Monday, February 6

ஷெய்குனாவின் 68வது பிறந்த தினம் விழா

றப்பானிய்யஹ் மகளீர் மன்றத்தில் இடம் பெற்ற பிறந்ததின நிகழ்வின் தொகுப்பு
அகமியத்துக்காக பைசான் மதீனா

மனதுக்கு ஏதோ ஒன்றை பறிகொடுத்த உணர்வு ஒரு வாரமாக வாட்டிக் கொண்டிருந்தது. காரணம் ஷெய்குநாயகம் அவர்களின் பிறந்த தினத்திற்கு எம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வுதான். 

இவ்வருடம் வெளியிடுவதற்காக என்று “ஈழத்தின் பேரொளி” என்ற தலைப்பில் ஷெய்கு நாயகம் அவர்களின் வாழ்கை வரலாற்றை தொகுத்து ஒரு சிறிய புத்தமாக எழுதியிருந்தேன். ஆனாலும் பொருளாதாரச் சுமை காரணமாக அதனை உரிய நேரத்திற்கு ப்ரிண்ட் செய்து கொள்ள முடியவில்லை.


எனவே அதனை இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அல்லது இன்னோரு சந்தர்ப்பத்தில் இன்னும் மெருகூட்டி கொஞ்சம் அதிகமாக பக்கங்களைச் சேர்த்து வெளியிடுவோம் என்று மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் றப்பானிய்யஹ் மகளீர் மன்றத்தினர் ஷெய்கு நாயகம் அவர்களின் 68வது பிறந்த தின நிகழ்வுக்காகப் படிக்க ஒரு கவிதையும் ஒரு பாட்டும் எழுதி வேண்டும் என்று கேட்டனர். 

இருப்புக் கொள்ளவில்லை எமக்கு, உடனே எழுத ஆரம்பித்தேன். கவிதையும் சில அடிகள் எழுதியாவிட்டது. உடனே மனதுக்குள் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. அது பெரியவர்கள் (சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள்) எழுதிய புத்தகத்தின் பெயர்களையும் பிரதான கட்டுரைகளின் பெயர்களையும் கொண்டு அந்த கவிதையை ஆக்கினால் என்ன? என்ற ஒரு எண்ணம்.

உடனே எழுதிய கவிதையை அப்படியே நிறுத்தி விட்டு ஷெய்குநாயகம் அவர்கள் இதுவரை எழுதிய புத்தங்களின் பெயர்களை பிரதானமாகவும் அவர்களின் கட்டுரைகளின் தலைப்புக்களையும் கொண்டு ஒரு கவிதையை அல்லாஹ்வின் உதவியினால் ஆக்கிக் கொண்டோம்.


என்றாலும் மனதில் இன்னும் ஒரு ஆசை உதித்தது அது நமது கவிதை படிக்கப்படும் சபையில் நாமும் இருக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? கிடைத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும் என்று எண்ணினோம். அந்த எண்ணத்தையும் அல்லாஹ் நிறைவேற்றினான். மகளீர் மன்றம் எமக்கு அழைப்பும் தந்தது. ஆகவே நாம் பூமியில் இல்லை வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. 

இதற்கு முதல் தினம் சங்கைக்குரிய கவித்திலகம் மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் மகளீர் மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலை வடித்துக் கொடுத்துள்ளதாகச் சொன்னார்கள். 

என்றாலும் அவர்கள் ஒரு கவிதையை தனது நண்பரும் அறிஞரும் ஷெய்குமான மிஸ்பாஹி அவர்களுக்கு எழுதியுள்ளதாகவும் அதனை படிக்க புனித காதிரிய்யஹ் திருச்சபையில் இடம் கேட்டதாகவும் அதற்கு நேரக் குறைவு காரணமாக நேரம் வழங்கப்படவில்லை என்றும், இறைவன் அருளினால் நான் அதனை படிக்க ஆசைப்படுகின்றேன் என்றும் சொன்னார்கள். 

காதிரிய்யஹ் திருச்சபையில் நேரக் குறைவு காரணமாக நேரம் வழங்கப்படதாததையே முதல் அடியாயக்க் கொண்டு கவிதை எழுதியுள்ளதாகவும் சொன்னார்கள். மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்கள் சாமானியமானவர்கள் அல்ல. ஈழத்து கஸ்ஸான் என்று சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களினால் பெயர் சூட்டப்பட்ட கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பத்ரிய்யஹ் திருத்தளத்தின் தலைவர், அல் ஜாமியத்துர் றப்பானிய்யஹ் அரபிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர்.


இவ்வாறு பல உயரங்களை உடையவர்கள் அவர்கள் அவர்களின் முன்னால் நின்று பேசுவதற்கே எமக்கு கை, கால் நடுங்கும். அவர்கள் எமக்கு அறிவுத் தந்தை அவர்களின் அறிவின் முதிர்ச்சியை கருத்திற் கொண்டு அன்னாரை “வாப்பா” என்றே நாம் அழைப்பது வழக்கம். 


றப்பானிய்யஹ் மகளீர் மன்றத்தினால் பிற்பகல் 4.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் நிகழ்வுகள் மாலை 5.00 மணிக்கே ஆரம்பமாகும் என்று எமக்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது. காரணம் அன்று 4.00 மணிக்கு பயார் லங்கா மஹ்றூப் நானாவின் மகளுக்கு திருமணம் நடைபெறுவதால் அதில் ஷெய்கு நாயகம் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் தன்னால் 5.30 மணிக்கே சமூகமளிக்க முடியும் என ஷெய்கு நாயகம் அவர்கள் அறிவித்திருந்தார்கள். ஆகவே நிகழ்வுகள் 5.00 மணிக்கு அறிவிக்கப்பட்டன. 

நாம் குறித்த நேரத்திற்கு முன்னதாக சமூகமளித்து அந்த இன்ப வேளைக்காக காத்திருந்தோம். குறித்த நேரத்திற்கு எங்களின் கண்மணி ஷெய்குநாயகம் அவர்கள் வருகையை மேற்கொண்டனர். மழை பெய்து கொண்டிருந்த போதும் நிகழ்வுகள் குறித்த நேரத்திலேயே ஆரம்பமாகியிருந்தன. ஏற்கனவே சுமார் ஒரு மணிநேரம் சுருங்கி விட்டதால் றப்பானிய்யஹ் மாதர் கழகத்தினர் தங்களின் பேச்சுக்களை நேரத்துக்கு ஏற்றாட்போல் சுருக்கியிருந்தனர். 

நிகழ்வுக்கு இடம்பெற்ற அல் ஜாமிய்யத்துர் றப்பானிய்யஹ் அறபிக்கலாசாலை மன்டபத்திற்கு சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் சமூகமளித்தபோது அங்கு சமூகமளித்திருந்த மாதர் சங்க மாணவிகள் மற்றும் உறுப்பினர்களால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகளை மாதர் சங்க செயலாளர் செல்வி ஏ.எச்.எப் பஸ்லா தொகுத்து வழங்கினார். 


நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்குமுகமாக கிராஅத் செல்விகள் எம்.எப். ஹாபிலா ஜமால் மற்றும் ஏ.எப். ஹிமா ஆகியோரால் ஓதப்பட்டது. 


வரவேற்புறையை செல்வி ஏ.ஆர்.எப். முனா வழங்க அதனைத் தொடர்ந்து கவிஞர் றஹீம் ஆசிரியர் அவர்கள் எழுதிய குழுப்பாடல் பாடப்பட்டது. 


அதனை கழக உறுப்பினர்கள் எம்.எம்.எப். மஸீதா, ஆர்.எப். றப்ஹா, ஏ.ஆர்.எம்.றிப்னா, எம்.ஜே. ரோசா ஜீஸ் ஆகியோர்கள் பாடினார்கள்


பாடலைத் தொடர்ந்து கவித்திலகம் சங்கைகுரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய தனிப்பாடல் செல்வி ஆர்.எம்.றப்ஹா அவர்களால் பாடப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து புகழ் கவி வடிக்க எழுந்தார்கள் ஈழத்து கஸ்ஸான், கவித்திலகம் மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்கள். 


அவர்களின் பாடலைத்தொடர்ந்து மாதர் சங்க உறுப்பினர்களால் சிற்றுண்டி உபசாரம் வழங்கப்பட்டது. 


அத்துடன் செல்வி ஏ.ஆர். ரோசா ஸர்பின் அவர்களால் பைசான் மதீனா ஷெய்குநாயகம் அவர்கள் எழுதிய புத்தங்கள் மற்றும் கட்டுரைகளின் தலைப்புக்களை அடியாகக் கொண்டு எழுதிய கவிதை வாசிக்கப்பட்டது. 


அடுத்ததாக ஷெய்குநாயகம் அவர்களின் 68ம் பிறந்த தினத்திற்கான கேக் வெட்டும் நிகழ்வு இடம் பெற்றது கேக்கை காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளர் அல்ஹாஜ் எம். ஐ. ஜெஸீம் ஜே.பி அவர்கள் வெட்டி ஷெய்கு நாயகம் அவர்களுக்கு வழங்கினார்கள்.

றப்பானிய்யஹ் மகளீர் மன்றத்தின் நினைவுச் சின்னம்


அதனைத் தொடர்ந்து றப்பானிய்யஹ் இளைஞர் கழக பிரதான ஆலோசகரும், காத்தான்குடியில் நகரசபை உதவித் தவிசாளருமான அல்ஹாஜ் எம். ஐ. ஜெஸீம் ஜே.பி மற்றும் றப்பானிய்யஹ் இயக்குனர் சபையின் தலைவர் எச்.எம்.எம் அமீர் ஆசிரியர் (அபிமான்) அவர்களினால் சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் பரிசு வழங்கப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து றப்பானிய்யஹ் இயக்குனர் சபையின் முகாமையாளர் மௌலவீ என்.எம்.பஸ்மில் றப்பானீ மற்றும் உதவி முகாமையாளர் ஜனாப் கே.எல்.எம் அலீம் ஆகியேர்களால் கௌரவ பரிசு வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்கள் உரையாற்றினார்கள். அவர்கள் உரையாற்றும் போது


“நாம் அன்றிருந்த்தைவிட இன்று சகல துறைகளிலும் முன்னேறி இருக்கின்றோம், முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம். 

எங்கள் மத்தியில் சகல துறைகளிலும் மிகவும் வல்லமை படைத்தவர்கள் காணப்படுகின்றார்கள். இங்கு கவிகளையும் பாடல்களையும் எழுதியுள்ள மௌலவி இப்றாஹீம் நத்வீ, றஹீம் ஆசிரியர் மற்றும பைசான் மதீனா போன்றோர் மிகவும் திறமைசாலிகள் அவர்கள் சில சொற்களுக்குள் பல பொருட்களை அடக்கி சிந்திக்கத் தெரிந்தவர்கள். 

குறிப்பாக மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் கவிதையில் “நெல்லு முடையடுக்க நினைத்தவர்கள்” என்று ஒரு அடி வந்தது. ஆமாம் எமது கொள்கைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் எமது பள்ளிவாயலுக்கு முன்னால் எம்மிடம் கையில் வழங்க திராணியற்றவர்கள் ஒரு கடித்தினை வீதியில் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர் அதில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் கையொப்பமிட்டிருந்தார், பெயர் சரியாக ஞாபகத்தில் இல்லை. 

அந்தக் கடிதத்தில் “ உங்கள் பள்ளி நெல்லு அடுக்க கிடைப்பதில் சந்தோசம்” என எழுதியிருந்தார்கள். இவ்வாறு எம்மை சாடியவர்கள் எல்லாம் இன்று எமது வளர்ச்சியைப்பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனர். 

நாம் இதுவரையில் ஆறறைகோடி ரூபாய் செலவில் பள்ளிவாயலை அமைத்துள்ளோம் அதற்கு இன்னும் நான்கு டோம்கள் அமைக்க வேண்டிய தேவையுள்ளது அதற்காக இன்னும் இரண்டறைக் கோடி ரூபாய் தேவையாகவும் உள்ளது.


எமது மக்களின் தேவையை பூர்த்தி செய்தவதற்காக எம்மிடமே பல அமைப்புக்கள் தோன்றி விட்டன அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் பல சங்கங்கள் எமது மக்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்கின்றன. 

நாம் மற்றவர்கள் எம்மைப்பார்த்து வியக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். இது இறைவன் எங்களுடன் இருக்கின்றான் என்பதைக் காட்டுகின்றது இறைநேசர்கள் எங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

றப்பானிய்யஹ் மாதர் சங்கமும் தங்களின் சேவைப்பரப்பை இன்னும் விஸ்தரித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்கள். 


அதனைத் தொடர்ந்து அன்னாரின் நீண்ட ஆயுள் வேண்டியும் சரீர சுகத்திற்காகவும் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களினால் துஆப் பிராத்தனை செய்யப்பட்டது. 


அடுத்ததாக நன்றிகளை மகளீர் மன்ற உறுப்பினர் செயலாளர் ஏ.எச்.எப் பஸ்லா கூறினார் அத்துடன் நிகழ்வுகள் யாவும் சலவாத்துடன் சுமார் 7.30 மணியளவில் நிறைவு பெற்றன.




ஷெய்கு நாயகம் அவர்களுக்காக ஈழத்து கஸ்ஸான் மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்கள் இயற்றிப் பாடிய கவிதை

மிஸ்பாஹி நாயகத்தின் மீலாத் கவிதை

என் இதயம் தயாரித்த 
கவிதை வரியை களைந்து 
தாகித்தோர்கு தாக சாந்தி அளிப்பதற்காக 
காதிரிய்யஹ் வீட்டில் நேர நீர் இருக்கிறதா? 
என்று கேட்டேன் 
நேர நீர் இல்லை! – என்று சொன்னார்கள் 
அந்த வீட்டில் குடியிருப்பவர்கள். 

ஆனால் 
றப்பானிய்யஹ் மாதர் வா வென்றழைத்து 
நேர நீரும் தந்தார்கள் 
அந்த நீரில் – என் கவிதை வில்லையைக் கரைத்து 
அமிர்த்தமாக்கினேன். 
சுவையுங்கள்! சிந்தியுங்கள்! 

நபீகள் பற்றி இறைவன் கவி வடித்தான் 
இறைவன் பற்றி நபீகள் கவி வடித்தார்கள் 
இருவரின் கவிதைகளில்-உலகம் 
அவர்களை அறிந்து கொண்டது. 

அண்ணல் நபீயின் முன்னே 
கவிஞர் கஸ்ஸான், கவிஞர் கஃப் போன்றவர்கள் 
நபீ புகழ் பாடியது 
முகத்தூதி அல்ல! அது வணக்கம்

அதேபோல்- 
தௌஹீத் தோப்பில் பூத்த 
இந்த நத்வீயும் – தலைவர் பற்றிப் பாடுவது 
முகத்துதி அல்ல – அது 
அகத்துதி. 

நண்பராகி- அன்பராகி 
தலைவராகி- ஷெய்காகி 
இத் தேசத்தில் 
சூரியன் போல் பிரகாசிக்கும் நீங்கள்தான் 
இந்த நூற்றாண்டின் மெஞ்ஞானி. 

அப்துர் றஊப் என்றால் 
அறபுக் கலாபீடங்கள் மட்டுமல்ல 
பல்கலைக் கழகங்களுக்கும் புரியும் -காரணம் 
அவற்றிலுள்ள நூல்களுக்கு 
உயிர் கொடுத்தவர்கள் -நீங்கள் 

உங்கள் வார்தைகள் –கல்வெட்டுக்கள் 
உங்கள் பேச்சு 
பக்தர் நெஞ்சங்களில் பசுமரத்தாணி 
உங்கள் பார்வை- மின் போன்றது 
உங்கள் நடை – பூமிக்குப் பஞ்சு போன்றது. 
உங்கள் உரைகள் 
எங்கள் இதயங்களின் இரைகள். 

நாம் கண்டவர்களில் 
நீங்கள்- மாணிக்கம் 
தரிக்காக்களின் ஷெய்குமார்களுக்கு -தாங்கள் 
ஒரு உதாரண புருஷர்

அட்டகாசங்களும் அதிகாரங்களும்-இன்று 
உங்களைக் கண்டு அஞ்சுகின்றன. 
இருந்த இடத்தில் இருந்து 
நீங்கள் செய்யும் சேவைகள் 
எமது – தேவைகள் 

பத்ரிய்யஹ் எங்கள் பத்ரிய்யஹ் 
ஓட்டைப் பள்ளி என்றவர்கள் 
இன்று வேட்டைப் பற்கள் தெரிய 
வாய் பிளந்து பார்க்கின்றார்கள்.

நெல்லடுக்க நினைத்தவர்கள் –இன்று 
செல்லாக் காசுகளாகி விட்டனர்.
பொய்யர் என்றவர்கள் – இன்று 
பெரியவங்க என்கின்றனர்.

பிட்டிசம் அடித்தவர்கள் – இன்று 
பெட்டிப் பாம்பாகி விட்டனர்.

கொலை செய்ய வந்தவர்கள்- இன்று 
தலையுடைந்து விட்டனர்

நீங்கள் அடைந்த துன்பங்கள்- இன்று 
இன்பங்களாகி விட்டன -இன்று 
நீங்கள் பேசத் தேவையில்லை-உங்கள் 
சீடிக்கள் பேசுகின்றன.
பகைவர்களும் பார்க்கின்றனர் –பலரும் 
கேட்கின்றனர். 

இன்று உங்கள் வயது 68 – ஆயினும் 
உங்கள் உள்ளம் 28 ஆகவே உள்ளது 
உங்களை தாழ்த்த நினைத்தவர்கள் 
இன்று- பாதாளத்தில் விழுந்து விட்டனர். 

நீங்கள் மலை உச்சியில் இருக்கின்றீர்கள். 
நீங்கள் செய்த ஒப்பந்தம் – இன்று 
தீ பந்தமாகி விட்டது.

விட்டுக் கொடுக்கும் - உங்கள் மனப்பாங்கை 
வட்டுக்கோட்டை பிரபா 
பாடம் படித்திருக்க வேண்டும் .

அகிலத்திற்கு - நீங்கள் கையளித்த நூல்கள் 
விலை மதிப்பற்ற இரத்தினங்கள்

உங்கள் எழுத்துக்களை 
கொம்பியூட்டரில் அல்ல 
லவ்ஹுல் மஹ்பூளில் -மலக்குகள் 
பதிந்து வைத்துள்ளனர்.

உலகம் அழியலாம் 
ஆனால்- உங்கள் 
எழுத்துக்கள் அழிவதில்லை

ஆன்மீக அறிஞன் மரிப்பதில்லை 
அவன்- எழுத்துக்களும் 
இறப்பதில்லை 

நீங்கள் காட்டிய அற்புதங்கள் 
எங்கள் -இதயக் கோட்டைக்குள் 
பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

அதைத் திறந்தால் 
அசத்தியர்கள் அதைக் கண்டு 
தாங்க முடியாமல் செத்துப் போவார்கள் 

சத்தியரே! – மிஸ்பாஹி 
உங்களை பற்றிய வாசகங்கள் 
பல்லாயிரம் பக்கங்களுடன்-என் 
நெஞ்சில் நிறைந்துள்ளன.

தெரியாதவர்கள் புரிவதற்காய் 
மிஸ்பாஹி எனும் ஊற்றிலிருந்து 
சில துளிகளைத் தெளித்தேன் -அவை 
உங்களில் பன்னீராக மனக்கட்டும் 
அமிர்தமாக இனிக்கட்டும்.

வாழ்க நீர் நீடு வாழ்க 
உங்கள் குடும்பம் வாழ்க 
உங்கள் உண்மைத் தோழர்கள் வாழ்க 
விடை பெற்றேன்.

வஸ்ஸலாம்.
-------------------------------------------------

பைசான் மதீனா அவர்கள் ஷெய்குநாயகம் அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்கள் மற்றும் பிரதான கட்டுரைகளின் தலைப்புக்களைக் கொண்டு எழுதிய கவிதை.

அருளைத் தந்த இறைக்கும் அறிவைத் தந்த மறைக்கும் 
ஆசனம் தந்த சபைக்கும், ஆசானுக்கும், அறிஞர்களுக்கும் அணிதிரண்ட அனைவர்க்கும். 
அஸ்ஸலாமு அலைக்கும். 

காத்த நகரில் பூத்த கலங்கரை விளக்கம் யாரோ? 
காதிமுல் கவ்மியான கருணை அவர்- தம் பேரோ! 
ஈத் முபாறக் தந்த ஈகையாளர் யாரோ? 
ஈழத்தின் சொற்கொண்டல் - அவர்கள் தானோ! 

அண்ணல் பெருமான் பெருமை - பேச வைத்த தாரோ? 
ஆரம்ப அமுதை பொழிந்த அண்ண லவர்கள் தானோ! 
அஜ்மீர் அரசர் வாழ்வை அழகாய் வடித்தவர் யாரோ? 
அண்ணலைக் கனவில் கண்ட அறிஞரவர் பேரோ! 

பசாங்குகாரரையெல்லாம் பகிரங்கமாய் எதிர்த்ததாரோ 
பகிரங்க சவால் விட்ட -பண்டிதர் இவர் பேரோ! 
பரிகாரங்கள் சொல்லி பகைவரை- பதைக்க வைத்த தாரோ? 
பரிகாரிக்கு பரிகாரம் செய்த பரிகாரி அவர்கள் பேரோ! 

ஞானசூனியமெல்லாம் ஞானியாக்கிய தாரோ! 
ஞானத்தந்தி தந்த ஞானபிதா தானோ! 
மெஞ்ஞான சேவை தன்னை மெய்யாய் செய்த-தாரோ 
மெஞ்ஞான பேரவை தந்த மெஞ்ஞானியவர் பேரோ! 

சிந்திக்கச் சொல்லி தந்து குர்ஆனை மெய்ப்பித்த-தாரோ? 
சிந்தித்தால் சந்திப்பாய் தந்த சிற்பியவர்கள் தானோ! 
சிலந்தி வலையைச் சிதைக்கும் சூறாவளி யாரோ? 
சித்தம் தெளிவைத் தந்த சித்தர் கோ பேரோ! 

ஆலம் முழுதும் அறிவை -அறியச் செய்த தாரோ! 
அல்மிஸ்ஹாத் தந்த ஆசான் அவர் தானோ! 
ஆய்ந்து அறத்தை யெல்லாம் அறிவாய் தந்த தாரோ? 
ஆலத்தின் கோலம் கண்ட மிஸ்பாஹி பேரோ! 

உலகின் உண்மை தன்னை உணர்த்தியவர் யாரோ? 
உருவமும் பிரமமும் தந்த உலமாஉ இவர் தானோ! 
உள்ளமை உண்மை என்று உரக்கச் சொன்ன-தாரோ! 
உண்மையாளர் கோமான் வங்குசம் வந்த பேரோ! 

ஐந்து கடமை தன்னை அலசித் தந்த தாரோ? 
ஐந்தும் ஐந்தாய் சொன்ன ஆசானவர் தானோ! 
ஐம் பூதங்களின் ஐயங்கள் நீக்கியதாரோ? 
ஐனிய்யத் சொன்ன அப்துர் றஊப் பேரோ! 

கல்பின் கறைகள் நீங்க கருத்தைத் தந்த தாரோ? 
ஹமவோஸ்த் சொன்ன காமில் அவர் தானோ! 
கண்ணூரின் கண்மணி சுட்டிக் காட்டிய தாரோ? 
கல்லமில்லா கருணை காத்தமுல் வலீ தானோ! 

அகிலம் அறிந்து தெளிய அகமியம் சொன்ன தாரோ? 
அல் ஆலிமுல் கபீர் தந்த அருமை மைந்தர் தானோ! 
அலவிய்யஹ் கோட்டைக்குள்ளே அவ்லியா காட்டிய தாரோ? 
ஆலமும் கோலமும் கண்ட அத்துவைதி பேரோ! 

பூத்துக் குலுங்கும் புனித ரமழான் தந்த தாரோ? 
புன்னிய பத்ரிய்யஹ் தளத்தின் தந்தை தானோ! 
பூமான் நபீயின் பேரர் அஜ்மீர் அரசரைக் காட்டிய தாரோ 
பூலோகம் போற்றிடும் புண்ணியர் பெரியவர் பேரோ! 

வஹ்ஹாபிச சாபக்கேட்டைச் சொன்ன தாரோ? 
வஹ்ஹாபிச முகவர்கள் -வழிகேட்டின் தரகர்கள் தானோ! 
வஹ்ததுல் வூஜுத் சொல்லி சாட்டையால் அடித்தவர் யாரோ? 
வஹ்மூ-பேதமற்ற ஷம்சுல் உலமா பேரோ! 

தன்வினை தன்னைச் சுடும் தந்த தாரோ? 
ஷேகுதாவூத் வலீ சரித்திரம் தந்த பேரோ! 
இமாம் புகாரி இலக்கணம் சொன்ன தாரோ? 
இல்லறப் பூங்காவில் இரு மலர்கள் தந்த பேரோ! 

நனவாகும் ஒரு கனவு தந்த தாரோ! 
நினைவெல்லாம் நீங்கா எங்களின் ஷேகுனா தானோ! 
சஞ்சயம் நீக்கும் சஞ்சீவி செய்த தாரோ 
சத்தியம் காத்திட்ட சாதனையாளர் ஷேகுனா தானோ! 

68 ஆண்டுகளாய் அவனியில் ஜொலிப்பதாரோ? 
அறிஞர்களுக்கு அறிவாய் இருப்பவர் யாரோ? 
அறியாமையை அழகாய் அகற்றிய தாரோ? 
ஆன்மாவை அன்பால் நிரப்பிய தாரோ? 
அண்ணல் நபீயின் அன்பைப் பெற்றவர் யாரோ? 
அகிலமே போற்றும் அன்பின் ஆசான் யாரோ? 
அவர்- அப்துர் றஊப் எனும் நாமம் பூண்ட பேரோ! 

வஸ்ஸலாம்
----------------------------------------------

கவிஞர் எச்.எம்.எம்.றஹீம் அசிரியர் அவர்கள் ஷெய்கு நாயகம் அவர்களுக்கு எழுதிய 
'மஹ்மூது நபீகள் போல ஒரு மனிதர் தோன்ற வில்லை' 
என்ற மெட்டிலான பாடல்.

எழுவானின் இரவி போல இருள் நீக்க வந்த ஜோதி 
அருளாளன் கொடையளித்த அறிஞர் மிஸ்பாஹி வாழ்க. 
எப்பொழுதும் மலந்து மணக்கும் எங்கள் இதயரோஜா வாழ்க! 
இப்பொழுது ஐந்திரண்டு இன்பத் தென்றல் இதயம் தழுவ 
ஆணலைகள் வந்து வாழ்த்த பெண்ணலைகள் கூடி வாழ்த்த 
சந்தோசப் புனலில் குதிக்கும் மீன் போல மனங்கள் துள்ள 
மாமதீனா வாசம் வீச மாவலீகள் ஆசி கூற 
மழழைகள் கூட வந்து உங்கள் நாமம் சொல்லி வாழ்த்த 
உங்கள் இதயம் மகிழும் ஜனனம் ஒரு கோடி இன்பச் சுவனம் 
மாமேதையே மிஸ்பாஹி நலம் கோடி பெற்று வாழ்க! 
(எழுவானின்) 

தேன் வடியும் கூடு நீங்கள் தேன் குடிக்கும் வண்டு நாங்கள் 
வான் மறையின் மேகம் நீங்கள் வளமான பயிர்கள் நாங்கள் 
ஒயாது முழக்கம் செய்து தௌஹீதைக் காட்டித் தந்தீர் 
உயர்வான குணங்களாலே உயிரோடு உறவு கொண்டீர் 
உயிர்போகுமென்று அஞ்சி உங்கள் நாவு ஓய்ந்ததில்லை 
உலகோரைப் போல உலகை உங்கள் உள்ளம் விரும்பவில்லை 
பல புயல்கள் வந்த போதும் மனம் சாய்ந்து போன தில்லை 
என்றும் ஏகனோடு இருக்கும் எங்கள் ஷேய்குனாவே வாழ்க! 
(எழுவானின்) 

மனம் போன போக்கில் உங்கள் பாதங்கள் நடப்பதில்லை 
மதிநுட்பமின்றி வார்த்தை உங்கள் நாவில் எழுவதில்லை 
மறுகொண்ட உள்ளத்தோடு உரையாடி மகிழ்வதில்லை 
பகை கொண்ட உள்ளத்தோடு உறவாடும் பழக்கமில்லை 
உங்கள் உள்ளம் கொண்ட வெண்பால் வெட்கம் விட்டு நீங்கவில்லை 
உங்கள் அன்பை அறவணைப்பை தாய்மார்கள் வென்றதில்லை 
இல்லை என்று நாடும் யார்கும் இறங்காமல் இருந்ததில்லை 
வாரி வழங்கும் வள்ளல் மிஸ்பாஹி எங்கள் ஷெய்குனாவே வாழ்க! 
(எழுவானின்) 

போர்வாளை மிஞ்சும் கூர்மை உங்கள் எழுதுகோளில் கண்டேன் 
அந்த எழுதுகோலின் மையில் பல ஹுருல் ஈன்கள் கண்டேன் 
நபீயரசர் இங்கு வந்தால் பொற்கிரீடம் சூடுவார்கள்! 
வலீயரசர் இங்கு வந்தால் பொன்னாடை போர்த்தி மகிழ்வார்! 
மாணிக்க மரகதமே! மண்ணானேன் மதிப்பு அறியேன்! 
காணிக்கையாக இங்கு கவி செய்து பாடுகின்றேன்.. 
தவசீலரான ஒளியே உமை வாழ்த்தும் பேறு பெற்றேன் 
பல கோடி நலன்கள் பெற்று பல்லாண்டு வாழ்க! வாழ்க!

வஸ்ஸலாம்
--------------------------------------------

அகமியத்துக்காக புகைப்படங்களுடன் தொகுத்து எழுதியவர் 
பைசான் மதீனா.

குறிப்பு : பைசான் மதீனா அவர்கள் ஈமெயில் மூலம் சில எழுத்துப் பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொண்டார்கள் அவர்கள் சுட்டிக்காட்டியவை தற்போது திருதப்பட்டுள்ளது.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK