Sunday, August 21

அகிலத்திற்கு ஆன்மீக ஒளிபரப்பிய மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.

எதிர்வரும் 24.08.2011 புதன் கிழமை இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இடம் பெறவுள்ள "முப்பெரும் நாதாக்களின் கந்தூரி" தினத்தை முன்னிட்டு இவ்விசேட கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. 

Sufi Khazarath (Kayalpattinam)
 எம்.ஐ.எம்.அன்ஸார் (ஆசிரியர்)

“ஓ! ஈமான் கொண்டவர்களே! அல்லாவுக்கு வழிப்படுங்கள். இன்னும் றஸூலுக்கும் உங்களில் நின்றுமுள்ள காரிய கர்த்தாகளுக்கும் (தீனைப் பரப்பக் கூடிய உலமாக்க்ளுக்கும் , அவுலியாக்களுக்கும்) வழிப்படுங்கள்” (4:59) என்றும் கூறியுள்ளான், (தப்ஸீர் கபீர், 3-வது பாகம், 243-வது பக்கம்- தப்ஸீர் ரூஹூல்பயான், 1வது பாகம் 624 வது பக்கம்) 

பூவுலக மக்களின் புன்னிய வாழ்க்கைக்கு வழிகாட்டி அவர்களை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி செய்திட அல்லாஹ் நபீமார்களை இந்த வையகத்திற்கு அருளாய் அனுப்பினான். 

பேரருளாப் பிறந்த பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையோடு நபீமார்கள் என்ற தொடர் முற்றுப் பெறவும், தொடர்ந்து ஆன்மிகத்தையும், ஏகத்துவத்தையும் இவ்வவனி மக்களுக்கு அள்ளி வழங்கிட அல்லாஹ் அவ்லியாக்களை அனுப்பினான். 
இந்த இறைநேசச் செல்வர்களில் அதிகமானோர் தென்னிந்தியாவில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இவ்வாறு தோன்றி அவ்லியாக்களில் அதிகமானோர் நமது இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்து எத்தனையோ கறைபடிந்த உள்ளங்களில் போடப்பட்டிருந்த திரைகளைக் கிழித்தெரிந்து அவ்விதயங்களில் தீன் எனும் சுடரை ஏற்றி வைத்தார்கள். 

இவ்வாறு இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் மௌலானா மௌலவீ அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். 

இப்பெருமகான் அவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு கடைசிக் குழந்தையாய் பிறந்தார்கள். 

காயல்பட்டணத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்த இவர்கள் ஒரு காபிழாக வரவேண்டும் என்ற பெற்றொரின் விருப்பப்படி ஒரு ஹிப்லு மத்ரஸாவில் சேர்க்கப்பட்டார்கள். எட்டு ஜுஸூக்களை மன்னமிட்ட இவர்களுக்கு ஒர் ஆலிமாக வரவேண்டும் என்ற ஆசை உள்ளத்தை உருத்திக்கொண்டிருந்தது. 

இக்காலகட்டத்திலே காயல்பட்டணம் வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாஉல் ஹக் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக தம்பெற்றோறை தனது விருப்பத்திற்கு இசையச் செய்தார்கள். 

இப்பெரியாரிடம் பலரும் வந்து “பைஅத்” பெற்றுச் செல்வதைக் கண்ட ஷெய்கு அப்துல் காதிர் சூபி ஹஸ்ரத் அவர்கள் தமக்கும் “பைஅத்” தரும்படி கேட்டபோது “மகனே! நீ என்னை விட உயர்ந்த ஒரு இறைநேசரின் கலீபாவாக உள்ளீர் காலம் வரும்வரை பொருத்திரு! எனக்கூறி “ழியாஉல் ஹக்” ஸூபி ஹஸ்ரத் அவர்கள் ஊர் திரும்பி விட்டார்கள். 

பின்னர் சென்னை ஜமாலிய்யஹ் அறபுக் கல்லூரியில் சிறிது காலம் ஓதிவிட்டு அங்கிருந்து இறைநேசர் அப்துல் கரீம் ஹஸ்ரத் அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய பொதக்குடி அந்-நூறுல் முஹம்மத்திய்யஹ் அறபுக் கல்லூரியில் சேர்ந்து கற்றுவந்தார்கள். 

அக்கல்லூரியிலேதான் தனது ஆருயிர் நண்பரான இலங்கையின் கிழக்குமாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த “வெள்ளி ஆலிம்” என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அகமது மீரான் (வலீ) அவர்களை சந்தித்தார்கள். 

இவ்விருவரும் சேர்ந்து அந்த மத்ரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும்போது ஹைதரபாத் ஞானமாமேதை, இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பொதக்குடி நூறுல் முகம்மதிய்யஹ் மத்ரஸாவில் சில நாற்கள் தங்கிய சங்கைக்குரிய ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி (றஹ்) அவர்கள் அக்கல்லுரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல நூறு மாணாக்கருள் மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்ளையும் அவரது ஆருயிர் தோழர் மகான் அகமது மீரான் (வெள்ளி ஆலிம்) ஆகிய இருவரையும் கல்வி கற்று முடிந்தபின் தன்னை ஹைதராபாத்தில் வந்து சந்திக்கும் படி கூறினார்கள். 

இஸ்லாமியக் கல்வியைப் பூர்த்தி செய்த இவ்விரு மேதைகளும் ஷெய்கனா அவர்களின் அழைப்பை ஏற்று ஹைதரபாத் செல்லும் முகமாக “நாங்கள் தங்களை சந்திக்க வரலாமா” என்று அனுமதி கேட்டு ஒரு கடிதத்தை மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களுக்கு அனுப்பினார்கள். அதற்கு சங்கைக்குரிய மகான் அவர்களிடமிருந்து “ எனது கதவு தங்களுக்கா திறந்துள்ளது” என்று பதில் வந்தது. 

மகான் அவர்களின் அழைப்பினை ஏற்று தோழர்கள் இருவரும் ஹைதரபாத் சென்று மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களிடம் இறைஞானத்தைக் கற்றுத் தேர்ந்த்துடன் இவர்கள் இருவரும் “பைஅத்” செய்து கிலாபத்தும் வழங்கி மகான் அவர்கள் தனது கலீபாக்ளை இறை பணிக்காக அனுப்பிவைத்தார்கள். 

இவ்விரு மகான்களுக்கும் ஷெய்கின் வஸிய்யத் “நீங்கள் இஸ்லாமிய பணி புரியவேண்டும்” என்பதாக இருந்தது. 

ஊர் திரும்பிய இரு நாதாக்களில் மகான் அகமது மீரான் வெள்ளி ஆலிம் (றஹ்) அவர்கள் தனது தாயகமான இலங்கை திரும்பி அவர்களின் சொந்த இடமான கிழக்குமாகாணத்தில் பல ஊர்களிலும் சிறிய மையங்ளை நிறுவி இறை போதனையிலும் கல்வத்து இருப்பதுமாக வாழ்கையை கழித்தார்கள். 

காயல்பட்டணம் திரும்பிய மகான் அப்துல் காதிர் ஸூபி நாயகம் அவர்கள் 1930ம் ஆண்டு அப்துல்லாஹ் நாச்சியார் என்பவரை மணம் முடித்தார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அவர்களின் ஷெய்கு சங்கைக்குரிய ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் திருமணத்தின்போது “உனக்கு இன்னுமொரு மாலை காத்திருக்கின்றது” என்று கூறி திருமணத்தில் கலந்து விட்டுச் சென்றார்கள் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாருக்கும் அப்போது புரியவில்லை. 

சில ஆண்டுகளில் ஒர் ஆண்குழந்தையை பெற்றெடுத்த அப்துல்லாஹ் நாச்சியார் நோய் காரணமாக இறையடி சேர்ந்தார்கள். அப்பொழுது மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் தனது மனைவியின் சகோதரி மருதும் பாத்திமா நாச்சியாரை திருமணம் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்கள் கூறியதன் அர்த்தம் புரிந்தது. 

தனக்கு இன்னும் ஒரு திருமணம் நிகழும் என்பதையே முதல் திருமணத்தில் கலந்து கொண்ட தனது ஷெய்கு ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

இத்திருமணத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார்கள். இவர்கள் தனது குடும்பதினரின் தொழிலை கவனிப்பதற்காக முதலில் சென்னைக்கு அனுப்பப்பட்டார்கள். மகான் ஸூபி ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் அந்த வருடம் வியாபாரத்தில் பாரிய நஸ்டம் ஏற்படவே மீண்டும் தனது குடும்ப வணிகத்தை செய்ய காயல்பட்டணம் திரும்பினார்கள். 

காயல்பட்டணத்தில் அவர்களின் பொறுப்பில் வியாபாரம் பாரிய நஸ்டமடைந்தது, இவ்வாறு சில வருடங்கள் தாங்களின் வர்த்தகத்தில் பாரிய நஸ்டம் தொடர்ச்சியாக ஏற்படவே, மகான் அவர்கள் தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்களின் வஸிய்யத்தை ஞாபகப்படுத்தி இறை பணிபுரிவதற்காக தனது ஆருயிர் நண்பரைத் தேடி இலங்கை திரு நாட்டிக்கு பயணமானார்கள்.

இலங்கையை 1946ம் ஆண்டு வந்தடைந்த மகான் அவர்கள் தனது நண்பரைத் தேடிச் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் “கிரான்குளம்” எனும் ஊரில் சுமார் ஒன்றரை மாதங்கள் தனது நண்பர் மகான் வெள்ளி ஆலிம் அவர்களுடன் சேர்ந்து கல்வத்திலிருந்தார்கள். 

பின்னர் இலங்கையில் கொழும்பு, கிழக்கில் மட்டக்களப்பில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் பல பகுதிகளில் இறைபணி புரிந்தார்கள். 

மீண்டும் தாயகம் திரும்பிய மகான் அவர்கள் காயல்பட்டணம் சென்று “கொடிப்பாளையம்” எனும் இடத்தில் சில காலம் கல்வத்து இருந்தார்கள். 

பின்னர் 1949 ம் ஆண்டு இலங்கை திரும்பிய மகான் அவர்கள் கொழும்பு-11 இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சம்மாங்கோட்டைப் பள்ளிவாயலில் பேஷ் இமாமாக பணியாற்றினார்கள். 

கட்டுப்பட்ட வாழ்கை தனக்குப் பிடிக்காததால் அங்கிருந்து வெளியேறி இலங்கையிலும் இந்தியாவிலும் மக்களுக்கு ஞானப்பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டார்கள். இதற்காக ஹிஸ்புல்லாஹ் சபை – சூபி மன்ஸில் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆன்மீகப் பணி புரிந்தார்கள். 

இறைஞானத் தாகம் கொண்ட எத்தனையோ உள்ளங்களில் மெஞ்ஞான தீபத்தை ஏற்றியதோடு இஸ்லாத்தில் குலப்பம் செய்தவர்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்தார்கள். இதற்காக பல தத்துவ நூல்களை எழுதி வெளியிட்டார்கள். 

ஞானதீபம், அஸ்ஸுறூக், அகமியக்கண்ணாடி, அல்ஹக் போன்ற நூல்கள் அவற்றில் சிலவாகும். 

1979ம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் காத்தான்குடியில் சலாஹூத்தீன் ஹாஜியார் அவர்களின் வீட்டில் சங்கைக்குரிய மகான் அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

அப்போது காத்தான்குடியில் திருக்கலிமாவுக்கு சரியான, உண்மையான பொரு ளையும் கூறி இறைவனின் அகமிய நிலைகள் பற்றியும் கண்மணி நபீ (ஸல்) அவர்களின் அகமியம் பற்றியும் எடுத்துப் பேசிய அன்றைய அறிஞர் ஈழத்தின் சொற்கொண்டல் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் கருத்துக்களின் உண்மைதன்மையை அறியவிரும்பிய மகானின் முரீதுகள் (சீடர்கள்) அன்றைய நாள் இஷா தொழுகையின் பின்னர் அறிஞர் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களினால் பகிரங்கமாக விளக்கப்பட்டிருந்த விடயங்களின் நிலை பற்றி கேட்டறிய மகான் அவர்களிடம் கேள்விகளை தொடுத்தனர். 

அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அறிஞர் பேசிய கருத்துக்கள் சரியன பதில் பகிர்ந்த மகான் அவர்கள், அறிஞர் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி கூறியபடி இல்லையெனில் வேறு எப்படி இறைவன் இருந்தான்? என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் கேள்வி கேட்டு அசரவைத்தார்கள். 

அத்துடன் நின்றுவிடாமல், அறிஞர் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்கு இந்த இறைஞானக் கருத்துக்களை பேசியதற்காக “முர்தத்” என்ற பத்வாவை காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமா வழங்கிய போது அதனை எதிர்த்து 1980ம் ஆண்டு ஒரு கட்டுரையை இலங்கையின் தேசிய பத்திரிகையான தினகரனுக்கு எழுதிய மகான் அவர்கள்,

அதில் "பத்வாவை வழங்கியவர்கள் ஒரு உண்மை முஸ்லிமை முர்தத் என்று கூறியுள்ளதால் அவர்கள் அனைவரும் முர்ததாகிவிட்டார்கள் என்றும் அவர்கள் அனைவரும் இஸ்லாமிய சட்டப்படி தனது மனைவியரை மீள் திருமணம் செய்யவேண்டும் என்றும் அல்லாவிடில் இறைவனளவில் அவர்கள் “ஸிzனா” எனும் விபச்சாரத்திலேயே இருப்பார்கள்" என்றும் எழுதியிருந்தார்கள். 

அது மட்டுமின்றி இந்தப் பத்வாவை வழங்கியவர்களின் நிலை வானத்தை பார்த்து உமிழ்ந்தவர்களின் நிலை போன்றதென்றும் அவர்களின் பத்வா அவர்களுக்கே திரும்பி விட்டது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

மட்டுமல்லாமல் சங்கைகுரிய ஷெய்குனா, காதிமுல் கவ்மி, மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்கு தனது கிலாபத்தை வழங்கியது மட்டுமல்லாமல் அதனை தனது கைப்பட எழுதி அதில் தனது முத்திரையையும் இட்டுக் கொடுத்தார்கள். 

இவ்வாறு புனித இஸ்லாத்தினை தனக்குப்பின் எடுத்துச் செல்லவும் தனது தரீக்காவை பாதுகாக்கவும் காத்தான்குடி, கண்டி உட்பட இலங்கையில் தனது கலீபாக்களை நியமித்தது மட்டுமின்றி தனது தாய்நாடான தமிழ் நாட்டிலும் கலீபாக்கனை நியமணம் செய்து இஸ்லாத்தின் தூய வடிவத்தினை காப்பாற்ற வழிசெய்தார்கள். 

எந்தவொரு தனி மனிதனுக்கோ, கூட்டத்தினருக்கோ அஞ்சாமல் வீரத்தோடு கொள்கைப்போர் புரிந்த கொள்கைச் சிங்கம், குணக்குன்று எங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் மதிப்புக்குமுரிய அல் ஆரிபுபில்லாஹ், முஹிப்புர் றசூல், அஷ் ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் (காயல்பட்டணம்) 

அவர்கள் புனித ரமழான் பிறை 24ல் வெள்ளிக்கிழமை (16-07-1982) சுப்ஹுக்கு சற்று முன்னர் இலங்கையில் வைத்து நோன்பு நோற்ற நிலையிலேயே இறைவனின் அழைப்பினை ஏற்று இம்மை வாழ்வை முடித்துக் கொண்டு மறு உலக வாழ்வினைத் தொடங்கினார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) 

அன்னாரின் புனித அடகஸ்தளம் இலங்கையில் கொழும்பு-10 குப்பியாவத்தை மையவாடியில் அமையப்பெற்று பொலிவுடன் இலங்கி வருகின்றது. 

அன்னாரின் 30வது வருடாந்த கந்தூரி வைபவம் எதிர்வரும் 24.08.2011 (ரமழான் பிறை 24) புதன் கிழமை பிற்பகல் வியாழன் இரவு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வு இலங்கையில் அன்னார் சமாதியுற்றிருக்கும் கொழும்பு-10 குப்பியாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயலிலும், கிழக்கு மாகாணத்திற்கான பிரதான கந்தூரி வைபவம் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலும் நடைபெற உள்ளது.

ஆக்கம் : எம்.ஐ.எம் அன்ஸார் (ஆசிரியர்)

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK