-பைசான் மதீனா-
“காகா! நீங்கள் இதிலிருந்து விடுதலையாகி வந்தால் நான் மல்கம்பிட்டியில் கொடியேற்றிக் கந்தூரி கொடுப்பேன்.”
-மரியாதைக்குரிய ஹாமித் மௌலவீ அவர்கள்-
| ஏற்றப்பட்டுள்ள புனிதக் கொடி |
அது நடந்து சுமார் ஒரு வருடம் நகர்ந்து விட்டது. நேற்றுத்தான் நடந்தது போல் உள்ளது. இன்று மல்கம்பிட்டி ஷிக்கந்தர் கலந்தர் வலீயுழ்ழாஹ் தர்ஹாவில் புனித கந்தூரி தினமாகும் சுமார் 12 நாட்கள் முகைதீன் மௌலீது பாராயணம் செய்யப்பட்டு கந்தூரி இன்று கொடுக்கப்பட்டது. இன்று கந்தூரி என்றாலும் இந்த நாட்களில் தினமும் பக்தர்களினால் உணவு சமைக்கப்பட்டு முஹிப்பீன்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருப்பது இத் தர்ஹாவின் சிறப்பாகும்.
கிழக்கிலங்கையில் இது அடைமழைக்காலம், வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள் , பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களின் தங்கியுள்ளார்கள். இவ்வாறான ஒரு துயரமாக கால சூழ்நிலையில் மிகவும் சிறப்பாக நடந்தேரியது மல்கம்பிட்டி மா மன்னர்களின் கந்தூரி.
பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மல்கம்பிட்டி தர்ஹா பற்றி நான் ஏற்கனவே “மனதுக்கு மணம் தரும் மல்கம்பிட்டி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் அதில் வருகின்ற விடயங்களைத் தவிர்த்து சில புதிய செய்திகளை இதில் சொல்லாம் என நினைக்கின்றேன்.
சுமார் சில நூறு ஆண்டுகளாக மல்கம்பிட்டி தர்ஹாவில் புனித கொடியேற்றம் நடைபெற்று வந்திருந்தாலும் சில ஆண்டுகளாக தர்ஹாவில் கொடியேற்றி அங்கு மௌலீது பாராயணம் செய்யப்பட்டு கந்தூரி கொடுக்கப்படும்போது அதற்கு பக்கத்தில் அமைந்துள்ள சம்மாந்துறையில் வசிக்கும் வஹ்ஹாபிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
| மௌலவீ காசிம் வாவா முகைதீன் பாவா- ஷஃதீ, நத்வீ, கபூரி |
இந்நிலையில் சென்ற வருடம் தர்ஹாவில் கொடியேற்றப்பட்டபோது அப்போதைய சம்மாந்துறை உலமா சபையின் தலைவரும்,தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் தலைவரும், இலங்கை வானொலி முஸ்லீம் சேவையின் வரலாற்றில் ஓர் ஏடு புகழ் புஹாரி மௌலவீ அவர்களினால் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றப்பட்ட கொடியை இறக்கிவிடுமாறும் பல அச்சுறுத்தல்களை புஹாரி மௌலவீ தலைமையிலான வஹ்ஹாபிகள் விடுத்தனர். வெளியூரிலிருந்து முஹிப்பீன்கள், ஷெய்குமார்கள் குறித்த தர்ஹாவுக்கு வரக்கூடாது கட்டளையிட்டனர், சில சிரமங்களையும் கொடுத்தனர்.
என்றாலும் தர்ஹாவில் கொடியேற்றமும் கந்தூரியும் பல சவால்களுக்கு மத்தியில் அமைதியாகவும் அடக்கமாகவும் கடந்த வருடம் நடந்தேரியது. இதனை சம்மாந்துறை ஹாமித் மௌலவீ அவர்கள் முன்னின்று நடத்தியிருந்தார்கள். ஹாமித் மௌலவீ என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் மௌலவீ காசிம் வாவா முகைதீன் பாவா- ஷஃதீ, நத்வீ, கபூரி அவர்கள் பல ஆண்டுகளாக மல்கம்பிட்டி தர்ஹாவின் நிகழ்வுகளை முன்னின்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்திவருகின்றார்கள்.
கந்தூரி முடிந்து சில மாதங்கள் மட்டும் கழிந்த நிலையில் ஒரு நாள் புஹாரி மௌலவீ அவர்களின் சம்மாந்துறை வீடு இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பொலிசாரினால் திடீர் என முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டது. இது பலருக்கு அதிர்ச்சியாக அமைந்ததுடன், அடுத்துக் கிடத்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது.
அப்பேரதிர்ச்சி புஹாரி மௌலவீ அவர்கள் இந்தியாவில் வைத்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் இதன் காரணமாக அவரின் சம்மாந்துறை வீடு மற்றும் கொழும்பில் உள்ள வீடு ஆகியன சுங்கத்துறை அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டது என்பதாகும்.
இச்செய்தியை கேள்வியுற்ற ஹாமித் மௌலவீ அவர்களால் துக்கம் தாங்க முடியவில்லையாம், ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டார் காகா! என்று நினைத்து புஹாரி மௌலவீ அவர்களுக்காக பிழை பொறுக்க இறைவனிடம் வேண்டியவர்களாக, இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் புஹாரி மௌலவீ அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “காகா நீங்கள் இதிலிருந்து விடுதலையாகி வந்தால் நான் மல்கம்பிட்டியில் கொடியேற்றி கந்தூரி கொடுப்பேன்”. என தனது ஆதங்கத்தைச் சொன்னார்களாம்.
இது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் ஒரு வருடம் புனித கொடியேற்றம் பல சிரம்மங்களுக்கு மத்தியில் நடைபெற்றது அதனையும் ஹாமித் மௌலவீ அவர்களும் மற்றும் ஈராக் நட்புறவு ஒன்றியத் தொழர்கள் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் முஹிப்பீன்கள் இணைந்து நடத்தினார்கள். அவ்வருடம் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் முடிந்தவுடன் எல்லோரும் வழமைபோல் வீடு திரும்பினர்.
முஹிப்பீன்கள் வீடு திரும்பிய பின்னர் அங்கே வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த வஹ்ஹாபிகள் கொடியேற்றப்பட்டிருந்த இரும்பினாலான கம்பத்தை அறுத்து அப்படியே கம்பத்துடன் கொடியை வீழ்த்திவிட்டுச் சென்றனர்.
இதனை யார் செய்தார்கள் என விசாரித்தபோது அது அன்றைய ஊர் தலைவர் அஸீஸ் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி நடந்தெரியுள்ளது என தெரிய வந்தது. இதனை அறிந்த ஹாமித் மௌலவீ தலைமையிலான குழுவினர் ஊர் தலைவர் அஸீஸ் ஆசிரியரைச் சென்று பார்த்து விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அஸீஸ் ஆசிரியர், “ நான் என்ன செய்ய! உங்களுடை உலமா சபையினர்தான் என்னிடம் கொடிக் கம்பத்தையும் கொடியையும் இறக்குமாறு கோரினார்கள், நான் கட்டளையிட்டேன்” என்றாறாம்.
அதற்கு மௌலவீ அவர்கள் “சேர்! நீங்கள் கொடிகம்பத்தை அறுக்க உத்தரவிடவில்லை, யதார்த்ததில் உங்களை நீங்களே அறுக்க உத்தரவிட்டுள்ளீர்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பினார்களாம்.
திரும்பியதும் துக்கம் தாங்க முடியாமல் கொடியை மீண்டும் ஏற்றலாமா? என யோசித்து அது குறித்து அலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்காக சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் காதிமுல் கவ்மி அஷ்ஷெய்க் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கு அவர்கள் “ நீங்கள் கொடியை மீண்டும் ஏற்ற வேண்டாம், அதனை இறக்கியவர்களை அவ்லியாக்கள் பார்த்துக் கொள்வார்கள்! நீங்கள் ஏனைய விடயங்களை வழமைபோல் செய்யுங்கள்” என்று அவர்கள் கூற அவ்வாறே நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தர்ஹாவின் கொடிக்கம்பம் அறுத்து இறக்கப்பட்டு சில தினங்களே கழிந்த நிலையில் (சுமார் ஒரு வாரத்துக்குள்) பக்கத்து ஊரான அக்கரைப்பற்றுக்கு வாகனத்தில் சென்ற ஊர்த் தலைவர் அஸீஸ் ஆசிரியர் அவர்கள் திடீரென ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். அவ் வருட கந்தூரி ஊர் தலைவரை இழந்த சோகத்தையும் தாங்கியதாக இடம் பெற்றது.
இவ்வாறான புற சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவ்வருட கொடியேற்ற நிகழ்வுகள் 15.12.2012 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இன்று 26.12.2012 புதன் கிழமை கந்தூரியுடன் நிறைவுபெற்றது.
இறுதித் தின நிகழ்வுகளுக்கு சமூகமளித்திருந்த முஹிப்பீன்கள் அனைவருக்கும் சமைத்த சோறு கோழி இறைச்சிக் கறியுடன் பகல் உணவுக்காக வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அஸர் தொழுகையின் பின்னர் ஹாமித் மௌலவீ அவர்களின் தலைமையில் புனித கொடி இறக்கப்பட்டதுடன் இரண்டாயிரத்தி 2004ம் இதே தினத்தில் இலங்கையை காவு கொண்ட சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்காக யாஸீன் மற்றும் பாத்திஹா ஓதப்பட்டு துஆ பிராத்தனைகள்யும் இடம் பெற்றது.
இப் புகழ் பூத்த தர்ஹாவின் சிறப்புக்கள் பற்றி தெரியாத எவரும் கிழக்கிலங்கையில் இல்லை எனலாம். தற்போது வயோதிப நிலையை அடைந்த மூத்தவர்களிடம் கேட்டாலும் “என்னையும் என்னுடைய தகப்பனார் மல்கம்பிட்டி தர்ஹாவுக்கு நான் பிறந்தவுடன் எடுத்துச் சென்று பிராத்தனை புரிந்திருந்தார்” என்றே கூறுகின்றனர்.
இப் புனிதமிகு தளத்திற்கு தொண்டு தொட்டே பிறந்த பச்சிழம் குழந்தைகளை பெற்றோர்கள் எடுத்து வந்து அவர்களின் நல் வாழ்வுக்காக பிராத்திப்பது வழக்கமாகும். என்னுடைய ஷெய்கு நாயகம் அவர்களும் தன்னை தனது தகப்பனார் அங்கு கொண்டு சென்று தலைமாட்டில் வழத்தி பிராத்தனை புரிந்த்தாகக் கூறினார்கள். என்னுடைய தாயாரிடம் இது குறித்துக் கேட்டபோது அக்காலத்தில் தான் சிறியவளாக இருக்கும்போது தன்னை தனது பெற்றோர் மாட்டு வண்டியில் வைத்து உணவு சமைத்து கூட்டிச் சென்றதாக நினைவு கூறுகின்றார் என்னுடைய தயார்.
இத் திருத்தளத்தை பெரியார்களும், நாதாக்களும், ஷெய்குமார்களும் கிழக்கிலகையின் அவ்லியாக்களின் தலைமையகம் என்று குறிப்பிடுகின்றனர். இத் திருத்தளத்தில் இடம் பெரும் கந்தூரிக்கு சரியான கணக்குகள் இல்லை என்றாலும் இது குறித்து அத் திருத்தளத்தின் சாசனத்தில் ஒரு தகவல் காணப்படுகின்றது.
சுமார் 70-80 ஆண்டுகளுக்கு முன்னர் இத் திருத்தளம் அமைந்திருக்கும் மல்கம்பிட்டி பிரதான நகராகவும், அதனை அடுத்து இப்போது பெரிய நகரா உள்ள சம்மாந்துறை சிற்றூராகவும் இருந்த்து. அக்காலப்பகுதியில் இப் பிரதேசத்தின் புகழ் பூத்த ஆலிமாகவும், மார்க்க அறிஞராகவும் சுலைமாலெப்பை ஆலிம் அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்களை இத் திருத்தளத்தினை பரிபாலிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்கள்.
அவர்கள் சம்மாந்துரையில் வெள்ளிக்கிழமை குத்பாவுக்காக குதிரையில் கம்பீராமாக வந்து குத்பா ஒதிச் செல்வார்கள் என்று இப்போதும் அங்குள்ளோர் நினைவு கூறுகின்றனர். அத்துடன் அக்காலப்பகுயில் புனித மல்கம்பிட்டித் திருத்தளத்தில் கொடியேற்றப்பட்டு சுப்ஹான மௌலீது பன்னிரென்டு தினங்கள் பராயணம் செய்து கந்தூரி கொடுப்பார்களாம்.
அதே காலத்தில் குறித்த மல்கம்பிட்டி தளமும் அதற்கு சொந்தமான காணிகளும் சொத்தும் தனக்கே சொந்தம் என மாவடிப்பள்ளியில் வாழ்ந்த ஒரு பெரியவர் வழக்குத் தொடர்ந்தார்கள் இதனை எதிர்த்து மல்கம்பிட்டியையும் அதன் சொத்துக்களையும் மீட்கப் போராடினார்களாம் சங்கைகுரிய சுலைமாலெப்பை ஆலிம்.
நடைபெற்ற வழக்கில் சில ஆண்டுகளின் பின்னர் சுலைமாலெப்பை ஆலிம் அவர்களுக்கே வெற்றி கிடைக்க சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இருந்து திருக் கொடியை ஊர்வலாமாக எடுத்து வந்து கொடியேற்றி வழமையாக ஓதி வந்த சுப்ஹான மவ்லீதை தவிர்த்து முகைதீன் மௌலீது ஓதி கந்தூரி கொடுத்தார்கள் சுலைமாலெப்பை ஆலிம் அவர்கள். அவ்வாறே தொடர்ந்து ஓதி வரவேண்டும் என மல்கம்பிட்டி தர்ஹாவின் யாப்பிலும் எழுதிவைத்தார்கள் ஆலிம். என்றாலும் தற்போது அந்த சாசனம் சிலரால் மறைக்கப்பட்டு விட்டது.
| சிதைந்த நிலையில் காணப்படும் தர்ஹாவின் பிரதான கட்டிடத்தில் மொட்டுப் பகுதி |
இவ்வளவு வரலாற்றுச் சிறப்புக்கள் மிக்க தர்ஹா, தற்போது பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் சில புனருத்தாரண வேலைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இத் திருத்தளத்திற்கு தினமும் பல தனவந்தர்களும், கல்விமான்களும், பக்தர்களும் வந்து சென்றாலும் அதற்கான பரிபாலத்திற்காக பல கோடிகள் பெறுமதியான சொத்துக்கள் இருந்தாலும் இதனை யாரும் புனரமைக்க முன்வருவதாக தெரியவில்லை.
மல்கம்பிட்டி தர்ஹா சமானியமானதல்ல அமைதியாகவும், அடக்கமாகவும் மன நிறைவு தரும் இடமாக இருந்தாலும் இறைவனின் அனுக்கிரகம் அதிகம் கொழிக்கும் இடமாகும். இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் அத் திருத்தளத்தை புனரமைத்துக் கொடுப்பதன் மூலம் உங்கள் செல்வங்களை மறுமைக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்த உங்களின் ஆன்மீகப் பயணம் மல்கம்பிட்டிக்காக இருக்கட்டும்.
----------------------
அகமியத்துக்காக பைசான் மதீனா.
26.12.2012
புனித தர்ஹா பற்றிய மற்றுமொரு பதிவு.


