காதிபுல் ஹிக்மஹ்-ஸைபுல் இதா
![]() |
ஞானமகான் பிஷ்றுல் ஹாபீ (றஹ்) |
ஞானமகான் பிஷ்றுல் ஹாபீ (றஹ்) அவர்கள் இஸ்லாமிய சூபிகளில் ஒருவர். இவர் காலில் பாதணி இல்லாமல் வாழ்ந்தவராதலால் பிஷ்ர் என்ற அவரின் இயற்பெயருடன் ஹாபீ பாதணி இல்லாதவர் என்ற சொல்லும் சேர்க்கப்பட்டு பிரசித்தி பெற்றார்கள்.
இவர்களும், இவர்கள் குடும்பத்தினரும் மாரக்கப்பற்றும்,பேணுதலும் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இஸ்லாமிய சூபிகளில் இவர்கள் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக இருந்துள்ளார்கள்.
இதற்குப் பிரதான காரணம் அவர்களிடம் காணப்பட்ட பேணுதலேயாகும். இதனால் சூபிகளும், ஞானமகான்களும்
"அல்வறஉ கரஜ மின் பைதி பிஷ்றில் ஹாபீ "
"பேணுதல் என்பது பிஷ்றுல் ஹாபீ அவர்களின் இல்லத்தில் இருந்தே வந்தது" என்று கூறுவர்.
இவர்களுக்கு ஒரு சகோதரி இருந்தார்கள் அவர்கள் சகோதரன் பிஷ்றை விட மார்க்கப் பற்று, பேணுதல் உள்ளவர்களாக இருந்தார்கள்.
ஒருநாள் ஒரு பக்கீர்- ஆன்மீக வழிநடப்பவர் பிஷ்ரின் வீட்டுக்கு வந்து அதன் முன்னே மூச்சுவாங்கிய நிலையில் நின்று அம்மா! தண்ணீர் என்றார்கள்.
வீட்டினுல் இருந்து வெளியே வந்த சகோதரி சோகமும் தாகமும் ஆட்கொண்டிருந்த பக்கீரின் முகம் கண்டு மனம் ஒடிந்து ஒரு கோப்பை நிறைய சுத்தமான நீர் எடுத்து அவரின் முன் கொணர்ந்தபின் நிலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து நீரில்போட்டு பக்கீரே! அருந்துக என்றார்.
ஆகா இது என்ன? முன்றலில் நிற்கும் பகீரை நீரில்லை என்று கூறி விரட்டியிருந்தால் அது ஒரு வகையில் நல்லது ஆனால் இந்த மாதோ கண்முன்னே மண் கலந்தாலே இது ஏன்? எதற்காக? பகீரின் பதினொன்றும் திசைதெரியாமல் பறந்து போயிற்று.
உபகாரத்தில் உபத்திரவமா? தத்துவத்துள் தத்துவமா? புரியவில்லையே! செய்தவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம் நீண்ட நேரத்தின்பின் ஒரு முடிவுக்கு வந்த பகீர்
அம்மா! தங்கையே! நங்கையே! என்னம்மா உன் செயல் அறிந்து கொள்ளலாமா? புலம்பியது பகீரின் நெஞ்சு.
அய்யா பகீரே துறவியே! என்செயலும் உம் செயலும் அவன் செயலே செயல் அவனுக்குரியதே அன்றி வேறு யாருக்கும் உரியதல்ல செய்பவர்களாகவும், அவர்களின் செயலாகவும், கண்ணாகவும், கண் ஒளியாகவும், மலராகவும் அதன் மணமாகவும், பாம்பாகவும் மகுடியாகவும், நீராகவும் அலையாகவும் அவனன்றி வேறு யாருள்ளான்?
நீரில் மண்போட்டு உன்னை நிலைகுலையச் செய்த என் செயல் அவன் செயலே! ஆனால் ஏன் செய்தான்? காரணம் என்ன? அவன் செயல் எச்செயலாயினும் அது அர்த்தமற்றதல்ல! இதோ சொல்கிறேன்.
அவன் செயல் என் செயலாய் வெளியானதற்கான காரணத்தை மட மடவென மேற்கண்ட தத்துவத்தை கூறிய சகோதரி. ஐயா! பெரியவரே! தாகத்தின் வேகத்தால் சிலவேளை அல்லாஹ்வை மறந்து, "ஷரிஅத்" காட்டிய “சுன்னத்” ஆன “பிஸ்மி” சொல்லும் வழிமுறையை விட்டு விடலாகாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்றார் சகோதரி.
அம்மா தாயே! பேணுதல் என்பதற்கு நீங்களே வரைவிலக்கணம். உங்கள் வீட்டிலிருந்தே உலகிற்கு பேணுதல் வினியோகிக்கப்படுகிறது. என்றார் பகீர்.
இந்த வரலாற்றின் மூலம் இரண்டு விடயங்கள் விளங்கப்படுகின்றன.
ஒன்று-பிஷ்றுல் ஹாபீ மகான் அவர்களின் குடும்பத்தவர்களுடைய மார்க்கப்பற்றும் பேணுதலுமாகும்.
இரண்டு- அவர்களின் சகோதரி பகீறுக்கு கூறிய இறை தத்துவமாகும்.
எச்செயலும் அவன் செயலே! வன் செயல் கூட அவன் செயலேதான். எவன் ஒருவன் அல்லாஹ் தவிர வேறு யாருக்கேனும் செயல் உண்டு என்று நம்பினால் அவன் வடிகட்டிய “முஷ்ரிக்” என்பதில் சந்தேகம் தேவையா?
அகமியத்திற்காக – காதிபுல் ஹிக்மஹ் -ஸைபுல் இதா.