அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்கலாசாலை மாணவரும், சங்கைக்குரிய மௌலவீ. இப்றாஹீம் நத்வீ அவர்களின் புதல்வருமான அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் 25.04.2010 அன்று புனித தொண்டர் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேளையில் அகால மரணமடைந்த போது எழுதப்பட்ட கவிதை.
இவர்கள் அதிசங்கைக்குரிய ஷெய்கனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் முரீது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
![]() |
மர்ஹூம் அஸ்அத் பர்மான் பாஸ் |
அன்பே பர்மான்!,
நான் பள்ளியிலிருந்து
அப்போதுதான்
வீட்டுக்கு வந்தேன்
அங்கே நீயில்லை
தொண்டர் பணிக்காக
நீ போனதாக அன்னை சொன்னாள்.
அப்போது !
டெலிபோன் ஒலித்தது
நீ மரத்திலிருந்து
விழுந்து விட்டாயென்று
சொல்லப்பட்டது.
ஓடி வந்தேன் மகனே...
அங்கு ஆடி வந்தேன்
உன்னைக் காணவில்லை
உனது நண்பர்கள் உன்னை
வைத்தியசாலைக்கு
எடுத்துச் சென்றதாக
சொல்லப்பட்டது
அங்கும் ஓடிவந்தேன்
ஆ... என் இதயம் துடித்தது
அங்கு நான் கண்ட காட்சி..
நீ படுத்திருந்தாய்
உன் மூக்கிலும் வாயிலும்
கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன
வைத்தியர்கள்
சிகிச்சையில் ஈடுபட்டிருந்தனர்
உன் பூ முகத்தை
என்னால் பார்க்க முடியவில்லை!
என் பார்வை மேலே உயர்ந்தது
அங்கே.... அந்தச் சுவரில்
இயசுநாதரின்
அருள் மொழிகள்
எழுதப்பட்டிருந்தன
“மனித கலங்காதே!
உனக்கு எதுதான் சொந்தம்?
நீ எதைக் கொண்டு வந்தாய்?
நீ எதைத்தான் கொண்டு செல்வாய்?
எல்லாம் இறை செயல்!
மின்சாரம் தாக்கியது போலானேன்
உன் முகத்தை நோக்கினேன்
உன் அருகில் நின்று
பர்மான், பர்மான்..!!!.
என்றழைத்தேன்!
நீ அசையவில்லை!
பர்மான் என்று ஒருதரம்
அழைத்தால் போதும்
என்ன வாப்பா என்று
ஓடி வருவாயே...
இப்போது ஏன் மௌனமானாய்?
ஆம்...இப்போது!
உன் சத்தம் ஓய்ந்து விட்டது
நீ மௌத்தாகி விட்டாய்!
பொய்யுலகைப் பிரிந்து
மெய்யுலகை அடைந்து விட்டாய்..
என்று புரிந்து கொண்டேன்
என்னால் தாங்க முடியாத
கவலை ஏற்பட்டது!
உடன் ஏசுபிரானின் மொழிகள்
இறை செயலைப் பொருந்திக்கொள்!
என்று சொல்லிக் கொண்டிருந்தன
நான் ஒரு மார்க்க ஞானி..
அதனால் பொருந்தினேன்.
பொறுமை செய்தேன்.
என் நாவு
“இன்னாலில்லாஹ்” என்ற
இறைமறை வசனத்தை
ஓதியது!
என் இதய தீபமே,
நீ மறைந்தாலும்
எனது இதயத்தில்
ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாய்
உனது பிரிவு
உலகமும் பந்த பாசமும்
“பொய்யானவை” என்பதை
உணர்த்தி விட்டது
உன்னை எப்படி மறப்பேன்?
உன்னை என்றுதான் மறப்பேன்
உன்னன்னை உணர்விழந்தாள்
சகோதரன் செயலிழந்தான்
சகோதரி துடிதுடித்தாள்
உறவினர் நண்பர்கள்
கூடி நின்று அழுதார்கள்
நான் என்ன செய்வேன்?
கண்கள் நீரைச் சொரிந்தன
ஏகத்துவம் சுமந்தேன் .
பத்துவயதில்
உன் சகோதரன் தகீ
மறைந்ததுபோல்
பதினாறு வயதில்
நீ மறைந்தாய்
நான் வெந்த புண்ணில்
வேல் பாய்ந்தவனானேன்
இறை தத்துவத்தை
நான் என்னென்று சொல்வேன்?
நீ விளையாட்டுப் பிள்ளை என்று
எல்லோரும் சொன்னார்கள்
ஆனால் நீ..........
ஓயெலிலே சித்தியெய்து
அதிசயம் செய்தாய்
ஓயெல் முடிவு வந்து
ஒரு வாரம் சென்ற பின்
உலகைப் பிரிந்து எம்மை
அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டாய்.!!
நீ வீட்டு வேலைகள் செய்தது குறைவு
பொது வேலைகள் செய்தது நிறைவு
“என்னைப் பற்றி வெளியே
கேட்டுப் பாருங்களென்று
உம்மாவிடம் அடிக்கடி சொல்வாய்”
ஆம், நீ மரணித்த பின்னர்தான்
உன்னைப் பற்றி,
உன் நற்பண்புகள் பற்றி,
உன் திறமைகள் பற்றி,
உன் உதவிகள் பற்றி
எல்லோரும் சொல்கின்றனர்.
உன் புத்தகங்கள்
என்னைப் பார்த்துப் புன்னகைக்கின்றன
அவற்றில் உன் பூ முகத்தைக் காண்கிறேன்
உன் உடைகளில்
உன் வாசத்தை நுகர்கின்றேன்
வீட்டில் பல இடங்களிலும்
உன் பெயரை எழுதி வைத்துள்ளாய்
அவற்றைப் பார்க்கும் போதெல்லாம்
வாப்பா! வாப்பா என்று
நீ அழைப்பதைக் கேட்கின்றேன்
உனது நண்பர்களில்
நான் உன்னையே பார்க்கின்றேன்.
காலையில் அரச பாடசாலைக்குச் செல்வாய்
மாலையில் அறபுக் கலாபீடம் செல்வாய்
இலௌகீகத்தையும், ஆன்மீகத்தையும்
தொடராகப் பயின்றாய்
நான் உன்க்காக
சொத்துக்களைச் சேகரிக்கவில்லை
ஆனால்.............
ஆனால் பல்லாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க
நூல்களையே சேகரித்தேன்
நீ எதிர்காலத்தில் “ஆலிம்”
ஒரு மார்க்க அறிஞனாய்
வரவேண்டுமென்பதற்காக!
நான் கற்றதை நீ கற்பதற்காக!
நான் பார்த்ததை நீ பார்ப்பதற்காக!
நான் பேசியதை நீ பேசுவதற்காக!
நான் எழுதியதை நீ எழுதுவதற்காக!
ஆனால் என்னை வரவேற்க
நீ அங்கிருக்க வேண்டுமென்பதனாலோ
இறைவன் உன்னை எடுத்துக்கொண்டான்!
வான் மழை தினமும் பெய்வதில்லை
ஆனால்....... உன் பிரிவு மழை
என்னிதயத்தில்
பெய்து கொண்டேயுள்ளது
நீ பலரின் கனவில் தோன்றி
சுபச் செய்திகள சொல்கிறாய்
எனது கனவில்
ஏன் வராமலிருக்கிறாய்?
இப்போதெல்லாம் எனக்கு
உலக வாழ்கை கசக்கிறது
உன் பிரிவால்
என் எதிரம் மாசடைந்து போனது
என்னுடல் உக்கிவிட்டது
உணர்ச்சிகள் செயலற்றுவிட்டன
நான் நடமாடும் மையித்தானேன்
நீ மெய்யுலகில்
உயிருடன் வாழ்கிறாய்
நான் பொய்யுலகில்
பிணமாய் வாழ்கிறேன்.
உனது மண்ணறைக்கு
நான் வந்து சலாம் சொல்கிறேன்
நீ பதில் சொல்கிறாய்
ஆனால்...........
செத்துப்போன என் செவிகளுக்கு
கேட்பதில்லை
இன்ஷா அல்லாஹ்
நானும் ஒரு நாள்
உன்னிடம் வருவேன்
அதற்கு முதல் கனவுலகில்
என்னிடம் வா!
நித்திய உலகில்
உனது சகோதரனுடன்
நீ வாழ்!
வல்ல இறைவன்
“ஜன்னதுல் பிர்தவ்ஸ்”
சொர்க்கத்தில்
உன்னை வாழவைப்பானாக!
ஆமின்.
கவிதையாக்கம் - ஈழத்து ஹஸ்ஸான், கவித்திலகம்
மௌலவீ. இப்றாஹீம் நத்வீ
இக்கவிதை கவிஞர் அவர்களால் கையெழுத்தாக எழுதப்பட்டு மர்ஹூம் பர்மான் அவர்களின் ஞாபகார்த்தமாக கூடியிருந்த ஆத்மீக சகோதரர்களுக்கு வழங்கப்பட்ட பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
இக்கவிதை கவிஞர் அவர்களால் கையெழுத்தாக எழுதப்பட்டு மர்ஹூம் பர்மான் அவர்களின் ஞாபகார்த்தமாக கூடியிருந்த ஆத்மீக சகோதரர்களுக்கு வழங்கப்பட்ட பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.