அகமியத்துக்காக பைசான் மதீனா
புளியம்போக்கர் அப்பா (வலீ) அவர்களின் அடகஸ்தளம் |
மட்டக்களப்பு நகரிலிருந்து கல்முனை நோக்கிச் செல்லும் போது சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கல்லடி தாண்டியவுடன் நொச்சிமுனை கிராமத்தின் ஆற்றோரத்தில் இருந்து அருள் ஆட்சி புரிகின்றார்கள் புளியம்போக்கர் அப்பா (வலீ) நாயகம் அவர்கள்.
இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து காடாக இருந்த இவ்விடத்தில் இவர்கள் வாழ்ந்து அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். காரணம் இவர்கள் இயற்பெயர் மற்றும் சரியான வரலாறுகளை அறிந்தவர்கள் எவரையும் எம்மால் காண முடியவில்லை.
தர்ஹாவுக்கு பக்கத்தில் பரம்பரையாக வசித்து வரும் குடும்பத்தவர்களை கேட்டால் "அவர்களது பாட்டன் காலத்திலும் இது இவ்வாறுதான் இருந்ததாகவே அவர்களின் பாட்டன்மார் அவர்களுக்கு கூறினார்கள்" என்றே பதில் வருகின்றது.
தற்போது முற்று முழுதாக இந்துக்கள் (தமிழர்கள்) வசிக்கும் பகுதியாக மாறியுள்ள நொச்சிமுனையின் வாவியோரத்தில் மாகான் புளியம்போக்கர் அப்பா (வலீ)அவர்களின் புனித தர்ஹா அமைந்துள்ளது. இதில் இன்றும் பல அதிசங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது.
மகானின் தர்ஹாவின் உட்புறம். |
இலங்கையின் கிழக்குப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்ததாலும் இங்கு யுத்தம் நிகழ்ந்ததாலும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் உயிர் அச்சுருத்தல் காரணமாக இப்பகுதியில் முகப்பில் வசித்த சுமார் 45 முஸ்லீம் குடும்பங்களும் இப்பகுதியை விட்டு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இதன் பின்னர் நொச்சிமுனையிலிருந்த ஜும்மாப் பள்ளிவாயல் முற்றாக புலிகளினால் அழிக்கப்பட்டது. தற்போது இங்கு முஸ்லீம்கள் வசித்ததற்கான எந்த அடையாளத்தையும் காண முடியாதுள்ளது.
யுத்தம் நிகழ்ந்த காலத்தில் முஸ்லீம்கள் இடம் பெயர்ந்ததாலும் அவர்கள் ஜும்ஆப் பள்ளி அழிக்கப்பட்டதாலும் மிகவும் சந்தோசமடைந்த புலிகள் சங்கைகுரிய மகான் அவர்களுடனும் தங்களின் கைவரிசையைக் காட்ட தயங்கவில்லை.
ஆனால் அவர்களின் எந்த முயற்ச்சியும் மகானிடம் பலிக்கவில்லை. தர்ஹாவை அழிக்க முயற்சித்த அனைவரும் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டனர். இதனால் பயமடைந்த காடையர்களும், புலிகளும் அதன் பின் மகானின் விடயத்தில் மௌனம் சாதித்தனர்.
வரலாறு
இவர்களின் இயற்பெயரை சரியாக அறிந்தவர்கள் யாரும் இல்லை. காரணம் பல நூறு வருடங்கள் இவ்விடம் பழைமை வாய்ந்ததாக இருப்பதால் அவர்களின் சரியான பெயரை அறிந்தவர்கள் யாரும் தற்போது இல்லை. ஆகவே பாரிய புளியமரம் ஒன்றிக்கு அருகாமையில் அமைந்திருப்பதால் இத்திருத்தளத்தை புளியம்போக்கர் அப்பா (வலி) தர்ஹா என்று வழங்கலாயிற்று.
இவர்களின் இயற்பெயரை சரியாக அறிந்தவர்கள் யாரும் இல்லை. காரணம் பல நூறு வருடங்கள் இவ்விடம் பழைமை வாய்ந்ததாக இருப்பதால் அவர்களின் சரியான பெயரை அறிந்தவர்கள் யாரும் தற்போது இல்லை. ஆகவே பாரிய புளியமரம் ஒன்றிக்கு அருகாமையில் அமைந்திருப்பதால் இத்திருத்தளத்தை புளியம்போக்கர் அப்பா (வலி) தர்ஹா என்று வழங்கலாயிற்று.
கண்ணால் கண்ட அதிசயங்கள்.
மகானின் கோபம்-1.
இதற்கு அருகாமையில் இருந்த ஒரு வீட்டை பழுகாமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் யுத்தகாலத்தின் போது விலைக்கு வாங்கி அங்கே குடிவந்தனர். வந்தவுடன் பக்கத்தில் முஸ்லீம்களின் தர்ஹா அமைந்திருப்பதைக் கண்ட அவர்கள் “இதனை இன்னும் இடித்து தள்ளவில்லையா” (புலிகளின் கை கிழக்கில் ஓங்கியிருந்த காலம்) என்று கேட்டுக் கொண்டே விட்டுக்குள் புகுந்தனர்.
வீட்டிலிருந்து அன்று மிகவும் துடிப்பாக மகானுக்கு எதிராக குரல்கொடுத்த மகன் வெளியே சென்று வருவதாக கூறி சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே சொன்றான்.
ஆனால் இன்று வரை ஆண்டுகள் பல கடந்தும் அவன் வீடு திரும்பவேயில்லை. எங்கு சென்றான் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. அதன் பின்னர் அக்கம் பக்கத்தாரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட அக்குடும்பத்தினர் இன்று மகானின் பக்தர்களாகிவிட்டனர்.
மகானின் கோபம்-2
ஜெகத் அவர்களால் கட்டப்பட்ட குறிசொல்லுமிடம் |
மகானின் தர்ஹாவின் இடப்புறவிலாப் பக்கத்தில் தர்ஹாவின் பின் பகுதியில் ஒரு பாரிய அரசமரம் உண்டு அதன் முன்புறத்தில் ஒரு பொலிஸ் நிலையம் யுத்தகாலத்தின் இறுதிக்கட்டத்தில் அமைக்கப்பட்டது (இன்று அது அகற்றப்பட்டு விட்டது) அதில் ஆர்.எம்.ஜெகத் என்ற சிங்கள பொலிஸ்காரர் பணிபுரிந்தார்.
அவர் நாயகம் அவர்களின் தர்ஹா எல்லைக்குள் அரச மரத்துக்கு அடியில் (பௌத்தர்கள் அரச மரத்தை வணங்குவது வழக்கம்) ஒரு சிறிய மண்டபத்தைக் கட்டினார். அவ்வேலையில் அவர்களை எதிர்த்து தடுக்க அக்கம் பக்கத்தில் யாரும் இருக்கவில்லை.
அதில் காளியின் படத்தை வைத்து அதன் முன்னர் தன் பெயர் பொறித்த ஒரு கல்லையும் நட்டு அதிலிருந்து குறி சொல்ல ஆரம்பித்தார் அந்த பொலிஸ்கார ஜெகத் (சிங்களவர்)
ஜெகத் நாட்டிய கல் |
ஒரு சில ஆண்டுகளானபோது ஜெகத்தின் அடாவடித்தனங்கள் அப்பகுதியில் அதிகரித்தது. அப்பக்கம் வந்த அவ்விடத்தில் வசித்த மக்கள் அவரை பல முறை இவ்விடத்தில் கண்ணியக் குறைவாக நடப்பது பற்றி "இது மிகவும் சக்திவாய்ந்த இடம் இங்கிருந்து கொண்டு விளையாட வேண்டாம்" என்று எச்சரித்தனர். அவரோ கேட்பதாக இல்லை.
இவ்வேளையில் ஒரு நாள் காத்தான்குடியில் கனீபா என்பவர் வாங்கிவந்த எருமை மாடு ஒன்று விரண் கயிற்றை அறுத்துக் கொண்டு மட்டக்களப்பு பக்கம் ஓடி விட்டது. விரண் டோடிய எருமை மாடு நேராக மகான் தர்ஹாவுக்கு அருகிலுள்ள ஜெகத் இன் குறிசொல்லும் இடத்துக்கு முன்னால் வந்து நின்றது.
ஜெகத் வெளியே அதனை துறத்த வந்தார். உடனே அவரை கொம்புகளில் குத்தி தூக்கிக் சென்று ஆத்தோரத்தில் வீசிவிட்டு மாடு வாவிக் கரையோராமாக ஓடியது. அதனை பொலிஸார் சுட்டதாக த் தெரிவிக்கப் படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் பின் ஜெகத் அவ்விடத்துக்கு திரும்பவில்லை அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெகத்தால் கட்டப்பட்ட சிறிய கட்டிடமும் அவர் நாட்டிய கல்லும் அப்படியே மகானின் வளவுக்குள் உள்ளது. அதனை அகற்றாமல் ஆதாரத்திற்காக நிர்வாகத்தினர் இன்றும் வைத்துள்ளனர்.
மகானின் கருணை
இப்பகுதில் முஸ்லீம்கள் வசிக்கும் காலத்திலும் அதன் பின்னரும் பல இந்துக் குடும்பங்கள் மகானிடம் அன்பு கொண்டு மகானை மிகவும் கண்ணியமாக மதித்து வந்தனர் யுத்த காலத்தில் மகானின் தர்ஹாவை பராமரித்தும் வந்தனர். அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த பலர் இன்று மிகவும் செல்வந்தர்களாக சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் நிதர்சனமாக கண்ட மகானின் அற்புதங்கள் பல உண்டு விரிவை அஞ்சி அவற்றை தவிர்த்துள்ளேன்.
அதிசயமான அரச மரம்.
மகானின் தர்ஹாவுக்கு அருகாமையில் ஒரு பெரிய அரச மரம் உண்டு அதில் ஒரு மிகப்பெரிய அதிசயம் உண்டு அதாவது மகானின் தர்ஹாவுக்கு “புளியம்போக்கர்” என்று பெயர் பெறக் காரணமாயிருந்த தர்ஹாவுக்கு முன்னர் நின்ற பெரிய புளிய மரம் சில வருடங்களுக்கு முன்னர் விழுந்து விட்டது.
அதன் பின் அப்பெயர் வழக்கத்திலிருந்தாலும் ஆனால் மகானின் தர்ஹாக்கு அருகிலோ அல்லது உள்ளேயோ எந்தப் புளியமரமும் இல்லை.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அந்த அரச மரத்துக்கு கீழே நின்ற சிலர் சில புளியம்பழங்கள் அரச மரத்தடியில் விழுந்து கிடப்பதை கண்டு திகைப்படைந்தவர்களாக மேலே அரச மரத்தை நோக்கினர்.
அரச மரத்தின் மேல் முளைத்து புளியங்காயுடன் காணப்படும் புளியமரம் |
என்ன அதிசயம், அரச மரத்துக்குள் ஒரு புளியமரம் முலைத்து அது காய்த்து கீழே விழுந்துள்ளதை அனைவரும் கண்டனர். இன்றும் அதில் பல புளியங்காய்களை காண முடிந்தது.
இதுவும் மகானின் கராமத்களில் ஒன்று. காரணம் விஞ்ஞான ரீதியில் விவசாயத்துறையைச் சார்ந்தவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது.
“அரச மரமேஒட்டுண்ணி மரம். அது எந்த மரத்திலும் ஒட்டி வளரும் ஆனால் அதில் எந்த மரமும் ஒட்டி வளர முடியாது. என்று தெரிவித்தனர்.”
ஒட்டுண்ணி மரங்களாக ஏனைய மரங்களை தாங்கும் அரச மரம் |
அத்துடன் அந்த அரசமரத்தில் தற்போது ஓக்கிட் செடி மற்றும் இன்னும் ஒரு மரமும் வளர்ந்துள்ளது.
அத்துடன் பல வருடகாலமாக பெரிய நாகப்பாம்பு ஒன்றும் இந்த அரச மரத்தில் வாழ்ந்து வருகின்றது. பல சந்தர்பங்களில் தர்ஹாவுக்கு பலர் தீங்கு செய்ய வந்தபோது அது முன்னால் வரவே அவர்கள் பயந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது. இந்தப் பெரிய பாம்பினை இன்றும் நாங்கள் காணலாம்.
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் அல்லாஹ்வின் இரண்டு தன்மைகளில் ஒன்றைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒன்று “ஜமாலிய்யத்” சாந்தம் அல்லது மன்னிக்கும் தன்மை. மற்றையது ஜலாலிய்யத் “கோபம்” அல்லது உடன் தண்டிக்கும் தன்மை.
மகான் அவர்களின் வரலாற்றையும் அங்கு நடக்கும் அற்புதங்களையும் நோக்கும்போது அவர்கள் “ஜாலாலிய்யத்” எனப்படும் “கோபம்” என்ற பண்பினைக் கொண்டவர்கள் போலவே எமக்குத் தோன்றுகின்றது.
எனவே, மகானின் தர்ஹாவை தரிசிக்கச் செல்லும் அனைவரும் மிகவும் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வது சிறந்ததாகும். அல்லாவிடில் அவர்கள் தண்டிக்கப்படலாம்.
மகானின் தர்ஹாவுக்கு முன்னால் அமைந்துள்ள மட்டக்களப்பு வாவி. |
தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவு பெற்று அமைதி திரும்பியுள்ளதால் மகானின் தர்ஹாவும் அதற்கு உதவி செய்யும் உள்ளம் படைத்தோரால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. மகான் புளியம்போக்கர் அப்பா (வலி) அவர்களை வந்து தரிசித்துச் செல்வோரும் அதிகரித்து வருகின்றனர்.
நீங்களும் மட்டக்களப்புக்கு பயணித்தால் மகான் புளியம்போக்கர் அப்பா (வலீ) நாயகத்தை தரிசித்துச் செல்ல தவறவேண்டாம் இங்கு வேண்டிக் கொண்டதெல்லாம் உங்கள் வாழ்கையில் கிடைக்கும்
நாமும் ஒருமுறை மகானைத் தரிசிப்போம்.
மகானை தரிசித்தவர்
பைசான் மதீனா.