Saturday, October 19

ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள்.

-பைசான் மதீனா-

இலங்கை முஸ்லீம்கள் 16.10.2013 புதன்கிழமை ஈதுல்அல்ஹா தியாகத் திருநாளை கொண்டாடினர்.


இவ் வரிசையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் தீன் வீதி மஸ்ஜுது மன்பயில் ஹைராத் பள்ளிவாயல் ஆகியவற்றிலும் ஈகைத் திருநாள் நிகழ்வுகள் இடம் பெற்றன.

பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் காலை 9.30 மணிக்கு தக்பீரும் அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்களின் ஆன்மீக விளக்கவுரையும் அதனைத் தொடர்ந்து பெருநாள் தொழுகையும் குத்பாவும் முறையே இடம் பெற்றன.

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தியாகத் திருநாள் சிறப்புறை அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அஷ் ஷெய்க் மௌலவீ அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்களாளே வழமைபோல் நிகழ்த்தப்பட்டது.


அச்சிறப்புறையில் அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் ஈதுல் அல்ஹா என்பதற்கு இலங்கையில் வாழும் முஸ்லீம்களாகிய நாங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்றே அழைக்கின்றோம். அப்படியாயின் அறபியில் அது ஈதுல் ஹஜ் என்று வந்திருக்க வேண்டும். ஆனால் ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் என்றே வந்துள்ளது. ஆயினும் இலங்கையில் வாழும் முஸ்லீம்களாகிய நாம் ஹஜ்ஜுப் பெருநாள் என்றே அழைக்கின்றோம். 


என்று தொடங்கி அகிலத்தின் அருட் கொடையாகிய அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் யார் என்பதையும் இறைவன் என்றால் யார் என்பதையும் நான் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.


"காபிர்" என்று நாம் ஆரையம்பதியில் வாழ்பவர்களை அழைக்கின்றோம். அப்படியாயின் என்ன அர்த்தம் "நிராகரிப்பவர்" அவர்கள் எதை நிராகரிக்கின்றனர்? இறைவனையா?


நிச்சயமாக இல்லை, உலக மக்களை இரண்டு கூட்டமாகப் பிரிக்கலாம் ஒரு கூட்டத்தினர் ஆத்திகர்கள் "கடவுள் ஒருவன் என்று நம்புகின்ற மக்கள்" மற்றைய கூட்டத்தினர் "நாத்திகர்கள்" கடவுள் இல்லை என்று சொல்வர்கள்.


நாம் காபீர்கள் என்று அழைப்பவர்கள் கடவுள் ஒருவன் உள்ளான் என்று சொல்பவர்களே தவிர வேறில்லை. அப்படியாயின் நாம் எவ்வாறு அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று கூற முடியும். அது சரிதான் ஆயினும் அவர்களின் நம்பிக்கையிலும் நமது நம்பிக்கையிலும் என்ன வித்தியாசம் உள்ளது. கடவுள் ஒருவன் என்று கூறுபவர்களே கடவுளின் அவதாரங்கள் என பல உருவங்களை வைத்து வணங்குகின்றனர்.


ஆகவே, ஈமானுடைய விடயங்களை நாம் நன்கு ஆராய்ந்து சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். காரணம் ஸக்கராத்துடைய நேரத்தில் ஷைத்தான் நம் ஒவ்வொறுவரிடமும் வருவான். அவன் இறைவனைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு நாம்தான் பதில் சொல்ல வேண்டும். அங்கு வேறு பக்கத்தில் இருந்து யார் எதைச் சொல்லித் தந்தாலும் அந்நேரத்தில் அது உதவாது. எனவே நாங்கள் ஈமானுடைய விடயத்தில் ஸரீஅத், தரீக்கத் ஆகிய இரண்டு வழிகளிலும் சென்று விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.


நபீ (ஸல்) அவர்கள் எங்கள் எவரைப் போலும் இல்லை. அவர்களைப் போல் எதுவும் இல்லை இனி இறைவன் யாரையும் அவர்களைப் போல் படைக்கப் போவதும் இல்லை. அவர்கள் "மழ்கறுல் அதம்" (சம்பூரண வெளிப்பாடு) அல் இன்ஸானுல் காமில். (சம்பூரணமான மனிதன்) ஆவார்கள்.


நபீயுழ்ழாஹி (ஸல்) அவர்கள் ஒவ்வொறு மனிதனிலும் இருக்கின்றார்கள். அல்குர்ஆனில் அல்லாஹ் "நீங்க்ள அறிந்து கொள்ளுங்கள் உங்களிலே அல்லாஹ்வுடைய றசூல் இருக்கின்றார்கள்" என்று கூறுகின்றான்.


உலகில் வாழும் ஒரு மனிதன் அவனது உடலில் எப்பாகத்தில் தாக்குப் பட்டாலும் சில வேலை அவனுக்கு மரணம் சம்பவிக்கின்றது. அது ஒரு பாகத்தில் தாக்குப்பட்டால் அல்லது பழுதடைந்தால் மரணம் சம்பவிக்கும் என்று இல்லை. காரணம் உயிர் அவனில் வியாபித்துள்ளது. அதேபோல் அல்லாஹ்வுடைய றசூலும் அம்மனிதனில் உயிர் உள்ள இடத்திலெல்லாம் உள்ளார்கள்.

நபீ (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு 23 மனைவிமார் இருந்தனர். ஆனால் அவர்கள் இவ்வுழகை விட்டும் மறையும் போது 09 மனைவியர்கள் உயிருடன் இருந்தனர். அவர்களில் எவரையும் எந்த மனிதரும் மீள் திருமணம் செய்ய முடியாது. அதற்கு காரணம் அவர்கள் "உம்மஹாதுல் முஃமினீன்கள் ஆவார்கள். இது ஒரு காரணம்.


மற்றைய காரணம் பெருமானார் (ஸல்) அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்கள் உயிருடனேயே உள்ளார்கள். அவர்களின் மரணம் அல்லாஹ்வின் விடயத்தில் ஒரு நாடகம் மட்டுமே. எனவேதான் உயிருடன் உள்ள ஒருவரின் மனைவியை இன்னொருவர் திருமணம் செய்ய முடியாது.


ஒரு மனிதர் தனது இறைவனுக்குரிய அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும் அதில் எந்த எதிர் கருத்துக்கும் இடமில்லை உதாரணம் ஷெய்தானுடைய வரலாறு. அதேபோல் எம் பெருமானார் (ஸல்) அவர்களுக்குரிய அந்தஸ்தையும் கொடுக்க வேண்டும். அவர்களுடைய சமூகத்தில் அவர்களின் மணம் வேதனைப் படும்படியோ அல்லது அவர்களை கோபப்படுத்தும் வகையிலோ அல்லது அவர்களின் சத்தத்திற்கு மேலாக தன் சத்தத்தை உயர்தினாலோ அவர் செய்த அனைத்து அமல்களும் அழிக்கப்பட்டுவிடும்.


நான் ஒரு மூன்று வருடத்திற்கு முன்பு எனது உறவினருடைய வீட்டுக்கு ஒரு திருமணத்திற்காக சென்றேன் அங்கு துஆ ஓதப்பட்டபின்னர் ஸலவாத்திற்கு அமர்ந்திருக்காமல் ஒருவர் எழுந்த செல்ல எத்தனிக்கையில் பக்கத்திலிருந்தவர் ஸலவாத்துக்கு கையேந்திச் செல்லுங்கள் என்று சொன்ன போது அந்நபர் "ஸலவாத்தும் கத்தரிக்காயும்" என்று எடுத்தெறிந்து கூறிச் சென்றார். அந்த இடத்திலேயே அவர் காபீராகிவிட்டார். காரணம் ஒருவருடைய அமல் அழிக்கப்படுவது அவர் மதம் மாறும் சந்தர்ப்பத்தில் மட்டுமேயாகும்.


கியாமநாளில் நரகத்தை பார்க்க எனக்கு கிடைக்காது அவ்வாறு பார்க்க கிடைத்தால் அந்த ஸலவாத்தும் கத்தரிக்காயும் என்று சொன்னவரை நான் பார்ப்பேன். என்று கூறிய ஷெய்கு நாயகம் அவர்கள். இதனுடன் தொடர்பு பட்ட பல ஆழமான விளக்கங்களையும் கூறி தனதுரையை முடித்துக் கொண்டார்கள்.


சிறப்புரையின் பின்னால் ஏ.சி.எம் பைசால் றப்பானீ அவர்களின் இமாமத்தில் ஈதுல் அல்ஹா தொழுகை நடைபெற்று பெருநாள் குத்பாவும் இடம் பெற்றது. அத்துடன் பெரிய துஆ ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்ற பின்னர்.



அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஹிப்பீன்கள் சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களை முஸாபஹா முஆனக்கா செய்வதற்காக அவர்களின் அலுவலக்கத்தின் முன்னால் அணி வகுத்து நின்று ஆர்வத்துடன் அவ்வமலிலும் கலந்து சிறப்பித்தனர்.



மஸ்ஜிது மன்பயில் ஹைராத்தில் ஈத் சிறப்பு நிகழ்ச்சி சரியாக 7.00 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ஆரம்பமாகி 7.30 மணி முதல் 8.00 மணிவரை பெண்களுக்காக பெருநாள் தொழுகையும் 8.00 மணிமுதல் 8.45 மணிவரை சிறப்பு பயான் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்று துஆ ஸலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றது.



பெருநாள் சிறப்பு பயான் நிகழ்வை சங்கைக்குரிய மௌலவீ ஏ.எஸ்.எம். இர்ஸாத் றப்பானீ அவர்கள் ஆற்ற பெருநாள் தொழுகையை அப்பள்ளிவாயலின் பேஸ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம்.பஸ்மின் றப்பானீ அவர்கள் நடாத்திவைத்தார்கள்.


இங்கு விசேட அம்சமாக அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி துஆ பிராத்தனை நடை பெற்றது.

ஈத் முபாறக்.

அகமியத்திற்காக பைசான் மதீனா
16.10.2013



 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK