ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்.
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-
அன்பு மகனே!
உனது நிலையைக் கண்டு கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் நீ நரைத்துவிட்டாய். உனது உறுப்புக்கள் தளர்ந்து விட்டன. இன்னும் சில நாட்களில் நூறாவது பிறந்த தினம் கொண்டாடப் போகிறாய் ஆனால் உனது வயதுக்கேற்ற புத்தியும், அறிவும் உன்னிடம் இல்லை. நீ சிறு குழந்தையைவிட இழிநிலையிலேயே இருக்கிறாய். அல்லஹ் உன்னிடம் எதைக் கேட்கிறான் என்பதை புரியாமல் இருக்கிறாய். நீ புத்தியுள்ளவனாயிருந்தால் பிறர் உன்னை நினைத்து அழுவதற்கு முன் நீ உன்னை நினைத்து அழு.
நீ மரணித்தால் உன்னை நினைத்து உனது குழந்தைகளும், மனைவியும், உறவினர்களும், நண்பர்களும் பணியாட்களும் அழுவார்கள். இவர்களெல்லாம் ஏன் அழுகிறார்கள் என்பதைக் கூட புரிந்து கொள்ளாதவனாய் இருக்கின்றாய். இவர்களை விட்டுப் பிரிந்த கவலையினாலோ, உனது அத்மா சாந்தி பெறுமா என்ற கவலையினாலோ இவர்கள் அழவில்லை. ஆனால் நீ மரணித்ததால் இவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த இவ்வுலக வருவாய் இல்லாமற் போயிற்றென்றே அழுகிறார்கள். ஆகையால் இவர்களுக்கு முன்னரே உனது ஆத்மாவின் நிலைபற்றி சிந்தித்து நீ அழுதுகொள்.
அன்பு மகனே!
உன்குத் தேவையானதை எல்லாம் நிறைவேற்றித் தருமாறு அல்லாஹ்விடம் கேட்கின்றாய். அவனும் நீ கேட்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் தந்துகொண்டேயிருக்கின்றான். ஆனால் அவன் உன்னிடம் கேட்டுக் கொண்டது ஒன்று மட்டும்தான் அதுவே வணக்கம்.
அதை நிறைவேற்றுவதற்குத் தயங்குகிறாய். இதற்கு காரணம் அறியாமையே தவிர வேறொன்றுமல்ல! நீ கேட்டதை அல்லாஹ் தரவில்லையானால் கோபப்படுகின்றாய். உனக்கு இவ்வாறு கோபம் வந்தால் அவனுக்கு அவன் கேட்டதைக் கொடுக்கவில்லையாயின் எந்தளவுக்கு கோபம் வரும் என்பதை சிந்தித்துப்பார்! உனது நடவடிக்கைக்காக அவன் கோபப்படுவதாயின் நீ இன்று மனித உருவத்தில்கூட இருக்க முடியாது. நீ செய்துவரும் துரோகத்திற்காகவும், பாவத்திற்காகவும் உன்னைத் தண்டிப்பதானால் நீ நாயாக அல்லது பன்றியாக எப்பவோ மாற்றப்பட்டிருப்பாய். ஆனால் அவனின் கோபத்தைவிட அவனின் அன்பு முந்திவிட்டது.
“ஸபகத் ரஹ்மதீ ஙலபீ”
எனது கோபத்தைவிட எனது அருள் முந்திவிட்டது. இது ஹதிதுக் குத்ஸி இறைவாக்கு இதனால்தான் நீ இன்று மனிதனாக வாழ்கின்றாய்.
அன்பு மகனே!
நீ உலகில் வாழும்வரை நல்ல மனிதர் ஒருவரை குருவாக வைத்துக்கொள். அவர்தான் உன்னை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்வார். மார்க்க அறிவும், இறைஞானமும், இறைபக்தியுமுள்ள ஒருவரை குருவாகப் பிடித்துக்கொள். குரு இல்லாதவனுக்கு ஷாத்தானே குருவாயிருப்பான் என்பது ஞானிகளின் வாக்கு
“மன் லா லஹூ ஷெய்குன் ப ஷெய்குஹுஸ் ஷைத்தானு”
குருவுக்கும், சிஷ்யனுக்கும் பல நிபந்தனைகள் இருப்பதாக ஞானமகான்கள் கூறியுள்ளார்கள். அவற்றை இச்சிறுமடலில் விபரமாக எழுத முடியாமைக்கு வருந்துகினறேன். ஆனால் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகின்றேன். அந்த நிபந்தனை ஒருவரில் இல்லையானால் அவரை ஞானகுருவாகக் கொள்ளுதல் கூடாது. அவர் குருடன். குருடன் கைபிடித்துக் கரைசேர முடியாது. அவனால் கரைசேர்க்கவும் முடியாது. வழிதெரியாமல் குழியில் இறங்கிவிடுவான்.
கைபிடிக்கத் தகுதியான குருவில் எது இல்லாது போனாலும் மூன்று நிபந்தனைகள் மட்டுமாவது இருக்கவேண்டும். இம்மூன்றில் ஒன்றேனும் இல்லாதவரைக் கைபிடிப்பதும், ஷாத்தானைக் கைபிடிப்பதும் சமமே.
ஒன்று - “ஷரீவுத்” மார்க்கத்தின் வெளிப்படையான “அஹ்காம்” சட்டதிட்டங்களை மட்டுமாவது அவர் நன்கறித்தவராயிருத்தல் வேண்டும். துறை தெரியாமல் தோணி தொடுக்க முடியாது.
இரண்டு – மஃரிபா இறைஞான அறிவில் அவர் கடலாக இருக்கவேண்டும். இறைவனின் கத்ஸிபாத், அஸ்மஉ, அப்ஆன் என்பவற்றின் விபரங்களைத் தெரிந்தவராகவும், தனது சிஷ்யர்களுக்கு தெரிவித்துக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அதேபோல் வஹ்ததுல் வுஜுத் மெய்பொருள் ஒன்றே ஒன்றுதான், மற்றவை இல்லாதவை என்ற ஞானமும் ஹூலூல், இத்திஹாத் போன்ற வழிகெட்ட கொள்கை விளக்கமும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
மூன்று – தக்வா இறையச்சம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஒரே நேரத்தில் இம்மூன்று அம்சமும் உள்ளவர் மட்டுமே கைபிடிக்கத் தகுதியான ஞானகுரு ஆவார். இவர்தான் கரைசேர்த்தவரும், கரைசேர்த்துவைக்கத் தகுதி பெற்றவருமாவார்.
காமில் சம்பூரணம் பெற்ற ஒரு ஞானகுரு கடலாமை போன்றவர். கடலாமை கடலோரம் மன்னைத்தோண்டி முட்டைகளை இட்டபின் கடலுக்குள் சென்று அங்கிருந்து கொண்டே தனது முட்டைகளைப் பார்த்து அவற்றிலிருந்து குஞ்சுகளை வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறே ஞானகுரு தனது சிஷ்யர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஆத்மீகப் பார்வையால் பார்த்து அவர்களை ஆத்மீகத்துறையில் வளர்ப்பார். கடலாமையின் கண்ணில் அப்படியொரு அபார சக்தியை அமைத்துள்ள அல்லாஹ் காமிலான குருவின் கண்ணில் அப்படியொரு சக்தியை வைக்க மாட்டானா?
அன்பு மகனே!
நீ, உலகத்தில் வாழும்போது மதுவை அதிகமாக அருந்திக்கொள். அது உன்னைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும், இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும், அன்பையும் அதிகப்படுத்தும் இறைஞானத்தையே நான் மது என்று குறிப்பிட்டேன்.
நீ ஞானம் என்ற மதுவை தினமும் குடி. அதில் எவ்வளவு குடிக்கலாம்? அதற்கு கட்டுப்பாடுகள் ஒன்றும் இல்லை. அந்த மது மயக்கத்தில் நீ இருப்பது விரும்பத்தக்கதும், போற்றத்தக்கதும் ஆகும்.
அன்பு மகனே!
நீ உணவு உற்கொள்ளும் போது உனது நாவு உணவின் ருசியை உணர்கிறது. உணவில் ருசி இருப்பதுபோல் வணக்கத்திலும் ருசி உண்டு. உணவின் ருசியை நாவு உணர்வதுபோல் வணக்கதின் ருசியை “றுஹ்” ஆன்மா உணர்கிறது. ஆகையால் முதலில் உனது உள்ளத்தை பாவம் என்ற அசூசியில் இருந்து சுத்தம் செய்து கொள் மறைந்த பொக்கிசங்களும் உனக்குத் தெரியவரும். அல்லாவை நெருங்கி அவனின் கதவைத் தட்டிப்பார். ஒரு அரசனின் கதவை பலதரம் தட்டும்போது அவன் நிச்சயமாகத் திறந்து விடுவான்.
மேற்கண்ட பதவிகளையும் பாக்கியங்களையும் நீ பெற விரும்பினால், உனது ஆசையை அடக்கி வாழ்ந்துகொள். மனிதர்களுக்கு எவ்வளவோ அன்பு காட்டுகிறாய் ஆனால் அவைகளைப் படைத்தவனைப் பகைத்துக் கொள்கிறாய். அல்லாஹ்வை நீ அன்புவைத்தால் பல அற்புதங்கள் உனக்குத் தோன்றும். கண்டவைகளில் எல்லாம் பல காட்சிகள் கிடைக்கும்.
பசியோ, தாகமோ உன்னை நெருங்காது. தூக்கமும் உன்னை அணுகாது, தெளிவான சுவீட்சமான வாழ்விலேயே உனது நேரங்கள் கழியும். கவலை உன்னை அணுகாது. கள்வர்களும், காட்டில் வாழும் மிருகங்களும் உன்னைக் கண்டால் அஞ்சி ஒடுங்கும். அவை உனக்கு பாதுகாப்பாக இருக்குமே அன்றிப் பாதகம் செய்யாது.
அன்பு மகனே!
அல்லாவின் அன்பை எவ்வழியில் பெறமுடியிமாயினும் அவ்வழியால் பெற்றுக்கொள். இரவில் விழித்தெழுந்து இரண்டு “றக்அத்” தொழுவதும் ஏழைகளுக்கு உணவளிப்பதும். முஸ்லீம்களுக்கு உதவி செய்வதும், பாதையில் மனிதர்களுக்கு தடையாக உள்ளவற்றை அகற்றுவதும். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கான சாதனங்களாகும் பொதுவாக நற்கிரிகையாவும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருபவையே. ஆனால் வணக்கத்தில் ஏற்றத்தாழ்வுண்டு.
சில வணக்கம் பெரியதாயினும் அதற்குப் பயன் குறைவாகவே கிடைக்கும். உதாரணமாக பகலில் நாற்பது றக்அத் தொழுபவனுக்கு நாநூறு நன்மை கிடைத்தால் இரவில் நடுநிசியில் எழுந்து நாற்பது றக்அத் தொழுபவனுக்கு நாலாயிரம் நன்மை கிடைப்பது போன்று வணக்கங்களில் “திக்று” இறை நினைவை விடப் பயன்தரம் வணக்கம் ஒன்றுமேயில்லை.
அத்தோடு இந்த வணக்கம் மற்றைய வணக்கங்களைவிட மிக இலேசானதாயும் உள்ளது. ஏனெனில் “திக்று” தவிர ஏனைய வணக்கங்கள் எல்லோராலும் எல்லா நேரங்களிலும் செய்து கொள்ள முடியாது. ஆனால் “திக்று” என்ற வணக்கம் நோயாளியால் கூட செய்யக்கூடிய வணக்கமும், எல்லா நேரத்திலும் செய்யக்கூடிய வணக்கமுமாகும். வாயால் மொழிவதற்குச் சக்தியற்றவர்களால் கூட இவ்வணக்கம் செய்ய முடியும். இதன் விபரம் பின்வருமாறு.
“திக்று” இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று “திக்றுல்லிஸான்” – நாவால் இறைவனை நினைத்தல். மற்றது “திக்றுல்கல்ப்” – மனதால் இறைவனை நினைத்தல்.
“திக்றுல்லிஸான்” என்றால் நாவால் இறைவனின் பெயரைச் சொல்வது. “திக்றுல்கல்ப்” என்றால் நாவால் மொழியாமல் மனதால் மட்டும் இறைவனை நினைவுபடுத்துவது. இவ்விருவகையில் இரண்டாம் வகை நோயாளிக்கும் சாத்தியமான ஒன்றாகும்.
அதோடு அந்தவகை எந்த இடத்திலும் செய்யலாம். மலசலகூடம் உட்பட இந்த வகை “திக்று” செய்வதற்கு அனுமதியுண்டு. ஆனால் முதலாம் வகை திக்று சுத்தமான இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். மேற்கண்ட காரணங்களுக்காகவே “திக்று” வணக்கங்களில் மிகச் சிறந்தது எனக் கூறினேன்.
அன்பு மகனே!
அல்லாஹ்வின் வாயலில் நுழைவதற்கு வழிமுறைகள் உள்ளன. அவற்றை எல்லோரும் அறிய மாட்டார்கள். ஆனால் இறைநேசர்களான அவ்லியாக்களுக்கு அவை தெரியும். அவர்கள் அவனின் வாயலில் எவ்வாறு நுழைய வேண்டுமென்பதைக் காட்டித்தருவார்கள்.
அவ்வழிகளையும், அங்கு போய்ச்சேரும் ஒழுங்குகளையும் அவ்லியாக்கள் சொல்லித்தருவார்கள் நீ ஒரு வேலைக்காரனைப் பணியில் அமர்த்துமுன் அவனுக்கு பணிக்குரிய முறைகளையும், ஒழுங்குகளையும் சொல்லிக் கொடுப்பாய். அவன் நன்கு பயிற்சி பெற்ற பிறகுதான் பணியில் அமர்த்துவாய்.
ஒருவனைக் கடலில் நீந்தி விளையாட விடுவதாயின் சிறு குளங்களிலும், ஆறுகளிலும் பயிற்சி கொடுக்கவேண்டும். அதில் அவனுக்கு நல்ல பயிற்சி ஏற்பட்ட பிறகுதான் கடலில் நீந்திவிளையாட விடவேண்டும். இவ்வாறுதான் அல்லஹ்வின் பாதையில் செல்பவர்கள், முதலில் அவ்லியாக்கலிடம் அல்லது ஞானகுருவிடம் பயிற்சி பெறுவது அவசியம்.
நபீமார், வலிமார் ஞானகுருக்கள் ஆகியோரை அல்லாஹ்வை அடைவதற்கு வழிகாட்டிகளாக் கொண்டு எந்நேரமும் அவர்களிடம் உதவிதேடிக்கொள்.
அன்பு மகனே!
உனது “நப்ஸ்” மனவெழுச்சிக்கு வழிபடாமல் அதன் உணர்ச்சிக்கு மாறுசெய்து நடந்தால் நீ நிச்சயமாக வெற்றிபெறுவாய். உனது மனவெழுச்சி உனக்குச்செய்யும் துரோகத்தை எண்ணி எந்நேரமும் அழுதுகொண்டிரு. நீ தொழுவதற்காக உனது காலை எடுத்து வைக்கும்போது அது மறுப்பு தெரிவிப்பது அதன் சுபாவமாகும். அந்நேரம் நீயும் அதற்கு இசைந்து போனால் நிச்சயமாக நீ அதற்கு வழிபட்டுவிட்டாய்.
அதற்கு அடிமையாகிவிட்டாய். எனவே நீ செய்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக்கேட்டு தவறைக்கேட்டு வருந்து. எந்நேரமும் அழுது மனமொடிந்தவனாயிரு.! நீ தொழுவதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றால் உனது தலைவனான இறைவனைப் பார்க்கச் செல்கிறாய். நீ பள்ளிவாசலுக்கு செல்ல விரும்பாதபோது உனது தலைவனைப் பார்க்க விரும்பாத மடையனாகி விடுகிறாய்.
நீ அல்லாஹ்விடம் எந்த “மர்தபஹ்” அந்தஸ்தில் இருக்கிறாய் என்பதை நீ அறிந்து கொள்ள விரும்பினால் உனது தொழுகையைப் பார்த்தே உன் நிலையை அறிந்துகொள்.
அமைதியோடும் உள்ளச்சத்தோடும் இறைபக்தியோடும் அது அமைந்தால் நீ அல்லாஹ்விடம் நற்பதவி பெற்றுள்ளாய் என்பதை அறிந்து அவனுக்கு நன்றியுள்ளவனாயிருந்து கொள். இதற்கு மாறாக உனது தொழுகை அமைந்தால் நீ இறைவனின் தொடர்பிலிருந்து மிகவும் தூரத்தல் இருக்கிறாய் என்பதை உணர்ந்து அவனுடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்.
நீ அத்தர் வியாபாரியிடம் சற்று நேரம் அமர்ந்திருந்தால் உன்னிடம் அத்தர் மணம் வீசும். இவ்வாறுதான் தொழுகை என்பது அல்லாஹ்வின் திருச்சபை. அச்சபையில் நீ அமர்ந்திருந்தால் நிச்சயமாக அச்சபையின் குணம் கிடைக்கவேண்டும். அங்கு நீ அமர்ந்திருந்து அதன் குணம் உனக்கு கிடைக்கவில்லையானால் உனது உள்ளம் பிணியால் பீடிக்கப்பட்டுள்ளதென்று நினைத்துக்கொள்.
அந்தப்பிணி ஒன்றில் பெருமையாக இருக்கும் அல்லது அகப்பெருமையாக இருக்கும் . அநீதியாகப் பெருமை கொள்வோருக்கு எங்களின் அத்தாட்சிகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்க மாட்டோம் என்பது இறைவனின் திருவாக்கு.
அன்பு மகனே!
உனது தொழுகை முடிந்ததும் மிகவிரைவாக பள்ளிவாயலில் நின்றும் வெளியேறிவிடாதே! அங்கு சிறிது நேரம் தாமதித்து தொழுகையில் ஏற்பட்ட பிழைக்காக இறைவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள். ஏனெனில் தொழுகையில் ஏற்படும் சிறிய தவறுக்காகக்கூட தொழுகை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடலாம்.
ஆகையால் தொழுகை முடிந்தபின் சற்றுநேரம் பள்ளிவாயலில் அமர்ந்திருந்து “அஸ்தஃபிறுல்லாஹல் அளீம்” என்று குறைந்தளவு மூன்று தரமேனும் சொல்லிப் பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்! நீ இவ்வாறு செய்தால் உனது தொழுகையில் ஏற்பட்ட தவறுகள் மன்னிக்கப்பட்டுவிடும். குறைகள் நிறைவு செய்யப்பட்டுவிடும். இதை அடிப்படையாகக் கொண்டே தொழுகையின் பின் மேற்கண்ட வசனத்தை மூன்றுதரம் சொல்வதை மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
நபீ (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதற்கும் ஆதாரமுண்டு. தொழுகையை குறைவின்றி நிறைவேற்றிய நபீ (ஸல்) அவர்களே இவ்வாறு செய்திருக்கும்போது அதை உரிய முறையில் நிறைவேற்றாத நீ எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்.
அன்பு மகனே!
அல்லாஹ் உனக்கு உனவுதருவான என்று நீ சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் உனக்கு உனவுதருவானா என்று சந்தேகம் கொள்வது உனவுதருபவனான அல்லாஹ்வின் மீது சந்தேகம் கொள்வது போன்றதாகும். எனவே இதுவிடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்!
இவ்வுலகில் நீ விரும்பிய பொருட்கள் கிடைப்பதாலும், நோக்கங்கள் நிறைவேறுவதாலும் நீ மகிழ்ச்சியடைகிறாய்! அவை தவறிவிட்டால் கவலைப்படுகிறாய்! இது ஒரு அறிவாளியின் பண்பல்ல. ஏனெனில் இவ்வுலகில் நீ விரும்பிய பொருட்கள் கிடைத்தாலும்கூட உன்னிடம் அவை நிரந்தரமாக இருப்பதில்லை.
ஆகையால் அது கிடைத்தற்காக மகிழ்ச்சி அடைவதிலும் தவறியதற்காக கவலைப்படுவதிலும் அர்த்தமில்லை. ஆனால் உன்க்கு கிடைத்தபொருள் தவறிப்போகாத நிரந்தரமாக உன்னிடம் இருக்கக்கூடியதாயின் அது கிடைத்ததற்காக நீ மகிழ்ச்சி அடைவதிலும் அது தவறியதற்காக கவலைப்படுவதிலும் அர்த்தமுண்டு. இவ்வாறுதான் உலகத்தோடு தொடர்புள்ள நோக்கங்கள் நிறைவேறுவதும் தவறிப்போவதுமாகும்.
நற்கிரிகை புரிவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவதும் அது தவறிவிட்டால் கவலையடைவதும் அறிவுள்ளவனின் பண்பாகும். ஏனெனில் நற்கிரிகை என்பது பெறுமதியுள்ளதும், நிரந்தரமானதும், உன்னுடன் உனது மண்ணறைக்கு வந்து உனக்குப் பயன்தரக்கூடியதுமாகும். எனவே, அது கிடைக்காததற்காக நீ எவ்வளவும் மகிழ்ச்சியடையலாம் அது தவறியதற்காக எவ்வளவும் கவலைப்படலாம்.
அன்பு மகனே!
உணவு விடயத்தில் சந்தேகப்பது கூடாதென்று முதலில் கூறினேன். பின்வரும் விடயத்தையும் படித்து தெளிவு பெற்றுக்கொள். மண்ணறைகளைத் தோண்டி அங்குள்ள “கபன்” துணிகளையும் மற்றப் பொருட்களையும் திருடுவது ஒருவனின் வழக்கமாக இருந்தது.
ஒருநாள் அவன் தன் குருவிடம் சென்று நான் ஆயிரம் மண்ணறைகளைத் தோண்டியுள்ளேன் அவற்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்த “மையித்” பிரேதங்கள் எல்லாம் “கிப்லாஹ்”வை விட்டும் முகம் வேறுபக்கம் திருப்பப்பட்டதாகவே இருந்ததென்றுகூறி அதற்கான காரணம் பற்றி குருவிடம் கேட்டார். அதற்கு அந்தக் குரு அவர்கள் தமது உணவு விடயத்தில் சந்தேகப்பட்டிருந்ததே காரணம் என்று விடையளித்தார்.
எனவே உணவு விடயத்தல் சந்தேகம் கொள்வது உணவு தருபவனான அல்லஹ்வில் சந்தேகம் கொள்வதுபோன்றதென்பதை விளங்கி இவ்விடயத்தில் நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுதல் வேண்டும்.
அன்பு மகனே!
நீ அல்லாஹ்விடம் துஆப் பிராத்தனை செய்யும்போது எல்லாவகையிலும் உன்னைத் திருத்தியமைக்குமாறு கேட்டுக்கொள். உண்மையில் நீ ஓர் அடிமை. உனது எஜமான் அவனருகே வருமாறு உன்னை அழைக்கிறான். நீயோ ஒடி ஒளிகிறாய்! இது நியாயமா? இறைவனை விட்டும் தூரப்பட்டிருப்பது சொல், செயல், எண்ணம் ஆகிய மூன்றிலும் ஏற்படும்.
அல்லாஹ் உனக்கு நல்லவர்கள் மூலமும் உணவு தருவான் “காபிர்” அவனை நிராகரிப்போர் மூலமும் உணவு தருவான் “முஃமீன்” அவனை நம்பினோர் மூலமும் தருவான். எவ்வாறாயினும் உனது உயிரைக்காத்துக்கொள்ள உணவளித்துக் கொண்டேயிருப்பான். சிலநேரம் அவன் எந்த வழியில் உனக்கு உணவு வழங்குகிறான் என்பதைக்கூட நீ அறியாமல் இருந்து விடுவாய். ஒருவன் தாகத்தோடும், பசியோடும் காட்டில் தனியாகப்படுத்து உறங்கினான்.
எதிர்பாராமல் அவன் நெஞ்சில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது கண்திறந்து பார்த்தான் ஒரு காகம் எடுத்துச்சென்ற ரொட்டித்துண்டுதான் தவறிக் கீழே விழுந்திருக்கிறது. இவ்வாறுதான் இறைவன் தான் நாடியவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே உணவு கொடுப்பான். ஆகவே உணவு விடயத்தில் நீ சந்தேகம் கொள்ளாதே!
அன்பு மகனே!
உனது “நப்ஸ்” மாட்டு வண்டி போன்றதென்று விளங்கிக்கொள். அந்த மாட்டை நடத்திச் செல்பவன் நீயேயன்றி அது உன்னை நடத்திச் செல்வதில்லை. அந்த மாடு செல்ல வேண்டிய வழியிற் செல்லாமல் அது விளகிச் சென்றால் அதற்கடித்து நேரிய வழியில் செல்லவைப்பாயல்லவா, அவ்வாறே உனது நப்ஸ் மனவெழுச்சியையும் செய்துகொள்.
ஒரு மனிதனின் தாடி நரைக்கும் காலம் வந்துவிட்டால் அவனுக்கு இறைவனின் தொடர்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கவேண்டும் ஆனால் இன்று எத்தனையோபேர்கள் தாடி நரைத்தும்கூட அல்லாஹ்வின் தொடர்பின்றியே வாழ்ந்து வருகின்றார்கள். இது வேதனைக்கும் வியப்புக்குமுறியதாகும்.
ஒருவனுக்கு நாற்பது வயதுக்குப் பிறகுதான் நரை தோன்றும். வியாதியால் ஏற்படும் நரை தவிர, ஏனெனில் ஒருவன் நாற்பது வயதையடைந்துவிட்டால் அவனின் உள்ளம் சுத்தம் பெற்று வெண்மையாக இருக்கவேண்டும். இந்நிலையில் நரை அவனை நோக்கி மனிதா! உனது வெளித்தோற்றம் வெண்மையாக இருப்பதுபோல் உனது உள்ளத்தையும் வெண்மைப்படுத்திக்கொள் என்று அவனுக்கு உபதேசிக்கப்படுகிறது.
இதனால்தான் வெளித்தோற்றம் நரைத்தும் உள்ளம் வெண்மைபெறாதவன் கவலைக்குரியவன் என்றும், நரை ஒர் உபதேசி என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.
அன்பு மகனே!
அறவே பாவம் செய்யாது வாழ்ந்து மரணிப்பதற்கு நீ உன்னைத் தயார்செய்துகொள். சிலர் ஒரு பாவம் கூடச் செய்யாமல் பல்லாண்டுகள் வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பது உனக்குத்தெரியுமா? பாவம் என்றால் என்னவென்றுகூட அறியாதவர்களும் உலகில் பல்லாண்டு வாழ்ந்து மறைந்துள்ளார்கள் என்பது உனக்கு புரியுமா?
மகீனுத்தீன் அல்-அஸ்மர் (றழி) பின்வருமாறு கூறுகிறார்கள். “ஒவ்வொறுநாள் மாலையிலும் அன்று நான் பேசிய வார்தைகளைக் கணக்கிட்டுப் பார்ப்பேன். அவற்றில் வீணான வார்த்தை ஒன்றுமே ஒருக்காது. ஆனால் சில நாட்களில் மட்டும் இரண்டொரு வீணான வார்தைகள் இருக்கக் காண்பேன் அதற்காக அல்லாஹ்விடம் நான் மன்னிப்புக்கேட்டுக் கொள்வேன்.
இவர்களிடம் தொண்ணூறு வயதுள்ள ஒருவர் வந்து பெரியவரே என்னால் பாவம் எதிகமாய் ஏற்படுகிறது. அதைத் தடுக்க என்ன வழி என்று கேட்டார்? அதற்கவர்கள் இது எனக்குப் புதிய விடயம், இதுவரை நான் பாவம் செய்யவில்லை என்று கூறிவிட்டு வயோதிபரே! உன்னால் பாவம் வெளியாகாமல் அல்லாஹ்விடம்கேள்! அவன் உன் கேள்விக்கு பதில் தருவான் அல்லாஹ்விடம் கேட்டும் கிடைக்கவில்லை என்று சொல்லாதே! அவனிடம் கேட்பதற்கு ஒரு ஒழுங்கு உண்டு ஒரு முறையுண்டு அந்த ஒழுங்கோடும் முறையோடும் கேட்டால் நிச்சயமாக நீ கேட்பது கிடைக்கும்.
இதில் சந்தேகம் கொள்ளாதே! ஏனெனில் கேளுங்கள் தருகிறேன் என்று இறைவன் திருமறையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ் தனது வாக்கிற்கு ஒருபோதும் மாறு செய்யமாட்டான்.
ஆனால் நீ கேட்பது கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் அதற்கு நீ தகுதியற்றவன் என்று விளங்கிக்கொள்! தகுதியற்றவனிடம் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுப்பது பொருத்தமானதல்ல.
அல்லாவிடமிருந்து உனக்கு கிடைக்கும் விடையை மணப்பெண்ணுக்கு ஒப்பிடலாம். மணப்பெண்னை கெட்டவர்களுக்கு காட்டமுடியாது நீ உனது மனதைப் பண்படுத்தி அல்லாஹ்விடம் நல்லவனாகும்போது விடை என்ற புதுப்பெண்ணை நீ அடைந்து கொள்ளமுடியும். மனதைப் பண்படுத்தி தீயவற்றைவிட்டு நடந்தால் அல்லாஹ்வின் அவ்லியாக்களைக்கூட நீ காணலாம். அவர்களும் மணப்பெண் போன்றவர்களே.
அவ்லியாக்கள் உலகில் பரந்து வாழ்கிறார்கள் அவர்கள் குறைந்துவிடவும் மாட்டார்கள். அவர்களால் மனிதர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் உதவியும் குறைந்துவிட மாட்டாது.
இதற்குச் சான்றாக அஷ்ஷெய்கு அபுல்ஹசன் அஷ்ஷாதுலீ (றஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். “அவ்லியாக்கள் திருமணத்தம்பதிகள் போன்றவர்கள் அவர்களைப் பாவிகள் காணமாட்டார்கள்”.
அன்பு மகனே!
நல்லமல்கள்- வணக்கங்கள் செய்வது உனக்கு வெறுப்பாகவும், அதைச் செய்யும்போது உனக்கு இன்பம் கிடைக்காமலும், பாவம் செய்வதற்கு விருப்பமும், அதைச் செய்யும்போது இன்பமும் கிடைத்தால் நீ ஏற்கனவே கேட்ட பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று விளங்கி மீண்டும் பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்!
மரம் நேராக இருந்தால் கிளையும் நேராக இருக்கும். உனக்குப் பணி செய்பவன் உனக்கு வழிபட்டு நடப்பதோடு நீ சொல்வதையெல்லாம் சரியாக நிறைவேற்றி உனக்கு தகுந்த மரியாதை செய்தால் நீ அவனை அதிகமாய் விருப்புவாயல்லவா?
இவ்வாறுதான் உனது இறைவன் என்பதை விளங்கி எல்லாவிடயத்திலும் அவனுக்கு பணிந்து நடந்துகொள். வணக்கம் செய்யும்போது ஆர்வத்தோடும், அமைதியோடும் செய்துகொள் பூமியில் கிடக்கும் உணவைக் கோழி எவ்வாறு கொத்தி எடுக்கின்றதோ அவ்வாறு வணக்கம் செய்யாதே.
அன்பு மகனே!
உனது நப்ஸ்- மனவெழுச்சியோடு உனக்கு எநதவொரு பயனும் கிடைப்பதில்லை என்பதை அறிந்தும் அதோடு தொடர்புடையவனாயிருக்கிறாய்! இது உனது அறியாமையா? இல்லையா? இதை ஒர் உதாரணம் மூலம் கூறுகிறேன்.
சரியாகப் புரிந்துகொள். நீ ஒருவனை விரும்பி அவனோடு சில நாட்கள் நெருங்கிப் பழகிய பின்னும் உனக்கு அவனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதை அறிந்தால் அவனேடுள்ள தொடர்பை துண்டித்து விடுவாயல்லவா? ஆனால் நீ உனது “நப்ஸ்” உடன் பல்லாண்டுகாலம் நெருங்கிப் பழகி வந்துள்ளாய்.
அது உனக்குச் செய்யும் சதியையும் நன்கறிந்துள்ளாய். அதனால் உனக்கு எந்தப் பயனுமில்லை என்பதையும் விளங்கியுள்ளாய். இவ்வாறிருந்தும் அதன் தொடர்பை துண்டிக்காமலேயே இருந்து வருகிறாய்! நீ புத்தியுள்ளவனா? மடையனா? என்பதை சற்று சிந்தனை செய்துபார். எனவே நீ உனது “நப்ஸ்”யை நோக்கி எனது நப்ஸே! என்னை விட்டுப் பிரிந்து உனது இறைவனிடம் சென்று அவனின் திருப்தியைப் பெற்று திரும்பி வா என்று கூறி வழியனுப்பிவை!
அன்பு மகனே!
அல்லாஹ்வின் தண்டனையை அறியாத மக்களே அவனுக்கு மாறுசெய்து நடக்கத்துணிவர். நரக வேதனை எப்படியானதென்று மனிதன் அறிந்தால் அல்லாஹ்வுக்கு அணுவளவும் மாறுசெய்ய மாட்டான். நல்லமல்கள் செய்தவர்களுக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஆயத்தம் செய்துள்ள இன்ப சுகங்களை மனிதன் அறிந்தால் பாவத்தை திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.
அன்பு மகனே!
நீ ஒருவனை விரும்புவதாயின் அவனை அல்லஹ்வுக்காகவே விரும்பிக்கொள், அதேபோல் அவனுக்காகவே ஒருவனை வெறுத்துக்கொள் உலக இன்ப சுகங்களை விரும்புவோரை நீ விரும்பினால் அவர்கள் உன்னையும் அந்தக் குப்பை மேட்டுக்கே அழைத்துச் செல்வார்கள். நாய் குப்பை மேட்டுக்குச் செல்லுமேயன்றி வேறெங்கும் செல்லாது.
மறுமையை விரும்புவோரை நீ விரும்பினால் அவர்கள் உன்னை அல்லாஹ்வின் பால் அழைத்துச் செல்வார்கள். மந்திரி அரசனின் வேறெங்கு செல்வான்? உனது மனவெழுச்சிக்காக அழகிய மனைவியையும், சுவையான உணவையும் விரும்புவதுபோல் உனது ஆத்ம வளர்சிக்காக ஆன்மீக வழி நடாத்துபவர்களான அவ்லியாக்களை விரும்பிக்கொள்.
அன்பு மகனே!
உனக்கு மூன்று நணபர்கள் இருக்கிறார்கள் அவர்களில் இருவர் உன்னுடன் நெருக்கமாயிருப்பார்கள் நீயும் அவ்விருவரையும் மிக விரும்புவாய் அவ்விருவருமின்றி உனது வாழ்வில் இன்பமே இருக்காது சிலவேளை அவ்விருவரில் யாராவது தவறிவிட்டால் அழுது கண்ணீர் வடிப்பாய் ஆனால் அவ்விருவரும் இறுதியில் உன்னைவிட்டும் பிரிவார்களேயன்றி மண்ணறைக்கும் உன்னுடன் வந்து உனக்கு உதவி செய்பவர்களல்லர். அவ்விருவரும் நீ சேமித்த பணமும், உனது குடும்பமுமாகும்.
மற்ற நண்பன் உலகில் உனக்கு உதவி புரிவதுடன் மண்ணரைக்கும் வந்து உதவி செய்வான் இந்த நண்பன் இவ்வாறெல்லாம் உனக்கு உதவி செய்தும்கூட நீ அவனை வெறுத்துக் கொண்டேயிருக்கின்றாய்.
அவன் தவறினால் அதற்காக அழவோ கவலைப்படவோ மாட்டாய் அவர்தான் நீ செய்த நல்லமல்கள், வணக்கங்கள் அவன்தான் உன்னைப் பிரியாமல் இறுதிவரை உனக்கு கைகொடுத்துக் காப்பாற்றுவான். எனவே துரோகிகளான இரு நண்பர்களுடன் தேவைக்கேட்ப மட்டும் தொடர்பு வைத்துக் கொண்டு இறுதிவரை கைகொடுக்கும் நண்பனை விரும்பி அவனுடன் இருந்துகொள்.
தொடர்ந்து வரும்...