்தஹிதுகளாக இருந்ததோடு இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களின் சட்டங்களை எழுதிவைத்துள்ளர்.
தங்களுடைய மற்ற ஆசிரியர்களை விட இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களை இவர்கள் உயர்வாக மதித்துள்ளார்கள். என்பதையே இது காட்டுகின்றது. இப்பொழுது பிரபலமாக இருக்கும் நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் அறிவுத்திறமையிலும் அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பதிலும் மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள்.
அதனால்தான் அவர்களின் ஃபிக்ஹுச் சட்டங்கள் மக்களால் ஏற்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன. இது அல்லாஹ் செய்த பேருபகாரமாகும்.
கியாஸ் உடைய ஆதாரங்கள்.
தொடரும்.....