Tuesday, August 2

பூத்துக்குலுங்கும் புனித றமழான் (பகுதி-2)

அதிசங்கைக்குரிய ஞானபிதா மௌலவீ. அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் 2002 ம் ஆண்டு நவம்பர் மாத இதழ் அல்மிஷ்காத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை 
ஈழத்தின் சொற்கொண்டல், ஞானமகான்
அஷ்ஷெய்க் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி

அன்புச் சகோதரனே! 
நீ இதுவரை நோன்பின் வகைகளை அறிந்து கொண்டாயல்லவா? நீ இதுகாலவரை எந்தவகை நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை நினைத்துப் பார்! அல்லது இவ்வருடம் எந்தவகை நோன்பு நீ நோற்பதற்கு நீ யோசிக்கிறாய்? மூன்றாம் வகை நோன்பு ஆரம்ப்ப் படியிலுள்ள உனக்கு கஸ்டமாயிருந்தாலும் இரண்டாம் வகை நோன்பையாவது நோற்றுக்கொள்! 

உனது உள்ளம் வஞ்சகம், பொறாமை, பெருமை போன்ற அசூசியில் புரண்டாதாயிருக்க, நீ பசியோடு தாகத்தோடு மட்டும் நேரத்தை கழிப்பதில் என்ன பலனைக் காணுவாய்? 

எனவே “ஸம்மு” (தடுத்தல்) என்ற சொல் நோன்பை முறிப்பவைகளான உண்ணல், பருகல்,சேர்கை செய்தல் போன்றவற்றிலிருந்து நீ உன்னைத் தடுத்துக் கொள்வதையும், வெளியுறுப்புக்களாலும் உள்ளுறுப்பான மனதாலும் பாவம் செய்யாமல் அவைகளைத் தடுத்துக் கொள்வதையும் மனதில் அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு நினைவு வராமல் அதைத் தடுப்பதையும் குறிக்கக்கூடிய பொதுவான சொல்லாகும். 
நோன்பின் நோக்கமென்ன? 
நோன்பு நோற்குமுனக்கு ஒரு நோக்கமிருக்க வேண்டும். அந்நோக்கம் நோன்பு விதிக்கப்பட்டதற்கான நோக்கமாகவுமிருக்க வேண்டும் நோன்பு நோற்பதால் பகல் நேரத்தில் உண்ணாமல் பருகாமல் இருப்பதன் மூலம் நீயும், நோன்பு நோற்பவர்களும் அல்லாவுக்கு மிச்சப்படுத்திக் கொடுக்கிறீர்கள் என்று கருதி விடாதே! 

உலக முஸ்லீம்கள் ஒரு வருடத்தில் முற்பது பகல் உண்ணாமல், பருகாமல் நோன்பு வைப்பது அவனுக்கு மிச்சப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல! இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டபின் நோன்பின் நோக்கமென்ன என்பதை ஆராய்ந்துபார்! 

நோக்கமென்னவெனில் நீ உனது மனவெழுச்சிக்காலாகாமலும் உனது சிற்றின்ப காம உணர்வுக்கடிமையாகாமலும் இருப்பதே நோன்பின் பிரதான நோக்கமாகும். 

மனவெழுச்சியும், காம உணர்வும் எதனாலேற்படுகின்றதென்பது உனக்குத் தெரியுமா? மிதமிஞ்சி உண்பதும், மிதமிஞ்சி பருகுவதும் காம உணர்வைத் தூண்டுபவைகளாகும். 

மிதமிஞ்சிய உணவின் மூலம் உனதுள்ளம் இருளடைகின்றது. பலவீனமாகிறது ஷைத்தானின் ஆட்சி அதனால் அதிகப்படுகின்றது காம உணர்வு தானாகப் பிறக்கின்றது. பொண்ணாசை உருவாகின்றது இதனால் பொன்னாசையும் ஏற்படுகின்றது. 

“உனது உடலில் எங்கெல்லாம் இரத்தம் ஒடுகிறதோ அங்கெல்லாம் ஷைத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றான் எனவே, பசித்திருப்பதன் மூலம் அவன் ஒடுமிடங்களை நெருக்கமாக்கிவையுங்கள்” 

என்று நபீ (ஸல்) கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழி மூலம் பசித்திருப்பதானால் ஷைத்தானின் ஆட்சிப்பலம் குறைந்து விடுகின்றதென்பதும் அதனால் தீய எண்ணங்களும், தீச்செயல்களும் முற்றாக நின்று அல்லது குறைந்து விடுகின்றனதென்பதும் தெளிவாகிறது. 

இவ்வுண்மையை உனது வாழ்கையில் அனுபவரீதியாக கண்டிருப்பாயென நினைக்கிறேன். பசியென்றால் என்னவென்று கூடத்தெரியாதவர்கள் மனிதர்களில் இருக்கின்றார்களல்லவா? இவர்கள் பசித்திருப்பதனால் ஏற்படும் பயனை அறிந்திருப்பார்களா? அனுபவித்தருப்பார்களா? 

சோதரா, உன் நிலை என்ன? நீ பசித்திருந்த்துண்டா? பசித்திருப்பதாலுண்டாகும் நன்மையை நீ அறிந்திருக்கின்றாயா? பசியிலுள்ள பேரின்பதை நீ அனுபவித்திருக்கின்றாயா? மிதமிஞ்சி உணவருந்தும் நிலை உன்னிடமிருந்து மாறி, அளவோடு உண்டு அளவோடு பருகும் நிலை ஏற்படாதவரை நீ பசித்திருக்கவோ பசியின் இன்பத்தை காணவோ முடியாது. 

ஞானவழி நடக்கும் நீ பசித்திருப்பதை ஒரு வணக்கமாக கருதி வாழ்! ஞான வழி நடப்பவர்களுக்கு கூறப்படுகின்ற உபதேசங்களில் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற உபதேசம் மிக முக்கியமானதென்பதை அறிந்து கொள். 

எனவே! நோன்பின் நோக்கமென்னவென்பதை முதலில் தெரிந்துதான் அந்த நோக்கத்திற்கேற்ப நோன்பு நோற்க வேண்டும். வழமைக்கு மாறாக மிதமிஞ்சிய உணவை நிறுத்தி பசித்திருந்து அதன் மூலம் உன்னிலுள்ள ஷைத்தானின் தன்மைகளைக் குறைத்து மனவெழுச்சியையும் காம உணர்வையும் அழித்து விடுவதுதான் நோன்பின் நோக்கம் என்பதை அறிந்து அமலில் இறங்கு! 

சகோதரா, நோன்பு மாதத்தில் நீ எந்த அளவு உண்னுகின்றாய் எந்த அளவு பருகுகின்றாய் என்பதை யோசித்துப்பார்! சஹர் செய்யும் போது நப்ஸூக்கு வழிப்பட்டு சாதாரண காலத்தில் உண்பதை விட மிக ருசியாகவும், அதிகமாகவும் உண்ணுகிறாய்! மேலும் பகல் நேரம் பசியேற்படாமலிகுக்கும் நோக்கத்துடன் உண்ணுகிறாய்! 

ஒரு பகல் உண்ணாமலிருப்பதையிட்டு அதற்காக நீ உற்கொள்ளும் உணவு பல நாட்களுக்குப் போதுமானதாயிருக்கிறது. அதேபோல் நோன்பு திறந்த பின்பும் மிதமிஞ்சி உண்ணுகின்றாய், இந்நிலையில் நோக்கின்ற நோன்பு எங்ஙனம் உண்மையான நோன்பாகப் போகின்றது? 

ஏனெனில் உனது நோன்பில் நோன்பின் பிரதான நோக்கமே இல்லாமலிருக்கின்றது. இரண்டு நேரங்களிலும் மிதமிஞ்சி உண்டு. நோன்பு நோற்கின்ற நீ பகல் நேரத்தில் பசியை அனுபவிக்கிறாயா? இல்லையா? நிச்சயமாக நீ பசியை அனுபவிக்கவே இல்லை! 

அவ்வாறு நீ நோற்ற நோன்பில் நோன்பின் நோக்கமே உண்டாகவில்லை! எனவே நப்ஸுக்கு மாறு செய்யாமல் ருசியாகவும் மிதமிஞ்சியும் சாப்பிட்டு நோற்கப்படுகின்ற நோன்பு பெயரளவில் நோன்பாயிருந்தாலும் அது உண்மையான நோன்பே அல்ல. 

அவ்வாறு நோன்பு நோற்றவர் ஸாயிமீன் (நோன்பாளிகள்) கூட்டத்தில் சேரவுமாட்டார். நீ வழமையாக நோன்பு நோற்றுவந்தவனாயிருந்தால் எந்தவகையில் எந்த அடிப்படையில் நோன்பு நோற்று வந்திருக்கின்றாய் என்பதை சற்று எண்ணிப்பார்! 

நீ நோற்றுள்ள பலநூறு நோன்புகளில் எத்தனை நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கு என்பதை சற்று எண்ணிப்பார். நீ நோற்றுள்ள பல நூறு நோன்புகளில் எத்தனை நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கு மென்பதை யோசித்துப்பார்! இவ்வருடம் எப்படி நோற்பதற்கு யோசிக்கின்றாய்? 

நோன்பாளிகளின் இருவகை மகிழ்ச்சி 
அன்பு சகோதரா! “நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷமுண்டு. ஒன்று நோன்பு திறக்கும் பொழுது மற்றது தனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது” என்பதாக நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீயறிவாயா? இவ்விரு சந்தோசங்களும் எவை? அவை எதனால் ஏற்படுகின்றன என்பதை சற்று நீ அறிந்து கொண்டால்தான் நோன்பு என்கிற வணக்கத்துக்குள் பிரவேசிக்கும் உனக்கு உதவியாக இருக்கும். 

போலி உலமாக்களென்று நான் ஏற்கனவே கூறினேனே? அவர்கள் இதற்கு பற்பல விளக்கங்களை கூறுவார்களாயினும் அவ்விளக்கம் பொருத்தமற்றதும் புரட்டலுள்ளதுமாகும். 

அப்போலிகள் இதற்குச் சொல்லுகிற விளக்கமென்னவெனில் நோன்பு திறக்கும் பொழுது ஈத்தம்பழம், கஞ்சி, வடை, சம்பல் மற்றும் ருசி மிக்க உணவுப் பொருட்களைச் சேர்த்து அவைகளை முன்னே வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவகை சந்தோசம் ஏற்படுகிறதல்லவா? அதுதான் ஹதீஸில் கூறப்பட்ட சந்தோசம் என்கிறார்கள். 

அன்புச் சகோதரா! 
இவ்வகைச் சந்தோசத்தைப் பற்றியா நமது நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்? அவர்களே வெறும் நீரிலும் ஈத்தம் பழத்திலும் நோன்பு திறந்திருக்கிறார்கள் அதுதனா நோன்பு திறப்பதற்கு சிறந்த தென்று அவர்களே கூறியிருக்கின்றார்கள். 

அதுவல்ல சகோதரா சந்தோஷம்! நீர் சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும்வரை எத்தனையோ விடயங்களை விட்டு நடந்தாயல்லவா? உறுப்புக்களால் பாவம் செய்வதை விட்டாய் அதேபோல் உள்ளத்தினால் பாவம் செய்வதையும் அல்லாஹ் அல்லாத வேறதையும் மனதால் நினைப்பதையும் விட்டு நடந்தாய்! இது பெரும் சாதனைதான். இச்சாதனை மூலம் நீ பெரிய அமல் ஒன்றினைச் செய்தவனாகின்றாய். 

அதன் விபரமென்னவெனில் “அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங்கொள்ளுங்கள்” என்று நபீ (ஸல்) கூறியுள்ளார்களல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்கும் நீ அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணம் கொண்டவனாகின்றாய். 

“அஸ் ஸமத்” என்று அவனுக்கொரு திருநாமம் உண்டு. “சகலதை விட்டும் தேவையற்றவன்” என்பது அதன் பொருள். உரிய முறையில் நோன்பு நோற்கும் பொழுது இத்திருநாமத்தின் தன்மை உன்னிலுமெற்படுகின்றதல்லவா? 

உரிய முறையில் நோன்பு நோற்று அதைப் பூர்த்தி செய்து திறப்பதற்காக இருக்கும் பொழுது இத்தகைய சிறப்பான தன்னை உன்னிலேற்பட்டதை நீ நினைக்கையில் உனக்கு சந்தோஷம் ஏற்படுமா இல்லையா? மேற்குறித்த ஹதீஸில் இந்தச் சந்தோஷத்தைப் பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்பதை உணர்ந்து கொள்! 

நோன்பாளிக்கு ஏற்படுகின்ற இரண்டாவது சந்தோஷம் என்னவென்றால், நீ நோன்பு நோற்று வந்தவனாயிருந்தால் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பது நிச்சயமானது. மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு விசுவாசிகள் அனைவருக்கும் கிடைப்பது நிச்சயமாயினும் நோன்பாளிகளுக்குக் கிடைக்கின்ற சந்திப்பு அதிவிஷேறமானதாயிருக்கும். 

இது குறித்துத்தான் நபிகள் (ஸல்) அவர்கள் நோன்பாளி இறைவனைச் சந்திக்கும் பொழுது அவனுக்கு சந்தோஷமேற்படுகின்றதென்றும் குறிப்பிட்டார்கள். நீ உன்மையான முறைப்படி நோன்பு நோற்றால்தான் இவ்விரு சந்தோஷங்களையும் அனுபவிப்பாய்!

தொடர்ச்சி நாளை...

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK