Saturday, October 1

“துஆ” கேட்போம்

அகமியத்துக்காக- மாயாவாதி
ஒருவர் இன்னொருவரிடம் எனக்காக “துஆ” செய்யுங்கள் என்று விபரமின்றியும், எனது ஈமானுக்காக “துஆ” செய்யுங்கள், எனது கல்விக்காக “துஆ” செய்யுங்கள், எனது வியாபாரத்துக்கா “துஆ” செய்யுங்கள் என்று ஒரு விடயம் குறித்து கேட்டுக் கொண்டால் மற்றவர் அவருக்கு என்ன சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்கான பதிலையும், இது தொடர்பான முக்கிய விடயங்களையும் இங்கு எழுதுகின்றேன். 

ஒருவர் இன்னொருவரிடம் மேற்கண்டவாறு விபரமின்றியும், விபரமாகவும் கேட்டுக்கொள்வது இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த விடயமேயாகும். இது நல்ல காரியமேயன்றி இதில் தவறு ஒன்றுமில்லை. 
ஒருவர் மற்றவரிடம் மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டால் மற்றவர் அவருக்காக உடனே ‘துஆ” செய்யவும் முடியும். பிறிதொரு நேரத்தில் “துஆ” செய்யவும் முடியும். எப்படியேனும் அவர் தனது வாழ்வில் ஒரு தரமேனும் அவருக்காக “துஆ” செய்தால் மட்டுமே அவருக்களித்த வாக்கை நிறைவேற்றியவராவார், இன்றேல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பாவியாகிவிடுவார். 

"துஆ” செய்யும்போது கேட்டுக்கொண்டவர் குறித்த விடயத்துக்குப் பொருத்தமான வசனங்கள் கொண்டு “துஆ” செய்தல் வேண்டும். 

உதாரணமாக ஈமானுக்காக “துஆ” செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டவருக்கு அல்லாஹ் உங்கள் ஈமானைப் பலப்படுத்தி உங்களை ஈமானுடன் மரணிக்கச் செய்வானாக என்றும், கல்விக்காக “துஆ” செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டவருக்கு அல்லாஹ் உங்களுக்கு பயன்தரக்கூடிய கல்வி ஞானத்தை தருவானாக என்றும் கேட்பது போன்று. 

இதற்கு மாறாக முதலாமவருக்கு “துஆ” செய்யும்போது அல்லாஹ் உங்களுக்குப் பணச் செல்வத்தை தருவனாக என்றும், இரண்டாமவருக்கு துஆச் செய்யும்போது அல்லாஹ் உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் தருவானாக என்றும் கேட்பது துஆ வாக இருந்தாலும் கூட அது பொருத்தமற்றதாகி விடும். 

ஹஜ் வணக்கத்தை நாடி திரு மக்கா திரு மதீனாவுக்குப் பயணிப்பவர்களிடமும், வலிமார்களின் சியாரங்களுக்குச் செல்வர்களிடமும் நீங்கள் போகும் இடமெல்லாம் துஆச் செய்யுங்கள் என்று ஒருவர் சொல்லி அதை அவர் பொறுப்பேற்றுக் கொண்டாராயின் அவருக்காக “துஆ” செய்வது பொறுப்பேற்றவருக்கு கடமையாகி​விடும். 

நிச்சயமாக அவர் துஆச் செய்தல் வேண்டும் தவறின் அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றதாத பாவியாகி விடுவார். 

மேற்கண்ட புனித இடங்களுக்குச் செல்லும் ஒருவரிடம் அவரின் உறவினர், நண்பர்கள், கூட்டமாக அவரைச் சூழ்ந்துகொண்டு துஆச் செய்யுமாறு அவரிடம் சொல்லும்போது அவர் அனைவருக்கும் தலையை அசைத்துக் கொண்டு பயணித்து விடுவாறாயின் யார், யார் தன்னிடம் துஆச் செய்யுமாறு கேட்டுக் கொண்டவர்கள் என்பதை மறந்து தனது நினைவில் வந்தவர்களுக்காக மட்டும் துஆச் செய்கின்றார். 

இவர் துஆச் செய்தாலும்கூட ஒருவகையில் பாவிதான். ஏ​னெனில் துஆச் செய்யுமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கு தலையசைத்தல் மூலம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை. 

ஒருவர் வாயால் வார்தையால் ஆம் என்று சொல்வதும், வாய் திறக்காமல் தலை அசைத்து ஆம் என்று சொல்வதும் இரண்டும் ஒன்றேதான். 

எனவே, தனது நினைவில் தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவு துஆச்செய்யுமாறு கேட்போரின் எண்ணிக்கை இருக்குமாயின் அவர்களின் பெயர்களை குறித்துவைத்துக் கொள்ளவேண்டும் அல்லது நினைவு வந்தால் மட்டும் துஆச் செய்வதாக அவர்களிடமே சொல்லிவிட வேண்டும். 

அல்லது 

اللهم اقض حوائج من أوصاني بالدعاء
(அல்லாஹும்மக்ழி ஹவாயிஜ மன் அவ்ஸானீ (B)பித்துஆஇ). 

இறைவா! துஆச் செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்ட அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக என்று துஆச் செய்தால் போதும் பெயர் குறித்து துஆச் செய்யாத குற்றத்திலிருந்து தப்பிக் கொள்ளலாம். 

ஒருவர் இன்னொருவரிடம் எதையும் குறித்து துஆக்கேட்டுக்குமாறு கேட்டுக் கொள்ளாமல்​ பொதுவாகக் கேட்டுக் கொண்டால் மற்றவர் அல்லாஹ் உனக்கு றஹ்மத் செய்வானாக பறகத் செய்வானாக அல்லாஹ் போதுமானவன் போன்ற வசனங்களைக் கூறினால் அது “துஆ” ஆகிவிடும். 

தமது மார்பை தட்டிக் கொண்டு தாமே யாவும் அறிந்தவர்கள் என்றும், புனித இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் காட்டுவது தாமேதான் என்றும் கூறிக்கொண்டு முன்னோரின் வாழ்கை முறைகளையும், அவர்கள் செய்துவந்த மார்க்க அனுட்டானங்களையும் ‘ஷிர்க்’ என்றும் , “பித்அத்” என்றும் கூறி நாட்டில் குழப்பதையும், முஸ்லிம்களுக்கிடையில் பிளவையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற வஹ்ஹாபிஸ முகவர்களுக்கு ஒருவர் இன்னொருவரிடம் “துஆ” செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வது பிடிக்காது. 

இந்த விடயத்தில் விரலாட்டிகளையும், விரலோட்டிகளையும் விட தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் சிறந்தவர்கள் எனலாம். ஏனெனில் பிறரிடம் “துஆ” செய்யுமாறு கேட்கும் பண்பாடு அவர்களிடம் நிறைய உண்டு. 

ஒருவர் இன்னொருவரிடம் “துஆ” செய்யுமாறு சொன்னால் அவருக்கு அல்லாஹ்வும் அவனின் ஹபீபாகிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை பின்பற்றிய விசுவாசிகளும் உனக்குப் போதும் என்று துஆச் செய்வது விசேடமானதாகும். 

இதற்கு பின்வரும் திருவசனம் ஆதாரமாக உள்ளது. 

يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ) (الأنفال : 64 ) 

நபீயே! உங்களுக்கு அல்லாஹ்வும், உங்களைப் பின்பற்றிய விசுவாசிகளும் போதும். (திருக்குர்ஆன்- அல் அன்பால் வசனம்-64) 

மேற்கண்ட திருவசனத்தை மொழி இலக்கண அடிப்படையில் ஆழமாக ஆய்வு செய்தால் ஒரு “முஃமின்” விசுவாசி இன்னொரு விசுவாசியிடம் “துஆ” செய்யுமாறு கேட்டுக் கொண்டால் அதற்கு அவர் உனக்கு அல்லாஹ்வும், றசூலும், நானும் போதும் என்று சொல்ல முடியுமென்பது தெளிவாகும். 

நாம் நமக்காகவும் பிறருக்காகவும் “துஆ” செய்வோம். நமக்காக “துஆ” செய்யுமாறு நல்லடியார்களிடமும் கேட்போம். குறிப்பாக மண்ணறைகளில் மறைந்து வாழும் மகான்களிடமும் கேட்போம். 

அகமியத்துக்காக மாயாவாதி. 

குறிப்பு 
எமது இணையத்தளத்திற்காக மிகவும் பிரயோசமான கட்டுரையை எழுதியுள்ள “மாயாவாதி”யின் கட்டுரைகளும் இடவசதியின்மை காரணமாக தத்துவ எழுத்தாளர் “ஸைபுல் இதா” பதிவேட்டில் இடம் பெறுகின்றது. 

நன்றி 
அகமியம் நிர்வாகம். 

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK