ஒரு முரீது தனது ஷெய்கை சந்தித்த போது கேட்ட சில கேள்விகளும் அதற்கு ஷெய்கு அளித்த பதில்களும்
பைசான் மதீனா
என் மனதுக்குள் அந்த ஆசை ஆழப்பதிந்து கிடந்தது அது என்ன ஆசை? நல்லதா அல்லது கெட்ட ஆசையா? அது எனது ஷெய்கனா அவர்களை சந்தித்து சில மாதங்களாவிட்டது அவர்களை அவர்கள் தற்போது வசிக்கும் கொழும்பில் சென்று பார்க்க வேண்டும் சில மனித்தியாலங்கலேனும் அவர்களுடன் கழிக்கவேண்டும் என்ற ஆசை அது..
ஒரு ஷெய்கு (குரு) என்பவர் ஒரு முரிதுக்கு (சிஷ்யன்) எல்லாம் அவராகவே இருப்பார் ஆபத்தில் உதவுபவராக மட்டுமல்லாமல் முரிதின் இன்பம் துன்பம் என்ற உலகின் இரண்டு வாழ்கையின் வடித்திலும் உலகைப் பொறுத்தும் ஆகிரத்தில் இறைவனிடம் முரீதை சேர்த்துவைப்பதிலும் குருவே அவனுக்கு துணையாவார் என்று கேட்டு, பார்த்துப் படித்திருக்கின்றேன்.
எனவே ஷெய்கை சந்திக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு பரவசமிருக்கும் நிறைய சரியான பிழையான கேள்விகள் சந்தேகங்கள் வந்து அலையடித்துச் செல்லும் அவர்களுடன் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கவேண்டும் கால்மடித்து படிக்கவேண்டும் என்ற ஆசையும் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்
ஆனாலும், பொருளாதார சுமையும் தொழில்சார் பிரச்சினைகளும் எப்போதும் அதற்கு எதிராக இருப்பதால் ஷெய்கை சந்திக்கும் ஆசையும் வெறும் ஆசையாகவே இருக்கும்.
தற்போது அதற்கான சந்தர்ப்பம் ஒன்று உண்டாயிற்று எனது சகோதரன் வெளிநாடு செல்வதால் அவனை கொழும்பில் வழிஅனுப்பச் செல்வதுடன் நமது ஷெய்கு அவர்களையும் பார்த்துவரலாம் என்ற பரவசத்திலேயே ஏற்பாடுகளைச் செய்தோம்.
மட்டக்களப்பிலிருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எமது பிரயாணம் தொடர்ந்தது காலை மற்றும் பகல் சாப்பாடுகளை வீட்டிலேயே தயாரித்து பார்சலாக எடுத்துக் கொண்டோம்.
ஷெய்கனாவின் உதவியினால் நாம் புறப்பட்ட ரெயில் மாலை 4.00 மணியளவில் எந்தப் இடையூறுமின்றி கொழும்பையடைந்து புறக்கோட்டை நோக்கிச் சென்றது.
நானும் எனது சகோதரனும் முன்னரே தீர்மானித்தபடி மருதானை ரெயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டோம்.
அங்கிருந்து டெமடகொடை வீதிக்கு நடந்தோம் அங்கே ஒரு லொஜ்ஜில் பின்னேரம் 5.00 மணியளவில் ரூம் எடுத்துக் கொண்டு குளித்து ரெடியானோம்.
சுமார் மாலை 6.00 மணியளவில் ஷெய்கனா வசிக்கும் பேஸ்லைன் வீதியிலுள்ள வீட்டு முகவரியை எமக்கு தெரிந்த நமது நண்பர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டு ஆட்டோ ஒன்றைப் பிடித்தோம் அவர் அங்கிருந்து செல்ல ரூபா.150 வேண்டும் என்றார். (அது கூடுதல் என்பது அடுத்த நாள் எங்களுக்கு தெரியவந்தது) ஷெய்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை மீதியினால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை சரி என்று பிரயாணத்தை செல்ல ஆரம்பித்தோம்.
அத்துடன் ஷெய்கனா அவர்களை பார்வையிட செல்லும்போது ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரகத்துக்காக மிகவும் விலைகுறைந்த ஒரு பொருளை வாங்கிக்கொண்டோம். ஒரு நல்ல பொருளை வாங்க எங்களிடம் பண வசதி இடம் கொடுக்கவில்லை.
ஷெய்கனா அவர்களின் வீட்டை சென்றடைந்தோம் ஆட்டோவை விட்டு இறங்கியது அவ்விடத்தில் நின்ற ஒரு சிங்களப் பெரியவரிடம் இவ்விடத்தில் ஒரு ஷெய்கு இருக்கிறார்கள் அவர்களின் வீடு எது என்று கேட்டோம் (சிங்களத்தில்) அதற்கு அவர்கள் “மௌலவி” என்று சொல்பவரா? என்று கேட்டார் ஆம்! என்றோம் வீட்டை காட்டினார்.
நேராக கதவை திறந்து உள்ளே சென்றோம் அங்கே ஷெய்கனா அவர்களின் துணைவியார் நின்றிருந்தார்கள் நாங்களோ! உம்மா பெரியவகளை பார்க்க முடியுமா? என்று கேட்டோம் அதற்கு அவர்கள் கொஞ்சம் பொறுங்கள் அனுமதி கோருகின்றேன் என்று அங்கிருந்து அவர்களின் காதிம் ஒருவரிடம் சந்திக்க ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
சொல்லிவிட்டு நீங்கள் காத்தான்குடியிலிருந்தா வருகின்றீர்கள் என்று கேட்டார்கள் உடனே ஆம் என்றோம். அவர்களோ கீழே நின்றவரே சத்தமாக காத்தான்குடியிலிருந்து சந்திக்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் என்று அந்த காதிம் பையனிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே எங்களை மேலே வரும்படி அனுமதி கிடைத்தது.
அப்படியே சந்தோசமாக மேலே சென்றோம் அவர்களின் அரைக்குள் சென்று சலாம் கூறினோம் ஷெய்கனா அவர்கள் கட்டில் மெத்தையில் எழுந்த நிலையில் அமர்ந்திருந்தார்கள் சேட் அணிந்திருக்கவில்லை வெறும் மேலுடன் இருந்தார்கள்.
அப்படியே சலாத்துக்கு பதில் கூறிய அவர்கள்! அண்ணனும் தம்பியும் வந்துள்ளீர்கள் என்று கூறிப் புன்னகைத்தார்கள். நாங்களும் அவர்களின் கட்டிலின் அருகே கீழே மரியாதையாக அமர்ந்து கொண்டோம்.
அப்போது வாப்பா தங்களின் சுகம் எப்படி? என்று விசாரித்தோம். ஷெய்கனா அவர்களும் நான் ஏற்கனவே அகமியத்துக்கு எழுதியுள்ள விபரத்தை அப்படியே விபரமாகக் கூறிக்கொண்டிருந்தார்கள் ஆனால் அப்போது அவர்களின் முகம் மிகவும் இயல்பான நிலையிலும் சந்தோசமாகவுமிருந்தது தனக்கு தற்போது 75% நல்ல சுகம் என்று கூறினார்கள் அத்துடன் மலசல கூடத்துக்கு செல்வதை தவிர வேறு எதற்கு நடந்து செல்லவோ பிரயாணங்கள் மேற்கொள்ளவோ வைத்தியர் அனுமதி வழங்கவில்லை என்று கூறினார்கள்.
அப்படியே இருக்கும்போதே அங்கு கல்முனை ஈராக் ஒன்றியத்தை சேர்ந்த ஒரு அன்பர் ஷெய்கனா அவர்களைப் பார்க்க வந்தார்கள் அவர்களும் எங்களுடன் இனைந்து கொண்டார்கள்.
அப்படியே அவர்கள் விபரங்களைக் கூறிக்கொண்டிருக்கும்போது எமக்கு டீ வழங்கப்பட்டது அருந்தினோம். டீயை அருந்திக் கொண்டிருக்கும்போதே எனது மனதில் நீண்ட நாட்களாக ஷெய்கனா அவர்களிடம் கேட்கவேண்டும் என்று ஆசையிருந்த சில கேள்விகளைக் கேட்டேன்
கேள்வி- 01
சங்கைக்குரிய ஷெய்கனாவை நோக்கி : வாப்பா! நீங்கள் சிறிய வயதில் இந்தியாவில் ஓதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே மிகவும் வித்தியாசமான நடைமுறையை உடையவர்கள் (வழமையாக மௌலவீமார்கள் அணிவது போன்ற உடைகளை அணிய மாட்டீர்கள் மிகவும் ஸ்டைலாகவே இலங்கைக்கு வருவீர்கள்) அதற்காக உங்களை உங்கள் தந்தையார் பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் ஆலிம் வலீயுல்லாஹ் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நீங்களே சில சந்தர்பங்களில் ஜாமியாவில்வைத்துக் கூறியுள்ளீர்கள் அப்படியாயின் இந்த பாதைக்கு உங்களை எப்படி அர்பணித்தீர்கள்?
பதில் : அது இறைவனின் நாட்டம், நான் இந்தக் ஞானக்கலையை யாரிடமும் படிக்கவில்லை ஆனால் ஒரு மௌலவீ / ஆலிமாக இருப்பதால் அதனை குர்ஆன், கதீஸ் மற்றும் இமாம்களின் எழுத்தகளில் இருந்து அறிந்து கொண்டேன் இன்னும் இறைவனின் நாட்டம் அன்றி வேறில்லை.
கேள்வி-02
வாப்பா! ஷெய்குமார்களிடம் பைஅத் பெற்ற சில முரீதுகள் நிறையவே தவறான கொள்கைகளின் பால் சரிகண்டு வாழ்கின்றார்களே! ஆனால் ஒரு ஷெய்கு என்பவர் ஒரு முரிதின் 03 தலைமுறைகளை பாதுகாக்க்க்கூடியவர் என்று எமது ஷெய்குகளில் ஒருவரான டில்லியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லாமா அப்துல் ஹக் மஃலவி தஹ்னவி (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அந்த சம்பவத்தை விபரமாக சொல்லி) அப்படியாயின் வழி தவறிச் செல்லும் முரீதுகளை அவர்கள் பாதுகாப்பார்களா?
பதில் : ஒரு ஷெய்கு மூன்று அல்ல முற்பது தலைமுறைகளை பாதுகாக்க வல்லவர். ஆனால் ஒருவருடைய நஷீபைப் (இறைவனின் நாட்டம்) பொறுத்து அது அமையும்.
முதலில் ஷெய்குமார்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு ஒன்று ஷேகுத் தர்பிய்யஹ் (வளர்க்கக்கூடிய ஷேய்க்) ஷெய்குல் பறகா (பறக்கத்துக்குரிய ஷேய்க்) வளர்க்கக்கூடிய ஷேய்க் ஆனவர் முரீது அவர்களிடம் கல்வியையும் ஞானத்தையும் கேட்டு அறிய முற்படுபவராக இருந்தால் அதனை அவர்களுக்கு அளித்து ஆத்மீக வளர்ச்சிக்கு உதவுபவர்
இரண்டாவது வகை ஷெய்குல் பறகாத் இவர்கள் பரகத்துக்காக மட்டும் இருக்கும் ஷேய்குமார்களாகும். அதனாலேயே ஒரு ஷெய்குடைய முரீது இன்னும் ஒரு ஷெய்கிடம் ‘பைஅத்’ ஞான தீர்ச்சை பெறுகின்றார் இந்த நிலை பரகத்துக்காக ‘பைத்’ பெறும் நிலையாகும்.
இந்த வகையிலான முரீதுகளை எல்லா நிலைகளிலும் ஷெய்குமார் காப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது முரீதுகளின் நிலையைப் பொறுத்ததாகும் (ஒரு முரீது தனது ஷெய்கை எதற்காக பயன்படுத்திக் கொள்கின்றாறோ அதனை அவர் பெற்றுக் கொள்வார்)
ஆனால் வழிதவறிய நிலையில் சென்ற ஒரு முரீதை அவர்களுடைய இறுதிக் கட்டத்தில் அவர்களுடைய ஷெய்க் பாதுகாத்த சம்பவத்தை ஆதரத்துடன் விளக்கினார்கள். (இலங்கையில் புல்மொட்டையில் நடைபெற்ற சம்பவம்)
கேள்வி -03
வாப்பா! இது மிகவும் சென்சிட்டிவான கேள்வி நான் அறிய வேண்டும் என்ற ஆசையில் கேட்கின்றேன். காரணம் அச் சம்பவம் நடைபெறும்போது நான் வெளிநாட்டில் வசித்தேன் ஆகவே உண்மை என்ன என்பதை தங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
07.11.2006 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் தங்களை காத்தான்குடியில் பத்ரிய்யஹ் ஜூம்மாப்பள்ளிவாயலில் அமைந்துள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து எதிரிகள் குழு ஒன்று இயந்திரத் துப்பாக்கியால் தாங்களின் அலுவலகத்தில் வீற்றிருக்கும்போது நேருக்கு நேரேவைத்து சமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள் தாங்கள் வீற்றிருந்த கதிரையுற்பட அலுவலகத்தின் பின் பகுதி சுவர் மற்றும் சுற்றுச் சுவர்களில் சமாரியாக துப்பாக்கிச் சூட்டு வடுக்கல் இன்றும் காணப்படுகின்றன.
அதில் நீங்கள் உயிர் தப்பிய விதம் குறித்து பல கதைகள் உலாவருகின்றன. அதில் எனக்கு வெளிநாட்டில் வைத்து சொல்லப்பட்டது தங்களுக்கு நேருக்கு நேராக துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது தாங்கள் அமர்ந்திருந்த அந்த கதிரையில் இருந்த பட்டனை அழுத்தியபோது அதன் கீழ்லிருந்த பங்கருக்குள் தாங்கள் போய்விட்டதாகவும் அதனால் தாங்கள் உயிர் பிழைத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. தவிரவும் நீங்கள் அந்த சமையத்தில் மறைந்து விட்டதாகவும் மற்றும் உங்களை அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்கள் அழைத்துச் சென்றதாகவும் இப்படி பல கதைகள் உண்டு இதின் உண்மை நிலை என்ன?
பதில்: அவர்கள் வந்து அலுவலகத்தில் சமாரியாகச் சுடும்போது உண்மையில் நான் அலுவலகத்தில் இருக்கவில்லை அப்போது எனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மௌலவீ மஜீட் றப்பானி அவர்கள் மட்டுமே அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தார்கள் நான் நிலைமையை புரிந்துகொண்டு வெளியே சென்று பக்கத்தில் இருக்கும் வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு இருட்டில் குந்திக் கொண்டிருந்தேன்.
வந்தவர்கள் நான் இருப்பதாக நினைத்து (அவர்களின் கண்களுக்கு அவ்வாறு தெரிந்திருக்கலாமோ எனக்குத் தெரியாது) நான் அமர்ந்திருக்கின்ற இடத்துக்கு சமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அந்த அலுவலகத்திற்கும் சுற்றி வலைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு பக்கத்தில் அமைந்திருந்த வீடுகளிலும் தேடினார்கள் ஆனால் நான் வெளியில் ஒரு சிறிய இருட்டுலேயே குந்தியிருந்தேன் நான் இருக்கின்ற பக்கத்தை தவிர எல்லா இடத்திலும் பார்த்துவிட்டுச் சென்றனர் அவர்கள் சென்ற பின்னரே நான் வீட்டின் கதவைத் தட்டி உள்ளே சென்றேன்.
அந்த சந்தர்ப்பத்தில் எனது அலுவலகத்தில் அப்துல் மஜீட் மௌலவீ மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. இறைவன் பாதுகாத்துவிட்டான் அல்ஹம்துலில்லாஹ்.
(இது கண்மணி நபீ (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற் கொள்ளுமுன் நடந்த சம்பவத்தை எனக்கு ஞாபகமூட்டியது)
கேள்வி-04
வாப்பா! அஹ்மத்திய்யஹ் முஸ்லீம் ஜமாஅத் என்று ஒன்று உண்டு அதனுடைய உண்மைநிலை என்ன?
பதில் : உலகத்தில் 90% சதவீதமான உலமாக்கல் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என்று சொல்கின்றார்கள்.
மீண்டும் நான் தொடர்கின்றேன்...
அதில் பல இலட்சம் முஸ்லீம்கள் பைஅத் பெற்றுக் கொள்வதாக அவர்களின் பிரச்சாரர்கள் கூறுகின்றனரே..?
பதில் : அவர்கள் கூறும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை உண்மையில் இல்லை உலகம் முழுவதிலும் அவர்கள் சிறிய அளவிலேயே உள்ளனர்.
கேள்வி- 05
ஒரு ஷெய்கிடம் “பைஅத்” பெறாத ஆனால் ஷெய்கிடம் மிகவும் நெருங்கிப் பழகியவருக்கு ஷெய்கிடம் ‘பைஅத்’ பெற்ற ஒருவருக்கு உதவி கிடைப்பதுபோல் அல்லது அதைவிட மேலாக அவர்கள் இருவரின் நேசத்திற்காக உதவி கிடைக்குமா?
பதில் : ஒரு முரீதுக்கு கிடைப்பதுபோல்! ஒரு ஷெய்கிடம் நேசம் கொண்டு நெருங்கிப் பழகிய ஒருவருக்கு அந்த ஷெய்கின் உதவி எல்லா சந்தர்ப்பங்களிலும் கிடைக்காது.
----------------------------------------------------------------------------------------------------
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது வேறு சிலர் ஷெய்கனா அவர்களை சந்திக்க வந்திருந்ததால் நாங்கள் விடைபெறவேண்டியேற்பட்டது. நாளை சந்திக்க 5.00 மணியளவில் வருமாறு ஷெய்கனா கூறினார்கள். அங்கிருந்து பிரிந்து செல்ல மனமில்லாதவர்களாக விடைபெற்றுக் கொண்டோம்.
மறுநாள் 12.07.2011 செவ்வாய் கிழமை சரியாக 5.00 மணியாகும்போது ஷெய்கனா அவர்களின் வீட்டை அடைந்து விட்டோம். எங்களைக் கண்ட ஷெய்கனா அவர்களின் துணைவியார் நேற்று வந்தவர்கள் தானே என்று கேட்டுவிட்டு மேலே செல்லுங்கள் பெரியவங்க தூங்குகிறார்கள் இனி எழும்புவார்கள் என்று கூறினார்கள்.
ஷெய்கனா அவர்கள் சிறிது நேரத்தில் எழுந்தவுடன் சலாம் கூறிக்கொண்டு உள்ளே சென்றோம். ஷெய்கனா அவர்கள் மெத்தையில் எழுந்திருந்ததாகவும் தான் 17 நாட்களின் பின் இன்றுதான் (12.07.2011 செவ்வாய் கிழமை) வைத்திய பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளதால் குளித்தாகவும் குளிப்பதற்காக எழுந்து நின்றதால் தற்போது கால் மிகவும் வலிப்பதாகவும் கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த சகோதரர்! காலை ஊண்டிவிடவா வாப்பா? என்று கேட்க வைத்தியர்கள் காலை மசாஜ் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளனர் என்று கூறினார்கள்.
அத்துடன் எங்களுக்கு பரகத்துக்காக ஒரு இஷினை வழங்கினார்கள். அப்போது பெண்கள் சிலர் ஷேய்கனா அவர்களை சந்திக்க வந்திருப்பதாக கூறப்பட்டதும். நாங்கள் எழுந்து ஷெய்கனாவை முத்தமிட்டு விடைபெற்றோம்.
-முற்றும்-.
இது எனது சொந்த சந்திப்பில் நிகழ்ந்த சம்பங்களை நான் எழுதியுள்ளேன் இதில் ஏதும் பிழையிருந்தால் என்னை மன்னித்ருள வேண்டுகின்றேன்.
தொடர்புகளுக்கு : faizanmadina@gmail.com