Sunday, July 31

பூத்துக்குலுங்கும் புனித றமழான் (பகுதி-1)

அதிசங்கைக்குரிய ஞானபிதா மௌலவீ. அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் 2002 ம் ஆண்டு நவம்பர் மாத இதழ் அல்மிஷ்காத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை 

நோன்பு என்றால் என்ன? 
அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்திலிருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால்தான் உனக்கு பரிபூரண பயன்கிடைக்கும். 

இல்லாதுபோனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்குக்கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை. இது ஒரு பொதுவிதி! இந்தப்பொது விதி நோன்பு என்ற வணக்கத்திற்கு மட்டுமென்று நினைத்துக்கொள்ளாதே! ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! 

நீ எந்த அமலைச் செய்வதானாலும் அந்த அமலைப்பற்றியும் அதைச்செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்கவேண்டும். 
ஓர் அமலின் (வேலையின்) நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வேலையில் ஈடுபடுவது அறிவுடைமையாகுமா? நீ நன்றாக சிந்தித்துப்பார் நீ நோன்பு நோற்றாலும் வேறெந்த வணக்கத்தை செய்தாலும் அவ்வணக்கத்தின் நோக்கத்தை அறிந்து செயல்படு! 

ஓர் ஊரின் தலைவன் தனதூர் மக்களுக்கு ஒரு வேலையைக் கட்டளையிடுகின்றான் என்று வைத்துக்கொள்! அந்த மக்கள் அவ்வேலைக்குரிய காரணத்தை அறியாதவர்களாய் வேலையை மட்டும் செய்கிறார்களென்றால் தாம் செய்யும் வேலைக்குரிய அர்த்தமே தமக்குத்தெரியாத நிலையில் அவர்களிருக்கிறார்களென்பது தெளிவான விஷயம்தான். 

எனவே நோன்பாயிருந்தாலும் வேறெந்த வணக்கமாயிருந்தாலும் அதைப்பற்றி முதலில் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும். பொதுவாக வணக்கத்தின் நோக்கம் மறுமையில் நல்லவர்களுக்குக் கிடைக்கின்ற சுவர்க்கம், மங்கை, மதுபானம் போன்றவையாக இருக்கலாகாது. 

இவற்றுக்காகவும் இவற்றைப்பெற்று மகிழ்ந்து வாழ்வதற்காகவும் வணக்கம் செய்யலாகாது. இவற்றுக்காக இவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் வணக்கம் செய்தல் வணக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல. 

வணக்கத்தின் அடிப்படை நோக்கமென்னவெனில் வணங்கும் நீ உனது வணக்கத்தின் மூலம் மனத்தெளிவு பெற்று அதில் ஞானப்பிரகாசம் சுடர் விட்டு அதனால் நீ உன்னையறிந்து உனதிறைவனையறிவதுமேயாகும். 

இதுதான் ‘அமலின்” வணக்கத்தின் அடிப்படை நோக்கம்.! இதுதான் அமலின் நோக்கமென்பதைத் தெரிந்து கொண்ட உனக்கு சுவர்க்கமோ ஹூறுல்ஈன் மங்கையரோ மதுவோ எதற்கு? அமலென்பது உன்னைச் சுத்தப்படுத்தி நீ அறிந்திருக்கின்ற “வஹ்மு” பேதபுத்தியென்ற முகமூடியைக் கிழித்தெறிந்து உனக்கு உன்னை யாரென்று காட்டித்தருகின்ற ஓர் ஔஷதம் அருமருந்து என்பதை நினைவில் இருத்திக்கொள்! 

மருந்தைக் குடிக்கும் நீ அந்த மருந்து எந்த வியாதிக்குரியதென்பதைத் தெரிந்து குடி! எனவே நோன்பு என்ற வணக்கமென்றால் என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை அறிந்து கொள். 

அல்லாஹ் உனக்கு நல்லருள் புரிவானாக! “ஸவ்மு” என்ற அறபுச்சொல்லுக்க நோன்பு என்று நாம் தமிழில் பொருள் கொண்ட போதிலும் அச்சொல் தருகின்ற உண்மைத்தத்துவத்தை தெரிந்து கொள்வதன் மூலம்தான் அதனுடைய நோக்கத்தை அறிந்து கொள்ளலாம். 

“ஸவ்மு” என்றால் தடுத்தல் என்று பொருள் படும். தடுத்தலென்ற பொருளுடைய “ஸவ்மு” என்ற சொல்லைத் தெரிவு செய்தவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாருமல்ல. அத்தெரிவு செய்த சொல்லின் அர்த்த புஷ்தியை கருத்தாழத்தை யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது. 

அச்சொல் பொதுவாக “தடுத்தல்” என்ற அர்த்தத்தை மட்டும் தருகிறதேயன்றி எதிலிருந்து எதைத்தடுப்பதென்பது அச்சொல்லில் விளக்கப்படவில்லை இருந்தாலும் தடுத்தல் என்ற அர்த்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு மூன்று கோணத்தில் அதை ஆராயலாம். 

முதலாவது
“தடுத்தலென்பது” நோன்பை முறிக்கும் காரியங்களான உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டும் நீ உன்னை தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். 

இவ்விபரப்படி குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டும் நீ உன்னை தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய். 

இது ஸவ்மு என்ற சொல்லின் வெளிப்படையான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை. இவ்வாறு நோன்பு நோற்பதை ஷரீஅத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லிம்களில் அநேகர் இவ்வகையில் மட்டும்தான் நோன்பை நோற்கிறார்கள். இவ்வகை நோன்பு படித்தரம் குறைந்ததாகவே கணிக்கப்படும். 

இவ்வகை நோன்புக்கு இமாம் கஸாலீ றஹ் அவர்கள் தங்களின் “இஹ்யா உலூமுத்தீன்” என்ற நூலில் “ஸவ்முல் அவாம்” பாமரர்களின் நோன்பு என பெயரிட்டுள்ளார்கள். 

மேலும் இவ்வகை நோன்பு “ஸவ்முஷ் ஷரீஅஹ்” ஷரீஅத்துடைய நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு மேற்குறித்த காரியங்களை செய்வதால் முறிந்துவிடும். பாத்திலாகிவிடும். 

இரண்டாவது
தடுத்தலென்பது மேற்கூறப்பட்ட உண்ணுதல், பருகுதல், சேர்க்கை செய்தல் போன்றவற்றை விட்டும் உன்னை நீ தடுத்துக் கொள்வதுடன் உனது உறுப்புக்களால் பாவம் செய்வதை விட்டும் மேலும் உனது உள்ளத்தால் பாவம் செய்வதை விட்டும் நீ உன்னை தடுத்தக் கொள்வதையும் குறிக்கும். 

இவ்விபரப்படி நீ மேற்கூறப்பட்ட அனைத்தை விட்டும் உன்னை தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய். 

இது “ஸவ்மு” என்ற சொல்லின் சிறிது ஆழமான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை. இவ்வாறு நோன்பு நோற்பதை தரீக்கத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லீம்களில் நோன்பு நோற்பவர்களில் அநேகர் இவ்வாறு நோன்பு நோற்பதில்லை. 

இது கடினமான முறை என்று கைவிட்டு விடுகிறார்கள். இப்பொழுது கூறப்பட்ட இந்த முறையில் நோன்பு நோற்றாலும் கூட அதுவும் தரம் குறைந்ததாகவே கணிக்கப்படுகிறது. 

இவ்வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ றஹ் அவர்கள் தங்களின் இஹ்யாவில் “ஸவ்முல் கவாஸ்” விஷேசமானவர்களின் நோன்பென்று பெயரிட்டுள்ளார்கள். 

மேலும் இவ்வகை நோன்பு “ஸவ்முத் தரீக்கஹ்” தரீக்காவுடைய நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு மேற்குறிப்பிட்ட காரியங்களை செய்வதால் முறிந்துவிடும். 

எனவே, இவ்வகை நோன்பு நோற்ற ஒருவர் பகல் நேரத்தில் (நிய்யத் வைத்ததிலிருந்து ஸஹர் முடிவிலிருந்து நோன்பு திறக்கும் நேரம் வரை) கை, கால், கண் போன்ற உறுப்புக்களால் பாவம் செய்து விட்டாலும் அல்லது தனது கல்பினால் மனத்தால் பாவம் செய்து விட்டாலும் அவரின் நோன்பு முறிந்துவிடும். 

மூன்றாவது 
தடுத்தலென்பது, மேற்கூறப்பட்டவையனைத்தை விட்டும் நீ உன்னை தடுத்துக் கொள்வதுடனும் உனதுள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடனும் உனதுள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவைத் தவிர வேறெந்த நினைவும் வராமல் தடுத்துக் கொள்வதையும் குறிக்கும். 

இவ்விபரப்படி உனதுள்ளத்தில் இறைவனின் நினைவைத் தவிர வேறு நினைவு வராமல் தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய். 

இது “ஸவ்மு” என்ற சொல்லின் மிக ஆழமான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை. இவ்வாறு நோன்பு நோற்பதை ஹகீகத்தின் அல்லது மஃரிபத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். 

முஸ்லிம்களில் நோன்பு நோற்பவர்களில் இவ்வகையில் நோன்பு நோற்பவர்கள் அரிதிலும் அரிது. இது மிகக் கடினமான முறை என்று முற்றாக விட்டுவிடுகிறார்கள். இவ்வகை நோன்பு மட்டுமே சம்பூரண நோன்பாகின்றது. 

இவ்வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ (றஹ்) அவர்கள் “ஸவ்மு கவாஸ்ஸில் கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பென்று பெயரிட்டுள்ளார்கள். 

மேலும் இவ்வகை நோன்பு “ஸவ்முல் ஹகீகஹ், ஸவ்முல் மஃரிபஹ்” மஃரிபாவுடைய நோன்பென்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு நோற்ற ஒருவரின் உள்ளத்தில் பகல் நேரத்தில் அல்லாஹ்வின் நினைவைத் தவிர வேறு நினைவு வந்துவிடுமானால் அவரின் நோன்பு அதனால் முறிந்துவிடும். நபீமார்களும் வலீமர்களும் இவ்வகை நோன்பு நோற்றார்கள் என்பதை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

 தொடர்ச்சி நாளை..

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK