Friday, March 25

ஹமவோஸ்த் எல்லாம் அவனே.

எல்லாம் அவன் தஜல்லிய்யாத் வெளிப்பாடுகள் 
(அதி சங்கைக்குரிய ஞானபிதா அல்ஹாஜ்.அப்துர் ரவூப் மிஸ்பாஹி அவர்கள் 2003ம் ஆண்டு வெளியான அல்மிஷ்காத் மாத இதழுக்கு எழுதிய கட்டுரை)

'அறிந்துகொள் நிச்சயமாக அவர்கள் (மக்கத்து காபிரீன்கள்) அவர்களின் ரப்பாகிய அல்லாஹ்வை சந்திப்பதில் கடுமையான சந்தேகமுடையவர்கள் ஆவர் அறிந்துகொள் நிச்சயமாக அவன் (அல்லாஹ்) ஒவ்வொறு வஸ்துவையும் சூழ்தவனாய் இருக்கின்றான்'.
(அல் குர்ஆன் சூறத்து ஹாமீம் அஸ்ஸஜதா 54ம் வசனம்)


இவ்வசனத்தின் சுருக்கமான சாராம்சம் என்னவெனில் மக்கத்தில் வாழ்ந்த காபிரீன்கள் ஒருவன் மரணித்தபின் அவன் எழுப்பப்படுவான் என்பதிலும் அவன் செய்த நன்மை தீமைக்கு கூலி வழங்கப்படும் என்பதிலும் கடுமையான சந்தேகமுடையவர்களாக இருந்தார்கள் ஏனெனில் ஒருவன் மரணித்து அவனை எரித்துச் சாம்பலாக்கிய பின் அல்லது அவன் மண்ணில் புதைக்கப்பட்டு அவன் சரீரம் அழிந்து மண்னுடன் மன்னாகியபின் அவனை எழுப்புவதும் அவனுக்கு கூலி வழங்குவதும் எங்ஙனம்? சாத்தியமாகும் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள் சந்தேகத்திருந்தார்கள்

மேற்கூறிய மறைவசனம் ஒரேயொரு வசனம்தான் ஆயினும் அது இரண்டு சொற்றொடர்களில் ஆனாது;


1. அலா இன்னஹும் பீமிர்யத்தின் மின்லிகாயி றப்பிஹிம் “அவர்கள் அல்லாஹ்வைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாயிருக்கின்றார்கள்.

2. அலா இன்னஹு பிகுல்லி ஷையின் முஹீத் “நிச்சயமாக அல்லாஹ்வானவன் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்தவாயிருக்கிறான்”

இரு சொற்றொடரினாலான இவ்வசனம் திருமறை வசனமாகையால் அது அல்லாஹ்வினது கலாம் பேச்சென்றாயிற்று. அல்லாஹ்வின்பேச்சு சாமானிய பேச்சாக இருக்க முடியாது அதில் சொல் வளமும் பொருள் வளமும் நிச்சயமாக நிறைந்திருக்க வேண்டும். இன்றேல் அது அல்லாஹ்வின் பேச்சாயிருக்க முடியாது அல்லாஹ்வின் பேச்சு சொல்வளமும் பொருள் வளமும் மிக்கதென்பது திருமறை ஆதாரத்தினால் தரிபட்டதொன்றாகும். ஆதாரத்தின் சுருக்கம் பின்வருமாறு.

முஹம்மதே! நீங்கள் சொல்லுங்கள் உலகிலுள்ள கடல்கள் அனைத்தையும் மையாக்கி அந்த மையைக் கொண்டு எனது அல்லாஹ்வின் பேச்சுக்குரிய பொருளை எழுதப்பட்டால் அதன் பொருள் முடிந்துவிடாது. ஆனால் மை முடிந்துவிடும் மீண்டும் அதே அளவு மையைக் கொண்டு எழுதினாலும் கூட அந்தமைதான் முடிந்து விடுமேயன்றி பொருள் முடிந்து விடாது



இவ்வாதாரப்படி அல்லாஹ்வுடைய பேச்சின் பொருள் ஆழத்தை இவ்வளவுதான் என்று கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. அல்லாஹ்வின் பேச்சும், மனிதனின் பேச்சும் ஒன்றுக்கொன்று மாறானதேயன்றி வேறானதல்ல. மாறானதென்ற வகையில் மனிதனின்பேச்சு சகல கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாயும், அல்லாஹ்வின் பேச்சு எந்த ஒரு கட்டுப்பாடுட்டுக்கும் உட்படதாததாயிமிருக்கும். அதேபோல் ஒரு மனிதனின் பேச்சுடைய பொருள் ஆழத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் அல்லாஹ்வுடைய பேச்சில் பொருளாளத்தை கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. “கைதுன்” எனும் கட்டுப்பாடும் “ஹத்துன்” எனும் எல்லையும் அவனுக்கு இல்லை அவ்விரு தன்மைகளும் படைப்புகளுக்கு உரியனவாகும். எனவே மேலே கூறிய திருவசனத்திற்கு அளவற்ற பொருளிருக்க வேண்டும் அந்த பொருள் எனும் கடலில் சிலர் மேல் நீச்சலும், சிலர் உள்நீச்சலும் இன்னும் சிலர் எதிர் நீச்சலும் அடிக்கின்றனர். 

ஒவ்வோறுவரும் அவரவர் சக்திக்கும் முக்திக்கும் ஏற்றவாறு நீந்தி விளையாடுகிறார்கள். முன்கூறிய வசனத்தின் பொருளில் உள்நீச்சலோ எதிர் நீச்சலோ அடிக்கமாமல் அதில் மேல்நீச்சலடித்து அவ்வசனத்தின் மேல்வாரியான பொருளை மட்டுமாவது அறிதல் அவசியம். எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற தத்துவத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு மேற்கூறிய திருமறை வசனத்திற்கு இங்கு கூறப்படும் பொருள் அவ்வசனத்தின் நேரடியான வெளிப்படைக் கருத்தையே அன்றி அவ்வசனத்தின் பாத்தின் உள்ரங்கமான அர்த்தமல்ல. எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் என்றால் அதன் உள்ரங்கமான பொருள் எத்துனை தத்துவமுடையதோ! இதுதான் அவ்வசன்தின் வெளிரங்கமான ளாஹிர் அர்த்தம் என்றால் இது அல்லாத வேறந்த ‘ளாஹிர்’ வெளிரங்கமான அர்த்தமும் அதற்கு இல்லை என்பது நிரூபனமாகிவிட்டது அது அவ்வசனத்தின் உள்ரங்கமான பொருள் என்று கொள்வதும் முற்றிலும் பிழையானதேயாகும்.


ஏனெனில் அது உள்ரங்கமான கருத்து என்றால் அதற்கு வெளிரங்கமான வேறோரு கருத்து இருப்பது அவசியம் ஆனால் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தல்லாத வேறொரு பொருள் அவ்வசனத்திற்கு உண்டு என்று சொல்ல எந்தவொரு உலமாக்களும் முன்வரமாட்டார்கள் வரவும் முடியாது. ஆனால் போலி ஆலிம்கள் தனது “ஜஹாலத்” எனும் மடமையின் நிமித்தம் அதற்கு வேறு பொருள் இருக்கின்றதென்று சொல்ல நினைப்பார்கள். ஆனால் கனவு கண்ட ஊமையனின் நிலைதான் அவர்களுக்கு ஏற்படும். பின்னால் வரும் விளக்கம் அவர்களின் முகத்துக்கு கரி பூசி, அவர்களை தலைகுனியச் செய்து, பதில் கூறமுடியாத ஊமையர்களாக்கி விடுமென்பதில் ஐயமில்லை.


ஏகத்துவ ஞானத்தை ஏற்று, எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை நம்பி வாழும் சில உலமாக்கள் மேற்கூறிய திருமறை வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து இருந்தாலும் அது உள்ளரங்கமான கருத்தென்றும், அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் கூறுகிறார்கள், இவர்கள் இவ்வாறு சொன்னாலும் கருத்தை சரி காண்கிறார்கள் என்ற வகையில் அவர்கள் நல்லடியார்களேதான் ஆயினும் அவர்களின் வாதம் பிழையானது என்பது பின்னால் நிரூபிக்கப்படும். மேலும் அந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களில் வேறு சில உலமாக்கள் அதை அறிஞர்கள் மத்தியில் மட்டும்தான் கூறலாமேயன்றி பாமரர் மத்தியில் கூறக்கூடாதென்கிறார்கள். இவர்களும் முந்தியவர்களைப்போல சரி காண்கிறார்கள் என்ற வகையில் நல்லடியார்களேதான். ஆயினும் அவர்களின் வாதமும் பிழையென்று பின்னால் நிரூபிக்கப்படும்.

இவ்விரு சாராரின் வாதமும் அந்த வசனத்தைக் கொண்டே பிழையென்று நிரூபிக்கப்படுகிறது. அவ்விரு சாராரின் வாதமும் நிராகரிக்கப்பட்டாலும் அவ்வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்துண்டு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து குர்ஆனின் கருத்தாகவும் அதிலும் வெளிப்படையான கருத்தாகவும் இருக்க அது குர்ஆனுக்கு முரணானது என்றும் அதைக் கூறியவனும், ஏற்றுக் கொண்டவனும் முர்தத் என்றும் கூறும் ஆலிம்கள் ஆரிபீன்கள் ஞானவான்கள் உடைய தப்ஸீர்களை ஞானம் தெரிந்தவர்களின் உதவியுடன் ஆராய்தல் வேண்டும் மேற்கூறிய திருமறை வசனத்தின் வெளிப்படையான பொருளே எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதாயிருக்க அதற்கு வேறு பொருள் உண்டெனக்கூறி பாமரர்களை ஏமாற்றி வருபவர்கள் அந்த வேறுபொருள் எது என்பதை கூறுவார்களா? பானையில் இல்லாமல் இருக்கும்போது அகப்பையில் வருவது எங்ஙனம்?

எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து அத்திருவசனத்திற்கு உண்டென்பதை ஏற்றுக் கொண்டு அது உள்ரங்கமான அர்த்தம் என்றும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் வாதிடுகிறவர்கள் எந்த தலீல் ஆதாரத்தைக் கொண்டும் அவ்வாறு வாதிட முடியாது ஏனெனில் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிரங்கமான அர்தமாயிருக்க அவ்வர்த்தம் உள்ரங்கமானதென்று வாதிட முடியாது. அது உள்ளரங்கமான அர்த்தம் எனக் கொண்டால் அதற்கு வெளிரங்கமான வேறோர் அர்த்தம் இருக்க வேண்டும் இதுதான் அதன் வெளிரங்கமான அர்த்தம் என்பது உறுதியானதாயிருக்க இதல்லாத வெளிப்படையான அர்த்தம் அதற்கு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. உண்மையான உலமாக்கல் இதல்லாத வெளிரங்கமான வேறு அர்த்தம் அதற்குண்டு என்று கூற முன்வரமாட்டார்கள் இதல்லாத வேறு அர்த்தம் அதற்குண்டென வாதிப்போர் அது என்ன அர்த்தம் என்று விளக்கி வைப்பதற்கு முன்வருவார்களா?

இன்னும் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற அர்த்தம் அவ்வசனத்திற்கு இருந்தாலும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்ற வாதமும் இவ்வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்படுகின்றது. ஏனெனில் மேலேகுறிப்பிட்ட திரு வசனத்தின் மூலம் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை வெளிப்படையாகச் சொன்னவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாருமில்லை. அல்லாஹ் திருமறையில் வெளிப்படையாகக்கூறி கருத்தை வெளியாக்கலாகாது என்று கூறுதல் அல்லாஹ்வுக்கு ஐடியா யோசனை சொல்வதுபோல் இருக்கிறது. 

திருக்குர்ஆன் அரபு மொழியில் இருந்தாலும் அது எல்லாக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருத்தமாக பகிரங்கமாக இறக்கப்பட்டதேயாகும் ஆகையால் அதன் வெளிப்படையான கருத்தை வெளியாக்கலாகாது என்பது அர்த்தமற்ற வாதமேயாகும். அந்தக் கருத்தை அல்லாஹ் குர்ஆனில் வெளியாக்கிச் சொல்லியிருக்கிறானேயன்றி ஜாடையாகவோ மறைத்தோ சொல்லவில்லை. ஜாடையாகச் சொல்லியிருந்தால் அந்தக் கருத்து மேற்கூறிய வசனத்தின் உள்ரங்கமான அர்த்தமாக இருக்கவேண்டும். அது அவ்வாறு இல்லாததினால் ஜாடையாகச் சொல்லப்பட்டதல்ல என்பது தெளிவாகிவிட்டது. மேலும் அந்தக் கருத்து மறைக்கப்படவேண்டியதொன்றாக இருந்தால் குர்ஆனில் அவ்வசனம் இடம்பெற்றிருக்கவே மாட்டாது. எனவே அது அவ்வசனத்தின் உட்கருத்தென்றும் அதை வெளியாக்கலாகாது என்றும் சிலர் விவாதிப்பது மறுக்கப்படவேண்டியதாகும்.

எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதை ஏற்றுக் கொண்ட வேறுசிலர் அதை பாமரர் மத்தியில் வெளியாக்கலாகாது என்றும் வாதிடுகிறார்கள் இவர்களின் வாதமும் அவ்வசனத்தைக் கொண்டே நிராகரிக்கப்படுகிறது. அதாவது அல்குர்ஆனில் உள்ள வசனங்கள் யாவும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இறக்கப்பட்ட பொதுமறை வசனங்களேயன்றி படித்தவர்களுக்கென்று மட்டும் சில வசனமும் பாமரர்களுக்கென்று மட்டும் சில வசனமும் அருளப்படவில்லை திருமறை உலகப் பொதுமறையேயன்றி பணக்காரனுக்கென்று சில ஆலிம்களும் ஏழைகளுக்கென்று சில ஆலிம்களும் இருப்பது போலவே திருமறையும் இருக்கிறதென்று அதை ஒருசிலருக்கு மட்டுமுள்ள மறையாக ஆக்கி விடுவது கூடாது. அது குற்றமுமாகும்.

ஆயத்தின் விளக்கம்
மேற்கூறிய வசனத்தில் இடம்பெற்ற இரண்டு சொற்றொடர்களில் காபிரீன்கள் அல்லாஹ்வைக் கானும் விசயத்தில் சந்தேகமுடையவர்களாவர் என்ற சொற்றொடர் மூலம் அல்லாஹ் அவர்களின் சந்தேகத்தைக்கூறி அவன் சகல வஸ்துவையும் சூழ்ந்தவனாயிருக்கின்றான் என்ற இரண்டாவது சொற்றொடறைக் கொண்டு அவர்களின் சந்தேகத்தை நீக்கியுமுள்ளான் அவர்களின் சந்தேகம் நீங்குவதற்கு இரண்டாவது சொற்றொடர் மறுக்க முடியாத ஆதாரமாகவே இருக்கிறது.

(தொடரும்.)

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK