"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும்
அன்பு மகனே!
உலகின் வெளித்தோற்றம் கவர்ச்சியானதாகவிருப்பதைக் கண்டு மயங்கிவிடாதே! அதன் வெளித்தோற்றம் கவர்ச்சியாயிருந்தாலும் அதன் உள்தோற்றம் மிக மோசமானதும், அருவருப்பானதுமாகும். கருங்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட, பார்வைக்கு அருவருப்பான ஒரு பெண் அழகிய பட்டாடை உடுத்து, தங்கவைர நகைகள் அணிந்து தோற்றமளிப்பது போன்றதே இந்தத் துன்யாவின் கதை என்பதை அறிந்துகொள்.
குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவளோடு உடலுறவு கொள்ள விரும்புவாயா?
அன்புமகனே!
உண்மை விசுவாசி யாரென்று உன்னிடம் கேட்கப்பட்டால் “நப்ஸ்” உடைய குறைகளை அறிந்து அதைத்திருத்தும் வேலையில் கவனமெடுப்பவனும் பிறரின் குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பவனுமே உண்மை விசுவாசி என்று பதில்கூறு.
சதிகாரன் யாரென்று உன்னிடம் கேட்கப்பட்டால் தனது “நப்ஸ்” சுத்தமானதென்று சொல்லிக்கொண்டு பிறரைகுறை கூறுபவனே சதிகாரனென்று சொல்.
அன்பு மகனே!
நல்லவர்கள் தீயவர்களுடன் நெருங்கிப் பழகுதல் கூடாது. ஏனெனில் அவ்வாறு பழகினால் பாவிகள் தமது பாவத்தை உணர்ந்து நல்வழிக்கு வராமல் தொடர்ந்தும் பாவம் செய்து கொண்டேயிருப்பார்கள்.
ஆகையால் நல்லவர்கள் பாவம் செய்பவர்களைக் கண்டால் முகத்தில் மட்டும் வெறுப்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அவர்கள் சிந்தித்து பாவத்தை விட்டு நடக்க முன்வருவார்கள். பாவம் செய்கின்ற ஒருவனை நல்லவர்கள் ஒதுக்கி வைத்தால்தான் அவன் சிந்திக்கவும், பாவத்தை விட்டு நடக்கவும் வழியேற்படும்.
அல்லாஹ் உனக்கு நல்வழியைத் திறந்து தந்தால் நீ வழிகேட்டின் பக்கம் செல்லமாட்டாய். பெரிய மாளிகையின் வாயில் திறக்கப்பட்டிருக்கும்போது சிறிய குடிசையில் நுழைவதற்கு விரும்புவாயா? அல்லாஹ் உன்னை நண்பனாக தெரிவு செய்து கொண்டால் நீ மற்றவர்களை நேசிக்க முன்வரமாட்டாய்.
அன்பு மகனே!
நீ பிறரை உனது மக்களாக்க் கணித்து நடந்துகொள். உனது மக்கள் இறைவனுக்கு மாறுசெய்து நடப்பதை நீ கண்டால் அவர்களுக்கு நல்லுபதேசம்கூறி நல்லவழியின்பால் அழைப்பாய்.
முகத்தில் மட்டும் வெறுப்பை காட்டிக் கொள்வாயே அன்றி, அவர்களை மனதால் வெறுத்துவிட மாட்டாய். இவ்வாறே பிறருடனும் உனது நண்பர்களுடனும் நடந்து கொள். நீ முகத்தில் கூட வெறுப்பைக் காட்டாமல் அவர்களுடன் மிகநெருங்கி அன்பாய் பழகினால் அவர்கள் பாவத்தை விட்டு நடக்க முன்வரமாட்டார்கள்.
நல்லவனொருவன் பாவம் செய்யும்போதுதான் பல குறைகளும், இன்னல்களும் அவனுக்கு ஏற்படுகின்றன. உதாரணமாக மனிதர்கள் அவனை இழிவாகப் பேசுகிறார்கள். அவனை பகிடி பண்ணுகிறார்கள் இவ்வாறு செய்வது தவறு.
மார்க்கப்பற்றோடு வாழ்ந்து வந்த ஒருவன் எதிர்பாராமல் பாவம் செய்துவிட்டால், அவன் பெரும் சோதனையில் மாட்டிக் கொண்டவனாகின்றான், அந்நேரம் அவனை மற்றவர்கள் அவமானப் படுத்தவோ, கேவலப்படுத்தவோ கூடாது.
ஒரு மகன் பாவத்தில் மாட்டிக் கொண்டநேரம் தகப்பன் அவனோடு நடந்துகொள்வானோ அவ்வாறே ஒருவன் தனது நண்பர்கள் மற்றவர்கள் பாவத்தில் மாட்டிக் கொண்டநேரம் நடந்து கொள்ளுதல் வேண்டும். வெளியில் வெறுப்பைக் காட்டிக் கொண்டு அவனுக்காக பிரார்த்திக்கவும் வேண்டும்.
அன்பு மகனே!
பணக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாதே! அவர்களின் வாழ்கை பற்றி நீ சிந்திக்காதே. இதற்கு மாறாக நீ நடந்தால் உன்போன்ற அறிவீனன் வேறுயாரும் இருக்க முடியாது.
ஏனெனில் பணக்காரர்கள் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்ததில் சிந்திக்கிறார்கள். நீயோ உனக்குகுக் கொடுக்கப்படாததில் சிந்தித்து உனது உள்ளத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய். புரிகிறதா?
அன்பு மகனே!
உனது இரு கண்களும் நோயுற்றால் அதற்கு உடனுக்குடன் மருந்து செய்து குணமாக்க முயல்கிறாய். ஆனால் உனது இருகண்களை விடப்பெறுமதிமிக்க உனதுள்ளம் பெருவியாதியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு மருந்து செய்து அதைக் குணமாக்க முயலாமல் உன்மனம் போனபோக்கில் செல்கிறாய். ஆரம்ப வயதையும், கடந்த காலத்தையும் வீணாக்கிவிட்டேன் இதற்குப் பிறகு “இபாதத்” நற்கிரிகை செய்து என்ன பயன்? என்று எண்ணி பின்னுள்ள வயதையும், காலத்தையும் வீணாக்கி விடாதே, கடந்த காலம் வீணாகச் சென்றாலும் எதிர் காலத்திலாவது நற்கிரிகை புரிந்து நல்லவனாகிவிடு.
ஒரு பெண்ணுக்கு பத்து குழந்தைகள் இருந்தன. அவற்றில் ஒன்பது குழந்தைகள் ஒரே நேரத்தில் இறந்து விட்டன. ஒரு குழந்தை மட்டுமே எஞ்சியது, அந்நேரம் அப்பெண் ஒன்பது குழந்தைகள் மீதும் வைத்திருந்த அன்பை ஒரு குழந்தையின் மீது காட்டுவாளல்லவா? இதேபோல் உனது கடந்த காலத்தை அதாவது தவறிய காலத்தின் வணக்கத்தை எஞ்சியகாலத்தில் செய்துகொள்.
நீ உனது தாயின் வயிற்றிலிருந்து வெளியான நாளில் இருந்து உனது வயதைக் கணக்கிட்டு வருகிறாய். இது தவறு. நீ எப்போது இறைவனைத் தெரிந்து கொண்டாயோ அன்றுதான் நீ உலகில் பிறந்தாய் என்று எண்ணி அதிலிருந்து உனது வயதைக் கணக்கிட்டுக்கொள்.
அல்லாஹ்வை அறியாமலும், நப்ஸ்-மனவாசைக்கு வழிபட்டும் நடக்கும் காலம்வரை நீ உண்மை மனிதன் இல்லை. இந்நிலையில் உனது நூறுவயது கடந்திருந்தாலும் அந்தவயது மிருகவாழ்வு போன்றுதான் கழிந்துள்ளதென்பதை நன்கறிந்து கொள். நீ மரணிக்க இன்னும் சிறியகாலமே எஞ்சியுள்ளதென்பதை உணர்ந்து நற்கிரியைபுரிய முன்வா.
அன்பு மகனே!
நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு உனக்குத்தெரியும். ஆயினும் அதை விபரமாய் சொல்கின்றேன் கேட்டறிந்து உனது உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்.
நல்லவர்கள் யாரெனில் ஒருவன் பாவத்தில் ஈடுபடுவதைக் கண்டால் நாவினால் மட்டும் அவனுக்கு எதிர்புக்காட்டி மனதால் அவனின் நேர்வழிக்குப் பிராத்தனை செய்வார்கள். இவர்கள்தான் நல்லவர்கள்.
கெட்டவர்கள் யாரெனில் ஒருவன் பாவம் செய்வதைக் கண்டால் நாவாலும், மனதாலும் அவனை வெறுப்பதுடன் நால்வருக்கு மத்தியில் அவனை அவமானப்படுத்துவார்கள், இவர்கள்தாம் கெட்டவர்கள்.
உண்மை விசுவாசி யார் தெரியுமா? பாவம் செய்பவனை அழைத்து அவனுக்கு இரகசியமாக உபதேசம் செய்து வெளியரங்கத்தில் அவனின் குறைகளை மறைப்பவனாகும். இதற்கு மாற்றம் செய்பவன். “முனாபிக்” நயவஞ்சகனாவான்.
இவனின் மனக்கண் ஒருபோதும் திறக்காது. ஒருவன் பாவம் செய்வதைக் கண்டு அவனை பலர் மத்தியில் அவமானப் படுத்துபவன் எவ்வாறு நல்லவனாக முடியும். எவ்வாறு அவனின் உள்ளம் சுகமடையும் அவனின் “கல்பு” மனம் என்ற வீட்டுக்கு இறையருள் எவ்வாறு வரும்! நாய் உள்ள வீட்டில் மலக்குகள்-அமரர்கள் பிரவேசிக்க மாட்டார்கள் என்பது நபீ மொழியல்லவா?
அன்பு மகனே!
நற்குணத்தை குடித்துக்கொள்! கறைபடித்த இரும்பை மண்ணென்ணை கொண்டு சுத்தம் செய்வதைப் போன்றும், அசுத்தமான செம்புப் பாத்திரங்களை சாம்பர் கொண்டு சுத்தம் செய்வதும் போன்று “தவ்பா” பாவமண்ணிப்புக் கேட்டல் என்ற மண்ணென்னை கொண்டும், “திக்று” என்ற சாம்பர் கொண்டும் உனது உள்ளத்தை சுத்தம் செய்துகொள். இவ்வாறு நீ செய்தால் ஒளிக்கதிர் நிச்சயமாக உனதுள்ளத்தில் வீச ஆரம்பிக்கும்.
நிலத்தை சரியாகப் பண்படுத்திவைத்துக் கொண்டால் அதில் எந்த விதையை நாட்டினாலும் அது உடனே முளைத்துவிடுமல்லவா? இறைவனுக்கு வழிபடுதல் என்ற இயந்திரத்தால் உள்ளம் என்ற உனது பூமியை உழுது பண்படுத்தி வைத்துக்கொண்டால் “ஹிதாயத்” நேர்வழி என்ற விதை அதில் முளைக்குமென்பதில் சந்தேகமில்லை.
ஒருவனைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அவனிடம் ஒரு பெரியாரைப்பற்றி கேட்டுப்பார். அவன் அப்பெரியாரின் நற்கிரியை பற்றிக் கூறாமல் அவரின் குறைகளையும், அவர் முன்னொரு காலத்தில் செய்த தவறுகளையும் எடுத்துக் கூறினால் அவனின் உள்ளம் பாழடைந்துவிட்டதென்பதை விளங்கிக்கொள்.
இன்னொருவனிடம் ஒரு பெரியார் பற்றிக் கேட்கும்போது அவர் நல்லவரென்றும், அவர் முன்பு செய்த தவறுகள் அறியாமைக் காலத்தில் நிகழ்ந்தவை என்றும் அவரைப்பற்றி நல்ல முறையில் கூறினால் –அவனின் உள்ளம் பாதுகாக்கப்பட்டதும், நேர்வழிபெற்றதுமென்றும் விளங்கிக்கொள். ஏனெனில் ஒர் உண்மை விசுவாசி மற்ற முஸ்லிமின் மானத்தைப் பாதுகாத்து நடப்பவனாவான்.
அன்பு மகனே!
தற்போது உனக்கு ஐம்பது வயதாகி விட்டது. அவ்வைம்பது வருடமும் வீணாக கழிந்து விட்டது. இனிமேலாவது தவறிய காலத்தின் பயனைப்பெற விரும்பினால் பினவரும் ஓதலை அதிகமாக ஓதிக்கொள். உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்படும் உனக்கு அறுபது வயதென்று உனது விதியிலிருந்தால் இந்த ஒதலால் உனது வயது நீளமாக்கப்படும். இதனால் தவறிப்போன காலத்தை நீ அடைந்து கொள்ள முடியும்.
ஓதல் இதோ...
ஸுப்ஹானல் அழீமி வபிஹம் திஹி அதத கல்கிஹீவரிழா நப்ஸிஹீ வசினத அர்ஷினா வமிதாதகலி மாதிஹீ.
இந்த ஒதலை தினமும் ஓதிவா, உனது வயதில் பல வருடங்கள் நீட்டப்படும், கூட்டப்படும்.
“ஸுன்னத்” ஆன நோன்பும், இராவணக்கமும் செய்யத்தவறியிருந்தால் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதன் மூலம் அதையும் அடைந்து கொள்ளலாம். அவர்கள் மீது ஸலவாத் சொல்வதால் அதை எவ்வாறு அடைந்து கொள்ள முடியும் என்று நீ நினைக்கிறாய் அல்லவா? பின்வரும் விளக்கத்தைப் படித்து உனது சந்தேகத்தை நீக்கிவிடு.
“நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்பவன் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்கிறான்” என்பது நபீ மொழி.
அன்பு மகனே!
உனது தகுதிக்கேற்றவாறே நீ சொல்லும் ஸலவாத்திற்கு பயன் கிடைக்கும். அல்லாஹ் உன்மீது ஸலவாத்துச் சொன்னால் பலகோடி நன்மை கிடைக்கும். இந்த நன்மையாவும் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதற்கு கிடைக்குமேயன்றி அல்லாவுக்குக் கிடைப்பதில்லை.
உதாரணமாக, “ஸுப்ஹானல்லாஹ்” ஒரு வசனம்தான் ஆனால் இதைச் சொல்பவர்களின் நிலையைப் பொறுத்து நன்மை கிடைக்கும். ஆன்மிகத்தில் உச்சியில் நிற்கும் ஒருவன் சொல்வதற்கும், அதன் முதற்படியில் நிற்கும் ஒருவன் சொல்வதற்கும் இடையில் வேறுபாடுண்டு.
முதற்படியில் நிற்பவர் சொன்னதற்காக அவருக்கு ஆயிரம் நன்மைகள் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டால் உச்சியில் நிற்பவர் சொன்னதற்காக ஒரு கோடி நன்மை கிடைக்கும் என்பதில ஐயமில்லை.
எனவே அல்லாஹ்வின் தரத்திற்கேற்றவாறு அவன் உன்மீது ஸலவாத் சொல்வதனால் உன்னுடைய கோடிக்கணக்கான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான நன்மைகள் அதிகமாக்கப்படுகின்றன. இதனால் கடந்த காலத்தில் செய்யத் தவறிய “ஸுன்னத்” தான் நோன்பு மற்றும் கிரிகைகளின் பலன்களும் உனக்கு கிடைக்கின்றன.
அன்பு மகனே!
அல்லாஹ்வின் நினைவோடு கலந்த வாழ்வு மிகவும் இன்பமுள்ளதாகும். இதோ அதன் விபரத்தைச் சொல்கிறேன் படித்தறிந்து கொள். அது நிகரற்ற இன்பத்தை வழங்கும். வாழ்வாகும்.
நீ அதை அனுபவித்தறிந்து கொள்ள முடியுமே அன்றி அது எவ்வாறிருக்குமென்று பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது. தேனைச் சுவைத்தால்தான் அதன் சுவை தெரியுமேயன்றி பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது.
அன்பு மகனே!
காட்டில் வாழும் மிருகங்களிற் சில திடீரென்று கொல்லப்படுகின்றன. இன்னும் சில மரங்களும் வெட்டப்படுகின்றன. நீரில் வாழும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன. ஆனால் அங்கு வாழும் சில மிருகங்களும், மரங்களும், மீன்களும் மனிதர்களின் தாக்குதலுக்கு உட்படாமல் தாமாகவே செத்துவிடுகின்றன. இதற்கான காரணம் என்ன? சிந்தனை செய்து பார்த்தாயா? இதோ சொல்கிறேன் கேள்!
உலகில் ஒவ்வொறு வஸ்துவும் இறைவனை நினைத்துக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் மனிதர்களில் சிலர் இறைவனை மறப்பதுபோல் அவற்றிலும் சில சிலநேரம் அவனை மறந்திருக்கின்றன. “இறைவனின் நினைவின்றி வாழும் பொருட்கள் வெட்டப்டும்.” என்பது நபீமொழி
விழித்துக் கொண்டிருப்பவனின் வீட்டுக்குள் திருடன் வரமாட்டான் அல்லவா? பிரயாணத்திற்கான நேரம் நெருங்கினால் அதற்கான சாமான்களை தயார் செய்யவேண்டும் அல்லவா? பிறர் செய்யும் நற் செயலால் நமக்குப்பயன் கிடைக்காதென்பதை அறிந்தால் நாம் நற்செயல் புரியவேண்டுமல்லவா?
நீ ஒரு பிணையாளை நியமித்து அவனிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும்போது. அவன் உனக்குத் துரோகம் செய்கின்றான் என்பதை நீ அறிந்தால் உடனே பணியிலிருந்து அவனை நீக்கிவிடுவாயல்லவா? அதேபோல் உனது நப்ஸ் உனக்குத் துரோகம் செய்யும்போது அதை உடனே உன்னிலிருந்து அகற்றிவிட்டு அது உன்னை மிஞ்சும் வழிகளைத் தடைசெய்துவிடு.
உன்னில் மனவாசை, துரோகம் போன்ற தீக்குணங்கள் இருக்கக்கண்டால் அவை உனது தன்மையென்று நினைத்துக்கோள். இதற்கு மாறாக உன்னில் நல்லெண்ணம், நம்பிக்கை போன்றவை வளரக் கண்டால் அவை அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று விளங்கிக்கொள்.
நீ குடியிருக்கும் ஊரின் பூமியில் வெங்காயச் செடி, மற்றும் கத்தரிச் செடி போன்றவை முளைப்பது வளக்கம். அந்நேரம் இது நமதூர் பூமியின் குணமென்று நீ சொல்வாய், ஆயினும் திடீரென்று அந்தப் பூமியில் அப்பிள், முந்திரிகை போன்ற செடிகள் முளைத்தால் அது அல்லாஹ்வின் கொடை என்று சொல்வாய்.
அன்பு மகனே!
உனது ஈமான்- விசுவாசம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. நீ பாவம் செய்யும்போது உனது ஈமான் எவ்வாறிக்குமென்று நீ அறிந்திருக்க மாட்டாய் என்று எண்ணுகிறேன்.
இங்கே அதன் விபரத்தைப் படித்துப்பார் சூரிய கிரகணம் ஏற்படும்போது சூரியனின் ஒளி மறைந்திருப்பதைப் போன்றும், எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கை ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருக்கும்போது அவ்வெளிச்சம் மறைந்திருப்பது போன்றுமாகும். அதாவது அதன் சுயஒளி இருந்தவாறே இருக்கும் ஆனால் அதன்மேல் ஏற்பட்ட திரையின் விளைவாக ஒளி மட்டும் தெரியாமல் போய்விட்டது.
திரைக்கு மேல் திரையாக மீண்டும் பல திரை ஏற்பட்டால் ஒளி வெளிச்சம் குறைந்து கொண்டே போகும். எதிர்பாராமல் அணைந்தாலும் வியப்பில்லை. எனவே பாவம் என்ற திறை உள்ளம் என்ற விளக்கின்மேல் ஏற்பட்டாமல் பாதுகாத்துக்கொள்.
அன்பு மகனே!
ஈமான் பற்றிய விளக்கம் உன்னிடமிருந்தால் பாவத்தண்டை நெருக்கவேமாட்டாய். அது பற்றிய விளக்கம் உன்னிடத்தில் இல்லாதிருப்பதனால்தான் இராப்பகலாய் பாவம் செய்யத் துணிகிறாய் உனது “நப்ஸ்” க்கு ஒர் உதாரணம் சொல்கிறேன் அதை அறிந்த பிறகாவது அதை நம்பி வாழ்வதை விடு.
உனது “நப்ஸ்” தவணை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கடன்காரனைப் போன்றது. அவனைவிட மிகக் கெட்டதாகும். ஏனெனில் கடன்காரன் நாளை தருகின்றேன் நாளை மறுநாள் தருகின்றேன் என்று தவணை சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட என்றாவதொரு நாள் அவன் கொடுத்தேவிடுவான்.
ஆனால் உனது “நப்ஸ்” உன்னை நாளைமுதல் பாவச்செயலுக்கு தூண்ட மாட்டேன், இன்று மட்டும் எனக்குப் பணிந்து வா என்று தவணை சொல்லிக் கொண்டேபோகும். மரணம் வரை இதுதான் கதை தவிர, உனக்கு தந்த வாக்கை நிறைவேற்றமாட்டாது. “நப்ஸ்” கடன்காரனைவிட மோசமானதென்பது புரிகிறதா?
ஷாத்தானும் “நப்ஸ்” போன்ற கொடிய விரோதிகளின் ஒருவனே. மனிதர்களில் உனக்குள்ள விரோதிகளை விடவும் அவன் மிகப்பெரிய விரோதியாவான். ஏனெனில் உனது விரோதி உனக்கு எவ்வளவுதான் விரோதம் காட்டினாலும் என்றாவதொருநாள் அவன் உன்னோடு பேசிவிடுவான். ஆனால் ஷாத்தானோ ஒருபோதும் உனக்கு பணிந்துவர மாட்டான். இதனால்தான் அவன் உனது விரோதிகளில் மிகப்பெரியவனென்று சொன்னேன்.
எதிர்புக் காட்டுவதில் மனவாசைபோல் சக்தியுள்ளது வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அருள் வந்திறங்காது தடைக்கல்லாயிருப்பதில் பெருமைபோன்று வேறொன்றுமில்லை. பள்ளப்பகுதிக்குத்தான் நீர் செல்லுமே அன்றி மேட்டைநோக்கி நீர் போகாது. பெருமை என்ற மேடுள்ள உள்ளத்தில் அருளெனும் மழை இறங்காது. இதேபோல் பெருமையுள்ளோரின் மேடான உள்ளத்திலிருந்து பணிவுள்ளோரின் உள்ளமெனும் பள்ளத்திற்கு அருள்மழை விரைந்து செல்கின்றது.
“கிப்று” பெருமை என்றால் உண்மையை மறைத்தல் உண்மையை மறைத்தல் என்று வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. பெருமையுள்ளோர் என்றால் உண்மையை மறைப்போன் என்பது பொருள். தவிர, அழகிய உடை உடுத்து அழகான தோற்றத்தில் வாழும் எண்ணமுள்ளவன் பெருமையுள்ளவனாக மாட்டான். பெருமை என்றால்
“பதறுல்ஹ்கிவகம் துன்னாஸி” உண்மையை மறைப்பதும், பிறரை கீழ்தரமாக நினைப்பதுமாகும் என்று பெருமைக்கு வரைவிலக்கணம் சொல்லப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பெருமையாரிடமிருக்கும்? பெருமைக்கு நான் கூறிய வரைவிலக்கணத்தை கருவாகக்கொண்டாராய்ந்தால் பணக்காரர்களிடமும், அரசர்களிடமுமட்டுமே பெருமை இருக்குமென்று கொள்ள முடியாது. அன்றாட வாழ்கைநடத்த வசதியற்ற ஏழையிடமும் பெருமையிருக்குமென்பது தெளிவாகும்.
அன்பு மகனே!
சிறைச்சாலையில் கைதியாக இருப்பவன் மட்டும்தான் அரச துரோகி என்று நினைத்துக் கொள்ளாதே! அல்லாஹ்வுக்கு மாறுசெய்து அவனின் பரிசுத்த இராஜியத்தில் பாவம் என்ற அசுத்தத்தை ஏற்படுத்துபவனும் இராஜதுரேகியேயாவான்.
பிணமெனக் கருதப்படும் இவ்வுலகில் பணத்தை செலவிட்டவர்களே அதிகமாயுள்ளனர். ஆனால் சத்தியத்தை நிலைநாட்டத் தரணியில் குருதி சிந்தியோர் மிகக்குறைவாகவே உள்ளனர். அறிவிலி யாரேன்று உனக்குத் தெரியுமா? இதோ செல்கிறேன் அறிந்துகொள்.
தனக்கும் இறைவனுக்கும் தடைகல்லாயிருந்த ஒன்று நீங்கிவிட்டதற்காக கவலைப்படுபவனே யதார்த்தத்தில் அறிவிலியாவான். அத்தடைகல்தான் பணம், ஏனெனில் உனக்கு அல்லாஹ்வின் நினைவை தடுத்துக் கெண்டிருந்தது பணம்தான். தடை நீங்கியதற்காக கவலைப்படுபவன் அறிஞனா? அறிவிலியா? இத்தகைய தடை நீங்கியதற்காக மகிழ்ச்சியடைய வேண்டுமெயன்றி கவலைப்படுவது அறிவுடமையல்ல.
தொடர்ந்து வரும்...


Posted in:
