"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும்
ஆசையினால் மனம் அலை மோதுகிறது. நற்கிரியைகள் மீது ஒருவகை வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. வணக்கம் செய்தாற்கூட அதில் உனக்கு இன்பம் கிடைப்பதில்லை. இறைவனின் ஒளி உனது உள்ளத்தில் இறங்குவதில்லை. மனஇச்சை என்ற அரசன் உனது உள்ளத்தில் ஆட்சி செய்ய அமர்ந்து விட்டான்.
மறுமையை மறந்துவிட்டாய். பாவம் செய்ததால் உனது பெயரே மாறிவிட்டது “ஸாலிஹ்” நல்லவன் என்று அழைக்கப் பட்ட நீ “தாலிஹ்” கெட்டவனென்று அழைக்கப்படுகிறாய். உனது பெயர் இவ்வாறு மாற்றமடையும் போது கவலைப்படுகிறாய். வேதனையடைகிறாய்.
கவலைப்பட வேண்டியதும், வேதனைப்பட வேண்டியதும் இதுவல்ல, இன்னொன்று உண்டு அதை நினைத்துக் கவலைப்படு. கண்ணீர்வடி பாவம் செய்யுமுன்னர் நீ செய்தவணக்க வழிபாட்டில் உனக்கு இன்பம் கிடைத்ததல்லவா? இப்போது அந்த இன்பம் எங்கே? வணக்கத்தில் நீ இன்பம் எங்கே? வணக்கத்தில் நீ இன்பத்தை இழந்தது சாதாரண இழப்பா? இதற்கு நிகரான இழப்பு வேறென்ன இருக்கிறது? நீ உனது மனைவி மக்களை இழப்பதைவிட இது பேரிழப்பு என்பது உனக்குப் புரிகிறதா? சற்று சிந்தனை செய்துபார்.
இதுமட்டுமல்ல, பாவத்தின் முன்னர் அல்லஹ்விடம் “ஸாலிஹ்” என்ற பெயர் பெற்று உயர்பதவியில் இருந்தாய் பாவத்தின் பின்னர் “தாலிஹ்” அல்லது “பாஸிக்” என்ற பெயர் பெற்று கீழ் பதவிக்கு இறங்கிவிட்டாய். எனவே, மேற்கண்ட விளைவுகளைக் கவனத்திற்க்கொண்டு பாவச்செயல்களைத் தவிர்ந்து நடந்துகொள்.
பாவச் செயலுக்காக உனது பொறுமையை இழக்கநேரிடும்போது அல்லாவிடம் உதவிதேடிக்கொள். உனது நம்பிக்கை, ஆதரவு யாவையும் அல்லாஹ்விடமே வைத்துக்கொள். நீ தலையில் மண்ணைத் தூவிக்கொள். பாவத்திலிருந்து நன்மையின்பால் வழிநடாத்துமாறு எந்நேரமும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்.
வலீமார்கள் நல்லடியார்களின் சமாதிக்கு நடந்து சென்று இறைவா! இச்சமாதியில் வீற்றிருக்கும் பெரியோர்களின் உதவியால் உன்னைவழிபட்டு நடக்கும் நற்பாக்கியத்தைத்தா என்று கேட்டுக்கொள்.
அன்புமகனே!
சிலநேரம் உனக்கு நல்லெண்ணம் ஏற்படலாம். அதாவது “நப்ஸ்” மனவாசைக்கு வழிபட்டு நடக்கக்கூடாது. அதோடு போராடி அதைத் தோற்கடித்து அதன் சக்தியைக் குறைக்கவேண்டும். உனது இவ்வெண்ணம் நல்லெண்ணமே இதுவரவேற்கத்தக்கது.
ஆனால் மனவாசையுடன் போராடும் வழிதெரியாமற் போராடப் போகிறாய். இது கவலைக்குரிய விடயம் “நப்ஸ்” மனவாசை என்ற மிருகத்துடன் போராடுவதாயின் அதைத் தோற்கடிக்கும் வழிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதவசியம் ஏனெனில் அது மிகவும் சக்தி பெற்றதும், அதிக தந்திரமுள்ளதுமான மிருகமாகும்.
அதன் சூழ்ச்சியால் அது உன்னையே தோற்கடித்து விடக்கூடும். எனவே அதன் சூழ்ச்சிபற்றி நன்றாக அறிந்தபின்னரே அத்தோடு போராடவேண்டும். ஒரு எதிரியுடன் போராடி வெற்றி பெறுவதாயின் பல சூழ்ச்சிகளைக் கையாண்டு அவனின் உடலிலுள்ள சக்தியை முதலில் குறைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே எதிரியை எழிதில் வெல்ல முடியும்.
நீ உனது மனவாசைக்கு அதுதேடும் உணவைக் கொடுத்துக் கொண்டே அதோடு போராடப் போகிறாய். அது பயங்கர மிருகம் சக்திமிக்க புலிபோன்றது. அதுகேட்கும் உணவைக் கொடுத்துக் கொண்டே அதோடு போராட நினைக்கிறாய்.
நீ எவ்வாறு வெற்றி பெறுவாய் நிச்சயமாக நீ அறிவற்றவனே! வழிதெரியாமல் தடுமாறுகின்றாய் ஆழ்கடலின் அடியிலுள்ள விலையுயர்ந்த முத்தை எடுத்து மனிதர்கள் போன்றுகின்ற கோடீஸ்வரனாக வேண்டுமென்ற எண்ணம் உன்னிடம் உண்டு.
ஆனால் கடலில் நீந்துவதற்குத்தான் உனக்குப் புரியவில்லை. நீச்சல் தரியாமல் முத்தெடுப்பது எங்கனம்! நீச்சல் தெரியாத நிலையில் முத்தெடுக்க கடலில் இறங்கினால் நீ அதில் மூழ்கிப்போவாய். தவிர வெற்றியுடன் திரும்பமாட்டாய். “நப்ஸ்” என்ற மிருகத்துடன் போர் செய்து வெற்றிபெற நினைத்தால் போராடும் முறையை முதலில் நீ அறிந்துகொள்ளவேண்டும்.
நீ புலியுடன் போராடி அதைவென்று வெற்றிக்கொடி நட்டவிரும்பினால் அதைச் சில நாட்களுக்கு பட்டினியில் வைத்திருந்து அதன் சக்தி குறைந்த நேரம் போர் செய்துபார். நிச்சயமாக வெற்றி பெறுவாய்.
அல்லாஹ்வாலும் மற்றும் அறிஞர்களாலும் புலியுடன் போராடி வென்ற சிகாமணியெனப் போற்றப்படுவாய். உன்னைக்கண்டால் புற்பூண்டுகள் கூட மரியாதை செய்யும் “வல” அல்லாஹ்வின் அன்பன் என்றும் அழைக்கப்படுவாய். மனவாசையுடன் போராடி வெற்றிகண்டவனென்று வரலாற்றில் பொறிக்கப்படுவாய்.
அன்புமகனே!
மனத்துக்குச் சில உதாரணம் கூறி அதன் நிலைமைகளை விபரிக்கின்றேன். மனம் என்பது ஒருமரம். அதற்கு நீருற்றினால்தான் அது வளரும். இல்லையானால் அது காய்ந்துபோய்விடும்.
“கல்பு” மனம் என்ற மரத்திற்கு நற்கிரியை எனும் நீர் என்னெரமும் ஊற்றிக்கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தால்தான் அது பழகுள்ளமரமாகவும், பயனுள்ள மரமாகவும் ஆகும்.
உனது உடலிலுள்ள ஒவ்வோறு உறுப்பும் மனமென்ற மரத்தின் பழமாகும். அந்தப் பழத்தைச் சாப்பிட்டு அதன் இன்பத்தை நுகர்ந்துகொள்.
திருகுர்ஆனையும் நபீமொழியையும், பெரியோர்களின் பேச்சுக்களையும் பார்த்து கண்திருந்துவது கண்ணில் பழமாகும். மேற்கண்டவற்றைக் கேட்டு காதுதிருந்துவது காதின் பழமாகும்.
அல்லாஹ்வின் திருப்பெயரை நா சொல்லிக் கொண்டிருப்பது நாவின் பழமாகும். மார்க்கம் அனுமதித்ததை தொடுவது கையின் பழமாகும். மார்க்கம் அனுமதித்த விடயத்துக்கு நடந்து செல்லுதல் காலின் பழமாகும். மனம் என்ற மரம் காய்ந்து போனால் மேற்கண்ட பழங்கள் யாவும் விழுந்துவிடும். எனவே நீரின்றி உனது மனம் வாடும்போது “திக்று” இறைநினைவு என்ற நீரூற்றி அதை மலரச்செய்.
ஒரு நோயாளி சுகம் கிடைக்கும் வரை மருந்து குடிக்கமாட்டேன் என்று சொன்னால் அவன் உண்மையாகவே அறிவில்லாதவன்தான். இவனைப்போல் நீ உலகில் வாழாதே. காபிர்களுடன் போர் செய்வதைப் பெரியபோரென்று நினைத்துவிடாதே. உனது மனவாசையுடன் போர் செய்வதே மிகப்பெரிய போராகும்.
“நப்ஸ்” மனவாசையை அடக்கிவாழ்பவனுக்குத்தான் பெருநாளேயன்றி அழகிய புத்தாடை உடுத்து வெளித்தோற்றத்தை அழகுபடுத்தினவனுகல்ல என்பதை நன்றாகப் புரிந்து வெளித்தோற்றத்தை மட்டும் அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தாமல் உனது அந்தரங்கத்தையும் அழகுபடுத்திக்கொள்.
உனது மனம் ஆசையை விரும்பி அதன் பக்கம் செல்லும்போது அதைத் தட்டிபிரட்டாமல் அதற்கு உதவியாக நீயும் இயைந்து செயல்படுகிறாய். இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி நெருப்பை தூண்டிக்கொண்டிருக்கிறாயேயன்றி அதில் நீரை ஊற்றி அதை அணைப்பதற்கு வருகிறாயில்லை. ஆடிக்கொண்டிருக்கும் போய்க்குத்தூபமிட்டு அதன் ஆட்டத்தை அதிகப்படுத்துபவன் போன்றே நீயும் இருக்கின்றாய். நீ எவ்வாறு கரை சேரப்போகிறாய்?
அன்புமகனே!
சில பெரியோர்கள் தொழுவதற்குப் பள்ளிவாயலுக்கு வராமல் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமது வீட்டிலேயே தொழுதுவந்துள்ளார்கள் என்பதை சரித்திரவாயிலாக நீ அறியவில்லையா? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதும் உனக்குப்புரிகிறதா? இதோ சொல்கிறேன்கேள்.
மனவாசைக்கு வழிபட்டும், அல்லாஹ்வை மறந்தும், மனம் கேட்கின்றவற்றையெல்லாம் அதற்குக் கொடுத்தும் வாழ்பவர்கள் பள்ளிவாயலுக்கு வருகிறார்கள்.
அவர்களிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அந்த தூர்வாடையை சகித்துக் கொள்ள முடியாததினாலேயே அப்பெரியோர்கள் பள்ளிவாயலுக்கு வராமல் இருந்துள்ளனர்.
இப்போது உனக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது மேற்கண்ட நிலையிலுள்ளவர்கள் இப்போதும் பள்ளிவாயலுக்கு வரத்தானே வேண்டும். ஆனால் எனக்கு அப்படியொரு வாடை கிடைக்கவில்லையே!
நீ தடிமல் வியாதியுள்ளவன். உன்னால் அந்த வாடையை நுகர முடியாது. பாவம் தடிமல் போன்றது பாவம் என்ற நோயால் நீ பீடிக்கப்பட்டிருக்கும் வரை அதை உன்னால் நுகரமுடியாது. உனக்கு நல்லடியார்களின் உடலிலிருந்துவரும் நறுநாற்றமும் விளங்காது.
பாவிகளின் உடலிலிருந்துவரும் துர்நாற்றமும் விளங்காது. மலவண்டுக்கு அது நாறாதென்பதும், மலத்தை உணவாகக் கொள்ளும் மிருகங்களுக்கு அது நாறுவதில்லை என்பதும் உனக்குத் தெரியாத விடயமா? இவ்வுலகில் நிம்மதியோடு வாழ்வதற்கான வழியை அறியாமலிருக்கிறாய். உன்னையாரென்று சொல்வது. நீ புத்தியுள்ளவனா? புத்தி கெட்டவனா?
மனவாசை என்ற பாம்பையும், பாவமென்ற தேளையுமே நீ சேமித்து வைத்திருக்கின்றாய். மறுமையில் அவைதான் உன்னைத் தீண்டுமென்பதை நீ புரியவில்லை. மனிதன் தனக்குப் பயன்தரக்கூடியதையே சேமிப்பான். ஆனால் நீயோ உன்னைத் தீண்டும் விஷப்பாம்புகளைச் சேமித்துவைத்துள்ளாய்.
உண்மையில் நீ அறியாமையின் சிகரத்தில் அமர்ந்துள்ளாய். அல்லது நீ வெளியரங்கத்தில் வயது வந்தவனாயிருந்தாலும் யதார்த்தத்தில் சிறுவனாயிருக்கிறாய்.
இதுவரை உனக்குப் புத்திபிறக்கவில்லை. யாராவது காட்டுக்குச் சென்று தன்னைத் தீண்டும் விஷப்பாம்புகளைப் பிடித்து வீட்டில் வளர்த்துவருவதைக் கண்டுள்ளாயா? இல்லையே ஆனால் நீயோ அவ்வாறு செய்கிறாய். உனது செயல்யாவும் வியப்புக்குரியதாகவே உள்ளது.
இதைவிடப் பயங்கரமான வேறோர் விடயமிருக்கிறது. அதுபற்றியே மனிதன் முக்கியமாகப் பயப்படவேண்டியுள்ளது. அதுபற்றி சிறிது கூறுகிறேன். அதுவே சிறியபாவம். நீ ஒரு பெரிய பாவம் செய்துவிட்டால் பெரியபாவம் செய்துவிட்டேன் என்று நினைத்து உன்மனம் துடிக்கிறது.
அதற்காக நீ கவலைப்படுகிறாய் மன்னிப்புக்கேட்பதற்கும் தயாராகி விடுகிறாய் அந்தப்பாவம் உனக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. இதற்கு காரணம் நீ செய்த பாவத்தை நீ பெரிதாகக் கருதியதேயாகும்.
ஆயினும் நீ சிறிய பாவமென்றைச் செய்துவிட்டால் நான் செய்தது சிறியபாவம்தான் எனக்கருதி அதற்காக வருந்தவோ கவலைப்படவோமாட்டாய். அதற்காகப் பாவமன்னிப்புக் கேட்கவும் முன்வரமாட்டாய். இதற்குக் காரணம் நீ செய்த பாவத்தைச் சிறிதாக்கக் கருதியதேயாகும்.
நீ உனது நண்பனுக்கு ஒரு குற்றம் செய்கிறாய். அதுபெரிய குற்றமென்று நீ கருதினால்தான் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டாய். மாறாக அதைச் சிறிய குற்றமென்று நீ கருதினால் அதற்காக மன்னிப்புக்கேட்க முன்வரமாட்டாய் நான் செய்தது சிறிய குற்றம்தானே.
இது நண்பனை வேதனைப் படுத்தியிருக்காதென்று நினைத்துக் கொள்வாய். ஆனால் சிறிய குற்றமாயினும் அது சிலநேரம் உனது நண்பனை வேதனைப்படுத்திவிடவும் கூடும். அதனால் உனக்கும் அவனுக்குமிடையே தீராப்பகை உண்டாகவும் முடியும்.
இந்நிலையில் இருக்கும் உனக்கு ஒர் உதாரணம் சொல்கிறேன். நீ ஒரு சிங்கத்திடம் வசமாக மாட்டி நிலைகுலைந்துவிட்டாய். அதன் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள உன்னாலான உன்னாலான முயற்சிகளை மேற்கொண்டாய் தந்திரோபாயங்களையும் கையாண்டாய்.
அல்லாஹ் தனது அருளால் அதன் தீமையிலிருந்து உன்னைக் காப்பாற்றிவிட்டான். பின்னர் உன்னை தாக்குவதற்கென்று ஐம்பது ஓநாய்கள் வந்தன சிங்கத்திடமிருந்தே தப்பித்துவந்த என்னை இச்சிறு ஓநாய்களால் என்ன செய்யமுடியுமென்று நீ நினைத்து அவற்றின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் நீ மேற்கொள்ளவில்லை. எந்தவொறு தந்திரோபாயங்களையும் கையாளவில்லை.
அலட்சியமாக இருந்தாய் இந்த நிலையில் அவ்வைம்பது ஓநாய்களும் உன்மீது பாய்ந்து உன்னைக் கொன்றுவிட்டன. இச்சிறு ஓநாய்கள் போன்றவையே சிறிய பாவங்கள் என்பதை உணர்ந்து சிறிய பாவமாயினும் அதைப் பெரிய பாவமாய்க் கருதி அதற்காக வருந்திப் பாவமன்னிப்புக்கேள்.
நீங்கள் அதை சிறியதாக நினைக்கிறீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடம் பெரியதாகவே கணிக்கப்படும் இது இறைவாக்குகளில் ஒன்று. நஞ்சு கொஞ்சமாயினும் அது உன்னைக் கொன்றுவிடுமென்பதையும் சிறிய நெருப்புத்தணல் ஒர் ஊரையே எரித்து சாம்பலாக்கிவிடுமென்பதையும் நன்கறிந்து சிறிய பாவத்தையும் விட்டு நடக்கமுன்வா.
அன்புமகனே!
ஒருவன் தான் ஆரோக்கியமாக இருக்கும் காலத்தையும், நேரத்தையும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதிலும், மனவாசைக்கு வழிபட்டு நடப்பதிலும் கழித்தால் அவனைப்போல மடமையுள்ளவன் வேறெவனும் இருக்க முடியாது.
இவனுக்கோர் உதாரணம் சொல்கிறேன் இதைக் கொண்டு இவன் யாரென்று அறிந்துகொள். ஒருவன் தன் மகனின் பிற்கால வாழ்கைக்காக ஆயிரம் ரூபாவை வைத்துவிட்டு மரணித்தான்.
மகனோ அவ்வாயிரம் ரூபாய்க்கு பாம்பு தேள் போன்ற விஷஜந்துக்களை வாங்கித் தன்னைச் சூழவிட்டான். அவை அவனைத் தீண்டின. இந்த மகன் புத்தியுள்ளவனா? புத்தி கெட்டவனா? நன்றாகச் சிந்தனை செய்துபார்.
அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதிலேயே உனது நேரங்களைக் கழிக்கிறாய். உனக்கு பருந்தை உதாரணமாகக்கூறலாம். பருந்து பிணத்தை வட்டமிட்டவண்ணமே இருக்கும். சந்தர்ப்பம் வரும்போது அதில் விழுந்துவிடும்.
நீயோ பாவம், மனவாசை என்ற பிணத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றாய். சமயம் கிடைக்கும்போது அதில் விழுந்துவிடுவாய். நீ உலகில் வாழும்போது தேனிபோல் வாழ்ந்துகொள். அது தோற்றத்தில் சிறியதாயினும் முயற்சியில் பெரியது. அது நல்லதையே எடுத்து நல்லதையே மக்களுக்கு கொடுக்கின்றது.
இறைவனை மறந்திருப்பது ஒருவனின் உள்ளத்தை நாசப்படுத்திவிடுமாயின் அவனுக்கு அல்லாஹ்வினால் ஆயிரம் சோதனைகள் ஏற்படலாம் அவன் அவற்றை உணர்ந்து கொள்ளமாட்டான்.
ஏனெனில் இறைவனை மறந்து வாழ்வது ஒரு திரையோடு வாழ்வது போன்றதாகும். புத்திகுறைந்த பெண் தனது குழந்தை மரணிக்கும்போது சிரித்துக்கொண்டேயிருப்பாள். அதுபற்றி கவலைப்படமாட்டாள். நீ இரவில் நின்று வணங்குவதையும் நோன்பு நோற்பதையும் வீணாக்குகின்றாய்.
இவையாவும் உனதுடலில் ஏற்படுகின்ற காயங்கள் போன்றவை. ஆனால் இவையாவும் உனதுடலில் இருந்தாலும் உனக்கு அவற்றின் வலியும், வேதனையும் தெரிவதில்லை. ஏனெனில் உனது மனம் மரணித்துவிட்டது. மனம் மரணித்தவன் பிணம் போன்றவன்.
பிணத்தை வாளினால் வெட்டித் துண்டுதுண்டாக்கினாலும் அதற்கு எந்த வேதனையும் இருக்காது. ஆனால் மனம் பிரகாசமுள்ளவர்கள் உயிருள்ளவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஊசி குத்தினாற்கூட கடும் வேதனையாக இருக்கும். எனவே பாவங்களைத் தவிர்ந்தும் இறைகட்டளையைப் பேணியும் மனம் உறங்காத மனிதனாக வாழ்ந்துகொள்.
அன்புமகனே!
உனது மனம் மரணித்துள்ளதால் உபதேச அவைகளில் நீ அமர்ந்து உபதேசமென்ற நீரூற்றில் உனது மனதை வளர்த்துக்கொள். உபதேச அவையில் சொர்க்கவாடை வீசும். அவ்வாடை உன்னுடன் வீடுவரை வரும். அத்தோடு உனது வீட்டையும் மணமாக்கும்.
ஆகவே அறிவு நீர் ஊற்றப்படும் சபைகளைத் தவறவிடாதே. நீ பாவத்தில் மூழ்கிப்போனவனாயிருந்தால் உனக்கொரு எண்ணம் தோன்றலாம். அதாவது நான் இறைவனுக்கு மாறு செய்வதில் மூழ்கிக்கிடக்கிறேன்.
பாவத்தைவிட்டு நடக்க என்னால் முடியவில்லை என்னிலை இவ்வாறிருக்க உபதேச சபைகளில் கலந்து கொள்வதில் என்னபயன் கிடைக்கப்போகிறது. உனக்கு இப்படி எண்ணம் வந்தால் என்ன செய்யவேண்டுமென்பதை கீழே படித்துப்பார்.
மாமரத்தல் மாம்பழம் இருக்கிறது. நீ அதைப் பெறவிரும்பினால் அதற்கான வழியைக் கையாளவேண்டும். அவ்வாறு செய்யாமல் மாம்பழம் கிடைக்கவேண்டுமென்று நினைப்பது மடமை. நீ என்ன செய்ய வேண்டும்? மரத்தை நோக்கி கல் எறிய வேண்டும் இது உனது கடமை. ஓரே எறியில் பழம் கிடைக்காவிட்டாலும் பலதரம் எறியும்போது நிச்சயமாகப் பழம் கிடைக்கும்.
அன்புமகனே!
பாவத்தை விட்டு நடக்க முயற்சி செய் ஏனெனில் பாவம் அதிகமாகும்போது அல்லாஹ்வால் உனக்கருளப்படும் உணவுகூட சிலநேரம் தடைப்பட்டுவிடலாம் உணவு தடுக்கப்பட்டால் நீ உயிர் வாழ்வது எங்ஙனம்! ஆகையால் பாவத்தில் விழுந்துவிடாமல் செய்த பாவத்துக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்.
நீ அதிகமாக பாவம் செய்தவனாயிருந்தால் எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? என நினைத்து நம்பிக்கையிழந்து மன்னிப்புக்கேட்காமல் இருந்துவிடாதே. கல் நெஞ்சுள்ள அரசனாயினும் அவனிடம் பலதரம் கேட்கும்போது அவன் நெஞ்சுருகி கேட்பதைத் தருவானல்லாவா?
உனது அரசனான அல்லாஹ்வோ மிகவும் அன்புள்ளோன். உனக்காக அன்புகாட்ட அவன் தனது அன்புக்கரத்தை நீட்டிய வண்ணமே இருக்கிறான். நீ கேட்பது மட்டுமே தாமதம். கேட்டால் கிடைக்கும்.
அன்புமகனே!
நீ உலகில் ஒரு கொல்லனைப்போல் இரு. அவன் தனது சக்தியைப் பிரயோகித்து வளைக்கமுடியாத இரும்பைக்கூட தான் நாடும் உருவத்தில் தான்நாடும் பொருளாக அமைத்து விடுகினறான். இவ்வாறு அல்லாஹ்வின் உள்ளம் உருகுமளவு நீ ஆகு. உன்னை ஆக்கு உனது சொற்களை அமைத்துக்கொள்.
அல்லாஹ் கருணைக்கடல், அடியான் அவன்பால் கையெந்தினால் அதை வெறுங்கையாகத் திருப்ப வெட்கப்படுகின்றான். நீ எவ்வளவு பாவியாகவும், துரோகியாகவும் இருந்தாற்கூட நீ கையேந்தினால் நீ கேட்பதை விடப்பல மடங்குவழங்குவான். உனது பாவத்தை அவனது மன்னிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் உனது பாவம் பெரும் சமுத்திரத்தில் விழுந்த ஒருதுளி அசுத்தம் போன்றதே! பரந்து விரிந்த கடலில் ஒருதுளி அசுத்தம் என்ன செய்யப்போகிறது.
ஒர் இல்லத்தின் கதவைத் தட்டினால்தான் இல்லத்தவர்கள் அதைத் திறப்பார்களென்பதை அறிந்தும் இதுவரை தட்டாமல் இருக்கிறாய். நாற்பது வயதையடைந்த ஒருவனுக்கு அல்லாஹ்வின் வாயல் திறக்கப்பட்டிருக்க வேண்டுமே.
உனது வயதோ என்பதையும் கடந்துவிட்டது இதுவரை உனக்காக கதவு திறக்கப்படவில்லையானால் நீ கதவைத் தட்டாதகுறைதான். அல்லது நீ தட்டும் முறையோடுதட்டவில்லை.
இதைப்விடப் பயங்கரமான வேறொன்று உண்டு அனைவரும் அதையே மிகவும் பயப்படவேண்டும். அதுவே “ஸூஉல் காதிமஹ்” தீயமுடிவு. ஈமான் விசுவாசமின்றிக் காபிர்-நிராகரித்தவனாக மரணித்தல். பாவமென்ற சாம்பலால் ஈமான்-விசுவாசம் என்ற நெருப்புத்தணல் மறைக்கப்படும்போது இந்நிலை உண்டாகும்.
பாவம் செய்தபின்னர் பாவமன்னிப்புக் கேட்காமல் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்புக் கேட்கும்போது மனதில் பாவம் என்ற இருள்படர்ந்து அதிலுள்ள ஈமான் விசுவாசத்தின் ஒளியை மூடிவிடுகிறது.
இந்நிலையில் மரணித்தால் ஈமானை இழந்து மரணிக்கநேரிடும். எனவே இதை நன்கறிந்து விரைவில் பாவமன்னிப்புக் கேட்டு “கல்ப்” மனதின் கறையை நீக்கிவிடு.
அன்புமகனே!
நற்கிரிகை செய்வதில் சோம்பலாயிருக்காதே. ஷெய்தான்-ஷாத்தானை அஞ்சுவதைவிடப் பலமடங்கு கூடுதலாக உனது நப்ஸ்-மனவாசையை அஞ்சு ஏனெனில் ஷாத்தான் குறிப்பிட்ட ஒருசில இடங்களிலும், ஒருசில குறிப்பிட்ட நேரங்களிலும் மட்டுமே வழிகெடுப்பான்.
அதிகதிமாக உன்னைப்விட்டுப் பிரிந்தேயிருப்பான் . றம்ழான்- நோன்பு மாதத்தில் ஷாத்தான் சிறையிடப்படுவான் என்பது நபீமொழி.
இவ்விளக்கத்தை அறிந்த உனக்கு பின்வரும் சந்தேகம் எழலாம். அதாவது றமழான் மாதம் ஷாத்தான் சிறையிடப்படுவான் என்றால் அதேமாதம் பலர் மார்க்கதுரோகம் செய்கிறார்களே அவர்களை வழிகெடுப்பது யார்? இந்த சந்தேகத்திற்கு பின்வரும் விளக்கம் விடையாக அமையும்.
றமழான் மாதம் எற்படும் தீய எண்ணங்கள் ஷாத்தானால் உருவாவதில்லை. ஆனால் உன்னிலுள்ள நப்ஸின் தூண்டுதலே அதுவென்பதை உணர்ந்து ஷாத்தானைப் பயந்து கொள்வதைவிடப் பலமடங்கு உனது நப்ஸைப் பயந்துகொள். இதனால்தான் “உனது எதிரிகளில் கடும் எதிரி எனது நப்ஸ்’ என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உன்னைவிட்டுப் பிரிந்து வாழும் ஒருவன் உனக்கு சதிசெய்வதைவிட உன்னில் இருப்பவன் சதி செய்வதே மிகஅதிகம் என்பதையும் அது அவனுக்கே மிக இலகுவானது என்பதையும் நன்றாக அறிந்திருப்பாய். உனது எதிரியை ஒரு தரமும் உன்னுடன் சேர்ந்து வாழ்பவனை பலதரமும் பயந்துகொள் என்பது பெரியோர்களின் கருத்து.
அன்புமகனே!
உனது நப்ஸ்- மனம் பாவம் செய்யத் துணிந்தால் பாவத்தினாலேற்படும் விபரீதங்களையும், பாவச்செயலால் உனக்கும் இறைவனுக்குமிடையிலுள்ள தொடர்பு துண்டிக்கப்டுமென்பதையும் அதற்கு நினைவுபடுத்து.
பாவச் செயல் உனது நப்ஸ் மனதுக்கு அழகாகவே தெரியும் அவ்வாறு தெரிந்தாற்கூட அதில் விஷம் கலக்கப்பெற்றுள்ளதென்பதை அறிந்தால் அதைவிட்டு நடக்கவேண்டுமல்லவா? தேன் இனிப்பாயிருந்தாலும் அதில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தால் அதைக்குடிக்கலாமா? உலகின் வெளியமைப்பு அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு அழகாகவே தெரியும்.
ஆனால் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு வெறுப்புக்குரிய பிணமாகவே அதுதெரியும் இவ்வுலகம் “நப்ஸ்” ஐப் பொறுத்து நல்லதாகவும், பரிசுத்த உள்ளத்தைப் பொறுத்து கெட்டதாகவும் தெரியும் சிங்கத்துடன் பழகியவனுக்கு சிங்கம் நல்ல மிருகம்தான்.
அன்பு மகனே!
உலகின் வெளித்தோற்றம் கவர்ச்சியானதாகவிருப்பதைக் கண்டு மயங்கிவிடாதே! அதன் வெளித்தோற்றம் கவர்ச்சியாயிருந்தாலும் அதன் உள்தோற்றம் மிக மோசமானதும், அருவருப்பானதுமாகும். கருங்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட, பார்வைக்கு அருவருப்பான ஒரு பெண்....
தொடர்ந்து வரும்...


Posted in:
