Monday, January 28

அருட்கொடைகள் அள்ளித்தரும் ஸலவாத் மஜ்லிஸ்!

-பைசான் மதீனா-
அன்று இரவு 11 மணியிருக்கும் மிகவும் கடுமையாக மழை பெய்ய ஆரம்பிக்கின்றது ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காத்தான்குடியில் உள்ள பல வீடுகளுக்குள் நீர் புகுந்து கொண்டிருக்கின்றது. 

ஆனால் மக்கள் பரபரப்பாக புத்தாடை அணிந்து ஏழைகள் தங்களின் உள்ள ஆடைகளில் புதியதை அணிந்து மிகவும் ஆக்ரோசமாகப் பெய்யும் மழையையும் பெருட்படுத்தாமல் எங்கே செல்வதற்கு அவசரமாக தயாராகின்றனர். வீதியெங்கும் வாகனங்களில் மக்கள் பயணிக்கும் சத்தம் மழையின் சத்தத்தையும் விஞ்சி காதுகளை கிழிக்கின்றது. 

ஆம்! இது 24.01.2013 வியாழக்கிழமை நல்லிரவு மணி 12 டைக் கடந்து விட்டதால் வெள்ளிக்கிழமை அதிகாலை இன்று சுன்னத் வல் ஜமாஅத் மக்களின் மனங்களில் மிகவும் சந்தோசமான தினம் அவர்களுக்கு இரண்டு பெருநாட்களையும் விட விசேடமான தினம் காரணம் அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்துதித்த எம்பெருமானார் கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்கள் இப் பூவுலகிற்கு அருட்கொடையாக அவதரித்த தினம். 


அவர்கள் அவதரித்த அந்த நேரத்தை கௌரவப்படுத்துவதற்காகவும், பெருமைப்படுத்துவதற்காகவும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுவதற்காகவும் காத்தான்குடி மற்றும் அதில் அண்மையிலுள்ள மக்கள் காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் கூடுகின்றனர். அங்கு வருடாவருடம் மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் கண்ணியத்துக்குரிய ஷெய்குநாயகம் காதிமுல் கவ்மி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் இடம் பெறுவது வழக்கம். 

எம்மை அழைத்திடுங்கள் யாரசூலுல்லாஹ்

ஸலாவாத் மஜ்லிஸ் புகைப்படங்கள், 
"என் அன்புக் காணிக்கை" கவிதை உள்ளடக்கத்துடன்

ஸலவாத் மஜ்லீஸிக்கா அலங்கரிக்கப்பட்டுள்ள பத்ரிய்யஹ் மண்டபம்
இந்த ஸலவாத் மஜ்லீஸானது சுமார் பத்து வருடங்களாக காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இந்த குறித்த தினத்தில் குறித்த நேரத்திற்கு மாபெரும் அளவில் நடைபெற்று வருகின்றது. அதற்கு முந்திய காலங்களில் ஸலவாத் மஜ்லிஸ் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் புனித மவ்லீத் ஷரீபுடனே ஓதப்பட்டு வந்தமையானது இங்கு குறிப்பிடத் தக்கது. 

மஜ்லிஸிக்காக அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில்

இந்த ஸலவாத் மஜ்லீஸில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து வருகைதரும் நண்பர்கள் அதற்கு முதல் தினம் பள்ளிவாயலுக்கு வருகைதந்துவிடுவர் அத்துடன் இதில் கலந்து கொள்ளும் உள்ளூர் முஹிப்பீன்களும் அன்று இரவே பள்ளிவாயலில் வந்து தங்கிவிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

பழங்களினால் அலங்காரம் செய்யப்படும் போது
தபறூக்குக்காக பழங்கள் தயார் செய்யப்படும் போது

இவ்வருட ஸலவாத் மஜ்லீஸிக்காக உள்ளூர் முஹிப்பீன்கள், உலமாவுகள், அரசியல் வாதிகள் என அனைவரும் தமது கருத்து பேதங்களை மறந்து கருத்து பேதங்கள், நிற பேதங்களை அகற்றிய மாபெரும் நபீ எம்பெருமானார் கண்மணி (ஸல்) அவர்களின் ஸலவாத் மஜலீஸில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தனர். 
காணிக்கையாக வந்து குவிந்துள்ள பழங்கள்

இந்த ஸலவாத் என்னும் வணக்கத்திற்கு உலகில் எந்த வணகத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு உண்டு அது என்னவெனில் அது இறைவன் செய்யும் வணக்கம். அதனை நாமும் செய்யும் போது அது மறுமையில் எந்த பரிசோதனைகளும் இல்லாமல் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும் 

மஜ்லீஸை அலங்கரிக்கும் பழங்கள்.

எப்படியெனில் இறைவன் குர்ஆனில் 
"இன்னல்லாஹ வமலாஇகதஹு யுஸல்லூன அலன் நபீயீ யா ஐ யுகல்லதீன ஆமனூ ஸல்லு அலைஹி வஸல்லிமு தஸ்லீமா"

“நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது அமரர்களும் நபீமீது ஸலவாத் சொல்கின்றனர், ஈமான் கொண்டோர்களே நீங்களும் அவர்கள்மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்” 
-அல்குர்ஆன்- 


குறிப்பிடுகின்றான், ஆனால் இறைவன் இதனைத்தவிர வேறு எந்த வணக்கத்தையும் தான் செய்வதாக குறிப்பிடவில்லை. அத்துடன் நாம் செய்யும் ஏனைய வணக்கங்கள் யாவும் அதில் இஃலாஸ் இல்லாவிடில் இறைவனில் பரிசோதிக்பட்டு இறைவனால் நிராகரிக்கப்டும் என குர்ஆன் எமக்கு எடுத்துறைக்கின்றது. “உங்களுடைய அமல்கள் ஹபாஅன் மந்தூரா” பரத்தப்பட்ட புழுதிபோல் ஆகிவிடும் என்ற பொருள்பட அக்குர்ஆன் வசனம் வந்துள்ளது.
சன்மார்க்க உரைநிகழ்த்தும் மிஸ்பாஹி நாயகம்
ஆனால் இந்த ஸலவாத்துக்கு அந்த நிலையில்லை அது மட்டுமல்லாது ஏனைய வணக்கங்களில் பெருமை வந்து விட்டால் அது இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது ஆனால் இந்த ஸலாவத்தை “சத்தமாக கூறுங்கள்” என்ற இறைவன் ஆணையிடுகின்றான் இதனால் அந்த கட்டுப்பாடும் இந்த ஸலவாத் என்ற வணக்கத்திற்கு கிடையாது. ஸலவாத்தை மாத்திரம் நாம் பெருமைக்காகவும் சொல்லலாம். 



அது மட்டுமல்லாது சூபி ஞானிகள் வேறு ஒரு ஆழமான விளக்கம் இதற்கு கூறுகின்றனர் 

குல்லும் மன் அலைஹா பான் – “உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும்” -என்ற குர்ஆனின் தீர்புக்கு அமைய உலகில் உள்ள அனைத்தும் மறுமைநாளில் அழிந்துவிடும்போது, இறைவனுடைய படைப்புகளான அமரர்களும் அழிந்து விடுவர் அவ்வாறான ஒரு தருணத்தில் இறைவன் மாத்திரம் இருக்கும்போது அவன் என்ன செய்வான்? என கேட்கும் அவர்கள் அதற்கு பதிலாக குர்ஆனின் ஆணைப்படி “அவன் பெருமானார் மீது ஸலவாத்த் கூறிக் கொண்டிருப்பான்” என பதிலுரைக்கின்றனர். 


இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த ஸலவாதானது நேரடியாக இறைவனால் எந்த கட்டுபாடுகளும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படும் ஏனெனில் அது மாத்திரமே இறைவனால் செய்யப்படும் வணக்கம் எனவே இதற்கு நிகரான வணக்கம் உலகில் இருக்க முடியாது என இஸ்லாமிய அறிஞர்களும் சூபிகளும் விளக்கி வைக்கின்றனர். 

காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலின் முகத் தோற்றம்
இவ்வளவு சிறப்புமிக்கதாக ஸலவாத்தும் அது ஓதப்படும் இடங்களும் உள்ளன. இந்த வகையில் மிகவும் சிறப்புமிக்க மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் வெள்ளிக் கிழமை அதிகாலை சரியாக 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. இம் மஜ்லிஸின் சிறப்பம்சமாக அதி சங்கைக்குரிய ஷெய்குநாயகம் காத்தமுல் வலீ அஷ்ஷெய்கு அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் சன்மார்க்க உரை நிகழ்த்தினார்கள். 

உரையாற்றும் ஷெய்குநாயகம் அப்துர் ரஊப் மிஸ்பாஹி
அதனைத் தொடர்ந்து புனித ஸலவாத் ஓதும் நிகழ்வு ஆரம்பமாகியது அதில் பெருமானர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதப்பட்டது. அத்துடன் துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது 

கலந்து கொண்ட உலமாஉகளும் பிரமுகர்களும்

அடுத்து சுப்ஹுக்கான அதான் ஒலிக்க கூடியிருத்த முஹிப்பீன்கள், முரீத்தீன்கள் அனைவரும் ஜமாஅத்தாக சுப்ஹு தொழுகையை நிறைவேற்றினர். 


சுபஹ் தொழுகையின் போது


சுப்ஹு தொழுகையைத் தொடர்ந்து ஈழத்து கஸ்ஸான், பன்நூலாசிரியர், கவிதிலகம், மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. 
வெளியிடப்பட்ட நூல்கள்

நூல் வெளியீட்டுக்கான அறிமுக உரையை மௌலவீ எஸ்.எம். இர்ஸாத் றப்பானி அவர்கள் நிகழ்த்த இந்த இரண்டு நூல்களான நபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ், மற்றும் நபீகள் நாயகம் நம் போன்ற மனிதரல்லர். ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. 

மௌலவீ  எஸ்.எம்.இர்ஸாத் (றப்பானீ)
இந்நூல்களின் முதற்பிரதியினை சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் மிஸ்பாஹி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதற்கடுத்த நிகழ்வாக நூலாசிரியரின் உரை இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஸலவாத் மஜ்லீஸிக்காக மக்களால் வழங்கப்பட்ட பழங்கள் தபறூக்காக வழங்கப்பட்டது. 

நூலாசிரியர் மௌலவீ இப்றாஹிம்  (நத்வீ) அவர்களின் உரை
தபறூக் வழங்கப்படும் போது

அதன் பின்னர் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் வலியுல்லாஹ் நிதியதித்தின் நிர்வாகச் செயலகமும் காத்தான்குடி பிரதி மேயர் அவர்களின் பிரதேச அலுவலகவும் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

ஷெய்கு நாயகம் அவர்களால் அலுவலம் திறந்து வைக்கப்படும் போது
திறந்து வைக்கப்பட்ட அலுவலகம்
காத்தான்குடி பத்ரிய்யஹ்வில் இடம் பெரும் ஸலவாத் மஜ்லிஸில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அது இம் மஜ்லிஸ் நிகழ்வானது பிரதி வருடமும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அவதரித்த நேரத்தில் இடம் பெறுவது இதன் பிரதான சிறப்பம்சமாகும். இலங்கையைப் பொறுத்தவரை பல்லாயிரம் இடங்களில் ஸலவாத் மஜ்லிஸ் இடம் பெற்றாலும் அது குறித்த இந்த நேரத்தில் ஆரம்பமாகி இடம் பெறுவதில்லை. 

அலுவகத்தை திறந்து வைத்து துஆ ஒதும் ஷெகுநாயகம்
அடுத்த அம்சமாக இந்த மஜ்லிஸிக்காக வருகை தரும் முஹிப்பீன்கள் அனைவரும் பழங்களை மஜ்லீஸை சிற்பிப்பதற்காக எடுத்துவருவதும் மஜ்லிஸ் பழங்களைக் கொண்டு அலங்கரிக்கப்படுவதுமாகும். 

அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக வந்துதித்த எம் பெருமானாரின் புகழினைப் உலகிற்கு உணர்த்த இவைகள் எல்லளவும் போதாது. இவைகள் எங்களால் முடித்த அளவு மாத்திரமே. 



மிகவும் கடுமையாக பெய்த மழைக்கு மத்தியிலும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கொண்டிருக்கும்போது இங்கு வாழ் மக்கள் ஸலவாத் மஜ்லீஸிக்கு நல்லிரவில் சமூகமளிக்க தவறவில்லை. புத்தாடை அணிந்து மிகவும் கடுமையாக நனைந்த நிலையில் பலர் புனித ஸலவாத் மஜ்லிஸில் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியம் அளிக்கும் வகையில் காணப்பட்டது. இந்த கடும் மழைக்கு அஞ்சாமல் பெண்களும் குழந்தைகளும் இந்த மஜ்லீஸில் சமூகமளித்திருந்தனர். 


யா அல்லாஹ்! அடுத்த வருடமும் அவனது ஹபீபினுடைய பிறந்த தினத்தை சிறப்பிக்கும் ஸலவாத் மஜ்லீஸில் கலந்து கொள்ளும் பாக்கியத்தை எமக்கு அருள் புரிவாயாக. 

“என் அன்புக் காணிக்கை” என்ற தலைப்பில் ஈழத்து கஸ்ஸான் மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்கள் புனித வித்ரிய்யஹ் ஷரீபாவின் பின் புற அட்டையில் எழுதியுள்ள கவிதை இது. 

யாறஸூலல்லாஹ்!
இறையின் முதலொளியே,
இதய இருளை நீக்கி வைக்கும்
ஈருலகின் சூரியனே,
உங்கள் திருப்புகழை
பாக்களில் வடித்த
“வித்ரிய்யஹ் ஷரீபஹ்”
பாவலர்களின் பாதங்களை
கழுவிக் கூடிக்கின்றேன்!

என் இதயத்தில் புகுந்துள்ள
“ஹுப்புல் நபீ” எனும் வித்து
விரைவில் வளர்வதற்காக!
அவர்களின் நாவிலுள்ள
உமிழ் நீரைச் சுவைக்கின்றேன்.
அவர்களின் நாவளமும் சொல்வளமும்
கிடைப்பதற்காக!

அவர்களை நான்
நெஞ்சோடு கட்டியணைக்கின்றேன்
அவர்களது நெஞ்சிலுள்ள
அறிவு ஞானங்களும்
கவிச் சூடர்களும் –என்
நெஞ்சில் பாய்வதற்காக!

அவர்கள் வடித்த –உங்கள்
புகழ் மாலையை
தினமும் ஓதுகின்றேன்.-
உங்கள் அன்புக்காக!
என் –
பாவங்களை அவை அழிக்கும்
என்பதற்காக!

“வித்ரிய்யஹ் ஷரீபாவை”
மொழி பெயர்த்தேன் –
உங்கள் சொர்க்கத்தில்
இருப்பதற்காக!
நான் விரும்பியோரையும்
சோர்க்கத்தில் சேர்ப்பதற்காக!

யாறஸூலல்லாஹ்!
உங்களை -நான்
மறுமையில் சந்திக்கும்போது
இந்நூலுடன் வருவேன்
உங்களுக்கு
அன்பளிப்பதற்காக!

யாஹபீபல்லாஹ்,
ஏற்றுக் கொள்ளுங்கள்
ஏழையின் பரிசை
இந்நூல் – என்
அன்புக் காணிக்கை.

------முற்றும்--------
-அகமியத்துக்காக பைசான் மதீனா. -
28.01.2013

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK