இசை கூடுமா? என்பதற்கு ஷெகுனா அவர்களின் விளக்கம்
சாலிஹான பிள்ளைக்கு,
சாலிஹான பிள்ளைக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உமது இரண்டு தபால்களும் வந்தன. எனது ஜவாபு பிந்தியதில் வெட்கப்படுகிறேன். எழுதும் விசயத்தில் நான் அதிகமான சோம்பல்காரனென்பது உமக்குத் தெரியும்தானே!. அத்தோடு பல பக்கத்திலிருந்தும் தபால் வராத நாற்களும் மிகக் குறைவு. நானும் ஸுபி மன்ஸிலில் உள்ளோரும் இறையுதவியால் ஆகராக்கியத்த்டன் உள்ளோம்.
நான் உம்மை மந்து விட்டதாக எண்ண வேண்டாம். உமக்கு விரைவாக பதில் எழுதா விட்டாலும் நீ எனது கண்காணிப்பிலேயே இருக்கிறாய். உமது கேள்விகளுக்கான பதில் இதோ!
முதலாம் கேள்விக்கு பதில்
குற்றவாளிகள் அவர்களது பாவங்களுக்கு தக்கவாறு கடுமையாகவோ, எளிதாகவோ, கொஞ்ச நாட்கள் அல்லது நீண்ட காலம் நரகத்தில் வேதனையைச் சுவைத்தபின் வேதனை போய்விடும் அழிந்து விடும்.
ஈமானில் நின்றும் அணுப் பிரமாணம்கூட எவனது உள்ளத்தில் இருக்கின்றதோ அவன் நரகை விட்டு வெளியாகி விடுவான். ஈமானில் நின்றும் அணுப்பிரமாணம் எவன் கல்வில் இல்லையோ அவன் ஊழியூழிகாலம் நரகில் தரிபட்டு இருப்பான்.
சொர்க்கவாதிகளின் இன்பங்கள் அழியாது. அதனுடைய உணவுகள் நிரந்தரமானது. அதில் ஏதேனும் உண்டு அழிந்து விட்டால் அதற்கு பரிகாரமானவற்றை கொண்டு வரப்பட்டுக் கொண்டேயிருக்கும். இது ஒரு வினாடி ஹலாக்- அழிவதற்கு முரண்பாடில்லை. “ஹலாக்” என்பது “பனா” முற்றிலுமாக அழிந்து விடுவதை அவசியமாகத் தேடாது.
"அகாயிதுன்னஸபிய்யா"வில் சொல்கிறார்கள். அவை இரண்டும் (சுவர்கமும் நரகமும் இப்பொழுதே) படைக்கப்பட்டுள்ளன. உள்ளதானவை, தரிபாடானவை “பனா”- அழிந்தொழியாதவை. அதை உடையோரும் அழிந்தொழிய மாட்டார்கள். அதாவது அவர்கள் மீது நிரந்தரமான இல்லாமை ஏற்படாது. ஏன் இரு வகுப்பினர் விசயமாக இறைவன் “காலிதீன பீஹா அபதா” அதில் நிரந்தரமாக எப்பொழுதும் தரிபட்டிருப்பார்கள் எனச் சொல்லி இருக்கிறான்.
“குல்லு ஷையின் ஹாலிகுன இல்லா வஜ்ஹ்ஹூ” எல்லாப் பொருட்களும் அழிந்துவிடும் அவனது திரு முகத்தைத் தவிர. என்ற இறைவனின் சொல்லை நிச்சயப்படுத்துவதற்காக சுவர்கமும் நரகமும் ஒரு வினாடியாவது அழிய வேண்டுமே என நீ கேட்டால்.
அது இக்கருத்தில் அதாவது ஒரு வினாடி அழிவது என்ற கருத்தில் “பகா” நிலையாக இருத்தல் என்பதற்கு முரண்பாடில்லை. அகாயிது கிதாபுகளில் இதன் விளக்கத்தைப் பார்த்துக் கொள்!
இரண்டாம் கேள்விக்கு பதில்.
இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் இஹ்யா கீமியே ஸஆதத் ஆகிய நூற்களில் இரண்டாம் பாகத்திலும், ஸுஹ்ரவர்தி இமாம் அவாரிபுல் மஆரிபுவிலும் பாபுஸ்ஸமாஃ வல்வஜ்து- இசைகள் கேட்பதும், அவற்றால் ஈர்க்கப்படுவதும் என தனியானதொரு பாடமே அமைத்துள்ளார்கள்.
அதன் சுருக்கம்.
இசை, இராகம், அல்லது வசனமான இனிமையான குரல்களெல்லாம் அவை இசை, இராகம், இனிமை, கவி என்பதாக இருக்கின்ற விதத்தில் ஹராமானத்தல்ல ஹலால்தான். இவர்களுக்கும் (உலோகத்தால் செய்யப்பட்ட) கருவிகள், கற்கள், பிராணிகளின் வாயிலிருந்து வரும் ஓசைகளுக்கும் மத்தியில் எவ்விதப் பாகுபாடுமில்லை.
ஷரீஅத்தில் விலக்கப்பட்ட கருவிகள் மூலம் அவைகள் வருவதால்தான் அவைகளுக்கு ஹராம் என்பது ஏற்படுகிறது. அவை இன்பத்தைத் தருகின்றன என்பதற்காகவும் ஹராமானதல்ல. அவ்வாறு இன்பத்தை தருகின்றதென்பதற்காக விலக்கப்பட்டதானால் இன்பம் தருபவையனைத்தும் ஹராமாக்கப்பட்டிருக்க வேண்டுமே!
ஆயினும் கள் குடிக்கும்போது உபயோகிக்கப்படுகின்ற, அல்லது கள் குடிக்கத் தூண்டுகின்ற அல்லது அதன் ஞாபகத்தை ஊட்டுகின்ற கருவிகள் மூலம் வரும் இசை, இராகம், ஓசைதான் தடுக்கப்பட்டுள்ளன. இதர இசை இராகங்கள் ஆகுமானவைதான்.
இடையர்கள், ஒட்டக ஓட்டிகள், தபால்காரர்கள் எழுப்பும் ஓசைகள் கள் குடிப்புக்குச் சம்பந்தமில்லாத இதர கருவிகள் மூலம் வரும் இனிமையான ஓசைகள் எல்லாம் அசல் ஹலால் என்பதன்மீதே இருந்துவரும். ஏன்? இவற்றை பறவைகள் மற்றும் பொருட்களில் இருந்து எழும் ஓசைகள் மீது ஒழுங்குபடுத்தியதால் இசைகள் இதயத்தில் ஒரு குணபாட்டை உண்டாக்குகிற கவனிப்பில் பொதுவாக ஹலால் என்றோ பொதுவாக ஹராம் என்றோ தீர்புக் கூறுவது சரி அல்ல. நிலமையைப் பொறுத்ததும், ஆளைப் பொறுத்தும் இசை வரும் வழிகள் மாறுதல்களை பொறுத்தும் ஹலால், ஹராம் என்று சொல்லலாம்.
ஏனெனில் அனேகமான வாலிபர்களின் உள்ளங்களில் துன்யாவின் சிற்றின்பங்கள் நிறைந்துள்ளது. அதனால் இசைகள், பாடல்கள் (கேட்கின்ற போது) உள்ளத்தில் மறைந்து கிடைக்கும் துன்யாவின் ஆசைகளைத் தூண்டிவிடும். (கெட்டுப் போவதற்கு இது வழியாகும்) அதனால் அவர்களுக்கு ஹராம். இதைப்போலவே அன்னிய பெண்ணின் குரலை அவள் அசிங்கமான தோற்றத்திலிருந்தாலும்கூட கேட்பது இவர்களுக்கு ஹராம்.
இது போன்றே ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட இசை கருவிகள் மூலம் கேட்பதும் ஹராம். இதையே தனது பொழுதுபோக்க வீணாக கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு மக்ரூஹ். நல்ல இனிமையான குரலை கேட்டு இன்பம் பெறுதல் மனம் ஆறுதல் பெறுதல் என்று மட்டும் இருப்பவனுக்கு இது முபாஹ்.
இறைவனது உகப்பு கல்பில் நிறைந்திருப்பவனுக்கு இது அவனது உள்ளதில் இருக்கும் உவப்பை வெளிப்படுத்துவதாகவும். நற்பண்புகளை உசுப்பி விடுவதாகவும் இருப்பதால் இது முஸ்தஹப்பு. இஹ்யா மற்றும் கிரந்தங்களின் சுருக்கம் இவை.
இசை கேட்பவன் தீமையை நாடாமலும், ஷரீஅத்தில் விலக்கானதைக் கேட்காமலும், மனம் போன போக்கில் போகாமலிருந்தால் மொத்தத்தில் அவனுக்கு ஹலால் என்பதாக ரிஸாலத்துல் குஷைரிய்யாவில் காணப்படுகின்றது.
அறிந்து கொள்! இசை என்பது அழகான சப்தங்களும், மனதை உற்சாகமூட்டுகிற இராகங்களும்தான். அவை பாடல்களைப் போல பொருள் விளங்குபவைகளாக அல்லது பறவைகளின் இனிமையான ஓசைகளைப் போல பொருள் விளங்காதவைகளாகவும் இரு வகைப்படும்.
இவற்றை ஹராம் என எப்படிச் சொல்ல முடியும்? ஷரீஅத் எதனை ஹராம் எனக் கூறுகின்தோ அவை மட்டுமே ஹராம் என்று “ஹல்லுர்ருமூஸ்” எனும் நூலில் அல்லாமா அப்துல் கனி நாபிலிஸி றஹ்மதுல்லாஹ் சொல்லுகிறார்கள்.
-முற்றும்-
-------------------------------------------------------------------------------------
சங்கைக்குரிய ஷெய்குனா ஸூபி ஹலரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தனது மூரிதுக்கு எழுதிய ஞானத்தபாலிருந்து.
ஆதாரம் : ஷெய்குனா ஸூபி ஹலரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் வாழ்கைச் சுருக்கம்- தபால்-06, ஞானத் தபால் - பக்கம்-26.