Saturday, October 13

சுவாசப் பயிற்சி இருந்தால் தூக்கமும் வணக்கமே!.

சங்கைக்குரிய ஞானபிதா - ஞானத் தந்தி 06.01.1986

-இன்று உலகலாவிய ரீதியில் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மூச்சுப் பயிற்சி பிரபல்யம் அடைந்து வருகின்றது நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், உயிர்காக்கவும் இப் பயிற்சி அவசியம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இஸ்லாமிய வழியில் எவ்வளவு அவசியம் என்பதை விளக்குகின்றது இக்கட்டுரை.- ஆசிரியர்.

அல்லாஹ்வின் அஸ்மாக்களில் “ஹூ” என்பது ஒன்றாகும் “ஹுவ” என்பது அவன், அது என்ற பொருள் தரக்கூடியதாகும். ஹுவ என்பது அல்லாஹ்வையும் அவனது வுஜூதையுமே காட்டுகின்றது. இதனால்தான் இறைவன் தனது மறையில் லாஇலாக இல்லாஹூ என்று “அன்னைத் தவிர எதுவும் இல்லை, இருப்பது அனைத்தும் அவனே என்று கூறுகின்றான். 

எனவே, பிரபஞ்சம் என்பது பார்வைக்கு தனித்தனியான பொருளாகத் தெரிந்தாலும் யாதார்த்த்த்தில் அனைத்தும் அவனாகவே இருக்கின்றான். ஆகவே எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் எமது உள்ளத்தில் அவனையே நினைவு படுத்தியவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் அவனைக் கண்டு பேரின்பம் பெற முடியும்.

“நான்” என்று தனியாக ஒரு பொருள் இல்லை, எல்லாம் அவனாகவே இருக்கிறான் என்ற தத்துவத்தை உள்ளத்தில் நினைவு படுத்தி வருவதனால் மோட்ச நிலையே அடைய முடியும் அந்த நிலையிலேதான் இறைவனின் ஷுஹூதைப் பெற முடியும்.

ஞானபிதாவுக்கு பொன்னாடை போர்த்தும் ஈழத்து கஸ்ஸான்

“அல்லாஹ் எங்கோ இருக்கிறான் நாம் எங்கோ இருக்கிறோம் என்று வாயினால் மாத்திரம் அல்லாஹ் அல்லாஹ் என்பதனாலோ , ஹூ என்பதனாலோ எந்தப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. அப்படியானால் இதுவரை நமக்கு ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும்வெள்ளை மாளிகையாக இருக்க வேண்டிய எமது இதயக்கமலம், பாழடைந்த வீடாக விஷ ஜந்துக்கள் வாழக்கூடிய வனமாக மாறியிருக்கின்றது. 
எனவே, அல்லாஹ்வுடைய கோலங்களில் நானும் ஒன்றே, அவனே என்னாக வெளியாகியிருக்கிறான் எனது செயலும், எனது தாத்தும் அவனே நான் எதுவும் அற்ற அப்தாக அடிமையாக இருக்கிறேன் என்று தன்னிலிருக்கும் “நான்” என்ற உணர்வையும், மமதையையும் பிடிங்கி எரித்து விட்டு, “நான்- இல்லை” அவனே என்ற உணர்வோடு உளப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும்போது ஞானக் கண் திறக்கும். 

அப்போது தான் யார்? என்பதும், தன் தலைவன் யார்? என்பதும் தெரிவதோடு பிறவிப் பயனையும் பெற முடியும். 

நாம் விழிப்பில் அல்லாஹ்வை திக்று செய்து வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தூக்கத்திலும் இருக்க முடியும். 

“ஒரு முஃமினுடைய தூக்கம் வணக்கம்” என்று அண்ணல் நபீ (ஸல்) சொல்லிப் பகர்ந்துள்ளார்கள். இதன்படி நித்திரையை நாம் சுத்த வணக்கமாக்கிக் கொள்வது எப்படி? 

ஒரு நாளைக்கு 21600 தடவைக்கு மேல் நாம் சுவாசிக்கின்றோம். சுவாசத்திற்கு (மூச்சுக்கு) உயிருண்டு உயிரோடு தொடர்பான சுவாசத்தை அல்லாஹ்வின் நினைவின்றி விட்டோமானால் 21600 உயிர்களை கொலை செய்த பாவிகளாகவே ஆவோம். 

எனவே, எமது அவயங்களை ஒரு வேளையைத் தொடர்ந்து செய்வதற்கு பழக்கப்படுத்திக் கொள்வதுபோல் சுவாசத்தையும் பயிற்சிகள் மூலம் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். அந்நிலை ஏற்படுமாயின் நாம் உறங்கும் போதும் வணக்கத்திலேயே இருப்போம். 

நாம் சுவாசிக்கும் போது ஹூ,ஹூ என்ற திக்ரை (நானில்லை, அவனே இருக்கின்றான்) உள்ளத்தில் நிறுத்தி ஒவ்வொறு மூச்சையும் “ஹூ,ஹூ”............... என்று விடுவோமானால், நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும் சுவாசம் ஹூ என்றே வெளியேறும் இதனால் வணக்கம் செய்து கொண்டிருப்பவர்களாகவே கருதப்படுவோம். 

நாம் உறங்கும்போது சுவாசம் மாத்திரம் தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். நாம் பயிற்ச்சி உள்ளவர்களாக இருந்தால் நித்திரையிலும் சுவாசம் ஹூ திக்றுடனயே வெளியேறும். 

அதேபோன்று “சக்றாத்” துடையத வேளையில் அனைத்தும் செயலிழந்து நிற்கும்போது மூச்சு மாத்திரமே வேலைசெய்து கொண்டிருக்கும். உயிருடன் இருக்கும்போது சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டவர்களால்தான் அச்சந்தர்ப்பத்திலும் திக்றில் ஈடுபட முடியும். 

எனவே, உறங்கும்போதும், வியாபாரம் செய்யும் போதும் எந்த வேலைகளில் ஈடுபடும்போதும் அல்லாஹ்வின் நினைவில் இருக்க வேண்டுமானால் “நான்” என்ற உணர்வு இருக்கக் கூடாது. நான் இல்லை எனக்கென்று தனியான வுஜுத் உள்ளமை இல்லை அவனே எல்லாமாய் இருக்கிறான் என்ற நியத்துடன் ஹூ, ஹூ என்ற சுவாசப் பயிற்சியைச் செய்துவந்தால் நாம் வணக்கத்தில்தான் இருந்து கொண்டிருப்போம்.
------------முற்றும்--------------

சங்கைக்குரிய ஞானபிதா, காதிமுல் கவ்மி மௌலவீ ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் 06.01.1984 ம் ஆண்டு ஈழத்து கஸ்ஸான் மௌலவீ இப்றாஹீம் நத்வி அவர்களால் கையெழுப் பத்திரிகையாக வெளியிடப்பட்ட “ஞானத் தந்திக்கு” எழுதிய கட்டுரை.
-------------------------

அதே பத்திரிகையில் வெளியாகியிருந்த கவிதை ஒன்று. 

கர்வக் கண்ணாடி 

ஓ... 
சகோதரனே.. 
எமது கொள்கை வெண்புறாவை 
காக்கை என்றே- நீ 
கொக்கரித்துக் கொண்டிருப்பாய்! 
உன் -
மனவிழியை மூடியிருக்கும் 
கர்வக் கண்ணாடியை 
கழட்டிப் பார்க்கும் வரை. 
--------------------------------
கலைத் தென்றல் றஹீம்.


 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK