காதிபுல் ஹிக்மஹ்
- ஸைபுல் இதா-
அபுல் ஹஸன் இறைபக்தியுள்ள ஒருவன். ஐங்காலம் தொழுவான். நோன்பு நோற்பான். நல்லவை செய்வான். தீயவை தவிர்ப்பான் இறைநேசர்களாம் அவ்லியாக்களின் அடக்கத் தலங்கள் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களின் நல்லாசியைப் பெறுவான்.
அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் அவனை சிறுவயதில் இருந்தே தொட்டது. அறிஞர்களின் காலடி சென்று தனது பெரின்பத் தாகத்தை தீர்த்துக்கொள்ள ஊரெங்கும் அலைந்தான். பலரைச் சந்தித்து தனது தாகம் பற்றிக் கூறி விளக்கம் கேட்டான்.
ஒருவர் கூட அவனின் தாகத்தை முழுமையாகத் தீர்க்க வில்லை. நாட்செல்லச் செல்ல இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவனின் தாகம் தலைக்கடித்து வெறியாக மாறியது. சினம் அவன் மூக்கு நுனியில் நின்றது.
ஒருநாள் மனம் ஒடிந்தவனாக சொல்லொணாக் கவலையுடன் உறங்கினான். அவனின் கனவில் தோன்றிய ஒருவர் அவனிடம் (உன் தாகம் முழுமையாகத் தீர்வதாயின் இவ்வூரில் மறைந்து வாழும் ஷிப்லீ என்பவரின் காலடிக்குச் செல்) என்று கூறி மறைந்தார். கனவு கலைந்தது விடியற் கூவும் சேவலின் சத்தம் அவனின் இரு காதுகளையும் துளைத்தது.
சுப்ஹ் தொழுகைக்கான முஅத்தின் அழைப்பும் அவனின் உள்ளத்தைத் தொட்டது. எழுந்தான் தொழுது முடித்தான் ஷிப்லீ என்பவரைத் தேடி அவனின் கால்கள் நடந்தன. பக்தாத் நகரில் அவனின் கால் படாத இடமே இல்லை.
நாட்கள் பல நகர்ந்தன நாட்கள் மாதங்களாகி மறைந்தன பேரின்பத் தாகத்தால் பைத்தியமானான் இறைகாதலால் இதயம் வெடிப்பது போல் இருந்தது. உதடுகள் முணுமுணுக்கத் தொடங்கின. என் செய்வது? தன் காதலியை அறிந்து அவளை அடைந்து பேரின்பம் பெறுவதே தனது இலட்சியம் எனக் கருதி நடந்தான் நடந்து கொண்டே இருந்தான்.
வெகுதூரத்தில் ஈத்தோலை குடிசையொன்று தெரிந்தது. அதன் திசையிலிருந்து இறைஞானத் தென்றல் வீசியது. அவன் உள்ளம் சற்று சிரித்தது. உடலெங்கும் ஒரு வகைப் புத்துணர்வு ஊஞ்சலாடியது. அதை நோக்கி மெதுவாக நகர்ந்தான். அதனருகே சற்று நேரம் மௌனியாக நின்றான்.
அல்லாஹ்! அல்லாஹ்! என்ற சத்தம் குடிலைக் குலுக்கியது அபுல் ஹஸனின் குடல் நடுங்கியது. வியர்வை அவனை நனைத்தது.
என்னே புதுமை! குடிசையின் உள்ளிருந்து 80 வயது மதிக்கத் தக்க ஒரு முதியவர் வெளியானார். ஒளி அவர் முகத்தில் தவழ்ந்ததால் அதை உற்று நோக்க முடியாமல் அவன் கண்கள் மூடிக் கொண்டன.
“வாலிபனே! எதற்காக இங்கு வந்தாய்? என்ன தேவை? அந்த முதியவர் கேட்டார். நான்தான் நீ தேடும் ஷிப்லீ தருகின்றேன் கேள்” என்றார்.
மகானே! மகா வலீயே! என்னை மன்னியுங்கள். இறைஞானத் தாகமே என்னைத் தங்களின் தவத் தளத்திற்கு கொணர்ந்தது. என் தாகம் தீர்க்க மாட்டீர்களா? என் காதலி பற்றி எனக்கு எடுத்தோத மாட்டீர்களா?
வாலிபனே! என்னரும் மகனே! சொல்லித் தருகின்றேன். உன் காதலியின் காலடிக்கு அழைத்துச் செல்கின்றேன். இன்று மாலை அஸ்ர் தொழுகையின் பின் என்னைச் சந்தி.
எனக்கு ஒரு தோட்டம் உண்டு. முதலில் அதை உனக்குக் காட்டித் தந்தபின் அல்லாஹ்வைக் காட்டித் தருகின்றேன் வா.
அன்பு மகனே! இதுவே எனது தோட்டம் இதோ பார் இது வாழைமரம். இது மாமரம். இது பலாமரம் இவ்வாறு அங்கிருந்த அனைத்து மரம், செடி, கொடிகளின் பெயர்கள் சொல்லி அவற்றைச் சுட்டிக் காட்டினார்.
அன்பு மகனே! மஃரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கி விட்டது. காரியம் முடிந்து விட்டது வெளிச் செல்வோம் வா.
மகானே! தோட்டம் காட்டுவதாகச் சொல்லி என்னை அழைத்து வந்த நீங்கள் ஏன் அதைக் காட்டவில்லை?
அன்பு மகனே! நான் தோட்டம் காட்டி விட்டேன். நீ என்ன சொல்கின்றாய்?
மகானே! நீங்கள் ஒவ்வொரு மரம், செடி, கொடிகளையும் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களைச் சொன்னீர்களேயன்றி தோட்டம் காட்ட வில்லை.
அன்பு மகனே! தோட்டம் என்பது மரம், செடி, கொடி போன்ற பல்லாயிரம் தாவரங்களை உள்ளடக்கிய ஒர் இடத்தின் பெயரேயன்றி அது அவற்றுக்கு வேறான தனியான ஒன்றல்ல.
மகானே! புரிந்து கொண்டேன். புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அல்லாஹ்வைச் சொல்லித்தரவில்லையே!
அன்பு மகனே! அல்லாஹ்வும் இவ்வாறுதான் அல்லாஹ் என்ற பெயர் அனைத்துப் பிரபஞ்சங்களையும் உள்ளடக்கிய ஒன்றின் பெயரே அன்றி அது அவற்றுக்கு வேறான தனியான ஒன்றல்ல.
மகானே! அல்லாஹ்வை அறிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சென்று வருகின்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்.