-ஸைபுல் இதா-
“அஸ்ஸவ்ம்” என்ற அறபுச் சொல்லுக்கு நோன்பு என்று பொருள் சொல்லிக் கொண்டாலும் கூட இச்சொல் வந்த வழிவாறை ஆய்வு செய்தால் இது மிக ஆழமான இறை தத்துவத்தை உள்ளடக்கியிருப்பது தெளிவாகும்.
“அஸ்ஸவ்ம்” என்ற சொல் ஸாம-யஸ(சு)மு என்ற சொல்லடியில் உள்ளதாகும். ஸாம என்றால் "தடுத்தான்" என்றும், யஸ(சு)மு என்றால் "தடுப்பான்" என்றும் பொருள் வரும்.
இந்தப் பொருள் அரபு மொழி அகராதி மட்டுமன்றி திருக்குர்ஆன் வசனமும் தருகின்ற பொருளேயாகும்.
நபீ ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்கள் தங்களின் மகள் ஈஸா (அலை) அவர்களின் விடயம் தொடர்பாக
إنّي نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا
“நிச்சயமாக நான் இன்று நோன்பு நோற்றுள்ளேன். ஆகையால் இன்று நான் எவருடனும் பேச மாட்டேன்” என்று கூறினார்கள்.
இத் திருவசனத்தில் “ஸவ்ம்” என்ற சொல் கையாளவும் பட்டுள்ளது. இச் சொல்லுக்கு இன்று நாம் நோற்கும் நோன்பு என்று பொருள் கொண்டால் இச்சொல்லுக்கு பின்னால் வந்துள்ள “நான் இன்று எவருடனும் பேச மாட்டேன்" என்ற தொடர் வசனம் பொருத்தமற்றதாகிவிடும்.
ஏனெனில் நோன்புக்கும், பேசுவதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. நோன்பு நோற்பவன் பேசுவதால் நோன்பு “பாதில்” வீணாகி விடாது.
எனவே மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “ஸவ்ம்” சொல்லுக்கு நாம் இன்று நோற்றுவரும் நோன்பு என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகி விடும்.
அவ்வாறு பொருள் கொள்வதாயின் குறித்த வசனத்தின் பின் தொடர்
فلن أكل اليوم شيئا
"நான் இன்று எதையும் சாப்பிட மாட்டேன்" என்று அல்லது
فلن أشرب اليوم شيئا
"நான் இன்று எதையும் குடிக்க மாட்டேன்" என்று வந்திருக்க வேண்டும்.
இவ்வாறு வசனம் வராமல் “இன்று நான் யாருடனும் பேச மாட்டேன்” என்று வந்துள்ள படியால் மர்யம் (அலை) அவர்கள் கையாண்ட “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு நம்மிடையே அறியப்பட்டுள்ள நோன்பு என்ற பொருள் இல்லை என்பது தெளிவாகும்.
நோன்பு நோற்றுள்ள ஒருவன் உண்ணுதல், பருகுதல் போன்ற நோன்பை முறிக்கும் கருமங்களைச் செய்தால் மட்டுமே நோன்பு முறியுமேயன்றி பேசுவதால் நோன்பு முறியாது.
எனவே மேற்கண்ட விபரங்களின்படி மர்யம் (அலை) அவர்களின் “நான் இன்று ஒரு “ஸவ்ம்” நேர்ச்சை செய்துள்ளேன் என்பது அவர்கள் பேசாமல் வாயைத் தடுத்துக் கொண்டிருப்பதையே குறிக்கும்.
ஆகையால் “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு நோன்பு என்று பொருள் கூறிக் கொண்டாலும் கூட “தடுத்தல்” என்ற பொருள் உண்டு என்பதை கவனத்திற் கொண்டு இன்னொரு விடயத்தை இங்கு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
அதாவது நோன்பில் மூன்று வகையுண்டு.
ஒன்று –
أالصوم عن المفطرات
நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று ஷரிஆவில் கூறப்பட்டவற்றைச் செய்யாமல் தடுத்தல்
இரண்டு-
أالصوم عن المعاصي
ஒருவன் பாவம் செய்யாமல் தன்னை தடுத்துக்கொள்ளல்
மூன்று-
أالصوم عن غير الله
அல்லாஹ்வின் நினைவு தவிர சிருட்டியின் நினைவு உள்ளத்தில் வந்து விடாமல் அதைத் தடுத்துக் கொள்ளுதல்.
இம்மூன்று வகை நோன்பில் முந்தினது
صوم العوام
சாதாரண மக்களின் நோன்பு என்றும்,
இரண்டாவது
صوم الخواص
விசேடமானவர்களின் நோன்பு என்றும் மூன்றாவது
صوم خواص الخواص
அதிவிஷடமானவர்களின் நோன்பு என்றும் சொல்லப்படும்.
இம் மூன்றுவகை நோன்பில் முந்தினது “அவாம்” என்ற பொது சனங்களால் நோற்க முடிந்த நோன்பு ஆகும். அதாவது உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்வதைக் குறிக்கும்.
இன்று உலகில் வாழும் முஸ்லீம்களில் அநேகர் இந்த வகை நோன்பே நோற்று வருகின்றார்கள். மேலே கூறப்பட்ட மூன்றுவகை நோன்புகளிலும் தரம் குறைந்தது இந்தவகை நோன்பேதான்.
மூன்றுவகை நோன்பில் இரண்டாவது பொதுசனங்களால் நோற்க முடியாத, உலமாக்கள் போன்ற மார்க்க ஞானம் கற்று பக்குவப் பாதையில் நடக்கின்றவர்களால் மட்டும் நோற்க முடிந்த நோன்பாகும்.
அதாவது உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களைத் தவிர்த்துக் கொள்வதுடன் பொய் சொல்லுதல், புறம் பேசுதல், கோள்சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல், பொய்ச் சாட்சி சொல்லுதல் முதலான ஐந்து காரியங்களையும் தவிர்த்துக் கொள்ளுதலாகும். இந்த வகை நோன்பு தரத்தில் முதலாம் இடத்தில் உள்ளது.
மூன்றாம் வகை நோன்பு பொதுசனங்களாலோ, உலமாக்கலாலோ நோற்க முடியாத, “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றவர்களால் மட்டும் நோற்க முடிந்த நோன்பாகும்.
அதாவது மேற்கண்ட முதலாம், இரண்டாம் வகை நோன்புகளில் கூறப்பட்டவற்றை தவிர்த்துக் கொள்வதுடன் உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறெந்த ஒரு நினைவும் வராமல் உள்ளத்தைச் தடுத்துக் கொள்ளுதலாகும். இந்த வகை நோன்பு தரத்தில் முதலாம் இடத்தில் உள்ளது.
முதலில் கூறப்பட்ட தரத்தில் மூன்றாம் இடத்திலுள்ள நோன்பு “ஷரீஆ” வில் நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று சொல்லப்பட்டுள்ள உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவற்றைச் செய்வதால் மட்டும் முறிந்து விடுமேயன்றி இரண்டாம் வகை நோன்பில் சொல்லப்பட்ட ஐந்து காரியங்களில் ஒன்றைச் செய்வதாலோ, மூன்றாம் வகை நோன்பில் சொல்லப்பட்ட காரியத்தைச் செய்வதாலோ முறிந்து விடமாட்டாது.
இரண்டாவதாகக் கூறப்பட்ட, தரத்தில் இரண்டாம் இடத்திலுள்ள நோன்பு நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று “ஷரீஆ” வில் சொல்லப்பட்ட உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவற்றைச் செய்வதாலும், மற்றும் கூறப்பட்ட ஐந்து காரியங்களில் ஒன்றைச் செய்வதாலும் கொண்டு முறிந்து விடும்.
மூன்றாவதாக கூறப்பட்ட, தரத்தில் முதலாம் இடத்திலுள்ள நோன்பு முந்தின இரண்டுவகை நோன்புகளை முறிக்கும் காரியங்கள் கொண்டு முறிந்து விடுவதுடன் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறெந்த ஒரு நினைவு வந்தாலும் முறிந்துவிடும்.
இந்த மூன்றாம் வகை நோன்பு பொது சனங்களாலோ, உலமாக்களாலோ நோற்க முடியாத ஒன்றாகும். இது விலாயத் என்ற ஒலித்தனம் பெற்ற வலீமார்களால் மட்டும் நோற்கச் சாத்தியமானதாகும்.
எனவே, மூன்றாம் தரத்திலுள்ள பொது சனங்கள் தமது விடா முயற்சிகொண்டும், ஆன்மீக வழி நடப்பது கொண்டும், “நப்ஸ்” என்ற மனவெழுச்சியுடன் “ஜிஹாத்- போர்” தொடுத்து அதை வென்று இரண்டாம் தரம் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதேபோல், இரண்டாம் தரத்திலுள்ள உலமாக்களும், அவர்கள் போல் பக்தி வழி செல்வோரும் தம்மிலுள்ள பாவக்கறை அகற்றி “நப்ஸ்” என்ற பயங்கர மிருகத்துடன் போராடி அதை வெற்றி கொண்டு முதலாம் தரத்திற்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
முதலாம் தரத்திலுள்ளோர் அதாவது உள்ளத்தில் அல்லாஹ் அல்லாத சிந்தனை, எண்ணம், வராமல் உள்ளத்தை பாதுகாத்தோர் மகான்களாவர். மாபெரும் வலீமார்களுமாவர்.
இவர்கள் நீரில் வாழும் மீன்கள் போன்றவர்கள். மீன்களுக்கு நீர் தவிர வேறொன்றும் தெரியாமல் இருப்பது போல் இவர்களுக்கும் அல்லாஹ் தவிர வேறொன்றும் தெரியாது.
எவர் எப்படியில் இருந்தாலும் அவர் இவர்களின் இப்படியை எட்டாதவரை பேரின்பத்தேன் சுவைக்க முடியாது.
ஆக்கம்
ஸைபுல் இதா