"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-
அன்பு மகனே!
உனது நப்ஸ்யை நீ நன்மையின்பால் அழைத்தாலும் அது பின்வாங்கிக் கொண்டேயிருக்கும். ஏனெனில் பின்வாங்குவது அதன் சுபாபமாகும். எனவே முதலில் அதற்காக மருந்தை கொடுத்து அதை உன் வசப்படுத்திக்கொள். உனது “நப்ஸ்” உனக்கு வசப்பட்டும் வழிபட்டுமிடுமாயின் நீ பாவமான விடயங்களில் அனுபவித்த இன்பத்தை நன்மையான விடயங்களில் அனுபவித்துப்பார்.
அன்பு மகனே!
உனது உள்ளத்திலுள்ள “ஈமான்” விசுவாசத்திற்கு பல உதாரணங்கள் கூறலாம். அவற்றில் ஒன்றைக்கூறி விபரிக்கின்றேன். கவனமாய்க் கேள்! உனது ஈமான் பச்சைமரம் போன்றது. வெயிலினாலும், வறட்சியினலும் பச்சைமரம் காய்ந்துவிடுவதுபோல் பாவத்தினால் “ஈமான்” என்ற மரத்திற்கு பாவம் நெருப்புப் போன்றது. அல்லது கடுமையான வெயில் போன்றது.
அன்பு மகனே!
உன்மீது கடுமையான அமல்களை நிறைவேற்ற முன்வரும்போது விலக்கப்பட்டவற்றை விட்டு நடந்துகொள். “மக்றூஹ்” விரும்பத்தகாத விடயங்களையும் விட்டுநட. நீ இவற்றை விட்டு நடந்தால் மற்றும் பல நற்கிரிகைகள் செய்வதற்கு அல்லாஹ் உனக்கு உதவி செய்வான்.
மார்க்கத்தில் “முபாஹ்” ஆகுமென்று சொல்லப்பட்டவற்றை விட்டு நட. ஏனெனில் ஆகுமாக்கப்பட்டவற்றை செய்தால்கூட ஏன் செய்தாய் என்று கேட்கப்படுவாய். “விலக்கப்பட்டவை தண்டனைக்குரியவை, ஆகுமாக்கப்பட்டவை கேள்விக்குரியவை” என்று இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்விபரத்தை ஒரு உதாரணம் மூலம் அறிந்துகொள். விலக்கப்பட்டதற்கு உதாரணம் திருடுதல்போன்று, அதைச் செய்தால் தண்டனை கிடைக்கும். ஆகுமாக்கப்பட்டதற்கு உதாரணம் அவசியமின்றிக் குளித்தல், தேனீர் குடித்தல் போன்று இதைச் செய்தால் தண்டனை கிடைக்காது. ஆயினும் ஏன் குளித்தாய்? ஏன் தேனீர் குடித்தாய் என்ற கேள்வி நிச்சயமாக உண்டு. எனவே கேள்விக்குரிய விடயத்தையும் மனிதன் செய்யாமல் நன்மை தரக்கூடிய விடயத்தை மாத்திரமே செய்தல் வேண்டும்.
நீ இவ்வாறு வாழ்ந்தால் அல்லாஹ் எல்லவிடயத்திலும் உனக்கு அருள்செய்வான். அதிக நன்மையை உன்மீது சொறிவான்.
அன்பு மகனே!
உனது நப்ஸ் கெட்டதைச் செய்யுமாறு மட்டுமே உன்னைத் தூண்டிவிடும் என்று நினைக்காதே! அது நற்கிரியை புரியுமாறும் உன்னைத் தூண்டும். சிந்தனைக்கு சில உதாரணங்கள் தருகின்றேன். படித்தறிந்து கொள்! செவியேற்றுச் செயல்படு.
ஒருவன் தன்மீது கடமையான “ஹஜ்” வணக்கத்தை முடித்துவிட்டான் “ஸூன்னத்” மேலதிகமாக “ஹஜ்” செய்யநாடி பயணத்திற்கு ஆயத்தமாகிறான் அவன் பணக்காரன். அவனை வழியனுப்பிவைக்க மக்கள் அவன் வீடு நோக்கிப் படையெடுக்கின்றனர்.
நீ அவனிடம் சென்று நீங்கள் இப்போது செய்யப்போவது ஸுன்னத்தான் வணக்கமல்லவா? உங்களின் பக்கத்து விட்டவர்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் தவிக்கிறார்கள். நீங்கள் இந்நேரம் ஸுன்னத்தான் வணக்கத்திற்கு செலவிடவுள்ள பணத்தை அவர்களுக்கு கொடுத்துதவலாமல்லவா? என்று சொன்னால் அவன் உன் சொல்லுக்கு செவிசாய்க்க மாட்டான். அப்பணத்தை நன்கொடையாகக் கொடுப்பதைவிட அதைக் கொண்டு ஹஜ் வணக்கம் செய்யவே விரும்புவான்.
இதற்குக் காரணம் என்னவென்று உனக்குப் புரிகிறதா? இதோ சொல்கிறேன் கேள்!
ஹஜ் வணக்கம் என்பது பகிரங்கமாகப் பலரும் அறியும் வகையில் செய்யப்படுகின்ற ஒரு அமலேயன்றி யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் செய்யப்படுகின்ற அமல் அல்ல. ஏழைகளுக்கு உதவுதல் என்பது ஹஜ் வணக்கம் போன்றதல்ல. இதை யாருக்கும் தெரியாமல் இரகசியாகச் செய்ய முடியும்.
ஒரு மனிதனின் “நப்ஸ்” புகழையும், பெருமையையும், முகஸ்துதியையும் விரும்பும் தன்மையுள்ளது. இவை அதன் உணவுகள், ஊட்டச்சத்துக்கள் போன்றவையாகும்.
எனவே, “நப்ஸ்” உடைய கூற்றின்படி அதற்கு வழிபட்டுச் செயற்படுகின்ற ஒருவன் எந்த வணக்கத்தில் புகழும், பெருமையும் பிறர் பாராட்டும் கிடைக்கிறதோ அதையே விரும்புவான்.
இந்த அடிப்படையில் அவன் ஸுன்னத்தான ஹஜ் வணக்கமாயினும் அதில் புகழும், பெருமையும், பிறர் பாராட்டும் கிடைப்பதால் ஏழைகளுக்கு உதவிசெய்வதைவிட அதையே பெரிதும் விரும்புவான்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஸுன்னத்தான ஹஜ் வணக்கம் செய்யுமாறு அவனைத் தூண்டியது அவனின் “நப்ஸ்” மனவெழுச்சியேயன்றி வேறல்லை.
ஆகையால், “நப்ஸ்” என்பது தீயதைக்கொண்டு மட்டும் மனிதனைத் தூண்டாது புகழ், பெருமை, முகத்துதி போன்றவற்றைப் பின்னனியிற் கொண்டும் அது தூண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அன்பு மகனே!
உனது “நப்ஸ்” கேட்டதைச் செய்யுமாறு மட்டுமே உன்னைத் தூண்டிவிடுமென்று நினைக்காதே! அது நற்கிரியை புரியுமாறும் உன்னைத் தூண்டுமென்று கூறி ஹஜ் வணக்கம் பற்றி ஒர் உதாரணமும் சொன்னேன்.
உனது நப்ஸ் புகழ், பெருமை போன்ற தீக்குணங்களை பின்னணியில் வைத்துக் கொண்டு நல்லதைச் செய்யுமாறு உன்னைத் தூண்டிவிடும் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
ஒருவன் உன்னிடம் தனியாக வந்து கல்வி வளர்ச்சிக்காகவோ, பொதுநல சேவைக்காகவோ உதவிகேட்டால் அவனுக்கு ஒரு சிறு தொகை கொடுத்து அனுப்பிவைக்கிறாய். ஆனால், இன்னொருவன் பல செல்வந்தர்களுடனும், உயர் பதவியுள்ளவர்களுடனும் உன்னிடம் வந்து உதவி கேட்டால் அல்லது நீ கொடுக்கும் தொகை பத்திரிகையில் வெளிவரும் என்று உன்னிடம் சொல்லப்பட்டால் அவனுக்கு பெரிய தொகை கொடுத்து அனுப்பிவைக்கிறாய்.
நீ ஒரு நல்ல விடயத்துக்காக பெரிய தொகை கொடுத்தாலும் அவ்வாறு கொடுக்குமாறு உன்னைத் தூண்டியது உனது “நப்ஸ்” அன்றி வேறில்லை. அது புகழையும், முகத்துதியையும் பின்னணியில் வைத்துக் கொண்டு நன்மை செய்யுமாறு உன்னைத் தூண்டியிருக்கிறது.
இதற்கு இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன்,
பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் ஐந்து நிமிடம் பேசுவது ஒரு வணக்கம்தான், இரவில் தனித்திருந்து அல்லாஹ்வை தியானிப்பதும் வணக்கம்தான். இவ்விரு வணக்கங்களிலும் உனது மனதுக்கு எது விருப்பமானது என்று சொல்! தனிமையில் ஐந்து நிமிடம் தியானம் செய்வதைவிட மக்கள் மத்தியில் பேசுவதையே உனது மனம் விரும்பும். இதற்கு காரணம் இதில் புகழும், பெருமையும் இருப்பதேயாகும். இது கொண்டு உன்னைத் தூண்டியது உனது நப்ஸ் அன்றிவெறெது ?
எனவே, நற்கிரியையாயினும் அதை மனவெழுச்சிக்கு வழிபட்டுச் செய்யாதே! எவ்வணக்கமாயினும் அதை உனது றூஹ் பரிசுத்த ஆன்மாவை முன்னொடியாகக் கொண்டும். அதன் தூண்டுதலில் பேரிலும் செய்.
ஒரு பெரியார் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
திருமணம் செய்ய வேண்டுமென்று எனது “நப்ஸ்” விரும்பியது. அந்நேரம் நான் பள்ளிவாயலில் இருந்தேன். எனக்கு விருப்பம் ஏற்பட்ட மறுகணம் பள்ளிவாயலில் “மிஹ்றாப்” தொழுகை நடத்துமிடம் வெடித்தது. அதனுள் இருந்து முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கச் செருப்பொன்று வெளியானது. பயந்தேன், சிந்தித்தேன். ஒருகணம் என்னை மறந்து நின்றேன். இதுதான் நீ திருமணம் செய்யவுள்ள பெண்ணின் செருப்பு என்றொரு சத்தம் என் காதைத்துளைத்தது. அவ்வளவுதான் என்மனதிலிருந்த திருமண ஆசை ஒடிந்து சுக்குநுறாயிற்று. திருமணம் செய்வது ஒரு வணக்கமாயினும் அதைச் செய்யுமாறு தூண்டியது “நப்ஸ்” எனற ஒரேயொரு காரணத்திற்காக அதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்.
அழகிய மாளிகையிருக்கும்போதே குப்பை மேட்டில் குடியிருக்காதே!
அன்பு மகனே!
கடமையான வணக்கம் தவிர, மற்ற வணக்கங்களை யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் செய்துகொள். அதை உனது மனைவிக்கும் காட்டிக் கொள்ளாதே!. ஏனெனில் நீ செய்யும் வணக்கத்தை பிறர் காணும்போது அல்லது நீ பிறரிடம் சொல்லிக்காட்டும்போது உனது “நப்ஸ்” மகிழ்கிறது. அது திருப்தியடைகிறது. அதன் மகிழ்வோடும், திருப்தியோடும் உருவாகும் எந்த ஒரு வணக்கமாயினும் அது பயனற்றதேயாகும்.
சில பெரியார்கள் தமது மனைவிக்குக்கூடத் தெரியாமல் நாற்பதாண்டுகள் நோன்பு நோற்றதாக வரலாறு கூறுகிறது. அவர்களின் மனைவியர்கள் அவர்களுக்கு பகலுணவைக் கொண்டுவந்து கொடுத்தால் தாம் சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கொடுத்து விடுவார்கள்.
அவர்கள் இவ்வாறு செய்தது தாம் செய்யும் வணக்கத்தைப் பிறர் தெரிந்து கொள்ளக்கூடாதென்பதற்காகவும், “நப்ஸ்” மகிழக்கூடாதென்பதற்காகவேயாகும்.
அன்பு மகனே!
நன்மையான விடயத்தில் மட்டுமே உனது மூச்சை செலவிட்டுக்கொள். ஏனெனில் உனது ஒவ்வொறு மூச்சும் பெறுமதிமிக்க மாணிக்கம் போன்றதாகும். மாணிக்கத்தின் பெறுமதியை அறிந்தவன் அதைக் குப்பைமேட்டிலெறிந்துவிட மாட்டான் அல்லவா? உனது மூச்சை பெறுமதிமிக்க மாணிக்கமென்றும், பாவத்தை குப்பை மேடென்றும் கருதி வாழ்ந்துகொள்.
நீ ஒரு நாளில் 21600 சுவாசங்களை சுவாசிக்கிறாய். நீ சுவாசிக்கும் ஒவ்வொறு சுவாசமும் ஒவ்வோர் உயிர் போன்றது. நீ பயனற்ற விடயத்தில் ஒரு சுவாசம் விட்டாலும் ஒரு உயிரைக் கொலை செய்தவனாகி விடுகிறாய்.
அன்பு மகனே!
நாங்கு விடயங்கள் உனதுள்ளம் தெளிவுற உதவும், அவற்றை நீ தொடர்ந்து செய்தால் உனதுள்ளம் தெளிவு பெற்று ஒளிமயமாக மாறிவிடும். அவை “திக்று” அதிகமாகச் செய்தல், மௌனமாயிருத்தல், தனித்திருந்தல் உணவைக்குறைத்தல்.
“திக்று” செய்தல் என்றால் அல்லாஹ்வை நினைத்தல். இது இருவகைப்படும் ஒன்று “திக்றுல்கல்ப்” மனதால் நினைத்தல். இரண்டு “திக்றுல்லிஸான்” நாவால் இறைவனின் திருப்பெயரை மொழிதல். இவ்விருவகை “திக்று” களிலும் “திக்றுல்கல்ப்” மனதால் இறைவனை நினைத்தல் சிறந்த்தென்று ஏனையோர் சொல்வர்.
எவ்வாறாயினும் இராப்பகலாக திக்று செய்தாலும் திக்று செய்யும்போது மனம் இறைவனில் லயித்துவிடாமல் அது உலகெல்லாம் வட்டமிட்டுக்கொண்டிருக்க நாவினால் மட்டும் இறைவனின் திருநாமத்தை மொழிந்து கொண்டிருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கமாட்டாது. நாவினைவிட மனமே பிரதானம்.
மௌனமாயிருத்தல் என்றால் பயன்தாராத வீணான பேச்சுக்ளை விட்டிருப்பதாகும். தவிர நன்மையான பயன்தரக்கூடிய பேச்சுக்களை விட்டிருப்பதல்ல. இவ்விபரம் தெரியாத சிலர் மௌனவிரதம் என்ற பெயரில் நன்மையானவற்றைக்கூடப் பேசாமல் இருந்து விடுகிறார்கள். இது தவறு ஏனெனில் இஸ்லாமில் மௌனவிரதமில்லை.
தனித்திருத்தல் என்றால் இதற்கு இரண்டு விளக்கம் உண்டு. ஒன்று மனிதர்கள் இல்லாத இடத்தில் தனிமையாக இருத்தல் இது “கல்வத்” என்று அழைக்கப்படும். இதன்மூலம் வீணான சிந்தனை, வீணான பேச்சு, பொய்சொல்லுதல், புறம் பேசுதல் கோள் சொல்லுதல் முதலான தேவையற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
நபீமார், வலீமார் “கல்வத்” இருந்ததாக வரலாறு கூறுகிறது. நபீ (ஸல்) அவர்கள் கூட ஒரு சில நாட்கள் “ஹிறாஉ” என்ற குகையில் தனித்திருந்திருக்கிறார்கள். இது ஒருவகை “கல்வத்” ஆகும்.
இன்னுமொருவகை “கல்வத்” உண்டு அது “அல்கல்வதுபில் ஜல்வதி” என்றழைக்கப்படும். அதாவது மனிதர்கள் இல்லாத இடத்தில் தனிமையாக இருக்காமல் மனிதர்களுடன் கலந்திருப்பதுடன் “கல்வத்” தனித்திருத்தல். அதாவது உடலைக் கொண்டு மனிதர்களுடனும் உள்ளத்தைக் கொண்டு இறைவனுடனுமிருத்தல். இவ்வாறு “கல்வத்” இருப்பவனின் உடல் மனிதர்களுடன் இருந்தாலும் அவனின் உள்ளம் அல்லாஹ்வுடனேயே இருக்கும்.
இவ்வாறு கல்வத் இருப்பது முந்தின கல்வத்தைவிட சிறப்பானதென்று உயர்மட்ட ஞானிகள் கருதுகிறார்கள் ஆயினும் இது முந்தினதைவிடக் கடினமானதாகும். நபீமார்களின் அனேகமானவர்களும், வலீமாரில் அநேகமானவர்களும் இவ்வாறு கல்வத் இருந்தவர்களேயாகும்.
உணவைக்கு குறைத்தல் என்பது மிதமிஞ்சி உண்பதைக் குறிக்குமேயன்றி அறவே உணவின்றி வாழ்வதைக் குறிக்காது.
மேற்கண்ட நான்கு விடயங்களையும் ஒருவன் பேணிவந்தால், அவனின் உள்ளம் ஒளிமயமாகிவிடும். அவன் உலகம் முழுவதையும் தன்னுள்ளே கண்டுகொள்வான்.
அன்பு மகனே!
சிலநேரம் அல்லாஹ் உனக்கு நோயைத்தருவான் சிலநேரம் ஆரோக்கியமாக வைத்திருப்பான். இன்னும் சிலநேரம் வறுமையைத் தருவான். வேறு சிலநேரம் செல்வத்தை வழங்குவான். இறைவன் இவ்வாறு செய்வதெல்லாம் உன்னைச் சோதிப்பதற்காக என்பதைப் புரிந்துகொள்.
நோயுள்ள நேரத்தில் மட்டும், வறுமையுள்ள நேரத்தில் மட்டும் அவனை நினைக்காதே, ஆரோக்கியமாக இருக்கும்போதும் செல்வமாக இருக்கும் போதும் அவனை நினைத்துக்கொள். சோதனையில் வெற்றிபெறு. அடித்தாலும் அணைத்தாலும் அவனையே விரும்பு, அவனையே நம்பு இருநிலைகளிலும் அவனிடமே சரணடைந்துகொள்.
இன்னும் நற்கிரியை செய்வதற்கு உனக்கு வாய்ப்பு வழங்கியும் உன்னை சோதிப்பான். நீ ஒரு நற்கிரியை செய்துவிட்டு அது கொண்டு பெருமைப்படுகிறாயா? அல்லது அந்த நற்கிரியை உன்மூலம் நிகழ்வதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வை புகழ்கிறாயா? என்று உன்னை சோதிப்பதற்காகவும் இவ்வாறு செய்வான்.
இதேபோல் உன்னை சோதிப்பதற்காக உனக்கு வியாதியையும், வறுமையையும் தருவான். நீ அவனின் தீர்பை செயலை ஏற்றுப் பொறுமை செய்கிறீரா? அல்லது பொறுமையிழந்து அவனை குறை கூறுகிறீரா? என்பதற்காக இவ்வாறு செய்வான்.
எனவே, இவ்வாறான சோதனைக்காலத்தில் பொறுமையோடும் எச்சரிக்கையோடும் இருந்து உனது “ஈமான்” நம்பிக்கையை பாதுகாத்துக் கொள். மரம் பலமற்றதாயிருந்தால் சிறுகாற்றுப் பட்டாலும் அது விழுந்துவிடுமென்பதை மறவாதே!
அன்பு மகனே!
மறுமையின் பெயரால் உலகத்தைத் தேடாதே! தீனின் பெயரால் துன்யாவைத் தேடாதே! நீ இவ்வாறு செய்தால் தங்கக் கரண்டியால் மலத்தை எடுத்தவன் போலாகி விடுவாய். உனது மனம் கிணற்றில் தொங்கவிடப்பட்ட வாளிபோல் உனது நெஞ்சில் இடப்பக்கம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன்மேல் மனவெழுச்சி என்ற காற்றும் வீசும், இறை பக்தி என்ற காற்றும் வீசும் இவ்விரு காற்றிலும் அது எந்தக் காற்றுக்கு அசைந்துவிடுமென்பதை அறிந்து கொள்ள முடியாத ஒன்றாகும்.
எந்தக் காற்று வேகமாக வீசுமோ அதன் பக்கமே அது சாய்ந்துவிடும் என்பதை அறிந்துகொள்.! “அடுப்பில் வைக்கப்பட்ட சட்டி சூடாகும்போது அது அசைவதைவிட அதிகமாக மனிதனின் உள்ளம் அசையும்” என்பது நபீமொழி.
தொடர்ந்து வரும்...