ஸைபுல் இதா

அப்போது அதன் தலைக்கு மேல் “வூ” என்று ஒரு சத்தம் கேட்டது. பயந்து நடுங்கிய அந்தப்புழு தலையை உயர்த்திமேலே பார்த்தது
கருநிற வண்டொன்று “வூ” என்ற பயங்கர ஓசையுடன் வாழைமரப்பூவில் அமர்வதும், பறப்பதுமாக அதை வட்டமிட்டுக் கொண்டிருந்தது
வண்டைப் பார்த்த அந்தப் புழு “ஓய் கருப்பாய்! நான் இலையில் அமர்ந்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க நீ பூவில் அமர்ந்து என்ன செய்கின்றாய்” என்று வினவியது.
அதற்கு அந்த வண்டு, “சத்தில்லாவெறும் சக்கையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முட்டாள்! நீ அங்கிருந்து இலையை சாப்பிடுகின்றாய்! நானோ, இங்கிருந்து தேன் குடித்துக் கொண்டிருகின்றேன்” என்று கூறி உடல் குலுங்கக்குலுங்கச் சிரித்தது.
வண்டின் கதைகேட்டு ஆத்திரமடைந்த புழு “மரம் ஒன்று சுவை இரண்டா? அதெப்படி இருக்க முடியும்! முடியாது அப்படியாயின் அதை நீ நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று சினம் கொண்டு சீறியது.
“வழிக்கு வந்து விட்டாய், இனித்தான் உன் விழி திறக்கும். வாழை மரத்தில் தேன் சுவைக்க விரும்புகிறாயா? அதற்கு நிபந்தனை உண்டு. சற்று பொருமையுடன் கேள்!
“நான் உன்னை எனது வாயில் கவ்விக் கொண்டு ஒரு ஞானக்குகைக்குப் பறந்து செல்வேன். நான் பறக்கும் வேளை நீ பல்வேறு பயங்கரக் காட்சிகளைக் காண்பாய்.
நீ அவை கண்டு பயந்து விடாதே. பயங்கரச் சத்தங்கள் உன் செவியைச் செவிடாக்கும். அது கேட்டு நீ அதிர்ச்சியடைந்து விடாதே. தைரியமாக இரு.
உன்னை ஞானக்குகைக்கு எடுத்துச் சென்று அக்குகையில் நாற்பது நாட்கள் வைத்திருப்பேன். உன் தேவைக்கு ஏற்ப உணவு தருவேன். என் தேவைக்கு ஏற்ப உன்னைச் சந்திப்பேன். நாற்பது நாட்கள் எனது கண்காணிப்பிலும், பராமரிப்பிலும் நீ இருப்பாய்” சம்மதமா? என்று கேட்டது வண்டு.
எவ்வாறேனும் தேன் சுவைக்க விரும்பிய புழு சம்மதம் தெரிவித்தது. வண்டு அதைத் தூக்கிச் சென்று பல நூறூ அறைகள் கொண்ட ஒரு கூண்டில் வைத்தது. பல அறைகளிலும் தன்னைப் போல பல புழுக்கள் இருந்தது கண்ட இப்புழுவுக்கு ஒருவகை மனச்சாந்தி ஏற்பட்டது. பற்றிப் பிடித்திருந்த பயம் பறந்து போயிற்று.
புழுவைத் தேனுண்ணும் வண்டாக்கும் முயற்சியில் வண்டு இறங்கியது. பயிற்சி தொடங்கியது. நாட்களும் நகரத் தொடங்கின. நாட்கள் நகர நகர புழுவின் உடலமைப்பும், அதன் தன்மைகளும் மாற்றமடையத் தொடங்கின.
புழுவில் வண்டின் தோற்றமும், அதன் தன்மைகளும் வினாடிக்கு வினாடி மாற்றமடைவதைக் கண்டு மகிழ்ந்த புழு நாற்பதாம் நாளானதும் வண்டின் முழுத் தோற்றத்தையும், முழுத்தன்மையையும் பெற்று விட்டது.
நாற்பது நாட்கள் முன் “வூ” என்ற இரச்சல் கேட்டு பயந்து நடுங்கிய புழு நாற்பது நாட்களின் பின் தானே “வூ” என்று சத்தமிடத் தொடங்கியது.
சிறகு இல்லாமையால் பறப்பது எப்படி என்று கூடத்தெரியாதிருந்த புழு நாற்பது நாட்களின் பின் தானாகப் பறக்கத் தொடங்கியது.
தாய் வண்டின் வழிகாட்டலில் சேய் வண்டும் சேர்ந்து பழைய வாழைமரம் நோக்கிப் பறந்தன. முதலில் இலையிலமர்ந்து வெறும் சக்கையைச் சப்பித்துப்பிய புழு அன்று பூவில் அமர்ந்து தேன் பருகியது.
ஸூப்ஹானல்லாஹ்! புழுவாயிருந்த காலம் வீணாண காலமாயிற்றே! என்று கடந்த காலத்தை எண்ணி அந்தப்புழு வருந்தியது. வாழை இலையைச் சப்பிக்கொண்டிருக்கும் புழுக்களைப் பார்த்து அது கைகொட்டிச் சிரித்தது.
புழு வண்டான வரலாறு கேட்டு வந்த சகோதரா! இது ஒரு கற்பணை உதாரணம்தான். ஆயினும் இவ் உதாரணம் தருகின்ற ஞானாத் தத்துவத்தை சற்று சிந்தனைக் கெடுத்து சிந்தித்துப்பார்!
புழு என்பது ஒரு ஞான குருவிடம் “பைஅத்” ஞானதீட்ச்சை பெறாத மனிதனையும் வண்டு என்பது ஒரு ஞானகுருவையும் வாழைமரம் என்பது “லாயிலாஹ இல்லலாஹ்” என்ற திருக்கலீமாவையும் குறிக்கும்.
புழுவானது தான் வண்டாகி தேன் சுவைப்பதற்காக தன்னை வண்டிடம் ஒப்படைத்து நாற்பது நாட்கள் அதன் பராமரிப்பிலும், கண்காணிப்பிலும் இருந்து சம்பூரண வண்டாகித்தேன் சுவைத்ததுபோல்
ஒருவன் திருக்கலிமாவில் பேரின்பத்தேன் அருந்தி உலகையும் மறந்து தன்னையும் மறந்து அல்லாஹ்வில் “பனா” ஐக்கியப்பட்டு உயர் நிலை பெற விரும்பினால் முதலில் தன்னை ஒரு ஞான குருவிடம் ஒப்படைத்து அவரின் பராமரிப்பிலும், கண்காணிப்பிலும் நாற்பது நாட்கள் இருந்து அவரிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சையும் பெற வேண்டும்.
مَنْ لَا لَهُ شَيْخٌ فَشَيْخُهُ الشَيْطَاْنْ
எவருக்கு ஞான குரு இல்லையோ
அவருக்கு ஷெய்தானே ஞானகுருவாயிருப்பான்
ஆக்கம் – ஸைபுல் இதா
19.09.2011