Thursday, March 8

ஆன்மீக விடுதலையளிக்கும் ஸூபித்துவம்.

அகமியத்துக்காக Dr. K.M.P முகம்மது காசிம் Phd. 

அஞ்ஞானத்தின் அந்தகாரத்தில் உழன்று திரியும் மனித வர்க்கத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக, ஆத்மஜோதி வீசும் ஞான சூரியனாக திகழ்ந்திடும் உயிர் ஞானிகளே சூபியாக்கள். அவர்களின் சிறப்பே அலாதியானது. 

ஏனெனில் அவர்கள் கற்பனை கடந்த மௌனத்தில் தாக்கற்ற பரிபூரண நித்திய நிர்மல நிலையில், பேரின்ப மெத்திய அபூர்வ அத்வைத ஞானிகள் அவர்களது தவ வாழ்வு “தாத்” என்னும் அகண்ட உணர் வெளியில் ஒன்று பட்ட உண்மை நிலையாகும். அவர்கள் சதா தெய்வீக பரவசநிலையில் உயர்வு பெற்ற உத்தம ஞானிகள். 

ஆன்மீக அனுபூதியின் அந்தரங்கம் நுட்பங்களை வெகு தெளிவாக விளக்குவதே அவர்கள் மனித சமூதாயத்திற்கு செய்யும் அரிய தொண்டாகும். 

இருள் நிறைந்த இருதயத்திற்கு இணையில்லாத அருட்பிரகாசத்தை அளிப்பதே “நூர்” என்னும் ஆத்ம ஜோதி. நாம் உண்மையிலேயே விழிப்புற்று தெய்வீக மறுமலர்ச்சி அடைய வேண்டுமானால் மெஞ்ஞானத்தின் உட்பொருளை வெகு தெளிவாக விளங்கிவிட வேண்டும். 
வாழ்கையின் குறிக்கோள் தேகத்தை “நான்” என்று என்னும் அபிமானத்தை, மயக்கத்தை விவேகத்தினாலும் வைராக்கியத்தினாலும் முற்றாக அகற்றி மாறாப் பெறுநிலையாகிய ஆத்ம சைதன்யத்தைப் பெறுவதாகும். 

தெய்வீக வாழ்வு வாழ ஒருவனுக்கு உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் இன்றியமையாதனவாகும். 

ஆத்ம ஞானம் பெறச் சூழ்நிலை தடையாக இருப்பதாக நாம் தப்பாகக் கருதுகிறோம். உண்மையில் புறவுலகம் நமக்கு கேடு விழைவிப்பதன்று. புறத்தில் காணப்படும் கேடுகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் நமது பண்பாடற்ற உள்ளமேயாகும். 

ஆகவே மனதை ஒருமுகப்படுத்தி உள்ளம் அமைதி பெற்ற, புறப்பொருள்களில் மனம் பற்றாது ஆத்மாவில் உள்லொளி காண்பதே முக்தி நிலைபெற உயர்ந்த நெறியென சூபியாக்கள் உணர்த்துகிறார்கள். 

மனித ஜீவியத்தின் அடிப்படை நோக்கமாவது தத்துவ தரிசன மூலம் துக்க நிவர்த்தியும், பராமானந்தப் பேறும் எய்துவதாகும். அதாவது உண்மையாகிய நூர் என்னும் அருள் ஜோதியில் மனிதனது உள்ளதும் கறைந்து பெறுதற்கரிய பேராணந்த நிலையை அடைவதாகும். 

மனிதன் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அவனது உள்ளம் இறை தியானத்தில் இன்புறும் நிலையில் காணப்படுவதே ஆத்ம ஜோதி. 

அந்த ஆத்மஜோதியை அறிய உத்தமநெறி தியான மார்க்கமாகும். இதுவே தேக நாட்டத்திலுள்ள மனிதனை பூரண மனிதனாக்குகின்றது. தியானத்தில் சித்தியடைய வேண்டுமானால் நலன்கள் அனைத்திலும் தலைசிறந்ததாகிய சீரிய புலனடக்கத்தை வாழ்கையில் கடை பிடிக்க வேண்டும். 

தியானத்தில் முன்னேற வேண்டுமானால் வாழ்வில் நிகழும் எல்லாச் செயல்களையும் தெய்வீகச் செயலாக்க் கண்டு களக்கமின்றி ஆத்ம சாதனையாக நிச்சயித்து ஆத்மீகப் பண்பாட்டை அவசியம் பெற்றிடல் வேண்டும். 

பூவுலகில் புகுந்துள்ள நாம் பெறுகின்ற பயிற்சியில் அடைகின்ற அனுபவங்களில் மிகவும் முக்கியமானது மனப்பண்பாடாகும். 

மானிட வாழ்வின் மகத்தான நோக்கம் ஆத்மீக விடுதலை பெறுவதாகும். நாம் செய்யும் ஒவ்வோறு செயலும் நம்மை உயர்ந்த இலட்சியமாகிய தியான நிலையில் ஸ்திரமடைய துணைபுரிய வேண்டும்.

 துன்பத்தில் துடியாத மனமும், இன்பத்தில நாட்டமில்லாத இதயமுமே அச்சத்தை அகற்றி, சினத்தை ஒழித்து, ஒளிமயமாகிய பரம் பொருளை தரிசிக்க முடியும். 

மனம் அடங்காதவனுக்கு ஆத்ம போதமில்லை. தியானமில்லாதவனுக்கு சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமில்லை. ஆகவே புலன்கின் வேட்கையைக் கடந்து , ஆசை அலைகளற்று மனம் அமைதியுறும் வேளையிலே காணப்படுவதே ஆத்ம ஜோதி. 

இந்நிலையிலேதான் பற்றற்று, சினமற்று உலகமெல்லாம்தேடிய இன்பத்தை தன்னிடத்திலே காண முடியும். இந்த இன்ப நிலை அன்னியமற்றது. தன்மயமானது. என்றுமுள்ளது. 

பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டுவாழாது ஒருவன் தனதுசெயல் முறைகளை தூய ஒலுக்கத்தின் அடிப்படையில் மாற்றியமைத்துக்கொண்டு மனம், வாக்கு, காயம் மூன்றினையும் ஒன்று படுத்தி ஆத்ம சாதனைக்கே முக்கியத்துவம்கொடுத்து, உலகில் நிகழும் நிலையற்ற நிகழ்ச்சிகளை குறித்து சஞ்சலப்படாது கஷ்டங்களையும்,வெற்றிதோல்விகளையும் பொருட்படுத்தாது மனதில் உதித்துக்கொண்டிருக்கின்ற எண்ணற்ற விருத்திகளை அகண்ட தியானத்தால் ஒதுக்கித்தள்ளுவதே பேரானந்தம்பெறச் சிறந்த மார்க்கமென ஸூபியாக்கள் உணர்த்துகிறார்கள். 

இன்றைய விஞ்ஞான உலகம் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து ஏராளமான நூதனப் பொருட்களைக் கண்டு பிடித்திருக்கின்றது. அவைகள் யாவும் மனிதனுக்கு மேலும் மேலும் பல புதிய சௌகரியங்களைக் கொடுத்தாலும் அவன் மனக்குறைவுள்ள மனிதனாகவே காட்சி அளிக்கிறான். 

ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வமிருந்தாலும் அவன் மனதில் வியாகூலம் உண்டாகும்பொழுது மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. உள்ளம் இந்த நோய்க்கு அகப்படாமல் பாதுகாக்கப்படவேண்டுமானால் ஆத்ம சக்தியை தினமும் மேலோங்கச் செய்யவேண்டும்.
 

அதாவது எண்ணம்,சொல்,செயல் யாவையும் ஒன்று படுத்தி ஆத்ம நிஷ்டையின் மூலம் தேக நாட்டதையும், மன விவகாரங்களையும் கடந்து பூரணத்திலே ஒன்று பட்டு ஓய்வுகான வேண்டுமென ஸூபியாக்கள் விளக்குகிறார்கள். 

ஒரு சாதகனுக்கு தோல்விக்கு மேல தோல்வி வந்தாலும் ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம் ஏற்பட்டாலும், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி நேர்ந்தாலும் மனதை நடுநிலையில் வைத்து அமைதியாக அவைகளை சமாளிக்கப்பழக வேண்டும். மனிதனுடைய மனம் பரிசுத்தமடையும் அளவிற்கு அவனது வாழ்கைப் போரில் நிகழும் கணக்கற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய திறமை அதிகமாகிறது. 


மனிதன் கீழ் நிலையிலிருந்து எண்ணிய எண்ணங்களே உலக ஆசைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அவாவைத் துண்டுகின்றன. உள்ளத்தில் தோன்றுகின்ற ஆசைகளை எப்படியும் அனுபவித்துத் தீர்த்துவிட முடியாது. 

ஆசையை நிறைவேற்றி முடித்து விடலாமென்று எண்ணி அதனை தொடர்ந்து ஓடுவது, அதாவது ஐம்புலன் வழி மனதை தீவிரமாகச் செலுத்துவது முடிவில் வாழ்வைப் பாழ்படுத்திடும் நிலைக்கே இட்டுச் செல்லும். 

ஒருவன் எவ்வளவுதான் நுட்பமான அறிவுத் திறமையுள்ளவனாக இருந்தாலும் ஆசைகளின் மயகத்தில் வசப்பட்டு வாழ்கின்றவரை துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்தே ஆகவேண்டும். 

ஆகவே, மனம் இந்த கீழான நிலையில் நின்றும் விடுபட்டுப் பந்தங்களற்ற பரவெளியை சார்ந்து அதனையே தாயகமாகவும், பீடமாகவும் அமைத்துக் கொண்டால் தான் உலகில் வாழும் பொழுது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அச்சமற்று, கலக்கமற்று அமைதியாக வாழ முடியும். 

இறையருள் பூங்காவிலே அருட்கள் பலவுண்டு அவற்றுள் ஒளிமயமாக விளங்கும் உண்ணத நிலையே ஆத்மஜோதி. மாறுகின்ற வையகத்திலே வாழ்கின்ற நமக்கு நொடிப்பொழுதில் பலதரப்பட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன. அவ்வேளையில் இறை தியானத்திலே இன்புறுவதே இன்னல்களிலிருந்து மீட்சிபெறச் சிறந்த நெறியாகும். 

இந்த உயரிய உண்ணதமான ஆத்மீக அனுபூதி நிலையில் அசைவற்று நின்றால் நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் முற்றிலும் நீங்கப்பெற்ற “பனாபித் தௌஹீத்” என்ற நிலையில் ஸ்திரம்பெற்று ஆத்மீக விடுதலை அடைய முடியுமென சூபியாக்கள் அன்புடன் விளக்குகிறார்கள். 

---முற்றும்---

ஆக்கம் : டாக்டர் கே.எம்.பி. முகம்மது காசிம் Phd. 
-----------------------------------------------------------------------------------------------------
அகமியத்துக்காக அனுப்பிவைத்தவர் 
ஏ.எம்.எம். இர்பான் – கண்டி, இலங்கை.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK