"காதிபுல் ஹிக்மஹ் " ஸைபுல் இதா
"யானையும் அவனே! யானைப் பாகனும் அவனே! யாவும் அவனே! யாவையும் படைத்தவனும் அவனே! யாவும் அறிந்தவனும் அவனேதான்."
அப்துல் ஜப்பார் அரசாங்கப் பாடசாலையில் கல்விக் கற்றுக் கொண்டிருந்தான் அந்நேரம் அவனுக்கு வயது 18. ஆற்றல் மிக்கவன் அறிவுள்ளவன். சிந்தனையாளன்.
அவன் படித்துக் கொண்டிருந்த பாடசாலையில் இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவீ சாஹிபு ஒரு நாள் வகுப்பறைக்கு வந்தார். அல்லாஹ் பற்றிச் சொன்னார். அவன் "அர்ஷ்" என்ற இடத்தில் அமர்ந்துள்ளான்., அவனுக்கு கையுண்டு, காலுண்டு, கண் உண்டு, காது உண்டு என்று அவனைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனார். அவரின் பெயர் மும்தாஸ்.
வகுப்பில் இருந்த மாணவன் அப்துல் ஜப்பார் எழுந்தான். "மௌலவீ ஆசிரியர் அவர்களே அர்ஷ் என்ற இடம் எங்கே உள்ளது? தமிழில் அது எவ்வாறு அழைக்கப்படும்?" என்று கேட்டான் சற்றுத் திணறிய மௌலவீ அது வானில் இருக்கின்றது. தமிழில் சிம்மாசனம் என்று அழைக்கப்படும் என்றார்.
"ஏழு வானில் எந்த வானில் உள்ளது? சிம்மாசனம் எதனால் செய்யப்பட்டது? தங்கத்தினாலா? வெள்ளியினாலா? மரத்தினாலா?" என்று கேட்டான்.
விடைகூறமுடியாமல் திணறிய மும்தாஸ் மௌலவீயின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. கால்கள் நடுங்கின. அப்துல் ஜப்பாரை அருகில் அழைத்து அவன் தலையில் இரண்டு தரம் குட்டி "ஆசிரியருடன் 'அதப்'- ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டுமேயன்றி குறுக்குக் கேள்வி கேட்டு அவரைக் குழப்பக்கூடாது" என்றார்.
மனமொடிந்த மாணவன் அப்துல் ஜப்பார், "சேர், நான் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்காகவே கேள்வி கேட்டேனேயன்றி உங்களை குழப்புவதற்காக அல்ல" என்று கூறி "நீங்கள் சொல்வதுபோல் அல்லாஹ் 'அர்ஷ்' என்ற இடத்திலே இருக்கின்றான் என்று வைத்துக் கொண்டால்
...... قال صلى الله عليه وسلم "ينزل ربنا الى السماء الدنيا
"எங்களின் றப்பு- அல்லாஹ் இரவின் பிற்பகுதியில் முதலாம் வானத்திற்கு இறங்குகின்றான்" என்று புகாரீ, முஸ்லீம் போன்ற நபீமொழி நூல்கள் கூறுகின்றனவே அந்த நேரத்தில் அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் யார் இருப்பான்?" என்று கேட்டான்.
விடைகூற முடியாமல் வியர்த்துப் போனார் மும்தாஸ். சற்றுநேரம் தலைகுனிந்து நின்றார். நாணம் அவர் நாடியில் ஓடியது.
மீண்டும் மாணவன் அப்துல் ஜப்பார் "சேர், நீங்கள் சொல்வதுபோல் அல்லாஹ் “அர்ஷ்” என்ற சிம்மாசனத்தில் இருக்கின்றான் என்று வைத்துக்கொண்டால் திருக்குர்ஆனில்
وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
“அந்நாளில் உமது இறைவனின் 'அர்ஷ்' சிம்மாசனத்தை எண்மர் தமது தலைமேல் சுமப்பர்.”
திருக்குர்ஆன் : 69:17
என்று வந்துள்ளதே அப்படியானால் எட்டு மலக்குகளால் அல்லாஹ்வைச் சுமக்க முடியுமா? அவன்
مَحْمُوْلْ (மஹ்மூல்)
சுமக்கப்பட்டவனாகவும், அமரர்கள்
حَامِل (ஹாமில்)
சுமந்தவர்களாகவும் ஆகிவிடுவார்களே! இதற்கு விளக்கம் சொல்லுங்கள்" என்று கேட்டான்.
ஆசிரியர் மும்தாஸ் மூச்சுத் திணறி மூக்குடைபட்டுப் போனார், செய்வதறியாது தடுமாறினார். தான் கொணர்ந்த கைத் தொலைபேசியையும், புத்தகத்தையும் மறந்து மலசல கூடத்தின் பக்கம் நழுவிவிட்டார்.
அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அப்துல் ஜப்பாரை நிழல்போல் தொடர்ந்து நிம்மதியின்றி சில மாதங்கள் கழிந்தன.
எதிர்பாராமல் அவனைச் சந்தித்த அவனின் பழைய நண்பன் முபாறக், “நண்பா, ஏன் சோகமாக இருக்கின்றாய்?” உனக்கு என்ன நடந்தது?" என்று கேட்டான்.
நடந்தவற்றை அப்துல் ஜப்பார் சொன்னான். அவனின் சோகக்கதை கேட்ட முபாறக் "கவலைப்படாதே. அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உன் தீராத்தாகத்தை தீர்த்து வைக்க ஒருவர் இருக்கின்றார். அவர் இலைமறை காய்போல் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றார். அவரின் காலடி செல். காரியம் நடக்கும்." என்றான்
அவன் காட்டிக் கொடுத்த மகான் தங்கியிருந்த தவமடத்திற்கு அப்துல் ஜப்பார் சென்றான். தவமடத்தில் தவமிருப்போர் நிறைந்திருந்தனர். உலமாக்கள் கூட அந்த மகானின் தரிசனத்தை எதிர்பார்த்திருந்தனர். அப்துல் ஜப்பாரும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தின் பின் மகான் அவர்கள் தங்களின் அறையில் இருந்து வெளியாகி தவமண்டபத்திற்கு வந்தார்கள். நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கிருக்க அப்துல் ஜப்பாரை மட்டும் அழைத்து "உன் தேவை என்ன?" என்று கேட்டார்கள்.
"உங்கள் மூலம் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்காக வந்துள்ளேன்" என்றான் அப்துல் ஜப்பார். "அன்பு மகனே! அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டுமா? சொல்கின்றேன் கேள்! அல்லாஹ் என்ற “இஸ்ம்” பெயர் துரும்பு உட்பட இரும்பு வரையிலான சர்வ பிரபஞ்சங்களையும், படைப்புக்களையும் உள்ளடக்கிய ஒன்றின் – ஒரு மெய்ப்பொருளின் பெயரேயாகும்.
அந்த மெய்ப்பொருள்தான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகிஉள்ளது. சுருங்கச் சொன்னால் அந்த மெய்ப் பொருள் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதைவிடவும் சுருக்கமாகச் சொன்னால் எல்லாம் அவனே என்று சொல்லலாம்" என்றார் மகான்.
அல்லாஹ்வை அறிந்தவனாக மகானிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினான் அப்துல் ஜப்பார். வரும் வழியில் ஒரு யானை வந்தது அதற்கு மேல் யானைப்பாகனும் இருந்தான்.
மகான் சொன்ன “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தின் படி இந்த யானையையும் அவன்தான் மகான் சொன்ன தத்துவம் சரியானதா? பிழையானதா? என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்று மனதுள் நினைத்தவாறு அப்துல் ஜப்பார் யானைவரும் வழியில் குறுக்கே படுத்தான். யானை தன்னை மிதியாமல் நடந்து சென்றால் மகான் சொன்ன தத்துவம் சரியானதென்றும், மிதித்தால் பிழையானதென்றும் மனதில் எண்ணிக் கொண்டான்.
யானை அப்துல் ஜப்பாரை நெருங்கிய போது யானைப்பாகன் உரத்த குரலில் “யானை வருகிறது ஓரம்போ” என்று கூறினான். பரீட்சிக்கும் நோக்கத்துடன் படுத்த அப்துல் ஜப்பார் அசையவில்லை. யானை அவன் காலைமிதித்துச் சென்றது. ஒடிந்த காலுடன் தள்ளாடித் தள்ளாடி மகானின் மடம் நோக்கி வந்தான்.
"மகானே! யானை என்னை மிதித்துக் கால் ஒடிந்துவிட்டது. எல்லாம் அவனே என்ற உங்களின் தத்துவம் பிழையாகி விட்டது. எல்லாம் அவனே என்ற உங்களின் தத்துவப்படி யானை என்னை மிதித்திருக்கக் கூடாது" என்றான்.
உடல் குலுங்கிச் சிரித்தபடி "யானைக்குமேல் இருந்த பாகன் யார்?" என்று கேட்டார் மகான் "அவனும் அவன்தான்" என்றான் அப்துல் ஜப்பார். "அவன் சொல்லை நீ ஏன் கேட்கவில்லை" என்று கேட்டார் மகான்.
தலைகுனிந்தவனாகவும், சத்தியத்தை உணர்ந்தவனாகவும் வீடுவந்தான் அப்துல் ஜப்பார்.
யானையும் அவனே! யானைப் பாகனும் அவனே! யாவும் அவனே! யாவையும் படைத்தவனும் அவனே! யாவும் அறிந்தவனும் அவனேதான்.
ஆக்கம்
அகமியத்திற்காக- தத்துவ எழுத்தாளர் ஸைபுல் இதா-