இலங்கையின் காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் அகீதாவின் தளமாக இயங்கும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் மீளவும் ஜும்மா ஆரம்பிக்கப்படவுள்ளதா? என்ற கேள்வியை பலர் எமக்கு ஈமெயில் மூலம் அனுப்பி இச் செய்தியின் உண்மைநிலை என்ன என்பதைக் கேட்டிருந்தனர்.
காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் 1984ம் ஆண்டு முதல் தனியாக ஜும்ஆ ஆரம்பிக்கப்பட்டு 2006ம் ஆண்டு சமாதானம் செய்யப்படும்வரை நடாத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது காத்தான்குடியில் பல பள்ளிவாயல்களில் புதிதாக ஜும்ஆக்கள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பத்ரிய்யஹ் பள்ளிவாயலில் ஜும்ஆ ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சுன்னத் வல் ஜமாஆத் மக்களின் மத்தியில் வலுவடைந்து வருகின்றது.
ஆகவே இது குறித்து எமக்கு அனுப்பப்பட்ட ஈமெயில்களுக்கு பதிலளிக்கும் முகமாக நாம் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாக சபை உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முற்பட்டாலும் அது கை கூடவில்லை.
என்றாலும் தற்போது காத்தான்குடியில் வசிக்கும் சில சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்டோம்.
எமக்கு கருத்து தெரிவித்த
அஸ்வர் அஹமத். (பெயர் மாற்றப் பட்டுள்ளது)
“நாங்கள் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள். புனித இஸ்லாத்தினை கண்மணி நபீ (ஸல்) அவர்கள் கூறிய வழியில் செவ்வனே பின்பற்றி நடப்பவர்கள். எங்களது ஷெய்குனா சங்கைக்குரிய மௌலவி அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும் கலீமாவுக்கு சரியான பொருளையும் எங்களுக்கு விளக்கி வைத்தபோது அவர்களின் அடிபாதத்தை பின்பற்றி நாங்கள் நடந்தோம். எமக்கு “முர்தத்” பத்வா கண்மூடித்தனமாக வழங்கப்பட்டது. பொறுமை செய்தோம்.
எல்லோருடன் நல்லுரவை பேணும் புனித இஸ்லாத்தின் பண்பினை எடுத்துக் காட்டுவர்களாக இதுவரை வாழ்ந்து வருகின்றோம். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றோம். அரசியல் வாதிகள் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தப் பார்கின்றனர். நாம் தனியாக ஜும்ஆவை ஆரம்பித்து எமது தனித்துவத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றோம்.”
அன்வர் முகம்மட் (பெயர் மாற்றப் பட்டுள்ளது)
“ சில பிரதி அமைச்சர்களும், மற்றும் அரசியல் வாதிகளும் தொடராக எங்களை ஏமாற்றுகின்றார்கள். எங்களை பள்ளியை கட்டித் தருவதாக அமைச்சர்களை கூட்டிவந்து பெரும்திரளான மக்களுக்கு மத்தியில் மாலையும், மரியாதையும் மற்றும் வாக்குகளையும் பெற்றவர்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.
இனி இவர்களை நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை. இவர்களின் எந்த உதவியும் எமக்கு தேவையுமில்லை. நாங்கள் தனியான ஜும்ஆவை ஆரம்பித்து நாம் மீண்டும் தனித்துவத்துடன் தொடராக செயற்பட வேண்டும்”
இது குறித்து “இஸ்லாமிய முப்தி” ஒருவரிடத்தில் வினவியபோது
“காத்தான்குடியில் சனத்தொகை மிகவும் அதிகம். சில பள்ளிவாயல்களில் மாத்திரம் ஜும்ஆ நடாத்தப்படும்போது பலர் இட நெருக்கடி காரணமாக பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன் தொழுகைக்காக பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் செல்கின்றனர்.. பத்ரிய்யஹ்வில் ஜும்ஆ நடாத்துவதால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அத்துடன் இமாம்களின் காலத்தில் “புஃத்” (தூரத்தை) தை நிர்ணயித்தார்கள். அது தற்போது சாத்தியமான விடயம் அன்று. இதுவே எனது பத்வா”
சில காத்தான்குடி பொதுமக்களிடம் வினவியபோது
“காத்தான்குடியில் பல ஜும்ஆக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றன. அப்துர் ரஊப் மௌலவியும் அவர்களை பின்பற்றும் ஆதரவாளர்களும் அவர்களுக்கென்று தனியாக அவர்களின் பள்ளியில் சில காலங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டதைப் போன்று ஜும்ஆ நடாத்துவதால் என்ன பிரச்சினை இருக்கிறது?”
மற்றுமொரு கல்விமான்.
“இந்த விடயம் ஒரு விவாதத்துக்குரிய விடயம் அல்ல. எல்லா மக்களுக்கும் இலங்கையில் அவர்கள் விரும்பிய மதத்தினை அல்லது Practice யினை பின்பற்றும் உரிமை யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை”
இவ்வாறு எங்களுக்கு பல மக்களின் கருத்துக்களை தொலைபேசி மூலம் பதிவு செய்ய முடிந்தது. இன்ஷா அல்லாஹ்! இது குறித்து உங்கள் கருத்துக்களை அகமியத்துக்கு அனுப்பி வையுங்கள்.
இது குறித்த தங்களின் கருத்தை அருகில் உள்ள கருத்துக் கணிப்புக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்துங்கள்.
இது குறித்த தங்களின் கருத்தை அருகில் உள்ள கருத்துக் கணிப்புக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்துங்கள்.
ஆக்கபூர்வமான கருத்துக்கள் மீண்டும் இது குறித்து எமக்கு கிடைக்கும் கருத்துக்களை மக்களுக்கு அறியத்தரும் போது பிரசுரிப்போம்.
இது குறித்த உங்கள் கருத்துக்களை (பெயர், முகவரியுடன் தெரியப்படுத்தவும்- நீங்கள் விரும்பாவிடின் உங்கள் விபரங்கள் ரகசியாமாக பாதுகாக்கப்படும்.) அனுப்பி வைக்கவும்.
எமது மின்னஞ்சல் :
ahamiyamweb@gmail.com, ahamiyamsl@gmail.com