அகமியத்துக்காக -தப்லே ஆலம்
இலங்கையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளியென பொதுவாக வழங்கப்படும் கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹா சரீபின் எண்கோண மட்டபத்தில் மாபெரும் தேசிய மீலாத் விழா நிகழ்வு ஹிஜ்ரி 1433 ரபிஉனில் அவ்வல் பிறை 21 நேற்று 14.02.2012 அன்று அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் நடந்தேரியது.
இந் நிகழ்வுக்கான விசேட அணுசரனையை இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் ஜனாதிபதி அதி உத்தம மகிந்த ராஜபக்ச அவர்கள் வழங்கியதுடன் இலங்கை வானொலியின் முஸ்லீம் சேவைப் பிரிவான பிறை எப்.எம். நிகழ்வுகள் அனைத்தையும் மாலை 07.00 மணி முதல் இரவு 10.45 மணிவரை நேரடி ஒளிபரப்புச் செய்தது.
இந் நிகழ்வுகளுக்கு கல்முனை மாநகரத்தின் பிரபல வர்த்தகரும் கொடை வள்ளளுமான நாஸிருல் ஹக், தேசமானிய, சாமஸ்ரீ அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஆஸாத் கபூல் அவர்கள் பிரதான அனுசரனை வழங்கினார்கள்.
இதற்காக உலகமறிந்த உலமா, ஆதாரத்தின் தந்தை, இந்தியா சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் தலைவர், ஹைறுல் வரிஆ மகளீர் கல்லூரியின் தலைவருமான மௌலவீ ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி எம்.ஏ அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்வுகள் யாவும் 14.02.2012 செவ்வாய் கிழமை மாலை 05.00 மணிக்கு கல்முனை கடற்கரைப் பள்ளி வாயல் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆட்டோ தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுமார் 4.00 மணியளவிலேயே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தாஜுல் உலமா, ஆதாரத்தின் தந்தை மெளலவீ ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி எம்.ஏ அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்காக சாந்தமருது 03 குறிச்சி மத்ரஸ்துல் ஹல்லாஜிய்யஹ் குர்ஆன் பாடசாலையின் மாணவ, மாணவிகள் பொல்லடி மற்றும் தகரா முழக்கங்களுடன் ஊர்வலம் அழைத்துச் செல்லவதற்காக காத்திருந்தனர்.
அதேபோல் கல்முனை பக்கீர் ஜமாஅத்தாரும் பிரதம அதிதிகளை அழைத்துச் செல்வதற்காக கல்முனை கடற்கரை பள்ளிவாயல் பிரதான வீதி ஆட்டோ சந்தியில் காத்திருந்தனர்.
சுமார் 5.00 மணியளவில் பிரதம அதிதி வருகை தந்தவுடன் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும், முன்னால் காதி நீதிபதியும், கல்முனை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும், கல்முனை கடற்கரைபள்ளிவாயல் பேஷ் இமாமுமான அல் ஆலிம் அஸ்ஷெய்யித் எஸ்.ஏ. கலீல் மௌலானா தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர்.
பிரதம அதிதியின் வருகைதந்ததும் அவர்களை மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பொல்லடி மற்றும் தகரா முழக்கத்துடன் பெருமான் நபீ (ஸல்) அவர்களின் புகழ் பாடி முன்னால் செல்ல அதனைத் தொடர்ந்து பக்கீர் ஜமாஅத்தினரின் தகரா முழக்கத்துடன் பிரதம அதிதி மேடைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
புனித நாகூர் ஆண்டகை அவர்களின் தர்ஹாவை வந்தடைந்த விசேட அதிதிகள் கல்முனை நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் உள்ள கஞ்ஜே சவா, குத்துபுல் மஜீத் சாகுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள் தர்ஹாவில் வந்து கல்வத்து இருந்து சென்ற புனித இடத்தினை தரிசித்தனர்.
நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்குமுகமாக கிராஅத்தினை சாந்தமருது ஹிஜ்ரா பள்ளிவாயலின் பேஷ் இமாம் அல் ஹாபிழ் ஐ.எல் நஸீர் அவர்கள் ஓதினார்கள்.
அவர்களின் கிராஅத்தினை தொடர்ந்து அடுத்த நிகழ்வாக பக்கீர் ஜமாஅத்தாரின் “யா நபீ” பைத் தகரா முழக்கத்துடன் பாடப்பட்டது. அதனை கொளரவிக்குமுகமாக அனைவரும் எழுந்து நின்று பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கௌரவம் வழங்கினர்.
தேசிய மீலாத் நிகழ்வுகளில் அடுத்த நிகழ்வாக பக்கீர் ஜமாஅத்தாரின் கஸீதா ஒன்று இடம் பெற்றது இதில் பக்கீர் ஜமாஅத்தார் “ஹுன்கு தாத்திலே ரகசியப் பொருளே” என்ற பாடலை இசைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலித்தது. நிகழ்வுகள் மஃரிப் தொழுகைகாக இடை நிறுத்தப்பட்டது.
மஃரிப் தொழுகை முடிவடைந்ததும் நடைபெறும் நிகழ்வுகள் இலங்கையின் வானொலியின் பிறை எப்.எம் யின் ஊடாக அதன் அறிப்பாளர்கள் தொகுத்து வழங்க ஆரம்பமாகியது.
இலங்கை வானொலியின் பிறை எப்.எம் யில் நேரடி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டதும் முதல் நிகழ்வாக அல் மத்ரஸதுல் மிஸ்பாஹுல் ஹுதா மாணவி ஏ.எப்.எம். றிப்னா அவர்கள் கரவோகி இசை முறையிலாக இசை வழங்கப்பட பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் கூறும் ஒரு மழையாளப் பாடலைப் பாடினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை உறையினை அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவரும், கல்முனை நாகூர் தர்ஹாவின் பேஷ் இமாமுமான அஷ்ஷெய்யித் எஸ்.ஏ. கலீம் மௌலானா அவர்கள் வழங்கினார்கள்.
அவர்கள் தமது உரையில்
“அம்பாறை மாவடத்தில் ஒவ்வொறு கிராமங்களிலும் பிரிந்து கிடந்த உலமாஉகளை ஒன்றிணைக்கும் நோக்கில் அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபை அமைக்கப்பட்டதாகவும் அதன் மூலம் சுன்னத் வல ஜமாஅத்தினை பின்பற்றும் பெரும்பாலான மக்களின் கைகளை ஓங்கச் செய்த முடிந்ததாகவும் குறிப்பிட்ட அவர்
இவ்வாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள உலமாஉகள் அனைவரும் ஒன்றிணைந்தும் நடாத்தும் முதலாவது மீலாத்துன் நபீ விழா இது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இலங்கை பாடசாலைகளில் உள்ள பாடத்திட்டத்தில் சுன்னத் வல் ஜமாஅத்துக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கபடுவதாகவும் குறிப்பிட்ட அவர். உதாரணமாக கூறுவதாயின் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எவை என கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுபப்பட்டு குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என பதில் அளிக்கப்பட்டால் இந்த பதில் பிழையென கூறப்படுவதாகவும் சுட்டிக் காட்டிய அவர் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே” என கூறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த நிகழ்வாக “வருகை தந்தோரே என்று ஆரம்பிக்கும்” வரவேற்பு கீதம் இசைக்கப்பட்டது இதனை அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினரும் மௌலவீ ஆசிரியருமான அல்ஹாஜ் அப்துல் றஷீத் அவர்கள் இசைத்தார்கள்.
அடுத்து ஒரு ஆன்மீகப் பேருரை இடம் பெற்றது அதனை அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் உப தலைவரும், இஸ்லாமிய அழைப்புப் பேரவையின் தலைவருமான மௌலவீ றபியுத்தீன் ஜமாலி அவர்கள் ஆற்றினார்கள்.
அவர்கள் தமது உரையில்
“பொருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லீம்கள் அனைவரும் ஒரு கோடியின் கீழேதான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் சுன்னத வல் ஜமாஅத் அக்கீதாவைப் பின்பற்றுபவர்களாகவே இருந்தார்கள்.
வஹ்ஹாபிஸமானது 1772ம் ஆண்டுக்கு பின்னரே தோற்றம் பெற்றது அதுவுன் இலங்கைக்கு 1950ம் ஆண்டுக்கு பின்னாலேயே இலங்கைக்கு வந்தது. அக்காலத்தில் 1951ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வஹ்ஹாபிஸத்தை கொண்டு வந்த அப்துல் ஹமீது பஹ்ரி தர்வீஸ் என்பவர் தற்போது மேடை அமைக்கப்பட்டுள்ள இதே இடத்திலேயெ மேடை அமைக்கப்பட்ட பகிரங்க விவாத்த்தின் மூலம் அப்போதிருந்த தலைசிறந்ந உலமாக்களிடம் தோற்று இந்த பிரதேசத்தை விட்டு ஓடினார்.
அதற்கு அந்தக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினாயிருந்த எம்.எஸ் காரியப்பர் அனுசரணை வழங்கினார்கள்.
தற்போது புதிதாக தோன்றியுள்ள எல்லா இயக்கங்களின் நோக்கங்களை ஆராயும்போதும் அவைகள் இஸ்லாத்திற்கு எதிரானவையாகவும் இஸ்லாத்தின் தூய வடிவத்தை அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறிப்பிட்டார்.
இவர்களின் பேச்சைத் தொடர்ந்து பொன்னாடை போர்த்தும் நிகழ்வு இடம் பெற்றது. பிரதம அதிதி தாஜுல் உலமா ஷேய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கு அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அடுத்து கல்முனையின் பிரபல வர்த்தகர், தேசமானிய, சாமஸ்ரீ ஏ.எல்.எம். கபூல் ஆஸாத் அவர்களுக்கு தென் இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரதம அதிதி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
கௌரவ நிகழ்வுகள் முடிவடைந்ததும் பிரதம அதிதி தாஜுல் உலமா, ஆதாரத்தின் தந்தை, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஷேய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் உரை இடம் பெற்றது.
அவர்கள் தமதுரையில்
“இன்று எமக்குப் பொருநாள், காரணம் இந்த உலகிற்கு ஒளியை வழங்கிய புண்ணிய கோமான் நபீகள் பிறந்த தினம் இத்தினத்தில் நாங்கள் சந்தோம் அடைகின்றோம். ஒவ்வொறு முஸ்லீமும் சந்தோம் அடைவர்.
நான் இன்று பெருநாள் என்று கூறியதற்கு காரணம் குர்ஆனில் அல்லாஹ் ஒரு சம்பவத்தை கூறிக் காட்டுகின்றான். மூஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் ஒரு துஆ கேட்டார்கள், அது யா அல்லாஹ் எனக்கு சுவர்கத்திலிருந்து ஒரு தட்டு உணவை அனுப்புவாயாக அப்படி நீ அனுப்பினால் நான் அதனை பெருநாள் தினமாக கொண்டாடுவேன்” என்று கூறியதாக அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான்.
அப்படியாயின், ஒரு உணவு தட்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டதற்காக பெருநாள் கொண்டாட முடியுமாயின் அகிலத்திற்கே அருட் கொடையாக நபீகள் கோமான் எமக்கு வழங்கப்பட்டதற்காக நாமும் பெருநாள் கொண்டாடலாம்.
பெருமானார் (ஸல்) அவர்களை ஸஹாபாக்கள் எப்படி மதித்தார்கள் என்பதை நாம் ஹதீஸ்களில் நோக்க வேண்டும். பெருமானாரின் முகத்தைப் பார்த்து இடண்டு கலீபாக்களை (அபூபக்கர் (றழி), உமர் (றழி) தவிர வேறு எவரும் பேச மாட்டார்கள். அவ்வளவு கண்ணியம் கொடுத்தார்கள்.
அதேபோல் அல்லாஹ் குர்ஆனில் கூறுவதற்கு இணங்க “சாதாரணமாக மக்களை அழைப்பதைப் போன்று எனது ஹபீபை அழைக்காதீர்கள்” என்ற வசனத்திற்கேற்ப ஸஹாபாக்கள் யாரும் பெருமானாரின் பெயரைச் சொல்லி அழைக்க மாட்டார்கள்.
பாத்திமா (றழி) நாயகி கூட “தந்தையே” என்று அழைக்காமல், அல்லாஹ்வின் றசூலே! என்றே அழைத்துள்ளார்.
பிரதம அதிதியின் உரை இலங்கை வானொலியின் பிறை எப் எம். செய்திகளுக்காக சுமார் 10 நிமிடம் இடை நிறுத்தப்பட்டது.
அப்போது ஒரு இனிய பாடலை மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஷீத் அவர்கள் வழங்கினார்கள்.
செய்தியின் பின்னர் பிரதம அதிதியின் உரை தொடர்ந்தது..
ஏன் அல்லாஹ் கூட குர்ஆனில் ஆதம் (அலை) அவர்களை யா ஆதம், நூஹ் (அலை) அவர்களை யா நூஹ், மூஸா (அலை) அவர்களை யா மூஸா, ஈஸா (அலை) அவர்களை யா ஈஸா! என்று அழைத்த்தைப்போல எந்த ஒரு இடத்திலும் பெருமானார் (ஸல்) அவர்களை பெயரைச் சொல்லி விழிக்க வில்லை.
மாறாக செய்திகளைச் சொல்லும்போது மட்டுமே பெருமானாரின் பெயரை கூறிப்பிட்டுள்ளான். ஏனைய எல்லா இடங்களிலும் புகழ் பெயர்களையே சொல்லி விழித்துள்ளான். என்று கூறிப்பிட்ட அவர்கள்
மேலும் மௌலீத் என்றால் பிறப்பு என்று அர்த்தம் மீலாத் என்றாலும் பிறப்பு என்று அர்த்தம் மீலாத் என்பது வசன நடையில் பெருமானாரைப் புகழ்வது மௌலீத் என்பது கவி நடையில் பெருமானாரைப் புகழ்வது.
முஹ்ம்மத் என்றாலே “புகழப்பட்டுக் கொண்டிருப்பவர்” என்றுதான் பொருள் அல்லாஹ்வும் அவர்களை புகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னை புகழ்வதற்காக வெளியில் அல்ல! மஸ்ஜிதுன் நபவீக்குள்ளேயே கஸ்ஸான் இப்னு தாபித் (றழி) அவர்களுக்கு மேடையமைத்துக் கொடுத்தார்கள். இவ்வாறு மேடையில் அமைத்து பெருமானாரைப் புகழ்வது சுன்னத் காரணம் அதை பெருமானர் செய்துள்ளார்கள்.
மேலும் பெருமானாருக்கு ஸஹாப்பாக்கள் கொடுத்த கண்ணியம் எவ்வாறிருந்தது அவர்கள் உமிழ்ந்தால் அதனை கைகளில் பிடித்து உடம்பில் தெய்த்துக் கொண்டார்கள். பெருமானார் வுழு செய்தால் அந்த நீரை எடுத்து அருந்தினார்கள் ஸஹாபாக்கள்.
இவ்வாறு பெருமானாரின் கண்ணியம் மற்றும் புகழ் பற்றி பல குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கினார்கள் அவர்கள்.
அவர்களின் உரையினைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது பலரும் கேட்ட சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகள் தொடர்பாக கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் தாஜுல் உலமா ஷேய்க் அப்துல்லாஹ் ஜமாலி எம்.ஏ அவர்கள்.
அதனைத் தொடர்ந்து கல்முனை இளைஞர் கழகத்தலைவர் பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தேசிய மீலாத் நிகழ்வின் கடைசி நிகழ்வாக நன்றியுரை இடம் பெற்றது அதனை அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளரும் அரபு ஆசிரியருமான மௌலவீ றஹீம் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக துஆப் பிராத்தனை இடம் பெற்றது அதனை அதனை சம்மாந்துறைச் சேர்ந்த மௌலவீ அப்துல் சத்தார் கபூரி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக திருநபீயின் சுப்ஹான மௌலீத் பைத்களுடன் ஸலவாத்தும் சொல்லப்பட்டு நிகழ்வுகள் இனிதே சுமார் இரவு 11.15 மணியளவில் நிறைவு பெற்றது.
---------------------
அகமியத்திற்காக தொகுத்தவர்.
தப்லே ஆலம், கல்முனை, இலங்கை.