அல்லாஹ் வேறு, சிருஷ்டி வேறு என்பதால் இஸ்லாமிய தத்துவம் மாசுபடுகிறதா?
மௌலவீ. எச்.எம்.எம். இப்றாஹீம் (நத்வீ)
- இரு பொருள் ஒரு பொருளாகல்
- இத்திஹாத் என்றால்
- இஸ்லாம் கூறும் கொள்கை
- இறைவனின் இரு நிலைகள்
இரு பொருள் ஒரு பொருளாகல்..
கிளாஸில் நீர் இருப்பது போன்று அல்லாஹ் சிருஷ்டியிலிருக்கிறான் என்ற தவறான கொள்கையைப் போன்று இன்னுமொரு கொள்கையுண்டு அதுவும் தவறான கொள்கையாகும்.
அது எவ்வாறெனில் சிருஷ்டியும், சிருஷ்டி கத்தாவும் ஒன்றுக்கொன்று வேறாயினும் அவ்விரண்டும் சேர்ந்தபோது பிரித்தறிய முடியாதவாறு நீருடன் கலந்த சீனி ஒரு பொருளாகி எங்கும் தனது இனிமை என்ற வள்ளமையைக் காட்டுவது போல் அல்லாஹ் என்பவன் சிருஷ்டியில் கலந்து எங்கும் வியாபித்திருக்கின்றான், பரவி, விரவி இருக்கின்றான் என்பதாகும்.
இக்கொள்கையை அகீதா உசூல் சட்ட லோயர்கள் இத்திகாத் என்ற பெயரைக் கொண்டழைக்கின்றனர்.
இத்திஹாத் என்றால்
இத்திகாத் என்றால் “ஜஃலுஷ் ஷைஐனி ஷைஅன் வாஹிதன்” இரு பொருள் சேர்ந்து ஒரு பொருளாகுதல் என்பது அதன் வரைவிலக்கணம் ஆகும். இக்கொள்கையையும் சரியானதா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது, இதுவும் இஸ்லாமிய கொள்கைக்கு நேர் முரணாகத்தான் தெரிகிறது.
காரணம் யாதெனில் தனியான இரு பொருட்கள் சேர்ந்து ஒன்றாக இருப்பது போல் அல்லாஹ் சிருஷ்டியில் கலந்து வியாபித்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய அக்கீதாவுக்குப் பிழையாக இருப்பதாலும், தனியான சுயமான மூலப் பொருள் ஹக்குடைய வுஜூத், தாத் மாத்திரமே இருக்க வேறு எப்பொருளும் தனியான மூலம் பொருளாக இல்லை என்பது இஸ்லாமிய கொள்கையாக இருப்பதாலும்,
இக் கொள்கை உசூல் கொள்கைச் சட்டம் கூறும் சட்ட லோயர்களிடத்தில் ஆராயப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. இதிலிலிருந்து நீரில் சீனி சேர்ந்து கரைந்து ஒரு பொருளாகி அதன் இனிமை எங்கும் பரவி, விரவி, வியாபித்திருப்பதுபோல், அல்லாஹ் என்பவன் ஒவ்வொறு பொருளிலும் நிறைந்து வியாபித்திருக்கின்றான் என்பதும் பிழையானதாகும்.
இஸ்லாம் கூறும் கொள்கை
மேற் கூறப்பட்ட விபரங்களின் படி அல்லாஹ் என்பவன் சிருஷ்டிகளுக்கு வேறானவன் என்பதும், அவனுக்கு சுயமான வுஜூத் இருப்பதுபோல் (வேறாக கருதுவதால்) எல்லாச் சிருஷ்டிகளுக்கும் தனித்தனியான வுஜூத் உண்டென்று நம்புவதும், கிளாஸில் நீர் இருப்பதைப் போன்று ஒவ்வொறு பொருளிலும் இறைவன் இருக்கின்றான் என்பதும், நீரும் சீனியும் கலந்து வியாபித்திருப்பதுபோல் அல்லாஹ் ஒவ்வொறு பொருளிலும் கலந்து எங்கும் நிறைந்து வியாபித்திருக்கின்றான் என்பதும் இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதும் நேர் முரணானதும் இஸ்லாமிய தத்துவத்தை மாசுபடுத்தக் கூடியதுமாகும்.
மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கங்கள் இஸ்லாத்திற்கு நேர்மாறானால் இஸ்லாமிய அகீதா- கொள்கை என்னவென்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழலாம். அதற்கான விடைகளை குர்ஆன், கதீஸிலிருந்து, கலீமாவுக்கு எல்லாம் அவனே என்ற பொருள்பட ஆழமான, ஆதாரபூர்வமான கருத்துக்களை அவ்லியாக்களான ஞானவான்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் வழங்கியுள்ள விளக்கங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
இறைவனின் இரு நிலைகள்.
சிருஷ்டிகள் எனப்படும் ஒவ்வொறு பொருளுக்கும் இரு நிலைகள் உண்டு.
1. வெளியரங்க நிலை
2. உள்ளரங்க நிலை
இதேபோன்று இறைவனுடைய தாத்திற்கும் இரு நிலைகள் உண்டு,
1. அரூப நிலை
2. ரூப நிலை
அரூப நிலை என்றால்- எந்தச் சிருஷ்டிகளையும் படைப்பதற்கு முன்னிருந்த நிலை. முதற்படைப்பு நாயகம் (ஸல்) அவர்களின் பேரோளியேயாகும். அவர்களது ஒளியை அல்லாஹ் தன்னொளியிலிருந்து முதலாவதாக படைத்தான். என்பது குர்ஆன், ஹதீஸிலிருந்து நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
அரூப நிலை என்று சொல்லும் போது றசூலுல்லாஹ்வுடைய ஒளியையும் படைப்பதற்கு முன்னிருந்த நிலையாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இறைவன் எந்தப் படைப்பையும் சிருஷ்டிப்பதற்கு முன்னிருந்த நிலை. இந் நிலைக்கு தாத்துல் மஹ்ழ் என்றும், கன்ஸுல் மஹ்பிய்யஹ் என்றும், மஸ்ஹூத், கதீம், அமா, அஹதிய்யத்து, தாத்து, வுஜூது என்றும் பல பெயர்கள் உள்ளன.
இறைவனின் இந்நிலையை எந்தச் சிருஷ்டியாலும் புரிய முடியாது. காரணம் அந்நிலையில் சிருஷ்டியே சிருஷ்டிக்கப்படவிலையே! அத்தகைய நிலை அது. சிருஷ்டி என்ற பெயருக் கே இடம் இல்லாத நிலை. எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற நிலை. சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்ட்ட நிலை.
எவ்வளவுதான் சிந்தித்தும், ஆராய்ந்தும் முடிவுகாண முடியாத நிலை. இப்படித்தான் என்று வர்ணிக்க முடியாத நிலை. வர்ணிப்பதற்கு வார்தையே இல்லாத நிலை. சுருக்கமாகச் சொல்லப்போனால் தன்ஸீகான பரிசுத்த நிலை.
மேற்கூறப்பட்ட நிலையில் அவன் மாத்திரமே இருந்தான். அவன் யாராலும் படைக்ப்படாதவன். தன்னைகொண்டே உண்டாகியிருந்தான். அறிவும், அறியப்படும் பொருளும், அறிஞனும் அவனாகவே இருந்தான். உதாரணமாகச் சொல்லப் போனால் தங்க்க் கட்டி ஒன்று மாலையாகவும், மின்னியாகவும், சங்கிளியாகவும், கரணையாகவும், பட்டி, மூக்குத்தி, வலையலாகவும் வருவதற்கு முன் தன்னிலே இவை அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் நிலை.
இந்நிலையைத்தான் ஹதீஸ் குத்ஸியில் “குன்து கன்ஸன் மஹ்பிய்யன் பஅஹ்பப்து அன் உஃறப, பஹலக்துல் ஹல்க, பபீ அறபூனீ” நான் யாராலும் அறியப்படாத, புரியப்படாத பொக்கிஷமாக இருந்தேன். இப்படி இருந்த நான் என்னுள்ளிருந்த அற்புத மிகுந்த எல்லா ஆற்றல்களையும் வெளிப்படுத்த விரும்பி சிருஷ்டிகளைச் சிருஷ்டித்தேன். என்னைக் கொண்டே என்னைத் தெரிந்து கொண்டனர். என்று கூறுகின்றான்.
இக்கருத்துரையை நாம் சிந்தனைக்கு எடுத்து நோக்கும்போது, எப்போது இறைவன் சிருஷ்டியைப் படைத்தானோ அப்போது அவனுக்கு ரூப நிலையும் உண்டாகி விடுகிறது.
ரூப நிலைக்கு தஸ்பீஹுடைய மக்காம் என்றும் சொல்லப்படும். ஒரு மனிதன் முஃமினாக வேண்டுமானால் இறைவனுக்குரிய இரு நிலைகளையும் (அரூபி, ரூபி) கொண்டு நம்ப வேண்டும். ஒரு மனிதன் இறைவன் அரூபி என்று மாத்திரம் நம்பினாலும், மாறாக அவன் ரூபி என்று மாத்திரம் நம்பினாலும் ஈமான் கொண்ட விசுவாசியாக முடியாது.
அவனது அரூப – ரூப இரு நிலைகளைக் கொண்டும் நம்பும் போதுதான் அவன் உண்மை முஃமீனாக முடியும். இது குர்ஆன், கதீஸ் கூறும் உண்மை விளக்கமாகும்.
படைத்தல் என்பதன் பொருள்.
அல்லாஹ் படைத்தான் என்றால் அதிகமனோரின் அபிப்பிராயப்படி அல்லாஹ் என்று ஒருவன் எங்கோ இருந்து கொண்டு ஒவ்வொறு சிருஷ்டியையும் (தட்சன் மேசையைப் படைப்பதுபோல்) படைக்கின்றான் என்று கருதுகின்றனர். இது அக்கீதாவுக்கு மாபெரும் பிழையாகும்.
இறையறிவு தொடரும்...
இறையறிவு தொடரும்...
ஜனவரி 1982 ம் ஆண்டு வெளியான ஏகத்துவ மெஞ்ஞான இதழான ஞானச்சுரங்கம் பேரின்ப அமுத இதழ் – 6 க்கு சங்கைக்குரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் எச்.எம்.எம் இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் எழுதிய மெஞ்ஞானக் கட்டுரை.