அகமியத்துக்காக மௌலவீ எச்.எம்.எம்.பஸ்மின் (றப்பானீ)
ஒரு சமயம் கௌதுல் அஃழம் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மேல் சிட்டுக் குருவி ஒன்று பறந்துவந்து அவர்கள் எழுதிய ஏட்டில் மலம் கழித்து விட்டது.
இதனால் கோபம் கொண்ட அவர்கள் ஏதும் சொல்லாமல் தன் தலையை உயர்த்திப்பார்த்தார்கள் அவ்வளவுதான் வட்டம் போட்ட குருவி சாம்பலாகி அவர்களின் பார்வையின் தாக்கத்தின் காரணமாக கீழே விழுந்தது.
சுப்ஹானல்லாஹ்!
என்னே அதிசயம்!!! ஒரு உயிர் இன்னோர் உயிரின் பார்வை பட்டுச் சாம்பலாகுமா? எனும்கேள்வியை அறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால் ஆம்!
விஞ்ஞான ரீதியாகவும்,மெஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். அது சாத்தியமான ஒரு விடயமேயாகும் !
சூரிய ஒளியில் பூதக்கண்ணாடியை வைத்து பூதக்கண்ணாடியின் கீழ் பேப்பர் ஒன்றைவைத்து பிடித்துக்கொண்டிருந்தால் சற்று நேரத்தில் பேப்பர் எரிந்து சாம்பலாகி விடுவதை சிறியவர் முதல்பெரியவர் வரை யாவரும் அறிவார்கள்.
சூரியன் அல்லாஹ்வின் அதியற்புத ஒளியாகும்.கோடிக்கணக்கான தொலைவுகளுக்கு அப்பால் இருந்து வரும் ஒளிவை குறித்த பூதக்கண்ணாடியானது தன் வில்லையில் ஒன்று குவித்து காகிதத்தை எரிக்கின்றது.

ஒரு பொருளில் இருக்கும் சக்தியை விட அதிகமாக மற்றொரு பொருளில் அல்லது உயிரில் சக்தி இருந்தால் சக்தி குறைந்த பொருளினால் அதை எதிர்கொள்ளும் இயக்கும் ஆற்றல் குறைவாகி விடுகின்றது.
இவ்வாறான நிகழ்வு உலகத்தின் விடயத்தில் மட்டுமல்ல. ஆன்மீகத்திலும் இருக்கின்றது.
இறைவனை அறிந்து நெருங்கி அவனளவில் “குர்பிய்யத்” எனும் மகாமை கடந்து சென்ற அல்லாஹ்வின் ஒளிபெற்ற வலீ மார்களின் பார்வை, கேள்வி, பேச்சு, தொடுகை, யாவும் தன்னிகரற்ற சக்தியை தன்னகத்தே வழங்கப் பெற்றதாக அமைந்தும் விடுகின்றது. அதற்கு நான் ஆரம்பத்தில் சொன்ன குத்பு நாயகத்தின் சம்பவம் போதுமான சான்றாகும்.
இதனையே அல்லாஹ் ஹதீத் குத்ஸியில்
“ஒரு அடியான் நபிலான வணக்கங்கள் (அதிகம்)செய்து என்னளவில் நெருங்கி வருமிடத்து அவனை நான் விரும்பி விட்டால் அவன் கேட்கும் கேள்வியாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கும் கரமாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.” என்றுகூறுவதை நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரீ.
ஆழமான இறை அன்பு கொண்டு தனது ஒவ்வொரு செயற்பாடுகளையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்யும் “குர்பிய்யத்” எனும் மகாமில் இருக்கும் வலீ மார்களின் பார்வை, கேள்வி, யாவும் அதிக ஆற்றல் அதிகாரமுடையவையாக இருக்கும். அப்படியானவர்களை எங்கள் போன்ற ஒரு மனிதனாகப் பார்த்து சாதாரண நண்பனுடன் பலகுவதைப்போன்று ஒட்டியுறவாடக்கூடாது இதைத்தான்
அண்ணல் நபி ஸல் அவர்கள்
"إتقوا فراسة المؤمن فإنه يرى بنور الله"
"إتقوا فراسة المؤمن فإنه يرى بنور الله"
"இத்தகூ பிராஸதல் முஃமினி பஇன்னஹூ யரா பினூரில்லாஹ்"
உண்மை விசுவாசியின்(வலீயின்) உட்பார்வையைப் பயந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஒளியைக்கொண்டு பார்க்கின்றார். என்று கூறினார்கள். அல் ஹதீத்
அல்குர்ஆனும் இதற்கான ஆதாரத்தை தந்து கொண்டிருக்கின்றது. தேடுவோருக்கு மறைவானதல்ல.
உங்களுக்குத் தெரியும் நபீ (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபீ அலைஹிஸ்ஸலாம் தந்தை இல்லாமல் இறை அற்புதம்கொண்டு அண்னை மர்யமுக்கு தவப்புதல்வராக இப்பிரபஞ்சத்தில் பிறந்தார்கள். (இவ்வதிசயம் கண்ட அவர்களைத் தொடரும் கிரிஸ்தவர்கள் இன்றும் அவர்களை கடவுள், கடவுளின் மகன் என்றும் புகழ்கின்றனர்) அது இருக்கட்டும்.
ஈஸா நபீ (அலை) எப்படி மர்யம் (அலை) அவர்களின் வயிற்றில் கருவுற்றார்கள்?
அறிந்தும் இருப்பீர்கள்! சொன்னால் தெரியாதவர்கள் ஆச்சரியமும் கொள்வீர்கள்.!
இறைவனின் தூதரான நபீ ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவனது றூஹ்(உயிர்) என்றும் சொல்லப்படும். அவர்களை தனது தாயாரான மர்யம் (அலை) அவர்களின் கருவில் உருவாக ஆக்க நினைத்த வள்ள அல்லாஹுதஆலா “வஹீ” கொண்டு செல்லும் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து மர்யமுடைய வயிற்றை பார்க்குமாறு மட்டுமே ஆணை பிரப்பித்தான் அவ்வாறே தூதர் ஜிப்ரயீலும் செய்தார்.
அவ்விடத்திலேயே நபீ ஈஸா (அலை) அவர்கள் அன்னை மர்யம் (அலை) அவர்களுக்கு கருவுற்று மாலைப்பொழுதில் குழந்தையாக இவ்வுலகில் அவதரித்தார்கள் என்று குர்ஆன் விளக்கவுரையில் காணப்படுகின்றன.
இது தொடர்பான சம்பவம் அல்குர் ஆனில் தெளிவாக வரும். சுருக்கமாகவே இங்கு தந்தேன்.
இறை முடுகுதல் பெற்ற வானவரின் பார்வை ஒரு நபீயின் அவதாரத்திற்குக் காரணமாக அமைந்திருப்பதை இவ்விடத்திலும் நாம் அறியலாம்.
இவர்களின் பார்வைக்குரிய ஆற்றல் இப்படி எனின் மிஃராஜுடைய வேளையில் “காப கௌசைன்” எனும் இடத்தை தாண்டிச் சென்ற நபீ ஸல் அவர்களின் பார்வை எப்படி இருந்திருக்கும்? (உதாரணத்திற்காக)
அந்த இடம் வரைக்கும்தான் வானவர் ஜிப்ரயீலும் அண்ணல் நபீ (ஸல்) அவர்களுடன் வந்தார்கள். அதனைத்தொடர்ந்து நான் வந்தால் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்றும் கூறினார்கள். ஏன் அப்படிச் சொல்லவேண்டும்?
வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒளியினால் சிருட்டிக்கப்பட்டவர்கள்தான் இருப்பினும் கட்டுப்பாடுடைய ஓர் அளவையே அவர்களின் ஒளியில் அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
ஆனால் முஹம்மத் நபீ ஸல் அவர்களின் ஒளிவோ ஒளிவுகளுக்கெல்லாம் ஒளிவாக (சுப்ஹான மௌலிதில் அன்த நூறுன் பௌக நூரின் என்று வருவதைப்போல் ) இருக்கின்றார்கள்.
இப்படியான ஆற்றல் மிக்க செயற்திறன் சாதாரண மனிதர்களான எங்களிலும் சிலவேளைகளில் நிகழலாம்.
மனிதர்களில் ஆபத்தான இரண்டு மனிர்கள் இருக்கின்றார்கள். அறபுவைத்திய நூல்களில் இதனை கண்ணூறுக்காரன், நாவூறுக்காரன். என்றுசொல்வார்கள்.
கண்ணூறு என்பது “கண்ணின் தாக்கத்தினால் மற்றவரின் சரீரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும்”,
நாவூறு என்பது “மற்றவரைப்புகழ்ந்து வியப்பாகப் பேசுவதுகொண்டு அவரின் உடம்பில் ஒரு வகையான மாறுதலையும் ,எதற்கும் முடியாத சோம்பல் தன்மையையும் ஏற்படுத்திவிடும்”.
கண்ணூறும் ,நாவூறும் சாதாரண மனிதர்களில் பரவலாக ஏற்படும் ஒரு விடயமாகும்.
நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் காலத்தில் “ஸஹ்ல்இப்னு ஹனீப் ” என்னும் ஒரு சஹாபி குளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் தோற்றம் மிக அழகியதாகவுமிருந்தது.
இவர்கள் குளித்ததை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு சஹாபீ இதென்ன உடம்பு ? என்றார்கள். அவர்களின் உடலில் பல மாறுதல்கள் உடனே (மயக்கமாக) உண்டாகியது. நபிகள் நாயகத்திடத்தில் பார்த்தவரும், பார்வையினால் தீண்டப்பட்ட சஹாபியையும் கொண்டுவரப்பட்டதும், பார்த்தவரை நோக்கிய நபீ ஸல் அவர்கள்
உங்களில் ஒருவர் தன் சகோதரரை ஏன் கொலைசெய்கின்றீர்? என்றுகேட்டு அதன் பின் தண்ணீரால் சில வைத்திய முறை ஒன்றை சொல்லிக்கொடுத்தார்கள் வைத்தியம் செய்யப்பட்ட பிறகு அந்த சஹாபி ‘ஆபியத்” ஆரோக்கியமடைந்தவராக ஆனார்கள். (அல் ஹதீத்).
இன்னும் சில வேளைகளில் சிலர் மாமரத்தில் அல்லது வேறு மரங்களில் காய்த்துக் கணிந்து நிற்கின்ற பழ வகைகளைக் கண்டு தன் வாய் பிழந்தவர்களாக அதனைப்பார்த்து “ஆ ஆ” என்று சொல்லி விட்டுச் சென்றுவிடுவார்கள். அதிலிருந்து ஒரு சில நாட்களின் பின் பழங்களில் புழுக்குத்தி ஓட்டை விழுந்துவிடுவதுமுண்டு. இதுவும் கண்களின் தாக்கங்களின் ஆபத்தான விளைவுகளில் உள்ளதேயாகும்.
இந்த வகைச் சார்ந்த பார்வை கண்களில் இயற்கையாக உள்ள பார்வையாகும். உங்களுக்குத் தெரிந்திருக்கும் “மெஸ்மரிசம்” என்றும் ஒரு ஆபத்தான கலையுன்டு.
இது மனிதர்களை பார்வையைக் கொண்டே தன் வயப்படுத்தி தன் இஷ்டப்பிரகாரம் அவர்களை ஆட்டுவிப்பதாகும்.
இந்த முறையை அடைந்து கொள்வதற்கு இயற்கையில் காணப்படும் சந்திர சூரியனின் ஒளிகளை தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தன்னுள்ளே வியாபிக்கச் செய்வதாகும். பின்னர் முறைப்படி மேலும் சில பயிற்சிகளை செய்வதாகும்.
இது மனிதனிலிருந்து வெளிப்படும் பார்வையின் விளக்கமாகும்.
மனிதன் இவ்வுலகில் இருப்பது போன்று நெருப்பினால் படைக்கப்பட்ட தீய, நல்ல ஜின்களும் இருக்கின்றன. இவ்வகை ஜின்களுக்கும் அல்லாஹ் பார்வையை வழங்கியிருக்கின்றான். இவர்களின் பார்வை சாதாரண மனிதனுக்கு சில சமயங்களில் தீமை தரும். குறிப்பாக பிறந்த குழந்தைகள். இவர்களை மாலைப் பொழுதில் வெளியில்கொண்டு செல்லவேண்டாமென நபீ ஸல் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.
எனவே நபீமார்களும், வலீமார்களும், சித்தீகீன்களும், ஷுஹதாக்களும் இறைவனது அளப்பெரும் நெருக்கத்திற்கும் சிறப்பிற்கும் உரித்தானவர்களாவார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய நேரடித் தொடர்புடைய ஆஷிகீன்களாக இருக்கின்றார்கள். சாதாரண மனிதன், ஜின் போன்றோர்களின் பார்வையின் அளவுகளைவிட சக்தி கதிக்கும் ஆற்றல் மிக்க பார்வையாக இவர்களின் பார்வை, கேள்வி, தொடுகை அவர்களின் ஏனையசெயல்களும் இருக்கின்றன.
பார்வையினால் ஒரு கிராமத்தையே தீப்பிழம்பாக மாற்றிய இறை நேசரும், குப்பைகளை ஒன்று கூட்டி தன் வாயால் ஊதி தீப்பற்றச் செய்த இறை நேசரும், குப்பார்களை பார்வையால் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்த மெஞ்ஞானிகளும் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்து மீண்டும் ஹயாத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
-முற்றும்-
05.03.2012
அகமியத்துக்காக - மௌலவீ எச்.எம்.எம்.பஸ்மின் (றப்பானீ)