Monday, November 21

குருமணியின் மெஞ்ஞான உபதேசம்

இலங்கையில் வாழ்ந்து,அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ள சங்கைகுரிய மகான் பாவா முகையத்தீன் குரு பாவா அவர்களின் 1961ம் ஆண்டைய "குருமணி" உபதேசத் தொகுப்பிலிருந்து.

சீடன் 
மகான் முஹம்மத் றஹீம் பாவா முகையத்தீன்
குரு பாவா அவர்கள்.
குருநாதா!! எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன், எனக்கு விளக்கிக் காட்ட வேண்டும். 

கோவில், குளம், பள்ளிவாசல் என்று பலவாறு பல உருவம், அட்சரம், மந்திரம் என்னும் கோலங்களைத் தரிப்பது நலமா? இடரா? அதன் தன்மையை எனக்குச் சொல்லித் தர வேண்டும் சுவாமி, குருநாதா! 

குரு 
அப்பா மகனே, சொல்லுகிறேன் கேள்!, நான் முன் சொல்லி வந்தவைகளை தெரிந்து கொள்ளவில்லையா? ஆனாலும் சொல்லுகிறேன் கேள்! 

கோவில், குளம், பள்ளிவாசல் என்று பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன, அவைகள் இருக்கவும் வேண்டும். அதை உலகம் போற்றவும் வேண்டும். ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்ட அசைவற்ற ஒருவனை நேசிப்பது இவற்றைக் கொண்டல்ல. ஆனாலும் சொல்லுகிறேன் கேள்! 
ஒரு மழலை வயிற்றுக்குள் ஜெனித்தபோது அதற்கு அன்னை தந்தையைத் தெரியுமா? தெரியாது!. அதேபோல்தான் இவ்வழியில் சில அறிவுகளை பெருப்பித்து பிரித்து அறிந்தறிந்து தேர வேண்டியிருக்கிறது. 

அதாவது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்லப் படுகிறதை ஒருவர் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று சொல்லிக் கொள்வார். 

இவற்றின் கருத்துக்களாவண அனேகமுண்டு, ஆனாலும் சிலவற்றைச் சொல்லுகிறேன். 

ஒரு மழலை வயிற்றில் இருக்கும்போது அன்னை தந்தையாரைத் தெரிவதில்லை. அதேபோல் சிசுவாக மண்ணிற் பிறந்த போதும் தெரியுமா? தெரியாது!.

அதைப்போல் நன்மை, தீமை என்பது அதற்குத் தெரியாது. அம் மழலைக்கு பசி வந்ததும் கதறுகிறது, உடன் தாயானவள் தூக்கி அமுதினை ஊட்டுகிறாள். 

அதன் பின் (வயது 10 மாதத்தின்பின்) முலையால் ஊட்டிய பிள்ளைக்கு கையால் ஊட்ட எத்தனிக்கிறாள். அப்போதும் அம் மழலைக்கு மலம், சலம் வயிற்றிலிருந்து போகிறது. உடன் அது அருவெறுப்பான ஒன்றென்று எண்ணுகிறதா? இல்லை. 

அதைக் கையால் பிசைந்தும், சாப்பிட்டும் வருகிறது. அதைக் கண்ட அண்ணை தந்தை, சுத்தப்படுத்துகிறார்கள். அதன் பின் அண்ணை ஊட்டிய கையைக் கண்டு, தாமும் தம் கையால் பல வஸ்துக்களையும் எடுத்து தம் வாய்க்குள் வைக்கின்றது. அப்போதும் கெட்டது, நல்லது என்று அதற்கு தெரியாது. 

அதைக் கண்ட அண்ணை தந்தை கெட்டதைக் தவிர்த்து, நல்லதை எடுத்துக் காட்டி கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். ஆனால் அவர்கள் நல்லதையும் கெட்டதையும் காட்டிக் கொடுத்து. நல்ல மொழிகளையும் கெட்ட மொழிகளையும் கற்றுக் கொடுக்கின்றனர். அம்மா என்றும், அப்பா என்றும், மாமா என்றும், மச்சான் என்றும் முறைகளைக் காட்டிக் கொடுக்கிறார்கள். 

அதிலும், அச் சிசுவானது சொன்னதைச் சொல்லும், செய்வதைச் செய்யும், கிளியாகி விடுகிறது. சுடும் நெருப்பைக் கெட்டது நல்லது என்று உணர்ந்து கொள்ளும் சக்தி அதற்கு காணாது. 

அதன் பின் அண்ணை, தந்தை இருபாலாரும் வெளியே சிலவற்றை காட்டிக் கொடுக்கிறார்கள். அதையே அப்பிள்ளையும் பார்த்து அவ்விதம் பழகிக் கொள்கிறது. அதிலும் அப்பிள்ளைக்கு நலம், தீது எது என்று தெரிவதில்லை. 

மூன்று வயதின் பின், தானாகவே உணர்ச்சி வளர்கிறது. அண்ணை, தந்தை, அக்கா, தம்பி என்றும் தன் சொத்து பிறர் சொத்து என்றும், ஆசா பாசமாகிய அவாவ்வைக் கற்றுக் கொடுத்து விடுகின்றனர். அப்போதும் அதற்குத் தெரியுமா? நன்கு தீங்கு, தீங்கு நன்று, தெரியாமல் எல்லோரும் செய்வது தானும் செய்து கொள்கிறது. 

நன்று தீங்கு என்பது தெரியாமல் எந்த உணர்வும் இல்லா காலத்தில் ஆசையைப் பெருக்கி பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விடுகின்றனர். அதன் பின் அம்மழலை சில மொழிகளைச் செய்வது போல், செய்து அழங்கார ஆடல் பாடல் மிகுந்த ஆசாபாசங்களை அறிந்து கற்றுக்கொள்கின்றது. 

இவ்வாறு இருக்க, அப்பா! ஒரு பிள்ளையுடைய வாழ்நாளில் பள்ளி கூடத்தின் சிற்றறிவை கற்றுக் கொள்வதற்கு தக்க வழிதான் கோவில், குளங்கள், பள்ளிவாசல். 

இவைகளின் தத்துவார்த்தங்கள் அனைத்தும் பள்ளிப் படிப்புக்கு ஒப்பானவைகளாக இருக்கின்றன. இதில் இப்பாடங்களை சரியாகப் படித்து திருத்தி எடுத்துக் கொள்வதுதான் சரியை. 

சரியை என்பது சிறுவர்கள் பாடத்தை ஒத்த்தாகும். இது உலக மாய இன்பத் தோற்றங்களுக்கு காட்சி அளிக்கும் தன்மை பொருந்திய நிலைகள்தான் என்று நுட்பமாக அறிந்து கொள்வீர்களாக. இதுதான் முதல் இலட்சணம். 

ஒரு பிள்ளை பெரிய பிள்ளையாகு முன் மனம்போல் எங்கும் திரிந்து சினேகிதர்கள் வீடு வாசல், இனம், சனம் என்று கதைத்து திரிந்து கூச்சமற்று திரிகிற நாட்போலத்தான் நான் முன் சொல்லி வந்த பாடங்கள். உட்பொருள் அதுதான் சரியை யாகிய இடமாகிறது. 

நான் முன் சொல்லிய கருமங்ளைத் தவிர்த்து அங்கு இங்கு விளையாடுவதை ஒழித்து, சிரிப்பை அடக்கி மானத்தைக் காத்து குமராகிய பெருமையை குமர் என்ற அங்கலட்சண படிவுகளோடு விளங்கிய குமரை ஒத்த குணம் தரிபட்டு வீட்டிலேயே நிலைபட்டிருந்த தாய், தகப்பன் என்று இருபாலாரைக் கண்டு அவர் தன் குறைகளை பேசி வீட்டிலிருந்தே ஆனந்தம் பெற்றுக் கொள்ளும் தன்மைதான் கிரியை. 

அதாவது பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளையை எத்தனம் செய்யும்போது ஒரு குமருக்கு ஒரே மாப்பிள்ளையைத் தேடி நல்வழி, நல்லோழுக்கம், நற்புத்தி, நல்லறிவு, நல்ற்றல் உள்ள கணவனாகத் தெண்டித்துக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அல்லும் பகலும் தேடி, இத்தகைய கணவனுடன் சேர்க்க வேண்டும். அதுதான் உயர்ந்த குமரின் இலட்சணம். 

அல்லாமல் நாம் குமரைப் பெற்றோம் என்று அங்கே, இங்கே, ஓடிப் பலரைப் பார்த்து, அவரை இவரைத் தேடி கண்டவர் எல்லோரிடமும் பேசித் திரிவார்களாகில், அது முன் சொல்லிய சிசுவாகிய சரியையினுடைய தன்மையாகும். 

இதை மறந்து கிரியையாகிய குமர் எவ்வாறு இருந்ததோ அவ்வாறு இருந்து ஒருவனை நம்பி அவனைத் தன் வீட்டுக்குள் புகுதல்வைத்துக் கொள்வதுதான் கிரியையினுடைய பெருமை. கிரியையானது ஒரு பருவமுடைய குமராகிறது. 

குமர்தான் கிரியை. மற்றோருவரையும் பாராது கொண்ட கற்பின் விளக்குக்கு, எண்ணெய் ஊற்றி விளக்கு இதுதான் என்று திடங்கொண்டு, தவறாது இறைவனைத் தன் உள்ளத்திற் சேர்த்துக் கொள்வதுதான். கிரியையின் எண்ணெய் ஊற்றிய விளக்கு. அவள் மற்றவர்களைக் கண்டு சிரிக்காள், பேசாள் இதுதானப்பா கிரியை. 

யோகமாகிய பொருளானது, கல்யாணம் பண்ணிய மாப்பிள்ளையும், பெண்ணும் ஆனந்தக் கூத்துக்கள் ஆடிச் சிரிக்கவேண்டிய இடத்திற் சிரித்துக், கொஞ்ச வேண்டிய இடத்திற் கொஞ்சி, அவரிடம் கூச்சமின்றி விளையாட ஆரம்பிப்பது போலக், கல்யாணமாகிறது. 

புதுப் பெண் மாப்பிளை போலப் பக்குவம் கொண்டு எந்தெந்த வழியில் இன்பப்பட வேண்டுமோ அவ்வாறே அவ்வழியிற் புகுந்து நாதனையே தன் உள்ளத்தில் எண்ணி, ஆசை, ஆனந்தம், சிரிப்பு, குளிப்பு, சாகரத்தில் மயங்குகின்றார்களோ மயங்கிப் பிள்ளைகளைப் பெற்றுப் பிள்ளைகளின் காட்சிகளைக் கண்டு களிகூர்ந்து பார்க்குமிடமெல்லாம் பார்த்து, 

நாடுகளைப் பார்த்து, காடுகளில் அலைந்து மேடுகளில் திரிந்து, விநோதமாகிய சுக துக்கங்களில் ஆடிப்பாடி அனுசரித்து இருபேரும் ஒன்று சேர்ந்து மச்சான் என்ற இடத்தில் அத்தான் என்றும், அத்தான் என்ற இடத்தில் நாதனென்றும் அழைத்து, நாதனென்ற இடத்தில் நாயகனென்றும் அழைத்து, 

நாயகனென்ற வர்த்தா என்றும் அழைத்து, வர்தா என்ற இடத்தில் பரமதேவதை என்றும் அழைத்து. பலவாறு புகழ்ந்து கூறி, வாய்க்கு வந்தபடி வசையும்மிசையும் கூறி, ஈருயிரும் ஒருயிராய் நேசிக்கும் தன்மை போல இந்நிலையின் முடிவுகள். இதைப் போலத்தான் மூன்றாவது யோகத்தின் இன்ப சாகரங்கள். 

அப்படிப்பட்ட சரியையானது ஒரு இளம் பருவமடையாப் பெண்போலாகும். இவ்வாறு சிரித்துப் பார்க்காத்தற்கெல்லாம் பார்த்து கேட்காத்தற்கெல்லாம் கேட்டு, உடைந்து போவதையெல்லாம் உயர்வென்று, 

அழிந்து போவதையெல்லாம் ஆசையாய் வாங்கித் தரச் சொல்லி, அழுது தயங்கும் சிறு பிள்ளைத் தன்மை எவ்வாறோ அவ்வாறே ஒத்த தன்மைகளுக்கு உரியதுதான் அந்நிலை. 

கிரியையான முடிவு பேச வேண்டிய இடத்திற் பேசி, ஒழுக்க முறையில் நடந்து, நல்லறிவுகளைச் செலுத்தி நற் குணத்தோடு இருந்து, உள்ளதை விளக்கி உறுதியுடன் ஒன்றைநாடி, ஓங்காரமாகிய வீட்டைக் கட்டி, 

அதற்கோர் அறுகோணமாகிய தாமரைப் பூவைச் சிங்காரித்து பூக்காயா மலர் தண்ணீர் வார்த்துக் புனுகு, சவ்வாது, அத்தர், பண்ணீர், காதம், கஸ்தூரி, சந்தணம் கரைத்துப் கணவர் குடி புகுதும் கலக்கமற்ற நேரம் நிமிசத்தை கவனித்துக் காத்துப் பார்த்து கருத்தில் வைத்திருந்த மனத்தை அவர் குணத்திற் போட்டுக் கட்டி, வீட்டுக்குள் இழுத்துக் கொள்வாள். அதுதான் கிரியையான உறுதித் திடம் அசையாப் பரம் என்ற ஆனந்தம். 

மூன்றாவதாகிய இந்த வீட்டுக்குள் நுழைந்த கணவனுக்கு கட்டில் போட்டு, மேத்தை விரித்து காதல் கஸ்தூரி குங்குமப்பூக் கமழும் பரிமளாதிகளாற் சிங்காரித்து பூவினால் அலங்கரித்து காயாத கணியை எடுத்து பூக்காத பூவை எடுத்து வாங்காத வஸ்துக்களை வாங்கி கேட்காமலே கொடுக்கும் தன் கருத்தால் நாதாந்த வேதாந்த நீதா, சோபனக் குலநாதா! சொகுசுக்குள் அகப்படாத கருணைகண் நீதா, கேட்காமலும் சொல்லாமலும் கருத்தாற் தருகிறேன். 

என் உருத்தைக் கேள். இந்தக் கருத்தைப் பார், என் களையைப் பார், நான் களைபிடித்தோடிவரும் நிலையைப் பார், என்று வலம் இடம் என்ற இரு கலைகளையும் பிடித்து ஓடி ஓடி வருகின்ற வேகத்தைக் கண்ட நாதன், நாதாந்த, வேதாந்த மூர்த்தி, வேதாந்த மூர்த்தியாகிய ஆண்டவன் அருற் கண் விழித்து யோக விழியினால் பார்த்துச் சிரித்துப் பக்குவமடைந்து இருதயமாகிய வீட்டிற்குள் இணையற்ற இறைவனை இன்ப சாகர விளையாட்டிற்குள்ளாக்கிக் கொண்டு 

“என் இறைவா! உன்னைவிட ஒன்றை அறியேன், கண்டறியேன், எதையும் அறியேன், உன் கலை இரண்டும் சேர்ந்து உண்னைக் கண்டேன், கருணாகரா! கருணை செய்! 

என்று பலவாறு புகழ்ந்து அவனை தன்னுள்ளத்தில் இருத்திக் கொண்டு அதிக உற்சாகமாகச் சிரித்து மயங்கிக் கல்யாணம் பண்ணிய ஆணும் பெண்ணும்போல் இருதயத்திற்குள் விரிப்பு விரித்து வைத்துப் புதிர் பார்த்த மாப்பிள்ளையுடன் சேர்ந்து, 

எல்லாம் விளையாடிச் களிகூர்ந்து ஆடிப்பாடி ஓர் உலக சாகரத்தில் கல்யாணம் பண்ணிய ஒர் ஆண் பெண் இருவரும் முழு இல்லரக் கல்யாணம் கட்டி மகிழ்வது போல மகிழ்ந்து முடிவு கண்டதுபோல ஞான சாகரத்தில் ஆண்டவனோடு கலந்துபேசி விளையாடி இருப்பதுதான் யோகம். 

இதை அறிந்துகொள்! என் கண்மணிச் சீடர்களே! 

நான்காவது ஞானம் என்பது. இதில் இதற்கு முன்சொல்லிய அனைத்தையும் கலைந்து எறிந்து ஒன்றும் கருதாமல் ஆண்டவனாகிய ஒருவனையே ஒருவனென்று திடம்கொண்டு உள்ளத்திற் கலந்து, வைத்திருந்த சுடரைச் மூச்சினால் கலைபிடித்து பரவச்செய்து, வேரில்லாமல் வித்தில்லாமல் முளைக்கச் செய்து. 

கொடியில்லாமல் பூத்துக் பூவில்லாமல் காய்த்து, காயில்லாமல் எங்கும் படர்ந்து, கண்ணிரண்டையும் மூடி கருத்தின் மாயச் சிந்தை அனைத்தையும் அழித்து எறிந்து விட்டு ஒருவன் ஒருவனாகவே உகந்து புகழ்ந்து, 

நம்பிக்கையை உயர்த்தி இருபத்தோறாயிரத்தி அறுநூற்றி இருபத்தொரு மூச்சும் அவன்தான் வேறில்லை, எதுவுமில்லை என்று திடத்தோடு மூச்சின் கலைபிடித்தோடுவது திருப்தியான அன்பு கூர்ந்த ஞானத் திருக்கண்களாவார்கள். 

ஆனாலும் இதே மொழியை பலரும் பல பிரிவுகளாக எடுத்துச் சொல்வார்கள். அது ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று சொல்லப்படும். 

இதுவும் இதைபோலத்தான் பொருளாகும். ஆனாலும் எது எதுவானாலும் ஆண்டவன் ஒருவனை நம்பிக் கொண்டு, திடங்கொண்டு, உறுதி கொண்டு அச்சங்கொண்டு, இணையில்லா வணக்கத்தில் இன்பங்கொண்டு, இருப்பவர்கள் எவரிலும் ஆண்டவர் அருட்கண் சுரக்கும். 

ஆனாலும், இந்த நான்கு படிகளிலும் உலக சகாரத்தை ஒட்டிய ஒன்றைக் கடந்து கிரியை, ஞானம் வரையிலும் வழிகாட்டுகின்ற, இன்ப நிலையுணர்ந்த குருநாதர் ஒருவர் வழிகாட்ட வளம் இடம் நோக்கித்தர வேண்டும் அது திடமாகச் சொன்னேன். 

நற் குருவைப் பணிந்து தேடிக் கொள்வீர்களாக! என் கண்மணிச் சீடர்களே!

உபதேசம் தொடரும்.

கலைச் சொற்கள். 
அட்சரம் – எழுத்து, இடர்- துன்பம், சரியை – ஒழுக்கம், கிரியை- செய்கை அல்லது பூசை, யோகம் – தியான நிஷ்டை 
----------------------------------------------------------------------------------------
1961ம் ஆண்டு தொகுக்கப்பட்ட "குருமணி" என்ற மகானின் உபதேசத் தொகுப்பிலிருந்து.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK