ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும்
அன்பு மகனே!
எந்நேரமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேள் ஏனெனில் பின்வரும் திருவசனத்தில் பாவமன்னிப்புக் கேட்குமாறு அல்லாஹ் கூறியுள்ளான். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதாயின் பாவமன்னிப்புக் கேளுங்கள்
இன்னொரு வசனத்திலும் இதுபற்றிக் கூறியுள்ளான் ‘பாவமன்னிப்புக் கேட்பவர்களையும் சுத்தமுடன் இருப்பவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் விரும்புகின்றான்’ எனதுள்ளதில் கறை ஏற்படுகின்றது நான் ஒரு நாளைக்கு எழுபதுதரம் பாவமன்னிப்புக் கேட்டுவருகின்றேன் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே நீ பாவமன்னிப்புக் கேட்க விரும்பினால் சிந்தனை என்ற மரம் உன்னுள்ளத்தில் வளர்ந்து கொண்டிருப்பது அவசியம்.
ஒவ்வொறு நாள் மாலையிலும் நீ பகலில் செய்தவை பற்றி சிந்தனை செய் அவற்றில் நல்லதை நீ கண்டால் அதற்காக அல்லாவுக்கு நன்றி செய் மாறாக பாவத்தை நீ கண்டால் உனது நப்ஸ் உன்னைக் கண்டித்து அல்லாக்ஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்
ஏனெனில் உனது நேரங்களில் நீ உன்னைக் கண்டிக்கும் நேரமே மிகச் சிறந்ததும், பயனுள்ளதுமாகும்.
நீ உனது நப்ஸ் உன்னைக் கண்டிக்கும்போது சிரித்தவனாகவோ, மகிழ்ச்சியடைந்தவனாகவோ கண்டிக்காதே, மாறாக உண்மையான வெறுப்போடும் மனக் கவலையோடும் நீ செய்த பாவத்தை நினைத்து கண்டித்துக்கொள்.
மேற்கண்டவாறு நீ செய்தால் கவலைக்குப் பதிலாக மகிழ்ச்சியும் இழிவுக்குப் பதிலாக உயர்வும் இருளுக்குப் பதிலாக ஒளியும் திரைக்குப் பதிலாக திரையின்மையும் உனக்கு வழங்கப்படும்.
மகீனுத்தீன் அல்-அஸ்மர் (றழி) அவர்கள் வலிமார்களின் ஒருவர் அவர் தனது சரிதையை பின்வருமாறு கூறுகிறார்.
நான் தையல் தொழில் செய்து வாழ்ந்து வந்தேன். பகலில் நான் பேசும் வார்தைகளை, மாலையானதும் அவற்றைக் கூட்டிப் பார்ப்பேன் அவை மிகவும் குறைவாகவே இருக்கும் அவற்றில் நல்லவை இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செய்வேன், தீயவை இருந்தால் என்னை நானே தண்டித்துக் கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்வேன். நான் மரணிக்கும் வரை அவ்வாறே செய்து வந்தேன்.
அவர்கள் இவ்வாறு செய்து மனப்பக்குவம் பெற்றதனாலேயே வலிமார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள். மனிதன் ஒரு பாவம் செய்து விட்டால் அதனால் அவனின் உள்ளத்தில் இருள் ஏற்படுகின்றது. பாவம் நெருப்புப் போன்றதும், இருள் அதனால் வரும் புகை போன்றதுமாகும்.
ஒருவன் ஒரிடத்தில் 70 வருடங்கள் தொடராக நெருப்பு எரித்தால், அதனால் ஏற்படும் புகை அவ்விடத்தை கறுப்பாகிவிடும் என்பது உனக்குத் தெரியாதா? அவ்வாறுதான் மனிதனின் மனம் அவன் தொடர்ந்து பாவம் செய்யும்போது அது கறுப்பாகிவிடுகிறது. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் பாவம் நீங்கி பால்போலாகின்றது
இப்போது இருளும் திரையும் பாவத்தினாலேற்படுபவை என்பதை நீ அறிந்துகொள். ஆகையால் பாவத்தை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேள். நீ மன்னிப்புக் கேட்காதவரை உனதுள்ளத்தில் ஏற்படும் இருளும் திரையும் அகன்று விடமாட்டா.
நபீ (ஸல்) அவர்களை நீ பின்பற்றிக் கொண்டிருக்கும்வரை உன்னில் எந்தவோரு குறையும் கறையும் குடிகொள்ளமாட்டா அவர்களைப் பின்பற்றாமல் இருக்கும்போதே பற்பல குறைகளும் கறைகளும் ஏற்படுகின்றன. நபீ (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் மூலமே நீ உயர் பதவிகளைப் பெறவும் முடியும். அவர்களைப் பின்பற்றுவது இரு வகைப்படும்.
ஒன்று- அவர்களை வெளியரங்கத்தில் பின்பற்றுவது, இரண்டு – உள்ளரங்கத்தில் பின்பற்றுவது இவ்விரண்டையும் உதாரணம் மூலம் அறிந்து கொள்.
வெளியரங்கத்தில் பின்பற்றுவதென்றால் தொழுகை,நோன்பு, சகாத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாது செய்வதும், நபீ (ஸல்) அவர்களின் சொற்செயற்படி எல்லாக் காரியங்களிலும் நடந்து கொள்வதுமாகும்.
உள்ளரங்கத்தில் பின்பற்றுவதென்றால் உனது தொழுகையில் நீ ஓதுகின்ற ஓதல்களின் பொருளை ஆராய்வதும், நபீ (ஸல்) அவர்கள் ஒரு வணக்கத்தைச் செய்யும்போது அவ்வணக்கத்தின் பின்னணியாக எதைக் கருதிக்கொண்டிருந்தார்களோ அது எதுவென்று நீயும் அறிந்து அதை உனது கருத்திற் கொண்டு செய்வதுமாகும்.
எனவே நீ வணக்க வழிபாடு செய்யும்போது உனக்கு அதில் இன்பமும், சிந்தனையும் இல்லையானால் பெருமை, அகப்பெருமை போன்ற மனவியாதி உன்னைப் பீடித்துள்ளதென்று அறிந்துகொள்! அதைச் சுகப்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகள் கண்டறிந்து அவற்றைப் பாவித்துக்கொள்.!
“நியாயமின்றி பெருமையுடன் வாழ்பவர்களுக்கு எங்களின் அத்தாட்சிகளை பற்றிச் சிந்திக்கும் ஆற்றலை வழங்கமாட்டோம்.” இது இறைவாக்கு.
அன்பு மகனே!
இந்நிலையில் உனக்கு உதாரணம் சொல்வதாயின் நிச்சயமாக நீ காய்ச்சல்காரன் போன்றவனே. உனக்கு சீனியும் கசப்பாக இருக்கும். இந்நிலையில் இருந்து கொண்டு எவ்வளவு நற்கிரிகைகள் செய்தாலும் ஒரு பயனும் கிடைக்காது.
எனவே இக்கருத்தின்படி பெருமையுடன் உருவாகும் நற்கிரிகையைவிட பணிவுடன் உருவாகும் பாவம் சிறந்தென்று சொன்னால் அதில் என்ன தவறுண்டு.
"றுப்ப மஃஸியதின் அவ்றதத் துள்ளன் வன்கிசாரன் ஹைறுன் மின்தாஅதின் அவ்றதத் இஸ்ஸன் வஸ்திக்பாரன் "
பணிவையும் மனஒடிவையும் தருகின்ற எத்தனையோ பாவம், பெருமையையும், கௌரவத்தையும் தருகின்ற நற்காரியத்தை விடச் சிறந்தது. (அல்ஹிகமுல் அதாயிய்யஹ்)
அன்புமகனே!
நபீ (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது பற்றி ஆரம்பத்தில் எழுதினேன். அது தொடர்பாக இன்னும் சில கருத்துக்களை தருகின்றேன் கவனமாகக்கேள்.!
பின்பற்றுதல் என்பது பின்பற்றப்பட்ட ஒன்றின் பகுதியாக பின்பற்றும் ஒன்றை அமைக்கும் தன்மையுள்ளது. இதைப் பின்வரும் உதாரணம் மூலம் அறிந்துகொள்.!
ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்தவர்களிடம் எனது வீட்டார்களே! ஸல்மான் நம்மில் ஒருவர் என்று கூறினார்கள். ஸல்மான் (றழி) அவர்கள் பாரசீக நாட்டவர் நபீ (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியதால் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக அவரும் இணைந்து கொண்டார்.
இவ்விபரத்தை அறிந்து உனக்கு பின்பற்றுதல் என்பது பின்பற்றும் ஒருவனை பின்பற்றப்பட்ட ஒருவனின் ஒரு பகுதியாக அமைந்து விடுமென்ற உண்மை விளங்கியிருக்கும். இதேபோல் பின்பற்றுவது சேர்ந்திருப்பதையும், பின்பற்றாதிருப்பது பிரிவையும் உருவாக்கும். அல்லாஹ் நற்கிரிகைகள் யாவையும் ஒரு வீட்டினுள் வைத்து அவ்வீட்டின் திறப்பாக நபீ (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை அமைத்துள்ளான்.
எனவே, உனக்கு அல்லாஹ் வழங்கியதை வரவேற்று திருப்திப்படுவது கொண்டும், சொற்செயலில் தேவையற்றவைகளை விட்டு நடப்பது கொண்டும் நபீ (ஸல்) அவர்களைப் பின்பற்றிக் கொள்.
நபீ (ஸல்) அவர்களைப் பின்பற்றும் பாக்கியம் வழங்கப்பட்டவர் அல்லாஹ்வின் அன்புக்குரியவர் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். “அல்லாஹ்வை நீங்கள் நேசித்தால் என்னை பின்பற்றுங்கள்” அல்லாஹ் உங்களை நேசிப்பான்” என்பது இறைவாக்கு.
நீ நல்லதை விரும்பினால் இறைவா! சொல்லிலும் செயலிலும் நபீ (ஸல்) அவர்களைப் பின்பற்றும் நற்பேறைத் தருவாயாக! என்று எந்நேரமும் பிரார்தனை செய்துகொள்.
மேற்கண்ட உயரிய நிலையைப் பெறவிரும்புவோர் அல்லாஹ்வின் சிருட்டிகளுக்கு அநீதி செய்யாதிருப்பது அவசியம். ஒருவர் மற்றவருக்கு அநீதி செய்யாது அன்புடன் பழகினால் அல்லாஹ்வின்பால் விரைந்து செல்ல முடியுமென்பதில் சந்தேகமில்லை.
அன்புமகனே!
பின்வரும் விடயத்தை நீ நன்றாக விளங்கிக்கொள். நீ ஒர் அரசனிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றவன் என்று வைத்துக்கொள் ஒரு சமயம் அரசனிடம் மிக நெருக்கமாக நீ பேசிக்கெண்டிருக்கும்போது நீ கடன் கொடுக்கவுள்ள ஒருவர் அங்குவந்து உன்னிடம் பணத்தைக் கேட்டால் உனது நிலை எவ்வாறிருக்கும் என்பதை சிந்தனை செய்துபார்.
மறுமையில் அல்லாஹ் என்ற அரசனின் சமூகத்தல் நீ நிற்கும்போது பலதரப்பட்ட கடன்காரர்கள் உன்னைச் சூழ்ந்து கொண்டு தமது கடன்களைக்கேட்டு நின்றால் உனது நிலை எவ்வாறிருக்கும் என்று சிந்தனை செய்துபார். நீ உலகில் வாழ்ந்த காலத்தில் யாருடைய பணத்தையாவது அபகரித்திருந்தால் அவரும், யாரையாவது புறம் பேசியிருந்தால் அவரும், யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவரும் மறுமையில் உன்னிடம் வந்து அதற்குப் பதிலாக உனது நன்மையைக் கேட்டு நின்றால் உனது நிலை எவ்வாறிருக்குமென்று சிந்தனை செய்துபார்.
நீ நல்லவனாக ஆவதற்குப் பலபடிகளைத் தாண்டவேண்டுமென்பதை மறந்துவிடாதே! அவற்றின் முதற்படி பாவமன்னிப்பாகும். நீ செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேட்டாலன்றி நீ நல்லவனாக முடியா. ஆகையால் உனது எதிர்காலம் சிறப்புறவும், நீ அல்லாஹ்விடம் உயர் பதவி பெறவும், பாவமன்னிப்புக் கேட்பது அவசியம்.
உனது மனம் கல்பு புதிய செம்புச் சட்டி போன்றது அதை அடுப்பில் ஒருதரம் வைத்து அதன்கீழ் நெருப்பு எரித்தால்கூட அதுகறுத்துவிடும். காலதாமதமின்றி அதைக் கழுவிச் சுத்தம்செய்தால் அது சுத்தமடைந்து புதிய சட்டிபோலாகிவிடும்.
அதைச் சுத்தம் செய்யாமல் தொடர்ந்தும் பலதரம் அதை அடுப்பில் வைத்து நெருப்பு எரித்தால் அது கடுமையாகக் கறுத்துவிடும். அதன்பிறகு எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அது புதிய சட்டிபோலாகாது.
இவ்வாறுதான் உனது மனதின் நிலை! என்பதை இவ்வுதாரணம் மூலம் அறிந்து மனத்தூய்மைக்காக செயற்பட முன்வா! பாவமன்னிப்பு ஒன்றுதான் மனதில் படிந்துகிடக்கின்ற பாவமன்ற அசூசியை சுத்தம்செய்யுமென்பதை நினைவில் வைத்துக்கொள்.
மனதிலுள்ள பாவமென்ற கறை நீங்கினால் மட்டும்தான் அங்கிகாரம் பெறுவதற்கேற்றவகையில் உன்னிடத்திலிருந்து நற்கிரிகைகள் உருவாகும். ஆகையால் இடையுறாது “தவ்பஹ்” என்ற பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்.
பாவமன்னிப்பு அல்லாஹ்வினால் அன்பளிப்பாகக் கொடுக்கப்படுகின்ற ஒன்றாகும். அவன் விருப்புகிறவர்களுக்கு மட்டுமே அதைக் கொடுப்பான். சிலவேளை பாவமன்னிப்பு அடிமைக்கு கிடைத்துவிடும் எஜமானுக்கு கிடைக்காது. இன்னும் சில சமயம் மனைவிக்கு கிடைத்துவிடும் கணவனுக்கு கிடைக்காது, இன்னும் சில நேரம் வாலிபனுக்கு கிடைத்துவிடும் வயோதிபனுக்கு கிடைக்காது போய்விடும்.
அன்புமகனே!
உனக்கு பாவமன்னிப்பு கிடைத்துவிட்டால் அல்லாஹ் உன்னை விரும்பிவிட்டான் என்று விளங்கிக்கொள். ஏனெனில் பாவமன்னிப்புக் கேட்போரை அவன் விரும்புகின்றான் என்பது அவனது திருவாக்கு அவன் வாக்குக்கு மாறு செய்வதில்லை என்பதும் அவனின் அருள்வாக்கு.
ஒன்றின் தன்மையை விளங்கியவன் மட்டும்தான் அதனை பெறுவதற்கு முயற்சிப்பான் அதை பின்வரும் உதாரணம் மூலம் அறிந்துகொள்!
மாணிக்கத்தையும் கோதுமையையும் மிருகங்களுக்கு முன்னால் வைத்தால் அவைகளுக்கு கோதுமைதான் விருப்பமானதாகத் தெரியும். ஆகவே மாணிக்கத்தை தெரிவு செய்யும் பிரிவில் நீயும் இணைந்துகொள். நீ பாவமன்னிப்புக் கேட்டால் உண்மையில் இறை நேயர்களில் இணைந்துவிடுவாய். அவ்வாறு செய்யவில்லையானால் அநீதியாளர்களில் நீயும் ஒருவனாகிவிடுவாய்.
பாவமன்னிப்பு கேட்காதவர்கள் அநீதியாளர்கள் என்பது இறைவாக்கு. மன்னிப்புக் கேட்டவன் வெற்றி என்ற கயிற்றைப் பிடித்தவனாவான். மன்னிப்புக் கேட்காவதவன் தோல்வி என்ற கயிற்றை பிடித்தவனாவான்.
அன்புமகனே!
நம்பிக்கை இழந்தவனாக பாவமன்னிப்புக் கேட்காதே! பாவமன்னிப்புக் கேட்டபின் பாவம் செய்யக்கூடாதென்று நினைத்து பாக்கியமற்றவனாகிவிடாதே! சிலர் இவ்வாறு நினைத்து பாவமன்னிப்புக் கேட்காமலே தமது வாழ்வைக் கழிக்கின்றனர். இது அறியாமையாகும். ஒரு நோயாளியின் உடலில் உயிர் இருக்கும்வரை வாழவேண்டுமென்றே அவன் விரும்புவான் அதேபோல் நீ மரணிக்கும்வரை பாவமன்னிப்பென்ற வாயல் உனக்காக திறக்கப்பட்டிருக்குமென்பதை நினைவில்கொண்டு பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டே இரு.
ஒருவன் பாவமன்னிப்பு கேட்கும்போது சொர்க்கத்திலுள்ள அவனின் இல்லம் மகிழ்ச்சி அடைகிறது வானமும், பூமியும் அண்ணல் நபீ (ஸல்) அவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அன்புமகனே!
அறியாமையினால் நீ ஒரு தவறைச் செய்துகொண்டேயிருக்கின்றாய் இதோ! அதை உணர்த்துகின்றேன் கவனமாய் கேள்!
உனக்கு உதவிசெய்த ஒருவனின் உதவியை நீ நன்றாக விளங்கியிருந்தும் அவனுக்கு மாறுசெய்து நடக்கும் உன்னைப் பார்க்கும்போது நாணித்தலை குனியவேண்டியுள்ளது.
உதவி செய்த தலைவனுக்கு மாறு செய்து நடப்பதை பெரிதாக நினைக்கும் உனக்கு அத்தலைவனின் உபகாரம் தெரியாது. அவனை நன்கு அறியாதவனுக்கு அவனின் மதிப்பும் தெரியாது தலைவனை விட்டு மற்றவர்களில் கவனம் செலுத்தியவன் ஒருபோதும் வெற்றிபெற மாட்டான். அல்லாஹ் உனது தலைவன் என்பதை நீ அறிந்தும் அவன் மீது கவனம் செலுத்தாமல் எங்கெல்லாம் உனது காலத்தைச் செலுத்தி காலம் கழிக்கின்றாயே! பரிதாபம்! பரிதாபம்! மனிதனை அவனது மனஇச்சை அழிவின்பால் அழைக்கிறதென்பதை அவன் அறிந்திருந்தும் அதைப் பின்பற்றியே செல்கின்றான்.
இதுபெரும் வியப்பாக உள்ளது அவனின் உள்ளது சத்திய வழியின்பால் அழைக்கிறதென்பதை அவன் உணர்ந்தும் அதற்குமாறு செய்து நடக்கின்றான். இது பெரும் வியப்பானது பாவத்தினால்லேற்படும் விபரீதங்களை அவன் அறிந்திருந்தும் அதைச் செய்வதற்கே முனைகின்றான். இதுவென்னபுதுமை!
ஆனால் மனிதன் அல்லாஹ்வை அறியும் முறையில் அறிந்தால் அவனுக்கு மாறுசெய்ய மாட்டான். அல்லாஹ் அவனுக்கு நெருங்கினவன், அவனின் எண்ணங்களுட்பட யாவையும் அறிபவன் என்ற தத்துவத்தை அவன் உணர்ந்தால் அல்லாஹ் விலக்கியவற்றை விட்டு நடக்க முன்வருவான் என்பதில் என்ன சந்தேகம்!
பாவத்தினால் இன்மையிலும் மறுமையிலும் ஏற்படும் விபரீதங்களை மனிதன் அறிந்திருந்தால் அவன் அல்லாஹ்வுக்கு மிகவும் வெட்கப்படுவான். மனிதன் அல்லாஹ்வின் ஆட்சிக்குட்பட்டவன் என்பதை அவன் விளங்கினால் ஆட்சியாளனுக்கு மாறுசெய்ய துணியமாட்டான். எனவே, மனிதன் இவற்றை நன்றான உணராதிருப்பதே பாவம் செய்யத்துணிவதற்கு முதற்காரணமாகும்.
அன்புமகனே!
பாவத்தினால் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு சொல்கின்றேன் கவனமாய்க்கேள்!
பாவம் செய்பவன் இறைவனுக்கு தான்கொடுத்த வாக்குறுதிக்கு மாறுசெய்யும் துரோகியாகி விடுகிறான். “ஆலமுல்அர்வாஹ்” ஆன்ம உலகில் அல்லாஹ் எல்லா உயிர்களையும் ஒன்று கூட்டி நான் உங்களின் இறைவனல்லவா? என்று கேட்டான் அதற்கு அந்த உயிர்கள் யாவும் “ஆம்” நீ எங்கள் இறைவன்தான் என்று ஏற்றுக்கொண்டன. அந்த உயிர்கள் அல்லாஹ்வை தலைவனாக ஏற்றுக் கொண்டதன் கருத்தென்ன உனக்குப் புரிகிறதா? தலைவனான உனக்கு எந்த வகையிலும் மாறு செய்ய மாட்டோம் என்பதே அதன் கருத்து.
அன்புமகனே!
நீ இப்படி ஒரு வாக்கை அன்று அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு இன்று அதற்கு மாறு செய்கின்றாயே! இது துரோகமா? இல்லையா? சற்று சிந்தனை செய்துபார்.
இதுமட்டுமல்ல பாவத்தின் விளைவு இன்னுமுண்டு. சொல்கின்றேன் கேள்! பாவத்தினால் உனக்கும் இறைவனுக்குமிடையிலுள்ள அன்பு துண்டிக்கப்படுகிறது நீ அவனுக்கு வழிபட்டு நடந்தால் அந்த அன்பு வலுவடைகின்றது. பாவம் செய்தால் அது வலுவிழந்து போகிறது.
பாவத்தினாலேற்படும் அடுத்த விளைவு என்ன தெரியுமா? பாவம் செய்வதால் இறைவனை விட ஷெய்தான் சாத்தானை, அல்லது “ஹவா” மனஇச்சையை பெரிதாக மதிக்கவேண்டிய நிலை உருவாகும்.
பாவம் செய்யும் உனக்கு இது விளங்கியிருக்கும் நீ இவ்வுண்மையைச் சொல்லாவிட்டாலும் கூட இறைவனுக்கு மாறு செய்யும் உனது செயல் நீ இறைவனை விடவும் உனது மன இச்சையையை பெரிதாக மதித்துள்ளாய் என்பதைக் காட்டுகிறது.
எனவே பெயரில் அல்லாஹ்வைத் தெய்வமாகவும் செயலில் உனது மனவாசையைத் தெய்வமாகவும் அமைத்துக்கொண்டாய் நம்பிக்கையிலும், செயல்பாட்டிலும் அல்லாஹ்வைத் தெய்வமாக்க் கொண்டவன் மட்டும்தான் வெற்றிபெறுவான் என்பதை நன்கறிந்துகொள்.
பாவத்தினாலேற்படும் இன்னொரு விளைவுபற்றி இங்கு தருகிறேன். கவனமாய்க்கேள். பாவத்தினால் உனக்கும் இறைவனுக்குமிடையே போடப்பட்டிருந்த வெட்கம் என்ற திரை நீங்கி விடுகிறது. எந்நேரமும், எங்கும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது நீ அறிந்ததே. அவன் விலக்கிய ஒன்றை நீ செய்யும்போது வெட்கம் என்ற திரையைக் கிழித்தெறிந்தபிறகு தான் செய்ய வேண்டும். எனவே உனக்கு உண்மையில் வெட்கமிருந்தால் பாவம் செய்ய துணியமாட்டாயல்லவா?
அன்புமகனே!
நீ பாவம் செய்தால் உனது வெளிஉறுப்புக்களிற்கூட அப்பாவத்தின் பிரதிபலிப்புக்கள் வெளியாவதை அறிந்திருக்கிறாயா? நீ இதுவரை காலமும் அவதானிக்காமல் இருந்தால் இதன் பிறகாவது அவனானித்துப்பார். பாவத்தினால் உனது வெளிஉறுப்புக்களில் ஒருவகைக் கலக்கமும், வணக்க வழிபாடு செய்வதில் சோம்பலும், மரியாதைக் குறைவாக நடக்கும் மனநிலையும், மன ஆசைக்கும் இசைந்து நடக்கும் துணிவும் உனக்கு ஏற்படும். நற்கிரியை செய்வோரின் முகத்திலுள்ள பிரகாசம் உனது முகத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
இப்போது நான்சொன்ன மேற்கண்ட விளைவுகள் பாவத்தினால் உனது வெளிஉறுப்புகளில் ஏற்படுகின்ற விளைவுகளாகும். இதேபோல் பாவத்தினால் உனது உள்ளுறுப்பான மனமும் தாக்கப்படும். அதுபற்றிக் கூறுகிறேன் கவனமாய்கேள்.
பாவம் செய்வதற்கு முன் உனது மனம் மென்மையானதாக இருந்து பாவத்தின்பின் அந்நிலையிலிருந்து அதுமாறிக் கல்லாகிவிட்டது பாவத்தின் முன்னர் ஏழைகளைக் கண்டால் இரங்கும் தன்மை பெற்றிருந்த உனது மனம் பாவத்தின் பின்னர் அவர்களைத் துரத்துவதற்குத் துணிந்து விட்டது.
தொடர்ந்து வரும்...