-மௌலவி அப்துல் மஜீத் றப்பானீ-
அல்ஜாமிஅத்துர் றப்பானிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எம். அப்துல் மஜீத் (றப்பானீ) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களைப்பற்றியும், அவர்களின் கிரந்தமான ‘ஸஹீஹுல் புஹாரீ’யைப்பற்றியும் ஆரம்ப நாளிரவு இஷாத் தொழுகையின் பின்னர் சிறப்புச் சொற்பெருக்காற்றினார். அவரது உரையின் சாரம் வருமாறு:
‘அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை மிகவும் பொறுப்புடன் இவ்வுலகுக்குச் சேகரித்து வழங்கிய இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் கிரந்தமானது, அழ்ழாஹ்வின் திரு வசனங்களுக்கு அடுத்த நிலையில் பெரும் அறிவுப் பொக்கிஷமாக முஸ்லிம் நல்லுலகால் இன்றுவரை போற்றப்படுகின்றது. உலக முடிவு வரைக்கும் அது இவ்வாறு போற்றத்தக்க ஒரு பொக்கிஷப் பேழையாகவே கருதப்படும்.’
‘அப்புனிதமான கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ஹதீஸையும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே அவர்கள் ஆதாரப் பூர்வமாகத் தேடிப் பெற்றார்கள். அவர்கள் செவியேற்கும் ஹதீஸ்களை எந்தவொரு ஏட்டிலும் எழுதாமல் முதலில் அப்படியே அவர்களின் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள்.’
‘கடுமையான இப்பணிக்கு மத்தியில் கடமையான மற்றும் சுன்னத்தான இறைவணக்கங்களையும் அதிகமாகச் செய்யக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்களின் சிறப்புக்களை அறிந்த எகிப்து நாட்டு அறிஞர்கள் அவர்களைத் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் காண வேண்டுமென பெரிதும் அவாக் கொண்டிருந்தார்கள். இமாமவர்களின் ஆயுள் நீடிக்க வேண்டுமென்பதற்காக தமது ஆயுளைக் குறைக்குமாறும் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் அழ்ழாஹ்விடம் பிரார்த்திக்கவும் துணிந்திருந்தார்கள்’
‘தனி மனிதர்களின் இறப்பை விடவும் இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் இறப்பை ஈருலகக் கல்வியின் இறப்பாகவே இஸ்லாமிய உலகம் கருதியிருந்தது. அதற்காகவே அவர்களின் ஆயுள் நீடிக்க வேண்டுமென முஸ்லிம் உலகம் விரும்பியது.’
‘அவர்களின் இப்புனிதமான கிரந்தம் பெரும் சிறப்புக்ளைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவன் தனது கடற்பயணத்தைத் தொடர்ந்தால் அவனது வாகனம் கடலில் ஒருபோதும் மூழ்கிவிட மாட்டாது. மழை இல்லாத கிராமத்தில் இந்தக் கிரந்தத்திலுள்ள நபிமொழிகள் பாராயணம் செய்யப்பட்டால் அங்கே அழ்ழாஹ்வின் அருள் மழை இறக்கப்படும். பஞ்சம், வறுமையுள்ள இடங்களில் இக்கிரந்தம் ஓதப்படும்போது அங்கே அழ்ழாஹ்வின் அருள் பரக்கத் இறங்கும். இவ்வாறான பல சிறப்புக்களும் இக்கிரந்தத்திற்கு இருக்கின்ற காரணத்தினால்தான் நமதூரிலும் பல பள்ளிவாயல்களில் நமது முன்னோர்கள் இதனை உலமாக்களைக் கொண்டு பாராயணம் செய்து வந்தார்கள். எனினும் இப்போது நமது பள்ளிவாயலில் மாத்திரமே வருடாந்தம் இப்புனிதமான புஹாரி ஷரீப் ஓதப்பட்டு வருகின்றது.’
‘இஸ்லாமிய உலகின் பெருமதிப்புக்குரிய ஹதீஸ் கலை மேதையான இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள், நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கனவில் தரிசித்த பின்னர் தமது இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ள விரும்பி அழ்ழாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அழ்ழாஹுத்தஆலாவும் அவர்களின் அப்பிரார்த்தனையை அங்கீகரித்ததால் அவர்கள் இம்மண்ணகத்தின் வாழ்வை நீத்தார்கள்.