Monday, September 12

உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்

உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.

ஆக்கம் -ஹமீத் ஜாஃபர்

அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறு வதில்லை,  

 நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது. 
அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.

விடை............!
இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். 

வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது. 

இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். 

வேறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.

"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.

துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.

இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்கள் "தலாயில் கைராத்" என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.

அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது. 

ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. 

வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது. 

இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.

ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். 

நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் "தலாயில் கைராத்" தை நிறைவுப் படுத்தினார்கள்.

ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. 

மோள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். 

தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். 

பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.

ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். 

இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். 

முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள். 

இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. 

எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக தி என் சைக்லோபீடியாஆஃப்இஸ்லாம்1957லீடன் பதிப்பில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

நன்றி
ஹமீது ஜாஃபர் பதிவுகள்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK