Sunday, April 25

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-5)

ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்.
Ash Shiekh Moulavee Abur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-

அன்பு மகனே! 
மனிதர்களில் இரு பிரிவினர்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் மலவண்டு போன்றவர்கள். மற்றவர்கள் விட்டில் பூச்சுப் போன்றவர்கள். மலவண்டு எந்நேரமும் மலத்திலேயே புரண்டு கொண்டிருக்கும் ஆயினும் தான் மலத்தில் புரள்வது கூட அதற்குப் புரிவதில்லை. அதில் அத்தர் சிறிதளவேனும் விழுந்து விட்டால் அது உடனே மயங்கிவிடும். 
இவ்வாறு மனிதர்களில் சிலர் வாழ்கிறார்கள் அவர்கள் பாவம் என்ற மலத்திலேயே எந்நேரமும் புரள்கிறார்கள் ஆயினும் தாம் எதில் புரள்கிறோம் என்பது கூட அவர்களுக்குப் புரிவதில்லை. மணம் என்ற நற்கிரியைகளைச் செய்யுமாறு அவர்களைப் பணித்து அவர்கள் செய்தால் மயக்கமுற்ற மலவண்டு போலாகி விடுவார்கள். 

விட்டில் பூச்சி தனது மடமையினால் நெருப்பையும் மலரென்றெண்ணி அதில் விழுந்து, தன்னுயிரை அழித்துக் கொள்கிறது. இவ்வாறு மனிதர்களில் சிலர் வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ற நெருப்பை மலரென்றெண்ணி அதில் விழுந்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். 

அன்பு மகனே! 
மேற்கண்ட இரு பிரிவினரில் நீ எந்தப் பிரிவைச் சேர்ந்தவன்? ஒன்றோ மலவண்டு போலிருப்பாய். அல்லது விட்டில் பூச்சுப் போலிருப்பாய். உன்நிலை மிகவும் கவலைக்குரியது நெருப்பையும், மலரையும் பிரித்தரியும் ஆற்றல் இல்லாதவனாயிருக்கிறாய். உன்னை எண்ணி நான் பரிதாப்ப்படுகிறேன். 

அன்பு மகனே! 
சில நேரம் நீ வீரம் பேசுகிறாய். உனது உடல் சக்திகொண்டு மனிதர்களுக்கு இன்னல் செய்கிறாய் ஆனால் உனது வீரத்தை உனது “நப்ஸ்” இடமே காட்டிப்பார். பிறரை ஆட்டிப் படைத்து அவர்களை அடக்கி வாழ்வதே வீரமென்று நினைத்து மார்தட்டிப் பெருமூச்சு விடுகிறாய். 

ஆனால் இது உண்மையில் வீரமல்ல. இவ்வித சக்தியைப் பெண்களிடமும் காணலாம். ஆகையால் உன்னை வீரனென்று எப்படிச் சொல்ல முடியும்? உண்மையில் வீரன் யாரென்று உனக்குத் தெரியுமா? எவன் தனது ‘நப்ஸ்” உடன் போராடி வெற்றி பெறுகின்றானோ அவன்தான் வீரத்திருமகனென்று அழைக்கப்படுவான். 

நீ ஒரு பெண்னுடன் சண்டையிட்டு வெற்றிபெற்றால் கூட எவரும் உன்னை வீரனென்று அழைக்க மாட்டார். ஆனால் உனது “நப்ஸ்” என்ற ஆண் சிங்கத்தோடு நீ போர் செய்து வெற்றிபெற்று நீ வெற்றிக்கொடி நட்டுவதற்கு முன்னரே மற்றவர்கள் உனக்காக கோடி நட்ட முன்வந்து விடுவார்கள். அது மட்டுமன்று, நீ மரணித்த பின்னர் அவர்களின் உள்ளம் என்ற பூமியில் உனது சிலையை நிறுவுவார்கள். அந்தச் சிலைக்கு புகழ் என்ற மாலை சூடி நினைவு படுத்துவார்கள். 

அன்பு மகனே! 
மனிதன் உயிர் வாழ்வதற்கே சாப்பிட வேண்டும் ஆனால் நீயோ அதை மறந்து சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கிறாய். உனது இந்த இழி நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்காமலும், கவலைப்படாமலும் இருக்க முடியுமா? உணவை அதிகமாக உட்கொண்டு பெருத்த உடலைப் பெற்று பெருமைப்படுகின்றாய். மெலிந்த குதிரைதான் விரைந்து செல்லும் என்பதை மறந்து விடாதே! 

உண்வைக் குறைக்கவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறாய். உணவு உன்னிடம் வந்துவிட்டால் உனது திட்டம் யாவும் தவிடுபொடியாகிவிடுகிறது. நீண்ட நாட்களின் பின் கண்ட நண்பனோடு அன்போடும், அமைதியோடும் பேசிக்கொண்டிருப்பது போல் அன்போடும், அமைதியோடும் சாப்பிடுகிறாய். உனது திட்டம் உறுதியற்ற திட்டம் அது உள்ள உறுதியோடு தீட்டப்பட்டதன்று. 

அன்பு மகனே! 
சிறு குழந்தை தாயுடன் இருப்பதுபோல் நீ அல்லாஹ்வுடன் இருந்துகொள்!. தாய் தனது குழந்தையை எவ்வளவுதான் அடித்துத் துரத்தினாலும்கூட மீண்டும் அக்குழந்தை தாயிடமே செல்லும், தாய் தவிர மற்றவர்கள் அக்குழந்தையின் கண்களுக்குத் தெரிவதில்லை. அந்தக் குழந்தைக்குள்ள பக்தியும், அறிவும், உனக்கு இல்லையே! என்னே பரிதாபம்.! இவ் உண்மையை நீ உணரக்கூடாதா? திருந்திச் சீரிய வழியிற் செல்லவேண்டாமா? 

அன்பு மகனே! 
நீ உபகாரம் செய்தவனுக்கு உபகாரம் செய்கிறாய், உபத்திரம் செய்தவனுக்கு உபத்திரம் செய்கிறாய். நீ இவ்வாறு நடப்பது மடமையன்றி வேறென்ன? உனது நப்ஸ் உனக்கு துரோகம் செய்து கொண்டேயிருக்கிறது. ஆனால் நீயோ அதற்கு விருப்பமான உணவுகளைக் கொடுத்து அதற்கு உபகாரம் செய்து கொண்டிருக்கிறாய். இந்நேரம் உபத்திரம் செய்தவனுக்கு உபகாரம் செய்யும் அறிவிலியாக நீ இருக்கிறாய். 

நீ வளர்க்கும் மிருகங்கள் வகை வகையான பலாபலன்களை உனக்குத் தந்து கொண்டிருக்கின்றன. நீ அவற்றுக்கு ருசியில்லாத வைக்கோலை உணவாகக் கொடுக்கிறாய். இந்நேரம் உபகாரம் செய்தவனுக்கு நீ உபத்திரம் செய்தவனாகிறாய். 

சாப்பிட அமர்ந்தால் வசதியோடமர்ந்து வயிறு புடைக்க நீண்ட நேரம் நிம்மதியோடு சாப்பிடுகிறாய். ஆனால் இறைவணக்கத்துக்காகச் சென்றால் நெருப்பில் கால் வைத்தவன்போல் விரைவாக அவ்வணக்கத்தை முடித்து விடுகிறாய். 

உணவில் கிடைக்கும் இன்பம்கூட வணக்கத்தில் உணக்கு கிடைப்பதில்லை. நீ உண்பதற்கு அமர்ந்தால் உணவு தவிர்ந்த வேறு சிந்தனை உனக்கு வருவதில்லை. ஆனால் இறைவணக்கத்திற்காக சென்றால் அங்குதான் உனக்கு பல சிந்தனைகள் உருவாகின்றன. 

எனவே இந்நிலையை நீ மாற்றிமைக்கும்வரை நீ மனிதனாக முடியாது. அழகிய மங்கையை நீ கண்டால் மதியிழந்து உன்னை நீ மறந்து விடுகிறாய். அந்நேரம் பாம்பு கடித்தாற்கூட உனக்கு விளங்குவதில்லை. யாரும் உன்னை அழைத்தாற்கூட உனக்கு கேட்பதில்லை. 

யாராவது உனக்கு முன்னால வந்தால்கூட உனக்குத் தெரிவதில்லை. குருடனாகவும், செவிடனாகவும் உணர்ச்சியற்றவனாகவும் மாறிவிடுகிறாய். இந்நிலையை உனது தொழுகையில் உருவாக்கிக்கொள்.! 

நீ உனது தொழுகையில்தான் மேற்கண்ட நிலையில் இருக்க வேண்டும். ஆனால் நீயோ இந்நிலையை உலக இன்ப சுகங்களை அனுபவிக்கும் நேரத்தில் அமைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். 

அன்பு மகனே! 
யுத்த நேரத்தில் ஒரு பெரியாரின் முதுகில் அம்பு பாய்ந்து விட்டது. அதை வெளியேற்ற முடியாதிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல முதுகிலிருந்த காயம் பழுத்து அந்த இடம் அழுகிப்போயிற்று. அந்தப் பெரியாரின் நண்பர்கள் அவரிடம் அந்த அம்பை வெளிப்படுத்த அனுமதி கேட்டார்கள். 

அதற்கவர் மறுத்துவிட்டார். எடுக்கும்போது தனக்கு வேதனை ஏற்படுமென்று கூறினார். நண்பர்கள் தமக்குள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது பெரியார் அவர்கள் தொழும்போது உலகையும் மறந்து தன்னையும் மறந்து தொழுவார்கள். 

அந்நேரம் வெளிப்படுத்தினால அவர்களுக்கு வேதனை தெரியாமற்போய்விடுமென்று முடிவு செய்து ஒருநாள் பெரியார் தொழுதுகொண்டிருந்த பொழுது மூன்று நண்பர்கள் சேர்ந்து மிகச் சிரமத்தின் மத்தியில் அதனை வெளிப்படுத்திவிட்டார்கள். 

தொழுகையை முடித்த பெரியார். எனது முதுகிலிருந்த அம்பு எங்கே? யார் எடுத்தார் என்று நண்பர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள் நாங்கள்தான் எடுத்தோம் என்று பதில் கூறினார்கள் 

இந்தச் சம்பவத்தின் மூலம் தொழுகையில் பெரியார்கள் பேரின்பம் கண்டார்கள் என்பதும் தொழுகையில் குருடர்களாகவும், செவிடர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாயும் இருந்தார்கள் என்பது தெளிவாகிறது. 

அன்பு மகனே! 
மேற்கண்ட பெரியார் உன்போன்ற மனிதன் அல்லவா? அவர்போல் வாழவேண்டும் என்ற எண்ணம் உனக்கு வர வேண்டாமா? நீ அதிகமாய் உபதேசம் கேட்கிறாய் அதில் குறை ஒன்றுமில்லை. ஆனால் அதன்படி செயல்படவே உன்னால முடியாமலிருக்கிறது.. இரும்புக் கவசம் அணிந்திருந்தும் யுத்தகளத்தில் இறங்கத் தயங்குகின்றவன் போலிருக்கிறாய். 

நேர்வழி என்ற விலை மதிக்க முடியாத பேரருளை உலகம் என்ற சந்தையில் அல்லாஹ். விலைகூறிக் கொண்டிருக்கிறான். வாங்குபவர்கள் இல்லையா என்றும் கேட்கிறான். நீயோ அதை வாங்காமல் பெறுமதியற்ற உலகை வாங்குவதற்கு முன்வருகிறாய்!. நீ புத்தியுள்ளவனா? மடயனா? சிந்தனை செய்துபார். பிணத்துக்குப் பணம் கொடுப்பவர் யாராக இருக்க முடியும்! 

அன்பு மகனே! 
நீ அல்லாஹ்விடம் எத்தனையோ விடயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றாய். அவற்றில் நல்லவையும் உண்டு, கெட்டவையும் உண்டு இவ்வுலகத் தேவையுமுண்டு. 

நீ எதைக் கேட்பதாயினும் கேட்டுக்கொள், ஆயினும் நீ கேட்கவேண்டிய ஒன்றுண்டு. அதைப் பிரதானமாகக் கேட்டுக்கொள். அது “மகாமுல் இஸ்திகாமஹ்” எனப்படும் இதன் பொருள் நேரான ஸ்தானம் என்பதாகும். நீ அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் இதைக் கேட்க மறந்து விடாதே! 

நீ இப்போது பச்சிளங் குழந்தை. ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாய். பூமியைத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். நீ உரிய நிலையை அடைந்தால் தண்ணீருக்காக பூமியைத் தோண்டத் தேவையில்லை. தண்ணீருக்காக வானத்தைப் பார்த்தாலே போதும் மழை பொழியும். 

அன்பு மகனே! 
நீ உனது “நப்ஸ்’ க்கு மாறு செய்யாமல் அது சொல்வதற்கு இசைந்து செயல்படுகின்றாய். இவ்வாறுள்ள உனக்கு வெற்றி கிடைப்பது எங்ஙனம். நீ அல்லாஹ்வின்பால் போய்ச்சேர்வது எங்ஙனம்? இதற்கெல்லாம் காரணம் நீ “நப்ஸ்” பற்றியும் அதன் அந்தரங்கம் பற்றியும் அறியாமலிப்பதேயாகும். 

அதன் தன்மையை நீயறிந்தால் அதைப் பகைத்தும் ஒதுக்கியும் வாழ்வாய் என்பதில் ஐயமில்லை. நீ வீட்டில் விஷப்பாம்பை உணவூட்டி வளர்க்கின்றாய். அது விஷப்பாம்பென்று அறிந்தால் நீ வளர்ப்பாயா? அதற்கு உணவு கொடுப்பாயா? நீ “நப்ஸ்” பற்றி அறியாமலிப்பதே இதற்கு காரணமாகும். 

எனவே, முதலில் “நப்ஸ்” பற்றியும், அதன் தன்மை பற்றியும், அதை அடக்கியொடுக்கும் வழி பற்றியும் அறி. அதற்காக “தஸ்வ்வுப் ஸூபித்துவக் கலை”யில் கால் பதி. “காமில்” சம்பூரணம் பெற்ற ஞான வழிகாட்டி ஒருவரின் கரம்பிடி. 

“நப்ஸ்” என்ற விஷப்பாம்பை நீ வளர்க்க விரும்பினால் முதலில் அதன் விஷப்பற்களைக் கழட்டிவிடு. வயிறு புடைக்க அதற்கு உணவளிக்காதே! அதன் உணவு எது தெரியுமா? மனவெழுச்சிகளும், மனவாசைகளுமேயாகும். மனவாசை என்ற முட்டையை “நப்ஸ்” என்ற பாம்பு கேட்கும்போது “முகாலபத்” அதற்கு மாறு செய்தல் என்ற தடியால் அதற்கடித்து அதன் வலிமையை குறைத்துவிடு. அன்பு, பாசம் அதோடு காட்டிவிடாதே! நீ அன்பு காட்டினால் உனக்குத் தெரியாமலேயே அது உனக்குத் துன்பம் தரும். 

அன்பு மகனே! 
அல்லாஹ் உன்னில் இரு தன்மைகளை வைத்துள்ளான். ஒன்று “றூஹ்” உடைய தன்மை, மற்றது “நப்ஸ்” உடைய தன்மை. இவ்விரு தன்மைகளிலும் “றூஹ்” உடைய தன்மையை மட்டும் அல்லாஹ் உன்னில் வைத்திருந்தால் அவனுக்கு மாறு செய்யாமல் முழுமையாக அவனுக்கு வழிப்பட்டு நடப்பதில் நிலைத்திருப்பாய். அதேபோல் “நப்ஸ்” உடைய தன்மை மட்டும் வைத்திருந்தால் அவனுக்கு முழுமையாக மாறு செய்வதில் நீ நிலைத்திருப்பாய். 

அல்லாஹ் உனது திரமையைப் பார்ப்பதற்காகவே உன்னில் ஒன்றுக்கு மற்றது எதிரான இரு தன்மைகளை அமைத்தான். தேனீயில் தீண்டும் தன்மையும் உண்டு. தேன் தரும் தன்மையும் உண்டு. 

அன்பு மகனே! 
நீ அல்லாஹ்வின் அடிமையாக இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புகின்றான். ஆனால் நீயோ அவன் உனக்கு அடிமையாகவும், நீ அவனுக்குத் தலைவனாகவும் இருக்கவே விரும்புகிறாய். நீ இவ்வாறு தெளிவான வார்த்தையால் சொல்லாவிட்டாலும் உனது நடவடிக்கைகள் இந்தக் கருத்தையே காட்டுகின்றன. 

ஏனெனில் அடிமை என்ற சொல் “அப்து” என்ற அறபுச் சொல்லின் பொருள் “அபத” என்ற அறபுச் சொல் “அபத” என்ற சொல்லடியிலுள்ளது. “அபத” என்றால் பணிந்தான், தாழ்மையை வெளிப்படுத்தினான் என்பதாகும். 

இந்தக் கருத்தின்படி “அப்து” என்ற சொல்லுக்கு பணிவுள்ளவன், தாழ்மையுள்ளவன் என்று பொருள்வரும். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு ஆராய்ந்தால் மனிதன் எவ்விடத்திலும் பணிவுள்ளவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும், இருக்கவேண்டுமென்பது தெளிவாகும். உண்மை இவ்வாறிருக்க நீ “அப்து” ஆக இருந்து கொண்டு பெருமை, ஆணவம், கர்வம் உள்ளவனாக இருப்பதேன்?. “அப்து” என்ற சொல்லுக்கே நீ பொருத்தமற்றவன். 

நீ அப்துல்லாஹ் அல்லாவின் அடிமையாக இருக்க விரும்பவில்லை. மாறாக “அப்துல்ஹவா” மனவாசையின் அடிமையாக இருப்பதற்கே விரும்புகிறாய். நீ அல்லாஹ்வை வணங்கவில்லை. 

மாறாக உனது மனவாசையையே வணங்கிக் கொண்டிருக்கிறாய் அல்லாவுக்கு வழிப்படாமல் மனவாசைக்கு வழிப்படும் நீ யாரை வணங்குகிறாய்? அல்லாஹ்வையா? உனது மனவாசையையா? நீ மனவாசையை வணங்கினால் உன்னை யாரின் அடிமையென்று சொல்வது? சொல்ல வேண்டும்! 

அல்லாஹ்வின் படைப்புக்களின் ஒன்றான மனவாசையை நீ வணங்கிக் கொண்டு உனக்குத் தேவையானதை நீ அல்லாஹ்விடம் கேட்டால் அவன் எவ்வாறு உனக்குத் தருவான்! அவனை வணங்கினால்தானே அவன் உனக்குத்தருவான். 

உனக்குத் துன்பம், இன்னல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் கரம் உயர்த்துகிறாய். அவனை நினைக்கிறாய். ஏனைய நேரங்களில் அவனை மறந்து வாழ்கிறாய். நீ சந்தப்பவாதி. தூய்மையான எண்ணமுள்ளவனல்லன். 

நீ ஒருவனின் கடையில் மட்டும்தான் உனக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றவன் என்று வைத்துக்கொள். ஒருநாள் உனக்குத் தேவையான பொருள் அந்தக் கடையில் இல்லாமல் போனால் நீ என்ன செய்வாய்? இன்னொருவனின் கடைக்குச் செல்வாயா? இல்லையா? அவ்வாறு சென்றால் அவன் நீ கேட்கும் பொருளைத் தருவானா? அல்லது உனது கன்னத்தில் தருவானா? சிந்தனை செய்துபார்! 

அன்பு மகனே! 
இன்மையும், மறுமையும் துன்யா ஆகிறாஹ் இவ்விரண்டும் அல்லாஹ் அளவில் போய்ச்சேருவதற்கு தடைக் கற்களாக உள்ளன. நீ இவ்விரண்டையும் விரும்பாதே! இவ்விரண்டுக்காகவும் அமல் செய்யாதே! இவ்விரண்டுமே படைப்புத்தான். படைப்பை விரும்பாதே! படைத்தவனை விரும்பு. படைப்புக்காக அமல் செய்யாதே! படைத்தவனுக்காக அமல் செய்! சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக நற்கிரியை புரிவதும், நரகில் விழக்கூடாதென்பதற்காக நீயதை விட்டு நடப்பதும் ஞானிகளிடம் நல்லதெனக் கருதப்படமாட்டா! 

இவ்விருநோக்கங்களையும் விட்டொழித்து அல்லாஹுக்காக நல்லது செய்! அவனுக்காகவே தீயதை விடு! இந்த மையக்கருத்தையே றாபிஅதுல் அதவிய்யஹ் நாயகியின் கவிதையும் வலியுறுத்துகிறது. 

ஆகிறத்-மறுமையில் வழியில் துன்யா-இன்மை நின்று கொண்டு மறுமை செல்பவனை தன்பக்கம் அழைக்கிறது. அதற்குப் பின்னால் நின்று கொண்டுதான் மறுமை உன்னை அழைக்கிறது. நீ இவ்விரண்டிலும் வெற்றி பெற்றால்தான் இறைவனை அடைய முடியும். இதனால்தான் இன்மையும், மறுமையும் இறைவன்பால் செல்பவனுக்கு தடை கற்களாக உள்ளன. என்று குறிப்பிட்டேன். 

அன்பு மகனே! 
அல்லாஹ் உனக்கு எண்ணற்ற அருட்கள் செய்துள்ளான். செய்து கொண்டுமிருக்கிறான். அவன் ஒருவனுக்குச் செய்யும் அருட்ளை உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எண்ணினாற்கூட எண்ணி முடிக்க இயலாது. இவ்வுண்மை உனக்குத் தெரியுமா? 

அல்லாஹ் உனக்குச் செய்த அருட்களில் மிகப்பெரிய அருளொன்று உண்டு. அது எது தெரியுமா? உனது குறைகளை உனக்கு மட்டும் தெரியவைத்து மற்றவர்கள் அறியாவண்ணம் மறைத்துள்ளானே இதைவிடப் பெரிய அருள் வேறேது இருக்க முடியும். 

உனது குறைகளை அல்லாஹ் உனக்கு தெரியவைக்காமல் விட்டால் நீ செய்வதெல்லாம் நல்லதென்றே நினைத்துக் கொள்வாய். குறையில்லாத நல்ல மனிதனென்று பெருமைப்படுவாய். இந்நிலையிலேயே நீயிருந்தால் நீ வெற்றிபெறுவன் எங்ஙனம்? உனது குறையை நீ உணரும்போதே உன்னைத் திருத்த முன்வருவாய்! இதனால்தான் மேற்கண்ட விடயத்தை அல்லாஹ் உனக்குத் தந்த அருட்களில் மிகப் பெரியதென்று குறிப்பிட்டேன். 

அல்லாஹ் இவ்வுலகில் உனக்கு நல்ல செல்வத்தை வழங்கியிருந்தும், அதற்காக அவனுக்கு நன்றி செய்யும் சந்தர்ப்பம் இல்லாதவனாக நீ இருந்தால் அவன் அச்செல்வத்தை உனக்குத் தந்தது ஒரு சோதனைக்கென்று விளங்கிக்கொள். 

“துன்யாவின் ஒரு சிறு பகுதியே மறுமையின் வழியைத் தடைசெய்யும்” என்ற நபிமொழியை எந்நேரமும் நினைத்துக் கொண்டிரு! 

அன்பு மகனே! 
உனது மனைவி உன்னிடம் அன்புள்ளவரே! நீங்கள் ஒரு நொடிநேரங்கூட என்னை விட்டு மறந்திருக்கலாகாது. உங்களின் சிந்தனை, எண்ணம் எல்லாம் என்மீதே இருக்கவேண்டும். என்று கூறினாள் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்வாய்? அவள் சொன்னதுபோல் செயல்பாடுவாயா? இல்லையா? 

உன்னைப் படைக்காதவளும், பாதுகாக்காதவளும் இவ்வாறு சொல்வதை நீ கேட்டு அவளுக்கு வழிப்பட்டால் உன்னைப் படைத்தவனும், பாதுகாத்துக் கொண்டிருப்பவனுமான அல்லாஹ் அவள் உனக்குச் சொன்னதுபோல் சொல்லும்போது நீ என்ன செய்வாய்? அவன் சொல்வது போல் செயல்படுவாயா? இல்லையா? 

அன்பு மகனே! 
அறிஞர் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ (றழி) அவர்களிடம் அறிஞர் அதா (றழி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அறிஞர் முர்ஸீ (றழி) அவர்கள் அதா (றழி) அவர்களுக்குப் பல அறிவுறைகளைக் கூறிவிட்டு இறுதியில் பின்வருமாறு கூறினார்கள். 

“அறிஞர் அதா! நப்ஸ் ஒரு பெண் போன்றது பெண்னுடன் போட்டிபோட்டால் அவள் போட்டியை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்பாள். ஆகவே நப்ஸ் என்ற பெண்னை அப்பெண்ணின் இறைவனிடம் ஒப்படைத்துவிடு. 

ஏனெனில் அவளை நீ பக்குவமாக வளர்த்தாலும் சில நேரம் உனக்குப் பணியாமல் உனது கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு விடுவாள். உண்மை விசுவாசி தனது “நப்ஸ்” ஐ அல்லாஹ்விடம் ஒப்படைத்தவன் என்ற அடிப்படையில் அவனிடமே ஒப்படைத்துவிடு. 

தொடர்ந்து வரும்...

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK