Tuesday, August 30

நோன்புப் பெருநாள் தத்துவங்கள்

நோன்புப் பெருநாள் விசேட கட்டுரை. படிக்கத் தவறாதீர்கள்!
-ஸைபுல் இதா-
அன்புச் சகோதரா, 
அஸ்ஸலாமு அலைக்கும். 
நோன்புப் பெருநாள் தினமான இன்று நீ காலையில் எழுந்து குளித்து உடல் சுத்தம் செய்தாய்.

புதிய உடை உடுத்துப் புதுப் பொலிவுடனும், மன மகிழ்ச்சியுடனும் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயலுக்கு வந்துள்ளாய்.

இன்னும் சில நிமிடங்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றவுள்ளாய். தொழுகையில் முதல் “றக்அத்” தில் எழுதரமும், இரண்டாம் “றக்அத்” தில் ஐந்து தரமும் “தக்பீர்” சொல்லவுள்ளாய். 

நீ இன்று ஏன் குளிக்க வேண்டும்? ஏன் புதிய ஆடை உடுக்க வேண்டும்? ஐங்கால தொழுகைக்கு மாறாக ஏன் தொழ வேண்டும்?

இக் கேள்விகளுக்கான விடை உனக்குத் தெரியுமா? இவற்றுக்கான எதார்த்தம் உனக்குப் புரியுமா? எதார்த்தம் புரியாமல் நீ எதைச் செய்தாலும் அது அர்த்தமற்ற வெறும் செயலாகிவிடுமல்லவா? வெறும் செயல் வீணானது. வீணானது தண்டனைக்குரியது. 
நீ செய்கின்ற “ஷரீஅத்” தின் எந்தவொறு செயலுக்காயினும் அதை தரீகத், ஹகீகத், மஃரீபத் என்ற முப்பெரும் உரைகற்களில் உரைத்துப்பார்.

இஸ்லாமிய ஷரிஅத்தில் கூறப்பட்ட எந்த ஒரு செயலாயினும் அர்த்தமற்றதாக இல்லை. நீ இதைப் புரியாமல் இருக்கலாம். அதற்காக அச் செயல் அர்த்தமற்றதென்று எண்ணிக் கொள்ளாதே!

இதோ பெருநாளுடன் தொடர்புடைய ஒருசில தத்துவங்களை உனக்கு சொல்லிக் காட்டுகின்றேன். கவனத்தில் கொண்டு செயல்படு. 

புதிய உடை எப்படி இருக்க வேண்டும்
பெருநாள் தினம் ஆண்களும், பெண்களும் புதிய உடை உடுப்பது “ஸூன்னத்” ஆன அமல் ஆகும். புதிய உடை என்பதன் கருத்து அது கழுவப்படாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும். புதிய உடையாயினும் அது ஒரு தரமேனும் கழுவப்பட்டால் அது பழைய உடையாகவே கனிக்கப்படும். அதை உடுத்தல் “ஸூன்னத்” ஆகாது. 

நோன்புப் பெருநாள் உடை வெண்ணிறமானதாயும், ஹஜ்ஜுப் பெருநாள் உடை பல நிறமானதாயும் இருப்பது விரும்பத்தக்கது. 

ஒரு ஆண் பெருநாள் தினம் உடுக்கும் சாரம், பெனியன், தொப்பி, றவ்ஷர், அல்லது ஒரு பெண் உடுக்கும் சாரி, சல்வார், சட்டை, உள்ளாடை எல்லாமே புதியதாக இருத்தல் மிகவும் விசேடமானதாகும். 

முடியாத பட்சத்தில் மேற்கண்ட உடைகளில் ஒன்றாவது புதியதாக இருந்தால் புதிய உடை உடுத்த ‘ஸூன்னத்” உண்டாகிவிடும். 

புதிய உடையின் தத்துவம் 
ஒரு மனிதன் புனித ரமழான் மாதம் நோன்பு நோற்றும், ஐங்கால தொழுகை, தறாவீக், வித்று, மற்றும் தஹஜ்ஜத், ழுஹா போன்ற “ஸுன்னத்” ஆன தொழுகைகளை தொழுதும், உணவு உறக்கம் குறைத்தும், கோள் சொல்லுதல், புறம் பேசுதல், கோபம் கொள்ளுதல், பெருமை பேசுதல், பொய் சொல்லுதல், 

போன்ற தீக்குணங்களை விட்டும், விஷேடமாக “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு முழுமையாக மாறு செய்தும் பேணுதலாக இருந்து வந்தால் அவனின் “கல்பு” என்ற மனதிலுள்ள பாவக்கறை அகன்று அதைச் சூழ்ந்திருந்த இருள் விலகி அது சுத்தம் பெற்று தூய்மையாகிவிடுகிறது.

அவன் புதிய மனிதனாகவும், புனிதமானவனாகவும், ஆகிவிடுகிறான். றமழான் மாதம் அவன் மேற்கொண்ட நல்லமல்கள் அவனை புனிதனாக்கிவிட்டன. 

இதுவெளிக்கண்களுக்கு தெரியாத ஒரு மறைவான உண்மையாதலால் இவ்வுண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகவே பெருநாள் தினம் புதிய ஆடை “ஸுன்னத்” ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெண்ணிற ஆடை விஷேடமாக்கப்பட்டுள்ளது. 

றமழான் மாதம் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க உண்டு, “பர்ளு” கடமையான, “ஸுன்னத்” ஆன தொழுகைகள் தொழாமல் பாவமான காரியங்களில் நேரத்தை கழித்தும், “நப்ஸ்” மனவெழுச்சிக்கு உடன் பட்டு மனம்போன போக்கில் றமழான் மாதத்தை கழித்தவனுக்கு பெருநாளுமில்லை, அவனுக்கு புதிய ஆடை “ஸுன்னத்” ஆகவும் மாட்டாது. 

அவன் மற்றவர்கள் போல் புதிய உடை உடுத்து பள்ளிவாசலுக்கு வந்தாலும்கூட அவன் ஒரு நடிகனும், ஏமாற்றுப் பேர்வழியுமே ஆவான். 

பெருநாள் தொழுகை 
நோன்புப் பெருநாள் தொழுகை “ஸலாது ஈதில் பித்ர்” என்றும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை “ஸலாது ஈதில் அழ்ஹா” என்றும் சொல்லப்படும். 

எந்தப் பெருநாள் தொழுகையாயினும், இரண்டு ரக்அத்துக்களேயாகும். முதலாவது “றக்அத்” தில் தொழுகைக்கான “நிய்யத்” வைத்து முதலாவது சொல்லுகின்ற “அல்லாஹு அக்பர்” தக்பீறதுத் தஹ்ரீம்” என்று சொல்லப்படும். 

இது தவிர பெருநாள் தொழுகையில் தொடர்ந்து ஏழு தரம் “அல்லாஹு அக்பர்” சொல்ல வேண்டும். முதலாவதாகச் சொன்ன “தக்பீறதுத்தஹ்ரீம்” என்பதை ஏழில் ஒன்றாக கணக்கெடுக்கக் கூடாது. ஆயினும் இந்த “தக்பீர்” சொன்னபின் “வஜ்ஜஹ்து” ஓதுவது சுன்னத் ஆகும். 

“வஜ்ஜஹ்து” சுன்னத்தாக்கப்படாத தொழுகை ஜனாஸா தொழுகை மட்டுமேயாகும். 

ஏழு “தக்பீர்” களில் ஒவ்வொரு “தக்பீர்” சொன்ன பிறகும் “ஸுப்ஹால்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹு அக்பர்” என்று ஒரு தரமும் சொல்வது “ஸுன்னத்” ஆகும். 

“வலாஹவ்ல வலா குவ்வத இல்லா வில்லாஹில் அலிய்யில் அளீம்” என்று சொல்வது “ஸுன்னத்” இல்லை. ஒருவர் சொன்னால் அவரின் தொழுகை “பாதில்” வீணாகிவிடாது. 

ஏழுதரம் “அல்லாஹு அக்பர்” என்று சொல்வதும் சொல்லும்போது கையை உயர்த்தி கட்டிக் கொள்வதும் “ஸுன்னத் ஆகும்” 

பள்ளிவாயலில் பேஷ் இமாம்கள் ஏழுதரம் கைவிட்டுக் கட்டவும் என்று சொல்லிக் கொடுப்பதை தவறாகப் புரிந்து கொள்பவர்கள் ஒவ்வொறு “தக்பீர்” சொல்லும் போதும் நெஞ்சிலுள்ள கையை கீழே தொங்க விட்டு மீண்டும் கட்டிக் கொள்கிறார்கள். 

இது தவறு. கையை கீழே தொங்கவிடாமல் கை நெஞ்சில் இருந்தவாறே மீண்டும் உயர்த்திக் கட்டிக் கொண்டால் போதும். கையை கீழே தொங்கவிட்டுக் கட்டுவதால் சிலநேரம் தொடரான மூன்று செயல் ஏற்பட்டு தொழுகை “பாதில்” வீணாகிவிடுவதற்கும் வாய்ப்புண்டு. 

முதலாவது “றக்அத்” தில் இரண்டாவது “ஸுஜுத்” முடிந்த பின் “கியாம்” நிலைக்கு வரும்போது சொல்லுகின்ற “அல்லாஹு அக்பர்” என்ற “தக்பீர்” சொன்னபின் முதலாவது “றக்அத்” தில் செய்தது போல் செய்து கொள்ள வேண்டும். 

“தக்பீர்” சொல்லி நெஞ்சில் கைகட்டும் போது “ஷாபிஈ” மத்ஹபில் கூறப்பட்ட முறைப்படி கட்டிக் கொள்ள வேண்டும் 

“அத்தஹிய்யாத்” ஓதும் போது விரல் ஆட்டுவதையும், நெஞ்சுக்கு மேல் கழுத்துக்கு கீழ் கை கட்டுவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கெள்ள வேண்டும். 

நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்த பின், பெருநாளுக்குரிய “தக்பீர்” சொல்வது “ஸுன்னத்” இல்லை. ஆயினும் அன்பியாக்கள், அவ்லியாக்கள் பேரில் “பாதிஹா” ஓதி “துஆ” ஓதுவது விரும்பத்தக்கது. 

ஏழும் ஐந்தும் எதற்கு 
பெருநாள் தொழுகையில் முதலாவது “ரக்அத்தில்” ஏழு தரமும், இரண்டாவது “றக்அத்”தில் ஐந்து தரமும் “தக்பீர்” அல்லாஹு அக்பர் சொல்வது “ஷரீஅத்” சட்டமாயிருந்தாலும் இது அர்த்தமற்ற வெறும் செயலில்லை. இதற்கு ஆன்மிகப் பின்னணி உண்டு. அதை அறிந்து செயல்பட வேண்டும். 

“நப்ஸ்” ஏழு வகைப்படும். அவை முறையே அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா, முத்மயின்னா, றாழியா, மர்ழிய்யா, காமிலா என்று சொல்லப்படும். 

ஒரு மனிதனுக்கு “நப்ஸ்” என்பது ஒன்றுதான். அது ஏழு அல்ல, ஆயினும் அதிலேற்படுகின்ற குணங்கள், தன்மைகள் செயல்பாடுகளைக் கவனித்து அது மேற்கண்ட பல பெயர்களால் அழைக்கப்படும். 

உதாரணமாக முசம்மில் என்பவனை எடுத்துக் கொள்வோம்! அவன் ஆள் ஒருவன்தான். ஆயினும் அவனில் பேராசை இருக்கும்போது நாய் என்றும், காம இச்சை இருக்கும்போது பன்றி என்றும், கொப்பு விட்டு கொப்பு தாவும் குணமிருக்கும்போது குரங்கு என்றும் மடமை இருக்கும்போது கழுதை என்றும் சொல்வது போன்று 

நப்ஸ் அம்மாறா 
இவ் ஏழு வகையிலும் மிகக் கீழ்த்தரமானதும், மிகக் கெட்டதும் “நப்ஸ் அம்மாறா” மட்டும்தான். இதைவிட மோசமான “நப்ஸ்” இல்லவே இல்லை. 

இவ்வகை “நப்ஸ்” உள்ள மனிதனிடம் பெருமை, பொறாமை, எரிச்சல், வஞ்சகம்,கோபம், பதவி மோகம், பேராசை, பெண்ணாசை, “அனானிய்யத்” அகந்தை, முகத்துதி போன்ற தீக்குங்களும், மதுபானமருந்துதல், திருடுதல், விபச்சாரம் செய்தல், சூதாடுதல், பொய் சொல்லுதல், புறம் பேசுதல் ஒருவனை அடுத்துக் கெடுத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களும் நிறைந்து காணப்படும், அதே நேரம் நற்குணங்கள் சிலதும், நல்ல பழக்கவழக்கங்கள் சிறிதளவும் இருக்கலாம். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த “நப்ஸ்” பற்றிக் கூறும்போது “இன்னன் நப்ஸ லஅம்மாறதும் பிஸ்ஸுயி” நப்ஸ் என்பது தீமை கொண்டு அதிகம் ஏவிக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளான். 

அதாவது “நப்ஸ்” அம்மாறாவில் உள்ளவன் அதிகம் பாவம் செய்து கொண்டேயிருப்பான். பாவம் செய்வதில் அவனுக்கு அதிக இன்பம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் அவனுக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வராது. எந்த ஒரு பயங்கரப் பாவம் செய்தாலும் அது பற்றி வருந்தவோ கவலைப்படவோ மாட்டான். மூக்கில் மெய்த்த கொசுவைத் தட்டி விடுவது போன்ற சிறிய விடயமாகவே பாவங்கள் செய்வதை அவன் நினைப்பான். 

இவன் “நப்ஸ் அம்மாறா” வில் உள்ளவன். இவன் நிலை இவ்வாறுதான் இருக்கும். இவன் இந்நிலையில் இருக்கும்வரை அல்லாஹ்வை விட்டும் பல மில்லியன் கிலோ மீட்டர் தூரப்பட்டவனாகவே இருப்பான். 

சமூகம் கூட இவனைக் கணக்கெடுக்காது. இவன் இந்நிலையிலேயே இருந்து மரணித்தானாயின் இவன் வெற்றிபெறமாட்டான். இவனுக்கு பேரின்பமும் இல்லை. ஆன்மீக உயர்வும் இல்லை. இவன் இப்லீசின் கூட்டாளி. ஷெய்தானின் செயலாளன். இவன் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியற்றவன். அவனின் திருமுகக் காட்சியும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையும் இவனுக்கு கிடைக்காது. 

இவன் தரீகா- ஆன்மீக வழிநடந்தும், ஸுபிஸ ஞானம் கற்றும் படிப்படியாக முன்னேற முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் அருளாளனும், அன்புடையோனுமாவான். 

நப்ஸ் லவ்வாமா 
இரண்டாவது “நப்ஸ் லவ்வாமா” என்று சொல்லப்படும். இந்த “நப்ஸ்” முந்தின “நப்ஸ் அம்மாறா” போல் இகழப்பட்டதும், இழிவானதாயினும் அதைவிட ஒருபடி சிறந்ததேயாகும். 

இந்த “நப்ஸ்” உள்ளவர்களிடம் தீக்குணங்களும், தீய பழக்கவழக்கங்களும் இருப்பதுபோல் நற்குங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் ஓரளவு இருக்கும். இந்த “நப்ஸ்” உள்ளவன் பாவம் செய்தாலும் கூட அதை நினைத்து வருந்துவான். கவலைப்படுவான், வேதனைப்படுவான், கண்ணீர் வடித்து பாவமன்னிப்புக் கேட்பான். 

“லவ்வாமா” என்ற சொல்லுக்கு இழிந்துரைக்கூடியது என்று அர்த்தம் வரும். இதற்கு இவ்வாறு பெயர் வரக் காரணமென்னவெனில் இந்த “நப்ஸ்” உள்ளவனை இது இழிந்துரைக்கும். அதாவது அவன் ஒருபாவம் செய்துவிட்டால் அவனை இழிந்துரைக்கும், கண்டிக்கும், நீ பாவியாகிவிட்டாய், துரோகியாவிட்டாய், நீ மனிதனா? அல்லாஹ் உன்னை எவ்வாறு விரும்புவான்? அவனின் அருள் உனக்கு எவ்வாறு கிடைக்கப் போகிறது என்று தண்டிக்கும். கண்டிக்கும் ஆனால் முந்தின “நப்ஸ்” அம்மாறா” இது போன்றதல்ல. 

அது இந்த “நப்ஸ்” உள்ளவன் ஒரு பாவம் செய்தால் அவனிடம் நீ ஒரு பாவம்தானே செய்தாய். உலகில் உன்னைவிடப் அதிக பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். பயப்படாதே! என்று அவனை பாவம் செய்யத் தூண்டிக் கொண்டேயிருக்கும். 

இந்த இரண்டாம் “நப்ஸ்” உள்ளவன் கூட வெற்றி பெற முடியாது. இவனும் முந்தினவன் போல் அல்லாஹ்விட்டும் பல மில்லியன் கிலோ மீட்டர் தூரப்பட்டவனாகவே இருப்பான். இவனும் அல்லாஹ்வின் சமூகம் தகுதியற்றவனேதான். ஆயினும் “நப்ஸ் அம்மாறா” வில் உள்ளவனைவிட இவன் நல்லவனே! 

இவனும் “தரீகா” வழி நடந்தும், ஸுபிச ஞானம் பெற்றும் படிப்படியாக முன்னேற முயற்சிக்க வேண்டும். 

நப்ஸ் முல்ஹிமா. 
இந்த “நப்ஸ்” முந்தின இரண்டு நப்ஸ்களைவிட சிறந்ததாயினும், இதுகூட இகழப்பட்டதேயாகும். இந்த “நப்ஸ்” உள்ளவனிடம் நற்குணங்களும், நல்ல பழக்கவழக்கங்களும் நிறைய இருக்கும். அதே நேரம் தீய குணங்களும், தீய பழக்கவழக்கங்களும் இல்லாமல்போகாது. இவனும் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியற்றவன்தான். இவனும் தரீக்கா வழி நடந்தும், ஸுபிஸ ஞானம் கற்றும் முழு மனிதனாக முயற்சிக்க வேண்டும். 

“முல்ஹிமா” என்ற சொல்லுக்கு நன்மை தீமையை பிரித்துணர்தக் கூடியது. என்று பொருள் வரும் அதாவது இந்த “நப்ஸ்” உள்ளவனுக்கு எது நன்மை எது தீமை என்பது தெரியும். ஆயினும் அவன் நன்மையும் செய்வான் தீமையும் செய்வான். தனது தவறுக்காக வருந்திக் கண்ணீரும் வடிப்பான். இவனும் அல்லாஹ்வின் சமூகம் செல்வது கடினமே! இவனும் அல்லாஹ்வை விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலேயே இருப்பான். 

நப்ஸ் முத்மயின்னா
முத்மயின்னா என்ற சொல்லுக்கு சாந்தி பெற்றது என்று அர்த்தம் வரும். இது முந்தின மூன்றையும் விட எல்லாவகையிலும் சிறந்ததேயாகும். இந்த “நப்ஸ்” உள்ளவன் நற்குணங்களும் நல்ல பலக்கவழங்கங்களும் நிறைந்தவனாக இருப்பான். 

இவனுக்கு பாவம் வேம்புபோல் கசப்பாக இருக்கும். எதிர்பாராமல் ஒரு சிறிய பாவம் நிகழ்ந்துவிட்டால் கூட கதறியழுவான், கண்ணீர் வடிப்பான், மனமொடிந்து செயலிழந்து போவான். இவன் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியுள்ளவன். இவன் சுவர்க்கவாதி. 

இந்த “நப்ஸ்” உள்ளவனையே அல்லாஹ் தன்பக்கம் வருமாறு அழைக்கின்றான். முந்தின மூன்று “நப்ஸ்” உள்ளவர்களை எந்த இடத்திலும் அவன் அழைக்கவில்லை. 

“யா அய்யது ஹன்னப்சுல் முத்மயின்னதுர்ஜியீ இலாறப்பிகி றாழியதம் மர்ழிய்யஹ்” முத்மயின்னாவான நப்சே! நீ அவனையும் அவன் உன்னையும் பொருந்திக்கொண்ட நிலையில் நீ உனது இரட்சகன் பக்கம் மீழு. 

இந்த நாலாவது படியில் இருந்து இதையடுத்துள்ள றாழியா, மர்ழியா,காமிலா என்ற படிகளையும் அடைந்து “பனா” என்ற முக்தி நிலை பெறுவதே மனிதனின் குறிக்கோளாக இருக்கவேண்டும். 

ஒருவருக்கு “விலாயத்” என்ற ஒலித்தனம் கிடைப்பதாயின் அவர் குறைந்தபட்சம் “முத்மயின்னா” என்ற நாலாவது படியை அடைந்தவராக இருக்க வேண்டும். இவர்தான் “காமில்” முழுமையானவர் என்று சொல்லப்படுவதற்கும் தகுதியுடையவராவார். 

இந்த நாலாவது படியை அடையாத எவருக்கும் “விலாயத்” கிடைக்க மாட்டாது. அவர் “தர்பிய்யத்” தனது “முரீது” ஞான சிஷ்யனை ஆன்மீக ஒளியுணர்வு வழங்கி வளர்க்கும் “ஷெய்கு” ஞானகுருவாக இருக்க முடியாது. போலிகள் ஜாக்கிரதை. 

பெருநாள் தொழுகையில் முதலாவது “றக்அத்”தில் ஏழு “தக்பீர்” சொல்லும் போது ஏழு நப்ஸ்களையும் அல்லாஹூ அக்பர் என்ற வாள் கொண்டு வெட்டிக் கொன்றொழிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாவது “றக்அத்”தில் ஐந்து தக்பீர் சொல்லும்போது பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகின்ற பார்த்தறிதல், கேட்டறிதல், தொட்டறிதல், நுகர்ந்தறிதல், சுவைத்தறிதல் யாவையும் அழித்தொழிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். 

அதாவது ஐந்து பூதங்களுமில்லை, ஐந்து புலன்களுமில்லை, பொதுவாக அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வரல் வேண்டும். “குல்லுஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹூ” 
كل شىء هالك إلا وجهه 

சகல வஸ்துக்களும் நேற்றும் அழிந்தவை, தற்போதும் அழிந்து கொண்டிருப்பவை, நாளையும் அழிபவை, அதாவது சகல வஸ்துக்களும் “மாழீ” சென்ற காலம், “முஸ்தக்பில்” எதிர்காலம், “ஹால்” நிகழ்காலம் ஆகிய முக்காலத்திலும் இல்லாதவை என்ற முடிவுக்கு வந்து அல்லாஹவை மட்டும் தரிபடுத்த வேண்டும். 

“ஆலம்” படைப்புக்கள் யாவும் “கயால்” பொய் என்றும், அல்லாஹ் மட்டுமே உண்மையானவன் என்றும் நம்ப வேண்டும். “ஹாலிகுன்” என்ற சொல் முக்காலத்திற்கும் பொருத்தமான “இஸ்முல் பாஇல்” என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

அன்புச் சகோதரா! 
நீ ஸூபிஸ ஞானம் பெற்று “தரீக்கா” வழி செல்லாதவரை உண்மையை விளங்கிக் கொள்ளவோ, அதை அடைந்து கொள்ளவோ முடியாது. “ஷரீஅத்” வழி நடப்பது எவ்வாறு அவசியமோ “தரீகா” வழி நடப்பதும் அவ்வாறுதான் என்பதைப் புரிந்து செயல்படு. 

உனது “நப்ஸ்” என்ற விரோதியைக் கொன்றோழி “ஷரீஅத்” வழி நடக்கமாலும், “தரீகா” வழி நடக்காமலும் இறைஞானம் கற்றுக் கொள்ளாமலும் குருவின் கையைப் பிடித்து கரைசேரலாம் என்ற நம்பிக்கையை விடு. அல்லாஹ் அளவில் விரைந்து செல். 
ففروا إلى الله 

அல்லாஹ் ஒரு போதும் படைப்பாக மாறுவதில்லை. அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை, உறவினரும் யாருமில்லை. தனித்தோன், தன் நிகரற்றோன். 

ஆக்கம் 
ஸைபுல் இதா.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK